இவ்வளவு தூரத்துக்கு அவளின் மனத்தில் அவன் ஊடுருவுவான் என்று அவர் சிந்திக்கவேயில்லையே! மகள் சொல்ல சொல்ல தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.
அவருக்கு எங்கே தெரியும், அவரின் மகளும் இப்போதுதான் தன் மனத்தைத் தானே உணர்ந்துகொண்டிருக்கிறாள் என்று.
“பாத்தீங்களா எப்பிடி எல்லாம் நடிச்சு அவளின்ர மனதைக் கெடுத்திருக்கிறான் எண்டு?” ஆவேசமாகக் கேட்ட மனைவியிடம்,
“இனிப் போதும் லலிதா! உனக்குப் பிடிக்கேல்ல எண்டு சொல்லு. அதுக்காக அவனைக் குறை சொல்லாத. அவன் அருமையான பிள்ளை.” என்றார் சுந்தரேசன்.
“எனக்குப் பிடிக்கேல்லதான். சயந்தன் இல்லாட்டி வேற பெடியனைப் பாருங்கோ. ஆனா அவன் வேண்டாம்!”
“ஏன் வேண்டாம்? என்ன காரணம்?” கேட்டது ஆர்கலி.
அவரின் மறுப்பு அவளுக்குள் அவன்தான் வேண்டும் என்கிற பிடிவாதத்தை மிக ஆழமாக உருவாக்கிக்கொண்டிருப்பதை உணராமல் பேசிக்கொண்டிருந்தார் லலிதா.
“அவனைக் கட்டி என்ன செய்யப்போறாய்? இந்த ஊருல கிடந்து மாரடிப்பியா? ரெண்டு கிழமை இருக்கவே உனக்கு நுளம்புக்கடி, வெயில் தாங்கேலாம இருக்கு. இதுல அந்த வீட்டுல காலம் முழுக்க நீ வாழேலுமா? குடும்பமே உழைச்சுத்தான் குடும்பமே சாப்பிடுது. இதுக்க நீயும் போயிருந்து சம்பலும் சோறும் சாப்பிடுவியா?” என்றவருக்குக் கோபத்திலும் நெஞ்சின் படபடப்பில் மூச்சு வாங்கியது.
ஆனாலும் விடாமல், “நாங்க லீவில வந்திருக்கிறம் எண்டு அவே நல்லா கவனிக்கிறத வச்சு எப்பவும் அப்பிடிக் கவனிப்பீனம் எண்டு நினைக்காத. சும்மா அவனைப் பிடிச்சிருக்கு எண்டு சொன்னா சரிவராது. இதையெல்லாம் யோசிக்கோணும். அவனுக்கு மூண்டு பொம்பிளைச் சகோதரம் இருக்கு. அதுகளுக்குச் சீதனம் குடுத்துக் கட்டிவைக்கோணும். அந்தப் பொறுப்பு முழுக்க நீயும் சேர்ந்து சுமக்க உனக்கு என்ன தலையெழுத்தா? இது எல்லாத்தையும் விட, அவனின்ர அப்பா எப்பிடிப் பிறந்தவர் எண்டே தெரியாம பிறந்தவர். அந்தக் குடும்பத்துக்கு உன்னக் குடுக்க ஏலாது!” என்று வெகு அழுத்தமாய்க் காராணங்களைச் சொல்லி மறுத்தார் லலிதா.
“போதும் லலிதா! நிப்பாட்டு!” சுந்தரேசனின் பொறுமை பறந்திருந்தது.
“கருப்பனைப் பற்றிக் குறையாக் கதைக்காத! நான் மனுசனா இருக்கமாட்டன்!” என்று எச்சரித்தார்.
“இப்பிடி என்ர வாய அடைச்சு அடைச்சுத்தானே இந்த நிலமைல கொண்டுவந்து நிப்பாட்டி இருக்கிறீங்க.” லலிதாவுக்கு மனம் ஆறவே மாட்டேன் என்றது. செல்ல மகளைக் கொண்டுவந்து அவனிடம் கொடுக்கவா இவ்வளவு காலமும் பார்த்து பார்த்து வளர்த்தார்?
“என்ன நிலமை வந்திருக்கு? தனக்குப் பிடிச்சவனைக் கைகாட்டி இருக்கிறாள். அவன் நல்லவனா இல்லையா எண்டு பாத்துக் கட்டிவைக்க வேண்டியது எங்கட பொறுப்பு.”
“அவள் ஆசைப்படுறாள் எண்டதுக்காக அவனையெல்லாம் கட்டிவைக்க ஏலாது!” நிர்தாட்சண்யமாக மறுத்தார் லலிதா.
“இருபத்தி ஐஞ்சு வருசத்துக்கு முதல் நீயும் இதே நிலமைலதான் இருந்தனி லலிதா. மறந்திடாத! இண்டைக்கு நீ சொன்ன மாதிரித்தான் அண்டைக்கு அம்மா எனக்குச் சொன்னவா!” கடுமையான குரலில் நினைவூட்டினார் சுந்தரேசன்.
முகம் கன்றிப்போயிற்று லலிதாவுக்கு. அதுவும் மகளையும் வைத்துக்கொண்டு கதைக்கும் கணவர் மீது சினம் பொங்கிற்று!
எப்படியாவது இந்த எண்ணத்தையே அடித்து மூட வேண்டும்! அவசரமாக யோசித்து வழி கண்டுபிடித்தார்.
