மகளின் முடிவை அறிந்துகொண்டு அறைக்குள் வந்த சுந்தரேசன், முகம் திருப்பிய லலிதாவின் அருகில் சென்று அமர்ந்தார்.
“ஏன் லலிதா இப்படி மனதை இரும்பா வச்சிருக்கிறாய்?”
“இது என்ர மகளின்ர வாழ்க்கை. அதுல என்னால விளையாட ஏலாது. பிச்சைக்காரக் குடும்பத்துக்கு அவளைக் கட்டிக் குடுத்திட்டு அவள் படுற கஷடங்களைப் பாத்துக் கண்ணீர் வடிக்கச் சொல்லுறீங்களா?” ஆத்திரமாய்க் கேட்டார் லலிதா.
“அவன் முன்னுக்கு வருவான். அவளையும் நல்லா வச்சிருப்பான். எதுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கு லலிதா. எல்லாரும் பிறக்கேக்கையே காசோட பிறக்கிறேல்ல.” தன்மையாக மனைவிக்கு எடுத்துரைத்தார் சுந்தரேசன்.
சில விடயங்களில் லலிதாவின் குணம் சரியில்லை என்றாலுமே மகள் மீதான பாசத்திலும் அக்கறையிலும் ஒரு குறை சொல்ல முடியாது. அருமையான தாய். அந்தத் தாயைச் சமாதானப்படுத்தித் தெளிய வைக்க வேண்டியது அவர் பொறுப்பாயிற்றே!
“காசுதான் இல்ல. ஒரு குலம் கோத்திரம் இருக்கா? என்ன பரம்பரை, ஆர் அம்மா அப்பா ஒண்டும் தெரியாது. எங்க இருந்தோ எப்பிடியோ வந்த ஒரு ஆளின்ர மகனுக்கு ஆருவ ஏன் குடுக்கோணும்? உங்கட நண்பர் எண்டுற தகுதி மட்டும் போதாது.”
“நீ ஏன் அவனின்ர அப்பா, அப்பாட அப்பா எண்டு பரம்பரையை நோண்டுறாய்? அவனைப் பார். அவன் எப்படியான பெடியன் எண்டு யோசி.”
“இதென்ன வேலைக்கா ஆள் எடுக்கிறோம் அவனைப் பற்றி மட்டும் யோசிக்க. கல்யாணம், அடி ஆழம் வரைக்கும் யோசிச்சு, விசாரிச்சுத்தான் செய்யவேணும். சும்மா கொண்டுபோய் என்ர பிள்ளையக் குடுக்க அவள் ஒண்டும் வக்கில்லாத வீட்டுப் பிள்ளை இல்ல. அதைவிட நீங்களும் சேர்ந்துகொண்டு அவனுக்கே குடுக்கோணும் எண்டு ஏன் நிக்குறீங்க? சயந்தனப் பிடிக்காட்டி வேற மாப்பிள்ளை பாப்பம். அவன் வேண்டாம்! அவளால இங்கயெல்லாம் வாழ ஏலாது!” முடியவே முடியாது என்று நின்றார் லலிதா.
“ஆருக்கு அவனைத்தான் பிடிச்சிருக்கு. அதுக்கு என்ன செய்ய?”
“நான் கதைக்கிறன் அவளோட. சொன்னா கேப்பாள்.”
“சரி, போய்க் கதைச்சிட்டு வா!” மெல்லிய சினம் பொங்க அனுப்பிவைத்தார் சுந்தரேசன்.
போனவர் சற்று நேரத்திலேயே அழுத கண்களும் வாடிய முகமுமாகத் திரும்பி வந்து, “என்ன சொன்னாலும் கேக்கிறாள் இல்ல.” கணவரிடமே முறையிட்டார்.
தன் எதிர்காலத்தைத் தானே பாழாக்க நிற்கிறாள் என்கிற எண்ணம் அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.
சுந்தரேசனுக்கும் அவரின் மனநிலை விளங்காமல் இல்லை. தாயாக அவர் எதிர்பார்ப்பதிலும் தவறில்லையே! யார் என்ன என்று அறியாத கருப்பன் வீட்டில் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ யாருமே யோசிப்பார்கள் என்பதும் நிதர்சனம்! எல்லோராலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லையே! இதுவே, யாரோ எவரோ ஒரு கருப்பனாக இருந்திருக்க சுந்தரேசனும் சம்மதித்திருப்பாரா என்பது கேள்விக்குறிதான்!
“இங்க வா! வந்திரு!” என்று மனைவியைத் தன்னருகே அழைத்தார்.
