லலிதாவால் பதில் சொல்ல முடியவில்லை. ஒன்றுக்கு இரண்டாகக் குழந்தைகள் பிறந்த பின்புமே தாயை மீறி ஒரு வார்த்தை கதைத்ததில்லை சுந்தரேசன். இங்கிலாந்துக்குக் கூடத் தாய் சொன்னதால் மட்டுமே வந்தார் என்றும் தெரியும். பிறகும் என்ன சொல்லுவது?
“அண்டைக்கு, உன்ர வீடு புகுந்து உன்னக் கூட்டிக்கொண்டு வந்து என்னட்டத் தந்தது கருப்பன்தான். அதுக்காக போலீஸ்ல கூட ஒரு நாள் அடி வாங்கினவன். எங்களுக்காகக் கதைச்சு அம்மாவச் சமாதானம் செய்ததும் அவன்தான். அதையெல்லாம் நீ மறக்கலாமா சொல்லு? அண்டைக்கு நானும் நீயும் சேர்ந்ததுக்கும் இண்டைக்கு குடும்பம் குழந்தைகள் எண்டு சந்தோசமா வாழுறதுக்கும் அவன்தானே காரணம். தங்கச்சி எண்டுற சொல்லுக்கு மீறி மரியாதை இல்லாம ஒரு சொல்லுக் கதைச்சிருப்பானா லலிதா?”
அவர் சொல்ல சொல்ல அந்தநாள் நினைவுகள் அவரைச் சூழத்தொடங்கவும் கண்கள் கலங்கியது லலிதாவுக்கு.
அவரின் சுயநலமான குணங்கள், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாவற்றையும் தாண்டி, அன்றும் இன்றும் அவரின் சுந்தர் என்றால் அவருக்கு உயிர்தான்.
அன்று அப்படிக் கருப்பன் வந்து அழைத்துச் சென்றிராது விட்டிருந்தால் நிச்சயம் விசம் அருந்தி மாண்டிருப்பார். எல்லாம் புரிகிறதுதான். ஆனாலும், மனம் ஏற்க மறுத்துச் சிணுங்கிக்கொண்டிருந்தது.
“எல்லாம் விளங்குது சுந்தர். எண்டாலும் அவனுக்குக் கட்டிக் குடுக்க விருப்பம் வருதே இல்ல. நான் என்ன செய்ய?” கலங்கிவிட்ட விழிகளோடு கேட்ட மனைவியை அணைத்து முதுகை வருடிக்கொடுத்தார் சுந்தரேசன்.
அந்த நாட்களிலேயே விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்துநிற்கும் வெறுப்பு மரத்தை வேரோடு தறிப்பது அவ்வளவு இலகுவல்லவே!
“அவள் பாவம். இண்டைக்கு அவனைப் பிடிச்சதுல அடம் பிடிக்கிறாள். ஆனா, இந்த ஊர்ல, இந்த வெயிலுக்க அதுவும் அந்த வீட்டில அவளால சமாளிக்க ஏலாது சுந்தர்.” மனக்கண்ணில் மகள் சிரமப்படுவதுபோல் ஓடிய காட்சிகளே அவரைக் கண்ணீர் சொரிய வைத்தது.
“நாங்க ஏதாவது உதவி செய்யலாம் லலிதா. உதவி எண்டு கூடிச் சொல்லக் கூடாது. அது கடமை. கட்டாயம் செய்யவேணும்.”
லலிதாவும் அப்படித்தான் யோசித்தார்.
“எல்லாத்தையும் விட அம்மா அப்பாவப் பக்கத்தில இருந்து நான் பாக்கேல்ல லலிதா. யோசிச்சுப் பார், கடைசி காலத்தில ஒரு நோய் எண்டு வரேக்க நான் பக்கத்தில இல்ல. கொள்ளி வைக்கவாவது நான் வந்திருக்கோணுமா, இல்லையா சொல்லு? அவேக்கு மகனா என்ன செய்திருக்கிறன்? ஒண்டும் இல்ல. கடைசி வரைக்கும் எல்லாம் செய்தது அவனின்ர குடும்பம். அதுக்கு என்ன கைம்மாறு செய்யப்போறனோ தெரியா? அந்தப் பாரம் இறங்காம என்ர கட்டை வேகாது லலிதா!” தன் மனத்தின் பாரத்தைக் கொட்டிவிட்டார் சுந்தரேசன். கண்கள் கலங்கி குரல் கரகரத்துப் போயிற்று!
“ஐயோ சுந்தர்! உங்களுக்கு என்ன விசரா? கண்ட கதையும் கதைக்கிறீங்க.” அழுதுவிட்டார் லலிதா. இந்தளவு தூரத்துக்குக் கணவர் தனக்குள் மருகியிருக்கிறார் என்பது அவரறியாதது.
