அவளோ மிக இயல்பாக இருந்தாள். யாராவது பார்த்தால்? சுற்றிவர உயரமாக மதில் கட்டிய வீடுதான். என்றாலும்?
வேகமாக டிராக்டரை விரட்டினான். அவளோ பல ரவுண்டுகளை கெஞ்சிக் கெஞ்சியேச் சாதித்தாள்.
நண்டு கழுவ என்று வீட்டின் பின்னால் வந்த புவனா இவர்களைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார்.
பிரணவனும் தாயைப் பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டான். மெல்ல, “இறங்கு!” என்றான் அவளிடம்.
“இன்னொரு ரவுண்ட் ப்ளீஸ்!”
“பொம்மா இறங்கு!” அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக அவன் போட்ட அதட்டலில் பட்டென்று கீழே குதித்து, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தொம் தொம் என்று நடந்து சென்றாள் அவள்.
புவனா அப்போதும் விடாமல் கண்டிப்போடு மகனை ஒரு பார்வை பார்த்தார்.
“ஐயோ அம்மா. என்னை ஏன் பாக்குறீங்க? அவளாத்தான் வந்து ஏறினவள்.” சிறுபிள்ளை போன்று காரணம் சொன்னான் அவன்.
“என்ன பழக்கம் தம்பி இதெல்லாம்? அவள் வெளிநாட்டில வளந்த பிள்ளை. பொறுப்பா இருக்கத் தெரியாது. ஆனா நீ அப்பிடி இல்லைத்தானே?”
தாயின் தீர்க்கமான பார்வையில் தடுமாறிப்போனான் அவன்.
“ஆசையா இருக்கு எண்டு கேட்டவளம்மா. ஒரு ரவுண்ட்தான்.” தன்னைப் பிழையாக அன்னை நினைத்துவிடக் கூடாது என்று அவசரமாகச் சொன்னான் பிரணவன்.
“அவள் சின்ன பிள்ளை. எல்லாரோடயும் இயல்பா பழகுவாள். ஆனா, இஞ்ச இருக்கிற சனம் ஒண்டைக் கண்டால் பத்தா கதைக்கும். அது அவளுக்கு விளங்காது. ஆனா உங்களுக்குத் தெரியும் எல்லா. நாங்க கவனமா இருக்கோணும் தம்பி! நாளைக்கு ஒரு பேச்சுப் பிழையா வரக் கூடாது!”
இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட, ‘அடியேய் குட்டிப்பிசாசு! செய்தது எல்லாம் நீ. வாங்கிக் கட்டுறது நான்’ என்று மனத்தில் அவளை வறுத்தெடுத்தான் பிரணவன்.
அங்கே வேலை முடிந்ததும், “அப்பாட்ட போறன் அம்மா!” என்று குரல் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.
“சாப்பிட நீ வரேக்கா அவரையும் கையோட கூட்டிக்கொண்டு வா! வேலையை முடிச்சிட்டு வாறன் எண்டுவார், விடாத.” என்றபடி அவருக்கும் அவனுக்குமான காலை உணவைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார் புவனா.
போகாதே என்று சைகையில் காட்டியபடி, வெகு வேகமாகத் துள்ளிக்கொண்டு படிகளில் இறங்கி ஓடிவந்தாள் ஆர்கலி.
பார்த்த அவனுக்குத்தான் பதறியது. ”மெல்ல வரத் தெரியாதா உனக்கு?” அவன் அதட்ட, அதையெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை அவள்.
“உங்கட தங்கச்சியாக்கள் வச்சிருக்கிற மாதிரி எனக்கும் மருதாணி வைக்க விருப்பமா இருக்கு. வரேக்க உங்கட மரத்தில இருந்து கொண்டு வாறீங்களா?” என்று ஆவலோடு கேட்டாள்.
அவனது கண்கள் அவளின் கைகளுக்கு ஓடியது. சும்மாவே மனத்தை அள்ளும் பிங்க் வண்ண மென்மையான கரங்கள். அதற்கு எதற்கு வீணாக மருதாணி?
“அதெல்லாம் கொண்டுவர ஏலாது!” என்றுவிட்டு வண்டியை உதைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அவன்.
அவள் காலை உதைத்துக்கொண்டு சிணுங்குவது கண்ணாடி வழியே தெரிய, அவன் உதட்டினில் சிரிப்பொன்று முளைத்தது. போகும் வழியிலேயே தமயந்திக்கு அழைத்துச் சொல்லிவிட்டுப் போனான்.
