மூன்று வயதாகியிருந்தபோதும், கொஞ்சமும் பேச்சு வராமல் இருந்தவனிடம் எதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளவே முடியாமல் போயிற்று. அதற்குள், மிகவுமே கறுப்பான நிறத்தில் இருந்தவனை எட்டு வயதான சுந்தரேசன், “கருப்பா” என்றே அழைக்கத் துவங்கியிருக்க அவனின் பெயர் கருப்பனாகவே போயிற்று.
ஏழு வயதில்தான் தட்டுத் தடுமாறிப் பேசவே ஆரம்பித்தான். எத்தனையோ மருத்துவம் பார்த்தும் பயனில்லை. எட்டு வயதில் முதலாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.
சும்மாவே அவனுடைய தோற்றம் சற்றே பெரிது. இதில் ஆறு வயதுச் சிறுவர்களோடு எட்டு வயதானவனைப் பார்க்கையில் அவனை மிகவுமே பெரியவனாகக் காட்டியது. மற்ற மாணவர்களும் அவனைச் சேர்த்துக்கொள்ள மறுக்க, அவனுக்கும் படிப்பில் ஈடுபாடு இல்லாமல் போயிற்று.
பள்ளிக்கூடத்திலிருந்து ஒவ்வொரு நாளும் இடையிலேயே ஓடிவந்தான் கருப்பன். மகேந்திரம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை. ஒருமுறை அடிவேறு போட்டுப் பார்த்தார். அப்போதும், பள்ளிக்கூடம் முடியும்வரை ஊர் முழுக்கச் சுற்றிவிட்டு வீடு வந்து சேரவும் முடியாமல் விட்டுவிட்டார்.
சுந்தரம் படிப்பில் கவனம் செலுத்த, கருப்பனோ அவர்களது நிலபுலன்களில், செய்யும் விவசாயத்தில் கவனம் செலுத்தினான். யாரும் சொல்லாமலேயே அது அவனுக்கு நன்றாக வந்ததில் மகேந்திரத்துக்கும் மனோன்மணிக்கும் உயிராகிப்போனான்.
கருப்பனைச் சுந்தரத்துக்கு அடுத்த மகனாகவே பார்த்தார்கள். அவனும் சுந்தரம் அண்ணா என்று அவ்வளவு உயிர். சுந்தரத்துக்குக் கருப்பன்தான் நண்பன், சகோதரன் எல்லாமே.
அப்படியானவரைக் கிட்டத்தட்ட இருபத்தியொரு வருடங்கள் கழித்துக் காணப்போகிறார் கருப்பன்.
எதிர்க்காற்று வந்து முகத்தில் மோத, அளவான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த பிரணவனுக்கும் சுந்தரம் மாமா பற்றிய எண்ணங்கள்தான்.
அவனுக்கு நான்கு வயதாக இருக்கும்போது அவர்கள் குடும்பமாக இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டதாக அம்மா புவனா சொல்லக் கேட்டிருக்கிறான். ஆரம்ப நாட்களில் கடிதப் போக்குவரத்து இருந்து நாளடைவில் அது நின்று போயிற்றாம்.
அவர்களைப் பெரிதாக நினைவில்லாதபோதும் கனிவோடும் பாசத்தோடும் தன்னை அள்ளிக்கொள்ளும் ஒரு முகம் அவன் நினைவில் கலங்களாக இன்னும் இருக்கிறதுதான். நாளடைவில் அவர் மீது சின்னதாய் ஒரு மனவருத்தமும் உண்டு.
எதையும் காட்டிக்கொள்ளாது, அந்தப் புத்தம் புது வீட்டுக்குள் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தினான் பிரணவன்.
சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த சுந்தரத்தின் முகம் இவர்களைக் கண்டதும் பளிச்சென்று மலர்ந்தது. “டேய் கருப்பா!” என்றபடி ஓடிவந்து கட்டிக்கொண்டார்.
கருப்பனுக்கும் மனம்கொள்ளா மகிழ்ச்சி. “சுகமா இருக்கிறியா சுந்தரண்ணா!” பாசத்தில் குரல் தடுமாறக் கேட்டார்.
“எனக்கு என்னடா நல்லாருக்கிறன். நீ என்னடா, நல்லா உடைஞ்சு போய்ட்டாய்!” என்று அவரை அளந்தவரின் விழிகள் பாசத்தில் பனித்துப் போயிற்று.
