“தேவையில்லாம எங்கட வீட்டு விசயத்தில நீ தலையிடாத ஆர்கலி. உன்ர வேலை எதுவோ அதை மட்டும் பார்! நாளைக்கு டாட்டா பாய்பாய் காட்டிப்போட்டு நீ போய்டுவாய். அவே ரெண்டு பேரும் இந்த ஊருலதான் இருக்கவேணும். அதுக்கேற்ற மாதிரித்தான் அவே இருக்கலாம். எனக்குத் தெரியும் என்ர தங்கச்சிக்கு எது வேணும் எது வேணாம் எண்டு. நீ தலையிடாத!”
அவனின் தீர்க்கமான பேச்சில் உறைந்துபோனாள் ஆர்கலி. மளுக்கென்று கண்களில் நீர் நிறைந்துபோயிற்று! இப்படி ஒரு கடுமையை அவனிடமிருந்து கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் வேறு அவள் வேறுதான். ஆனால், அதை உணரவே இல்லையே அவள். அந்த உரிமைதானே அவனிடம் சண்டையிடத் தூண்டியது. ஆனால், நெற்றிப்பொட்டில் அறைந்ததுபோல நீ வேறு நாங்கள் வேறு என்று சொல்லி விட்டானே! அவளை யாரோவாகத் தூக்கி எறிந்துவிட்டானே.
துவாரகாவுக்கும் பாவமாய்ப் போயிற்று. தனக்காகக் குரல் கொடுத்தவளிடம் தமையன் கடுமை காட்டியது பிடிக்கவில்லை. தமயனை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை.
“விடு ஆரு. நீ கேட்டதாலதான் நானும் வெட்டுவமா எண்டு யோசிச்சனான். மற்றும்படி எனக்கும் நீளமுடிதான் விருப்பம்!” என்று சமாளித்தாள் அவள்.
“சொறி! தெரியாம உங்கட வீட்டு விசயத்தில தலையிட்டுடன்!” அவன் முகம் பாராமல் கரகரத்த குரலில் சொல்லிவிட்டு வீட்டுக்குள் புகுந்து அறைக்குள் அடைந்துகொண்டாள் ஆர்கலி.
‘ப்ச்!’ தலையைக் கோதிக்கொடுத்த பிரணவனுக்கு அதற்குமேல் ஒன்றுமே ஓடவில்லை. அதுவரை தன்னோடு மல்லுக்கட்டியவளின் முகம், அவன் கடுமையைக் காட்டியதும் அப்படியே விழுந்து, சிவந்துபோனதுதான் கண்ணுக்குள்ளேயே நின்றது.
‘கொஞ்சம் பொறுமையா கதைச்சிருக்கலாம்.’ சமாதானப்படுத்துவோம் என்று எண்ணி வருவாளா வருவாளா என்று அங்கேயே சுழன்றும் அவள் வெளியே வரவேயில்லை. புவனாவும் இருந்ததில் மேலே போகவும் வழியில்லை.
பொழுது இருட்டத் தொடங்கியது. தங்கைகளை அழைத்துச்சென்று வீட்டில் விட்டான். அவனுக்கும் வேலை இருக்கவே போய்விட்டு, தகப்பனையும் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு, இங்கே ஆர்கலி வீட்டுக்கு அவன் வரும்போது இரவு பத்தாகிப்போயிருந்தது.
“கெதியா(விரைவா) வந்து சாப்பிடப்பு!” உறக்கக் கலக்கத்துடன் அழைத்த அன்னையிடம், “எங்கம்மா பொ… அவள் ஆர்கலி? சாப்பிட்டாளா?” என்று கேட்டான்.
“இல்லையப்பு. பசியில்லையாம் எண்டு சொன்னாள். மத்தியானம் நிறையச் சாப்பிட்டது செமிக்க இல்லையோ தெரியாது. பால் மட்டும் கொண்டுபோய்க் குடுத்தனான்.” என்று சொன்னவர் அவனுக்கு உணவைப் போட்டுக்கொடுத்துவிட்டு அவனருகிலேயே அமர்ந்தார்.
“எனக்கு எல்லாம் காணும்மா. நீங்க போய்ப் படுங்க!” என்று அவரை அனுப்பிவிட்டு, உண்ணாமல் மாடியை மாடியைப் பார்த்தான்.
நேற்றுப்போல அவள் வருவதற்கான அறிகுறியே இல்லை. சட்டென்று எழுந்து சத்தமில்லாமல் மேலே ஏறிப்போனான். அவளின் அறை வாசலில் ஒருகணம் தயங்கினாலும் மெல்லக் கதவைத் தட்டினான்.
கட்டிலிலிருந்து அவள் இறங்கிவரும் அரவம் கேட்டது. சற்று நேரத்திலேயே கதவு திறக்க, இவனை எதிர்பாராதவள் கேள்வியாகப் பார்த்தாள்.
முதல் நாளிரவு போலவே பைஜாமா செட்டில் இருந்தவள் முகம் சோர்ந்துபோயிருந்தது. தளராது அவன் அவளையே பார்க்க, பார்வையைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
“சாப்பிட வா!”
“பசியில்ல!”
அவ்வளவுதானே என்பதுபோலப் பார்த்துவிட்டுத் திரும்ப, எட்டிக் கையைப் பிடித்துத் தடுத்தான்.
“கோவமா?”
“எனக்கு என்ன கோவம்?” முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள் ஆர்கலி.
“அத என்ர கண்ணைப் பாத்துச் சொல்லு.”