எப்போதுமே வார இறுதிகளில் விசேசமாகத்தான் சமைப்பார் புவனா. பள்ளிக்கூடம், கம்பஸ், வேலை, விவசாயம் என்று வார நாட்களில் எல்லோருமே ஓடிவிடுவதில் சனியும் ஞாயிறும்தான் முழுக் குடும்பமும் வீட்டில் இருக்கும்.
விவசாயிக்கு விடுமுறை ஏது? கருப்பனுக்கு எல்லா நாளும் ஒன்றுதான். அவரைப் பிடித்துக்கொண்டு வரும் ஒரே ஆள் பிரணவன்தான்.
சுந்தரேசனின் இன்னொரு காணியில் மிளகாய்த் தோட்டம் போட்டிருந்தார் கருப்பன். அங்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு நின்றவரைக் கனிவோடு நோக்கினான் பிரணவன்.
வியர்த்து வடிந்த முகத்தில் களைப்புத் தெரிந்தாலும், மிகுந்த ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் எரிக்கத் துவங்கிவிட்ட அந்த வெயிலிலும் தன் வேலையில் கவனமாயிருந்தார் அவர்.
குடில் போன்று அமைத்திருந்த மோட்டர் வைக்கும் கொட்டிலுக்குள் இருந்த செவ்விளநீர் ஒன்றை வெட்டிக்கொண்டு வந்து அவரிடம் நீட்டினான்.
“இளநியக் குடிங்கப்பா. மிச்சதுக்கு நான் தண்ணி விடுறன். அம்மா புட்டும் தந்துவிட்டவா. சாப்பிட்டு வாங்கோ.” என்று அவரை அனுப்பிவிட்டு நீரைத் தான் பாய்ச்சத் துவங்கினான்.
அப்படியே தென்னந்தோப்புக்குத் தேங்காய் பறிக்க வந்தவர்களிடம், என்னென்ன மரங்கள் என்று காட்டிவிட்டு வந்தான். தகப்பனோடு சேர்ந்து புற்களைச் செருக்கி, வாய்க்கால் வெட்டிவிட்டு, தோட்டத்துக்குத் தேவையான மருந்து அடித்து என்று வேலைகளைப் பார்க்க மத்தியானமாயிற்று.
இருவருமாகச் சென்று இரணைமடுக் குளத்தின் வாய்க்கால்களில் ஒன்றில் ஆசை தீரக் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
தமயந்தியும் அப்போதுதான் வந்தாள். அவள் நீட்டிய மூடியிருந்த சின்ன கிண்ணம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, “என்னக்கா இது?” என்று கேட்டாள் ஆர்கலி.
“அரைச்ச மருதாணி. நீதான் கேட்டியாம்?”
அவள் பார்வை பட்டென்று பிரணவனின் பக்கம் பாய்ந்தது. அவனோ மும்முரமாய்த் தன் கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.
கண்களில் சிரிப்பு மின்ன, “இல்லையே. நான் கேக்கேல்லையே?” என்றாள் அவள்.
விழுக்கென்று நிமிர்ந்து முறைத்தான் பிரணவன்.
உதட்டுக்குள் சிரிப்பை மடக்கியபடி, “ஆரு உங்களுக்குச் சொன்னது, எனக்கு விருப்பம் எண்டு?” அவள் கேட்க, “அக்கா, பசிக்குது சாப்பாட்டைக் கொண்டா!” என்று இடைபுகுந்தான் பிரணவன்.
தம்பியின் பசியே முதன்மையாகிவிட அவளின் கேள்வியை விட்டுவிட்டு தமயந்தி நகர்ந்தாள். அவள் மறைந்ததும், “நீயெல்லா கேட்டனி!” என்று அதட்டினான் அவன்.
“நீங்களும் மாட்டன் எண்டு சொன்ன நினைவு எனக்கு!”
“பாவம் எண்டு கொண்டுவரச் சொன்னா, கொழுப்பு?”
“சும்ம்மா!” சிரிப்புடன் சொல்லிவிட்டு, அமர்ந்திருந்தவனின் கேசத்தை தன் இரு கைகளாலும் கலைத்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் அவள்.
‘அடியேய்!’ அவன் உதட்டினில் சிரிப்பொன்று மலர்ந்துபோயிற்று! ஒற்றைக் கரமுயர்ந்து கேசத்தைக் கோதிச் சரிசெய்து கொண்டது!


