அவள் பார்த்து வளர்ந்த சமூகத்தின் ஒரு மனிதனாக மட்டுமே அவன் தெரிந்தான். அவன் வாழும் நாட்டின் நாகரீகம் சொட்டும் உடல் மொழியோடு, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பளபளப்புடனிருந்த அவன்மீது எந்தவிதமான ஆர்வமும் வரவில்லை.
அவனால் அவளுக்குள் எந்தவிதமான மாயங்களையும் நிகழ்த்த முடியவில்லை. அவளால் சாதாரணமாக அவனை எதிர்கொண்டு உரையாட முடிந்தது.
ஏனோ பிரணவன் நினைவுக்கு வந்தான்.
ஹாய் என்றபடி வந்த பிரணவன், காயம்பட்ட கையைப் பார்த்துவிட்டுக் கண்ணாலேயே ஆறுதல் சொன்ன பிரணவன்,
அவளின் விழிகளை எதிர்கொள்ளாமல் ஓடிய பிரணவன்,
தன் சிரிப்பை மறைக்க முகம் திருப்பி முடி கோதிய பிரணவன், அவளுக்கு மருதாணி இட்டுவிட்ட பிரணவன், சாரி கட்டுறேல்ல என்று அதட்டிய பிரணவன்,
கடைசியாகப் போடி என்று சிரித்த பிரணவன்,
சற்றுமுன் ‘போய்சேர்ந்திட்டோம் எண்டு ஒரு மெசேஜ் போடமாட்டியாடி’ என்று அதட்டிய பிரணவன்.
அவனோடு விடிய விடியக் கதைப்பதற்கு அவளிடம் ஆயிரம் விசயங்கள் இருந்தன. மல்லுக்கட்ட, சண்டை பிடிக்க, வம்பிழுக்க, சில நேரங்களில் அவனிடம் வாங்கிக்கட்ட இப்படி ஓராயிரம் இருந்தன.
அவனைப் போல இருக்க வேண்டாமா?
“தன்னைப் பற்றி, தன்ர வசதியப் பற்றிக் கட்டப்போற உன்னட்டச் சொல்லாம வேற ஆரிட்டச் சொல்லுவார்? இதெல்லாம் கேட்டு நீ பெருமைப்பட வேணும். காலத்துக்கும் எந்தச் சிரமமும் இல்லாம வாழப்போறாய் எண்டு சந்தோசப்படோணும். அதை விட்டுட்டுக் குறையாச் சொல்லுறாய்.”
“அம்மா! நான் இன்னும் ஓம் எண்டு சொல்லேல்ல! அதுக்குமுதல் நீங்களா எதையும் கற்பனை செய்யாதீங்க!” ‘கட்டப்போகிறவள்’ என்று தாய் சொன்னது பிடிக்காமல் முறைத்தாள் அவள்.
“இப்ப சொல்லு எண்டுதானே கேக்கிறோம். ஒரு வகைல அவே எங்களுக்குச் சொந்தம். நல்லா விசாரிச்சாச்சு. பெடியன் நல்லவன்தான். சுவிஸ் எண்டால் நாங்களும் அடிக்கடி வரலாம். நீயும் எங்களிட்ட வரலாம். பெடியனுக்குப் பொறுப்பும் இல்ல. எல்லாமே நல்லா பொருந்தி வருது.” என்று ஆசைகாட்டினார் அன்னை.
உதட்டைச் சுழித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அந்தப் பேச்சுக்கு ஆர்வம் காட்டாமல் பேசாமலிருந்தாள் ஆர்கலி.
லலிதா கண்ணால் காட்ட, “மனதில இருக்கிறதைச் சொன்னாத்தானே ஆரு எங்களுக்கும் விளங்கும். பிடிச்சா பிடிச்சிருக்கு எண்டு சொல்லு, இல்லாட்டிப் பிடிக்கேல்ல எண்டு சொல்லு.” என்றார் தகப்பன்.
“பிடிச்சிருக்கா பிடிக்கேல்லையா எண்டு தெரியாப்பா. ஆனா, பிரணவனை மாதிரி இருக்கோணும். அப்பதான் சந்தோசமா இருப்பன் எண்டு நினைக்கிறன். இவர் போர் அடிக்கிறார். எந்த இண்ட்ரஸ்ட்டும் வரேல்ல.” என்று தகப்பனிடம் செல்லமாகச் சொன்னாள் பெண்.
திக் என்றது லலிதாவுக்கு. யாரோடு யாரை ஒப்பிட்டுப் பார்க்கிறாள்? அதைவிட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு மகளின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறானே அவன்!
“விசர்க்கத்தை கதைக்காம வாய மூடு! எவனைப் பற்றி எங்க கதைக்கிறது எண்டு தெரியாம கதைக்கிறேல்ல! பாத்தீங்களா கடைசில எங்கட அடி மடியிலேயே கை வச்சிட்டான்.” ஆத்திரத்தில் சீறினார் லலிதா.
