அவள் போய்விட்டாள். அவளோடு எல்லாமே போய்விட்டது போலிருந்தது பிரணவனுக்கு.
இதே ஊரில்தான் பிறந்தான். இங்கேதான் வளர்ந்தான். அவனுடைய கற்பனைகளை, இலட்சியங்களை, எதிர்காலத் திட்டங்களை எல்லாம் இங்கேதான் வகுத்தான். அவனைப் பெற்றவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். கூடப் பிறந்தவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள்.
வேலை, அவன் நேசிக்கும் இரணைமடுக்குளம், அவனுடைய நண்பர்கள் என்று அவனுடைய எல்லாமே இங்கேதான் இருக்கின்றன.
ஆனால், எதுவுமே அவனைச் சுற்றி இல்லாதது போலொரு உணர்வு. தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான். அனைத்தும் அந்நியமாய்ப் போயிற்று!
ஒன்றிலும் பிடிப்பில்லை. வெறுமை அவனைச் சூழ்ந்தது. செய்யும் வேலையில் ஆர்வமில்லை. எப்போதும் அவள் அவள் அவள் மட்டுமே! அவளின் நினைவுகள் மட்டுமே! அவள் இருந்தால் மட்டுமே அவனுடைய உலகம் அழகாகும்.
அங்கே சென்றுகொண்டிருந்த ஆர்கலியின் நினைவிலும் பிரணவனே நிறைந்திருந்தான். அவன், அவனது கேலி, கிண்டல், கவனமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, சற்றுமுன் கேசத்தைக் கலைத்துவிட்டதும் சிரிப்போடு அவன் சிந்திய முறைப்பு!
அவளின் உதடுகளில் அவனது நினைவுகளால் உண்டான புன்னகை மறையவேயில்லை.
இரவு ஹோட்டலுக்கே நேரடியாகச் சென்றவர்கள் அங்கேயே தங்கிக்கொண்டார்கள். காலையில் எப்போதும்போல ஒரு தொள தொள லோங் பான்ட்க்குள் புகுந்து அதேமாதிரி தொளதொள பிளவுசுக்கால் வெளியேறி வந்தவளை முறைத்தார் லலிதா.
“சயந்தன் வருவார். நீ இப்பிடி வந்து நிக்குறாய்? போய் வடிவா வெளிக்கிட்டுக்கொண்டு வாம்மா!”
“அவருக்காக எண்டு எல்லாம் வெளிக்கிட ஏலாதம்மா. இதுதான் நான்! இந்த என்னையே பாக்கட்டும்!” என்றவள் முடியைத் தூக்கி நன்றாக மேலே போனிடெயிலில் அடக்கினாள்.
அதற்குமேல் லலிதா ஒன்றும் சொல்லவில்லை. வாதாடினால் அவளின் பிடிவாதம் வென்று, தன் பக்கம் மட்டுமே தோற்கும் என்று தெரியும். ஆகையால், அவள் நெற்றியில் ஒரு பொட்டை மட்டும் வைத்துவிட்டார்.
இவர்கள் போயிறங்கியபோது லலிதாவின் அண்ணா குடும்பமும் சயந்தன் குடும்பமும் வாசலுக்கே வந்து வரவேற்றனர்.
சுந்தரேசனையும் லலிதாவையும் முதலே பார்த்துவிட்டதில் எல்லோரின் பார்வையும் குறுகுறு என்று இவளையே சுற்றிவந்தது. சற்றே அசூசையாக உணர்ந்தாள் ஆர்கலி.
அவர்களின் உபசரிப்பில் சிரிப்பில் பேச்சில் ஏதோ ஒரு நாடகம் பார்ப்பது போலிருந்தது. என்னவோ இயல்பற்றுத் தெரிந்தனர். கருப்பனின் குடும்பம் நினைவில் வந்தார்கள். அவர்களிடம் அவள் இப்படி உணரவேயில்லை.
ஆர்வமாகப் பார்த்தாலும் அவளையும் தங்களுக்குள் ஒருத்தியாகப் பார்த்த கணமே இணைத்திருந்தார்கள்.
அந்தச் சயந்தன் வாயில் சுவிங்கத்தை மென்றபடி இவள் பாராதபோது இவளை ஆராய்ந்துகொண்டிருந்தான். ‘எத்தனை வருச காரண்டி எண்டு பாக்கிறானோ?’ சிரிப்பு வந்தது அவளுக்கு.
வேண்டுமென்றே தானும் அவனை ‘நான் உன்னை ஆராய்கிறேன்’ என்று உணர்த்தும் வகையில் மேலிருந்து கீழாகப் பார்த்தாள். அவன் நெளிவது தெரிந்தது. கடையிதழில் பூத்துவிட்ட சிரிப்பை மறைக்கக் கைப்பேசியைப் பார்த்தாள்.