“சொல்லுறது காதுக்குக் கேட்டா காணும்.”
“சரிசரி! நான் கொஞ்சம் கோவமாத்தான் கதைச்சிட்டன். அது பிழைதான். நீயும் விடாம அடம் பிடிச்சதுல கொஞ்சம் அவசரப்பட்டுட்டன். இப்ப சாப்பிட வா. பசிக்குது!” என்று அவன்தான் இறங்கி வந்தான்.
அதன் பிறகுதான் அவன் முகம் பார்த்தாள் அவள். “உண்மையா எனக்குப் பசிக்கேல்ல. நீங்க சாப்பிடுங்கோ.”
“அப்ப வந்திருந்து கதைச்சுக்கொண்டு இரு. அம்மாவும் படுத்திட்டா.” என்று அவளையும் அழைத்துக்கொண்டு கீழிறங்கினான் அவன்.
அவன் சாப்பிட நேரெதிரில் அமர்ந்திருந்து, “அவளுக்கு விருப்பமா இருந்தது. ஏன் வேண்டாம் எண்டு சொன்னனீங்க?” என்று வினவினாள்.
“அவளுக்கு வெட்டினா திவ்யாவும் கேப்பாள். அவள் சின்ன பிள்ளை எண்டாலும் ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் மாதிரி. உடுப்பில இருந்து செருப்பு வரைக்கும் ஒண்டாத்தான் போடுவீனம். அப்பிடியிருக்க ஒருத்திக்குச் செய்து மற்றவளுக்குச் செய்யாம விடக் கூடாது. அதவிட, உன்னை வெளிநாட்டில இருந்து வந்திருக்கு எண்டு ஆச்சரியமாத்தான் பாக்கும் ஊர். அதையே அவே செய்தா ஏதும் கதைக்கப் பாப்பீனம்.” அவனும் இப்போது பொறுமையாக விளக்கினான்.
“ஊருக்குப் பயந்து நாங்க வாழ முடியுமா என்ன?” அவன் தட்டிலிருந்து கோழிப் பொரியலின் ஒரு துண்டை வாயில் போட்டுக்கொண்டு கேட்டாள்.
“ஊரைத் தூக்கி எறிஞ்சிட்டும் வாழ ஏலாது பொம்மா. அதைவிட இதுக்குப் பெயர் பயம் இல்ல, பக்குவம்.”
“ப்ச்! என்னென்னவோ சொல்லுறீங்க. எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.”
“அதவிடு! மருதாணி வைக்கேல்லையா?”
“அந்த மூட்டே போய்ட்டுது. நீங்க கெடுத்துட்டீங்க.” என்று சலித்தாள் அவள்.
சாப்பிட்டு முடிந்ததும், “வா! நான் வச்சுவிடுறன்.” என்று அழைத்தான் அவன்.
கண்களை விரித்தாள் அவள். “ஹேய் உங்களுக்கு வைக்கத் தெரியுமா?” அந்தப் பெரிய கண்களையே பார்த்தபடி அவன் தலையசைக்க, ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.
முதல்நாள் போலவே அந்த சோபாவில் சம்மணம் கட்டி அமர்ந்துகொண்டு, தன் இரண்டு கைகளையும் அவனிடம் நீட்டினாள்.
மென்மையாகப் பற்றி மருதாணி இட்டுவிட்டான் பிரணவன். சற்றே அழுத்தினாலே சிவந்துவிடும் போலிருந்தன விரல்கள். அவற்றைப் பற்றவே பயந்தான் அவன். ஆனால், பற்றிக்கொண்டே இரு என்று ஆழ்மனது அவனுக்குள் மெல்லிய சமிக்ஜையை அனுப்பியது.
“வடிவா இருக்கு என்ன?” தன் கையையே பார்த்தபடி கண்கள் பளபளக்கச் சொன்னாள் ஆர்கலி.
“ம்ம்…” அவளையே பார்த்துக்கொண்டு சொன்னான் அவன்.
அவளின் முடியிழைகள் முன்னுக்கு முன்னுக்கு வந்து விழ, “ஐயோ! கடுப்பேத்துது. இதைக் கொஞ்சம் பின்னால தள்ளிவிடுங்கோ!” என்றாள் அவனிடம்.
மென்மையாக அவளின் காதோரமாக ஒதுக்கிவிட்டான் பிரணவன். அவளோ மெல்ல அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“எனக்கு நித்திரை வருது பிர…ண…வன். என்ன செய்ய?”
“போய்ப் படு!” அவள் முகம் பார்த்தபடி சொன்னான் அவன்.
“ம்கூம்! நான் இங்கயே படுக்கிறன். நீங்க என்ர கையக் கவனமா பாத்துக்கொள்ளுங்க!”
அவள் தலையிலேயே ஒன்று போட்டான் அவன்.
“திமிர்தான்டி உனக்கு! வச்சுவிட்டதும் காணாம கைக்கு வேற காவல் காக்கோணுமோ?”
“காத்தா என்ன குறைஞ்சா போவீங்க. விடிய எழும்பிப் பாப்பன், கைக்கு ஏதாவது நடந்து இருந்திச்சு… நடக்கிறதே வேற!” என்றபடி உறங்கிப்போனாள் ஆர்கலி.
அந்தப் பூ முகத்தையே பார்த்திருந்தான் பிரணவன். அவனுக்கும் அவளுக்குமிடையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர முடியாமல், ஆர்கலி என்கிற சுழலுக்குள் அவனே அறியாமல் இழுபட்டுச் சென்றுகொண்டிருந்தான்.