“கொஞ்சம் பேசாம இரு லலிதா!” என்று சுந்தரேசன் சொல்லிமுடிக்க முதலே, “என்னத்துக்கு இப்ப பிரணவனைக் குறை சொல்லுறீங்க? வந்த நாள்ல இருந்து பாக்கிறன், அவரை ஏதோ ஒரு விதத்தில குத்திக்கொண்டே இருக்கிறீங்க. அப்பிடி என்ன செய்தவர் எண்டு இவ்வளவு கோபம்?” என்று அவனுக்காகப் பேசினாள் மகள்.
அது மிகுந்த எரிச்சலை உருவாக்கியது லலிதாவுக்கு.
“அவனைப் பற்றி நீ கதைக்காத. முதல் சயந்தனுக்கு ஓம் எண்டு சொல்லு, நாங்க நிச்சயத்தை முடிப்பம்!” முடிவுபோல உறுதியாகச் சொன்னார் லலிதா.
அவர் சொன்ன தொனி ஆர்கலியை உசுப்பேற்றிவிட்டது. பிரணவனைக் குறை சொன்ன கோபமும் சேர்ந்துகொள்ள, “இல்ல! எனக்குச் சயந்தனைப் பிடிக்கேல்லை அப்பா!” என்று அழுத்தம் திருத்தமாக மறுத்துவிட்டாள் ஆர்கலி.
அவளின் பிடிவாதக் குணத்தைக் கிளறிவிட்டுத் தானே தன் எண்ணத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டோம் என்று லலிதாவுக்கு அப்போதுதான் புரிந்தது.
“ஆரும்மா. சொல்லுறதைக் கேள். அவன் அருமையான…” என்று அவர் ஆரம்பிக்க, காதைப் பொத்தினாள் ஆர்கலி.
“ஐயோ அம்மா போதும்! அருமையான பெடியன், நல்லவன், வல்லவன் எண்டு எல்லாம் கேட்டு கேட்டுக் காது புளிச்சுப் போச்சு! உண்மையாவே சயந்தனை எனக்குப் பிடிக்கேல்ல! அவரோட கலியாணம் எண்டு நினச்சுப் பாக்கவே விருப்பமில்லாம இருக்கு. பிறகும் என்னத்துக்கு அவரைத்தான் கட்டிவைக்கவேணும் எண்டு நிக்கிறீங்க? அப்பிடி என்ன கட்டாயம்?”
மகளின் கேள்வியில் பதிலற்று நின்றார் லலிதா. அவருக்குப் பிடித்த வரன் என்பதைத் தாண்டி என்ன இருக்கிறது சொல்ல?
“அப்பா! எனக்குப் பிரணவனை மாதிரித்தான் வேணும்!” முடிவாகத் தகப்பனிடம் அறிவித்தாள் ஆர்கலி.
மீண்டும் லலிதா வாயைத் திறக்கப்போக கண்களாலேயே கண்டித்தார் சுந்தரேசன்.
“பிரணவனை மாதிரியா இல்ல பிரணவனா? நல்லா யோசிச்சுச் சொல்லு.”
சுந்தரேசனின் நிதானமான பேச்சில் கொதித்துப்போனார் லலிதா.
“உங்களுக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு? அவள்தான் தெரியாமாக் கதைக்கிறாள் எண்டா நீங்களும் கேக்கிறீங்க? என்ர மகளுக்கு அப்பன் பேர் தெரியாத அநாதையின்ர மகன் வேண்டாம்!” கணவரின் கண்டிப்பையும் மீறி ஆத்திரப்பட்டார் லலிதா.
தாயை முறைத்துவிட்டுத் தகப்பனிடம் திரும்பினாள் ஆர்கலி.
“அவர் தானப்பா எனக்கு விருப்பம். அம்மா எத்தனையோ தரம் அவரை மட்டம் தட்டினாலும் அதை ஒருக்கா கூடி என்னட்ட காட்டவே இல்ல. நீங்க இஞ்ச வந்து நிண்ட நேரம் என்னை அவ்வளவு கவனமா பாத்தவர். நுளம்பு கடிக்குது எண்டு நிலம் முழுக்க உழுது, பின்னேரத்தில காய்ஞ்ச வேப்பமிலை எரிச்சு, வீட்டு ஜன்னல் எல்லாத்துக்கும் நெட் அடிச்சு, இரவில எங்கட வீட்டுல வந்து தங்கி எண்டு பக்குவமா பாத்தவர். அவரோட எதைப் பற்றிக் கதைக்கவும் நான் யோசிச்சதும் இல்ல, பயந்ததும் இல்ல. அவரின்ர மடில கூட நித்திரை கொண்டிருக்கிறன். அவர் பக்கத்தில இருந்தா உங்களோட இருக்கிற மாதிரி இருக்கும் அப்பா எனக்கு. இஞ்ச எனக்கு அந்தச் சயந்தனோட ஒரு அரை மணித்தியாலம் கூட இருக்கேலாம இருந்தது. ஓடி வந்திட்டன். எனக்கு அவர்தான் வேணும்!” என்று தெளிவாக உரைத்த மகளை அதிர்ந்துபோய்ப் பார்த்தார் லலிதா.