“இங்க அடிக்கிற வெயிலுக்கு அப்பிடித்தான் சுந்தரம் மாமா! மற்றும்படி எங்கட அப்பா யங் மேன்!” பிரணவன் சொல்லவும் அவனிடம் தாவிய அவரின் விழிகள் வியப்பால் விரிந்தன.
“இது பிரணவன் எல்லாடா? என்னடா இப்பிடி வளந்து நிக்கிறான்!” அவரால் நம்பவே முடியவில்லை. தன் நெஞ்சிலும் தோளிலும் ஏறி அமர்ந்துகொண்டு விளையாடிய அந்தச் சின்ன குட்டிக் கண்ணனா இவன் என்று ஆர்வமாகப் பார்த்து பாசத்தோடு அவனையும் கட்டிக்கொண்டார்.
“சுகமா இருக்கிறீங்களா மாமா?” நலம் விசாரித்த பிரணவனுக்கு அவரை மிகவுமே பிடித்துப் போயிற்று.
கலங்களாக நினைவில் இருந்த அதே முகம் சற்றே மூப்படைந்திருந்தது. கருப்பனை விட வெளிநாட்டுக் குளிரில் இளமையாகத் தெரிந்தார். உள்ளன்போடு உறவாடிய மனிதரை அவனுக்கு மிகவுமே பிடித்துப்போனது.
அவனுடைய மகேந்திரம் தாத்தா மற்றும் மனோன்மணி அம்மம்மாவின் மகன் வேறு எப்படி இருப்பாராம்?
“லலிதா! இஞ்ச வந்து பார், ஆரு(யார்) வந்திருக்க்கினம் எண்டு.” உற்சாகமாக உள்ளுக்குள் பார்த்துக் குரல் கொடுத்துவிட்டு, “வாவா வந்திரு!” என்று கருப்பனைக் கையோடு அழைத்துச் சென்று போர்டிக்கோவில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்த்தினார் சுந்தரம்.
“தம்பியும் பிள்ளையும் வரேல்லையா சுந்தரண்ணா?” சின்ன வயதில் பார்த்த பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துவிடும் ஆவலில் விசாரித்தார் கருப்பன்.
“அகரனுக்கு லீவு கிடைக்கேல்ல கருப்பா. ஆர்கலி வந்திருக்கிறாள். வந்த நிமிசத்தில இருந்து ‘சரியான வெயில்’ எண்டு கத்திக்கொண்டு இருக்கிறாள்.” அவர் சொன்னதைக் கேட்ட பிரணவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
வெளிநாட்டு வாசிகளின் வருகை அதிகரிக்கத் துவங்கிவிட்ட இந்த நாட்களில் அடிக்கடி காதுகளில் விழும் வார்த்தைகள் இவை.
‘சம்மர் லீவு கொண்டாடுறம் எண்டு வரவேண்டியது. பிறகு வெயில், வெக்கை எண்டு சீனப் போடுறது.’ தனக்குள் சிரித்துக்கொண்டவன் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.
பால்யகாலத்து நண்பர்களை உரையாட விட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் காலடியில் அலெக்ஸ் சுருண்டிருந்தது.
சுந்தரேசன் அவனைப் பற்றியும் விசாரித்தார். “என்ன படிச்சிருக்கிறாய் பிரணவன்? இல்ல உன்ர அப்பா மாதிரிப் பள்ளிக்கூடம் போகாம ஓடி ஒளிஞ்சியா?”
“சுந்தரண்ணா சும்மாயிரு! சும்மாவே என்னை வச்சு ஓட்டுவான். நீ வேற!” வெள்ளையடித்த தலையைத் தடவிக்கொண்டு அவசரமாகத் தடுத்த தகப்பனைப் பார்த்த பிரணவனுக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“எங்கட அப்பா உலகத்தைப் படிச்சவராம் மாமா. பள்ளிக்கூடப் படிப்பெல்லாம் ஒண்டுமே இல்லையாம்.” எப்போதும் தகப்பன் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டே அவரை வம்பிழுத்துவிட்டு,
“மெக்கானிக் இன்ஜினியரிங் முடிச்சிருக்கிறன் மாமா. இப்ப ‘எக்ஸ்பேர்ட்’ ல வேலை.” என்றான் பிரணவன்.