“அவர் உங்களை அண்ணாவா நினைக்கிறார். அப்ப என்ன, பெரியப்பா சித்தப்பா பிள்ளைகளைக் கட்டிவைக்கப் போறீங்களா? நல்லாருக்கு!” என்றார் எரிச்சலோடு நக்கல் குரலில்.
தன் விருப்பத்தைச் சாதிப்பதற்காக என்னென்னவோ பேசும் மனைவியை வெறுப்போடு பார்த்தார் சுந்தரேசன்.
“முதல் அவன் எனக்கு நண்பன். அப்பிடித்தான் அறிமுகமானவன். நான் அவனைவிட வயதில மூத்தவன் எண்டதாலயும், எங்கட வீட்ட இருந்து வளந்த மரியாதைக்கும் அண்ணா எண்டு சொல்லுறான். அம்மா அப்பா அவனை மகனாதான் வளர்த்தவே. புவனா எனக்குத் தங்கச்சி. அவன் உன்னத் தங்கச்சி எண்டு சொல்லுறான். இதுல நீ எங்க இருந்து அண்ணா தம்பி உறவுமுறையைக் கண்டாய்? நீ சொன்னமாதிரி அவன் எனக்குச் சகோதரன் எண்டால் சொத்தில அரைவாசி… இல்ல எனக்கு எதுவுமே வேணாம். நான் இங்க இருக்கப் போறேல்ல. முழுக்க அவனுக்கு எழுதிக்கொடுப்பன். உனக்கு ஓகேயா?” என்றதும் கணவரைப் பார்வையாலேயே எரித்தார் லலிதா.
“என்ன கன்றாவிக்கு ஆரோ ஒருத்தனுக்கு எழுதிக்குடுக்கோணும்? அப்பிடியெல்லாம் குடுக்கேலாது!” வெடுக்கென்று சொன்னார் லலிதா.
“பிறகு என்ன? நீயே சொல்லிப்போட்டாய் அவன் ஆரோ எண்டு. எங்கட மகளுக்கு ஆரோ ஒருத்தன்ர அருமையான மகனைக் கேக்கலாம்.”
“அவன் என்ன மதிக்கமாட்டான்!”
“நீங்கதானம்மா அவரை மதிக்கிறேல்ல.” ஆர்கலி சொல்ல அவளை முறைத்தார் லலிதா.
“பாத்தீங்களா; ஒண்டும் நடக்கமுதலே திருப்பிக் கதைக்கிறாள். கல்யாணம் நடந்தா? என்னை மருந்துக்கும் மதிக்கமாட்டாள். அவன் இன்னும் கேவலப்படுத்துவான்.”
“போதும் லலிதா! நீ உள்ளுக்குப் போ!” என்று அவரை அனுப்பிவைத்தார் சுந்தரேசன்.
“கருப்பனைப் பற்றி அம்மா சொன்னது பிழை ஆரு. ஆனா அவன் வீட்டு நிலமை, பொறுப்பு, கஷ்டம் எல்லாம் உண்மை. சயந்தனைக் கட்டினா நீ வசதியான வாழ்க்கையச் சந்தோசமா வாழலாம். பிரணவனைக் கட்டினா நிறைய சிரமங்கள சந்திக்கவேண்டி வரும். கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும். அதெல்லாம் உனக்குப் பழக்கமே இல்லாத விசயங்கள். அம்மா சும்மா சொல்லேல்ல. எல்லாம் உண்மைதான். ஆசைப்படுறது வேற. நாளாந்தம் வாழுற வாழ்க்கை வேற. நல்லா யோசிச்சுச் சொல்லு. பிறகு அழுதுகொண்டு வரக் கூடாது. என்ன கஷ்டம், என்ன பிரச்சனை, இக்கட்டான நிலை வந்தாலும் தளம்பாம அவனோட நிண்டு சமளிப்பாய் எண்டு உறுதியா தெரிஞ்சா மட்டும் சொல்லு. அப்பா கதைக்கிறன். என்ன எண்டாலும் உனக்குப் பிடிச்சது மட்டும்தான் நடக்கும்.” என்று எடுத்துச் சொன்னார் சுந்தரேசன்.
சட்டென்று அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றும் தோன்றவும் இல்லை. பிரணவனை மட்டுமே நெஞ்சில் நினைத்தாள். அவளின் கன்னக்கதுப்புகள் கதகதப்பது போலிருந்தது. அவனின் நினைவுகளே அவளின் இரத்த நாளங்களைச் சுண்டிவிட்டுச் சிலிர்க்கச் செய்ய வல்லதாய் இருந்தன.
‘பிரணவா… நீ எனக்கே எனக்காடா?’ செல்லமாய் அவனைக் கொஞ்சிக்கொண்டாள்.
அந்த முடியை அவளிடம் தராமல் பின்னுக்குப் பின்னுக்கு அவன் தலையைக் கொண்டுபோகும் காட்சி நினைவில் வந்து சிரிப்பு மூட்டியது.
வாழ்க்கை அவளுக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாது. அப்பா சொன்னதுபோல என்னவெல்லாம் நடக்கும் என்றும் தெரியாது. அந்தளவு தூரத்துக்கு ஆழ்ந்துபோய்ச் சிந்தித்த அனுபவமும் இல்லை.
ஆனால், அவனில்லாத வாழ்க்கை எதைத் தந்தாலும் அதில் அவள் பூரணமாக மாட்டாள் என்றுமட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொண்டாள்.
எனவே, “எனக்கு அவர் தானப்பா விருப்பம்!” என்று தகப்பனின் கண்களைப் பார்த்துத் தன் முடிவைச் சொன்னாள் ஆர்கலி.