“போய்ச் சேர்ந்திட்டோம் எண்டு ஒரு மெசேஜ் போடமாட்டியாடி குட்டச்சி?” என்று கேட்டிருந்தான் பிரணவன்.
கண்கள் மின்ன, “போடமாட்டன்! போடா!” என்று அனுப்பிவிட்டாள்.
அங்கே அவன் சட்டென்று பிரசன்னமாவது தெரிந்தது.
“எங்க நிக்கிறாய்?”
“நிலத்தில!”
முறைக்கும் ஸ்மைலிகளை மிக வேகமாக அனுப்பிக்கொண்டிருந்தான் அவன்.
“மாப்பிள்ளை பாக்க வந்திருக்கிறன். டிஸ்டப் பண்ணாதீங்க!” அதை எழுதியபோது அவளுக்கே சிரிப்பாயிருந்தது.
அவனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது. அதுவும், அவளே அதைச் சொன்னபோது இரத்த அழுத்தம் சட்டென்று மேலெழும்பியது! அவளோடான பேச்சை அத்துடன் கத்தரித்துவிட்டான் பிரணவன்.
இந்தக்கணமே பறந்துசென்று அத்தனையையும் தூக்கி உடைத்து எறிந்துவிட்டு வர வேண்டும் போலிருந்தது. ‘அவன் அவளைப் பாப்பானே…’ தேகமெங்கும் நெருப்பு எரிவது போலக் கணகணத்தது.
அருகிலிருந்த கல்லை எட்டி உதைத்தான். பெயரில்லாத கோபமொன்று மூர்க்கத்தனமாக அவனுக்குள் கிளம்ப வண்டியை எங்கென்றே தெரியாமல் சீறிப்பாயவிட்டான்.
கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்து இணைக்கப்பட்டதால், இரணைமடுக்குளம் என்று பெயர் பெற்று, இலங்கையின் ஏழாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இருக்கும் இரணைமடுக் குளத்தின் இராட்சதக் காற்றினை எதிர்த்துக்கொண்டு நின்றிருந்தான் பிரணவன்.
அவன் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. அங்கே அவள் எவனோ ஒருவனுக்கு முன்னே காட்சிப்பொருளாக நிற்பாள் என்பதே ஒருவித ஆக்ரோசத்தைக் கொடுக்க, தலையைக் கோதிக்கொடுத்தான். அவளைப் போலவே அவன் அனுமதியின்றி கேசம் கலைத்துப்போனது காற்று!
‘ஃபோனைப் போட்டு அங்க அவனுக்கு முன்னால நிக்காம வா எண்டு சொல்லுவமா?’ அதைச் செய் என்று மனம் உந்தித் தள்ளியது!
‘ஏன் எண்டு கேப்பாளே?’
‘நீ என்ர பொம்மா! உன்ன எவன் பாத்தாலும் அவனக் கொல்லுவன்!’ உக்கிரம் கொண்ட மனத்தைக் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டான் பிரணவன்.
என்னாயிற்று அவனுக்கு? காதல் கொண்டுவிட்டானா? இனிமையான அதிர்ச்சி! சில்லென்று அவனைத் தாக்கிய சந்தோசம்! காதல்… அவனைப் பிடித்துக்கொண்டது!
‘அடிப்பாவி! என்னையும் காதலிக்க வச்சிட்டியே!’ சட்டென்று முகமெங்கும் பரவிப்படர்ந்த ஆனந்தச் சிரிப்போடு கேசம் கோதினான்.
இதுதானா? அவனுக்குள் இத்தனை கொதிப்பும் கோபமும் வரக் காரணம் இதனால்தானா?
சின்ரெல்லாவாக இறங்கி வந்தவளைக் கண்டு மயங்கி நின்றது, அவனுக்கு முன்னால் சாறி கட்ட வேண்டாம் என்று அதட்டியது, அவளின் பிரிவில் பைத்தியக்காரனைப் போல் அலைந்தது எல்லாம் இதனால்தானா?
அவன் மனம் அவளிடம் மயங்கியிருக்கிறது, கிறங்கியிருக்கிறது, கரைந்து காணாமல் போயிருக்கிறது. அதை அவன் உணரவேயில்லையே!
‘அடி கள்ளி! இப்படிச் சொல்லாம கொள்ளாம பறிச்சிட்டியேடி!’
இந்தக் கணமே அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இதே இரணைமடுக்குளக்கரையில் அவளைத் தூக்கிச் சுற்றிக்கொண்டு, “வாறியா? நாங்க ரெண்டுபேரும் ஓடிப்போவம்?” என்று கேட்க வேண்டும் போலிருந்தது.
‘வரட்டும் கேக்கிறன்!’