அது ஒரு ‘வோஷிங் மிஷின்’ தயாரிக்கும் நிறுவனம். நேரடியாக மக்களுக்கு விற்பனையும் செய்துகொண்டிருந்தார்கள்.
“கொழும்புக்குப் போனா இன்னும் நல்ல சம்பளம் கிடைக்குமாம் சுந்தரண்ணா. இவன் மாட்டன் எண்டுபோட்டு இஞ்ச வேலை செய்றான்.” மனவருத்தத்தோடு சொன்னார் கருப்பன்.
தன் மகனின் திறமை உள்ளூரில் வீணாகிறது என்கிற கவலை தெரிந்தது அவரிடம்.
உண்மைதானே. தலைநகரில் போன்று இங்கிருக்காதே என்றுதான் சுந்தரமும் நினைத்தார்.
“வீட்டை விட்டுட்டுக் கொழும்புக்குப் போக விருப்பமில்ல மாமா. அப்பாக்கும் முந்தி மாதிரி ஏலாது. எவ்வளவு சொல்லியும் கேக்காம தோட்டம் செய்றார். நான் இல்லாம அம்மா, அக்கா, தங்கச்சியாக்கள் சமாளிக்க மாட்டீனம். அதைவிட, இஞ்ச இருந்தே முன்னுக்கு வரலாம்.” என்றான் அவன் நம்பிக்கையாக.
இலகுவாகப் பேசிச் சிரித்தாலும் காத்திரமான சிந்தனைகள் கொண்டவன் என்று அதிலேயே புரிந்துகொண்டார் சுந்தரம்.
“ஆரம்பம் எக்ஸ்பேர்ட்ல மட்டும்தான் வேலை செய்தனான். இப்ப, ஆர் வீட்டிலையாவது மிஷின் பழுது எண்டாலும் திருத்திக் குடுக்கிறனான். அது அப்பாக்கு விருப்பமில்லை. படிச்ச மகன் ஏசி அறைக்க வேலை செய்றதை விட்டுட்டு இப்படிச் செய்றன் எண்டு கவலை. ஆனா, செய்யச் செய்யத்தானே பலவிதமான பிழைகளைப் பற்றித் தெரியவரும். அதைத் திருத்துறது எப்பிடி எண்டு எனக்கும் அனுபவம் வரும். காலத்துக்கும் சம்பளத்துக்கு வேலை செய்றதை விட இப்பிடிக் கொஞ்சக் காலம் பழகினால் பிறகு சொந்தமா ஏதாவது செய்யலாம் எல்லோ. பழையது வாங்கித் திருத்தி விக்கலாம். எனக்கு, நானே சொந்தமாச் செய்ற ஐடியா இருக்கு. இப்பிடி நிறைய பிளான் இருக்கு. ஆனா என்ன கொஞ்சக் காலம் போகோணும்.” என்றான் அவன் சிரித்த முகத்தில் நம்பிக்கையோடு.
முன்னேறத் துடிக்கிறான் என்பது அவனுடைய பேச்சிலேயே தெரிந்தது. தொலைநோக்குச் சிந்தனையும் அவனிடமிருந்தது. திட்டமிட்டு வாழ்கிறவன் தோற்றுப்போக மாட்டான். மனத்துக்குள் மெச்சிக்கொண்டார் சுந்தரேசன்.
“அப்பிடியே புவனாவை உரிச்சுப் படைச்சுப் பிறந்திருக்கிறான். என்னடா?” அவனுடைய பேச்சின் அழகில் லயித்தவர் கருப்பனிடம் சிலாகித்தார்.
தகப்பனின் அசாத்திய உயரத்தையும் கம்பீர உடல்வாகையும் வாங்கி வந்திருந்தாலும் நிறமும் முகவடிவும் அவன் அன்னைதான். பலர் இதையே சொல்லக் கேட்டிருக்கிறான் என்பதில் சிரிப்போடு நிறுத்திக்கொண்டான்.
“தமயந்தி என்ன செய்யிறாள்?”
“அக்கா கச்சேரில வேலை மாமா. துவாரகா ஆர்ட்ஸ் எடுத்தவள். கம்பஸ்ல ரெண்டாமாண்டு படிக்கிறாள். திவ்யா இப்பதான் ஓஎல் எடுத்திட்டு ரிசெல்ஸ் பாத்துக்கொண்டு இருக்கிறாள்.” என்று தன் சகோதரிகளைப் பற்றிச் சொன்னான் அவன்.