“தேவையில்லை! நான் இங்கயே நிக்கிறன்!” மகளின் மறுப்பு, அதைவிட ‘நீங்க சம்மதிச்சாலும் சம்மதிக்காட்டியும் நான் அவனைத்தான் கட்டுவன்!’ என்று அவள் ஆணித்தரமாகச் சொன்ன விதம் என்று எல்லாமே அவரை மிகவுமே ஆழமாகத் தாக்கியிருந்தன.
தன் கைமீறி அவள் போய்விட்டாள் என்று நன்றாகவே உணர்ந்ததில் உடைந்துபோயிருந்தார்.
சின்ன சிரிப்போடு எழுந்துபோய்க் கைப்பிடித்து வந்து தன்னருகில் அமர்த்தினார் சுந்தரேசன்.
“நீ சொல்லுறது எல்லாம் விளங்குது லலிதா. ஆனா, நாங்களே அவனை இப்பிடி ஒதுக்கினா வேற ஆர் அவன் வீட்டுல சம்மந்தம் செய்வீனம் சொல்லு? உனக்கும் அவனை இருபத்தியிரண்டு வருசத்துக்கு மேல தெரியும். நீயே சொல்லு, அவன் பிழையா எங்கயாவது நடந்திருப்பானா? ஒரு கெட்ட பெயர் வாங்கி இருப்பானா? பிறகு எப்பிடி அவன் பிழையான குடும்பத்துப் பிள்ளையா இருப்பான்?” என்றவரின் கேள்விகளுக்கு முகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் லலிதா.
“அவன்ர தாய் தகப்பன் செய்த பிழைக்கு அவன் அனுபவிச்சது காணாது எண்டு அவன்ர பிள்ளைகளும் அனுபவிக்கிறது பாவம் லலிதா. நாளைக்கு எனக்கும் உனக்கும் ஏதோ ஒண்டு நடந்தா அடுத்த நிமிசமே எங்கட பிள்ளைகளும் அநாதைதான். சொந்தமும் வராது, பந்தமும் வராது. வந்தாலும் இருக்கிற காசைப் பறிக்கிற வரைக்கும்தான். இப்பிடிக் கல்லு நெஞ்சோட இருக்காத லலிதா!”
மகளால் காயப்பட்டிருந்தவரைக் கணவரின் கல் நெஞ்சுக்காரி என்ற வார்த்தை இன்னுமே தாக்கியது.
“நீங்கதான் சுந்தர் வரவர கல்லு நெஞ்சுக்காரனா மாறிக்கொண்டு போறீங்க. அதுவும் உங்கட நண்பர் எண்டு வந்தா நான் உங்களுக்கு முக்கியமே இல்ல.” நனைந்திருந்த விழிகளோடு குற்றம் சுமத்திய மனைவியைப் பார்த்தார் சுந்தரேசன்.
இத்தனை வயதிலும் அவரின் ‘சுந்தர்’ என்கிற பிரத்தியேக அழைப்பில் தன் மனம் கிறங்குவதை அறிந்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டார். ஆழ்நெஞ்சம் கொண்டுவிட்ட அசைக்கமுடியாத இந்த நேசம்தானே இன்றுவரை எத்தனை எத்தனையோ பிரச்சனைகள் அவர்களுக்குள் வந்துபோனாலும் விரிசலை உருவாக்காமல் இழுத்துக்கொண்டு போவது!
இப்படி ஒரு நேசம்தானே மகளின் வாழ்க்கைக்கும் அனைத்தையும் விட அத்தியாவசியமானது.
“நீ எனக்கு எவ்வளவு முக்கியம் எண்டு உன்னைவிட அவனுக்கு நல்லாத் தெரியும். அதாலதான் கோழை மாதிரி அழுத எனக்காக வீடு புகுந்து உன்னைத் தூக்கிக்கொண்டு வந்து என்னட்டத் தந்தவன்.” சன்னச் சிரிப்போடு மனைவியிடம் பழையதைப் பேசினார் அந்தக் காலத்துக் காதலன்.
“நீங்க ஒண்டும் கோழையில்ல. அம்மா அப்பாவில இருந்த பாசம் உங்களைத் தடுத்தது எண்டு சொல்லுங்க!” சலுகையோடு சொன்னார் லலிதா.
வாய்விட்டுச் சிரித்தார் சுந்தரேசன்.
“ஏதோ ஒண்டு! உன்ன அவ்வளவு ஆழமா விரும்பியும் அண்டைக்கு நானா அம்மாவை மீறி வந்திருப்பன் எண்டு நினைக்கிறியா நீ?”