“அந்த நேரம் நாட்டுப் பிரச்சனை உச்சத்தில் நடந்துகொண்டு இருந்ததாலதான் நீங்க வரேல்ல. வந்திருந்தாலும் கொழும்பைத் தாண்டி இங்கால வரேலாது எண்டுதானே வரேல்ல. சும்மா மனதைப் போட்டுக் குழப்பாதீங்கோ. இப்ப என்ன, அவனுக்கு ஆர்கலியைக் குடுக்கோணும். அவ்வளவுதானே. நான் சம்மதிக்கிறன். ஆனா, அவன் லண்டனுக்கு வரோணும் சுந்தர்!” முடிவாகச் சொன்னார் லலிதா.
“வருவான் எண்டு நான் நினைக்கேல்ல. அப்பவே மாட்டன் எண்டவன் கருப்பன். இப்ப எப்பிடிச் சம்மதிப்பான்?”
“அது சும்மா கூப்பிட நினைச்சது. இப்ப ஆருவ கட்டினா வரத்தானே வேணும். அவளுக்கு இஞ்ச சரியே வராது. நுளம்புக்கடி, காயம், காய்ச்சல் எண்டு என்ன பாடு படுறாள் பாருங்க. பிறகு என்ன அவன் இங்கயும் அவள் அங்கயும் எண்டு இருக்கிறதா?”
லலிதாவின் கேள்வியிலும் நியாயம் இருந்ததில் தணிந்துபோனார் சுந்தரேசன்.
“முதல் தரம் எண்டபடியால் அப்பிடி இருக்கு. போகப்போக அவளுக்குச் சரியா வந்திடும்.”
“இந்தச் சமாதானம் எல்லாம் எனக்கு வேண்டாம்! அவன் அங்க வாறதா இருந்தா நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறன். இல்லை எண்டால் பெத்த தாயில்லாமல் உங்கட மகளுக்கு நீங்களே கட்டி வையுங்கோ!” என்று முடிவாகச் சொல்லிவிட்டார் லலிதா.
ஒரு வழியாக லலிதாவின் உறவினர் வீட்டுத் திருமணம் முடிந்தது. எல்லோரும் ஆவலாக இவர்களின் முகத்தை முகத்தைப் பார்த்தனர்.
இவர்களுக்குச் சங்கடம். அதற்கென்று நம்பிக்கையான வார்த்தைகளைக் கொடுக்க முடியவும் இல்லை. “மகளோட இன்னொருக்கா கதைச்சிப்போட்டு முடிவு சொல்லுறோம்!” என்றுவிட்டு விடைபெற்றுக்கொண்டனர்.
லலிதாவின் சொந்தங்களுக்கு முகம் சரியில்லை. “என்ன லலிதா இது? முடிவான மாதிரிக் கதைச்சிப்போட்டு, இப்ப வந்து பிறகு சொல்லுறோம் எண்டால் சரியில்லை எல்லோ.” என்று அண்ணி கேட்டார்.
அவருக்கும் அவர்களின் முகத்தைப் பார்ப்பதற்கே ஒரு மாதிரித்தான் இருந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டார்.
“ஆருக்குப் பிடிச்சாத்தான் எதுவுமே எண்டு ஆரம்பமே சொன்னதுதானே அண்ணி. அவள் ஒண்டும் சொல்லுறாள் இல்ல. யோசிக்கிறாள் போல. எதுக்கும் இன்னொருக்கா கேட்டுட்டுச் சொல்லுறோம்!” சட்டென்று மறுப்பைச் சொல்லாமல் ‘மறுப்பும் வரலாம்’ என்பதை உணர்த்திவிட்டுப் புறப்பட்டார்கள்.
கிளிநொச்சிக்கு வந்ததுமே, புவனாவையும் கருப்பனையும் அழைத்துப் பேசினார் சுந்தரேசன். ஆனந்தமா அதிர்ச்சியா என்று சொல்லமுடியாமல் திணறிப்போயினர் கருப்பன் தம்பதியர். வேகமாக அவர்களின் பார்வை லலிதாவைச் சூழ்ந்தது.
“அவளுக்கு அவனைத்தான் பிடிச்சிருக்காம். உங்கட சுந்தரம் அண்ணாவுக்கும் அதுதான் விருப்பமாம். அப்பிடியிருக்க நான் மட்டும் மறுத்து என்ன காணப்போறன்? ஆனா, பிரணவன் லண்டனுக்கு வரோணும்! அப்படியெண்டால் தான் நான் சம்மதிப்பன்!” எந்த இளக்கமும் காட்டாமல் சொல்லிவிட்டு விறுக்கென்று உள்ளே போய்விட்டார் லலிதா.
இருவர் முகமும் வாடிப்போயிற்று! புவனாவுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. மூன்று பெண் பிள்ளைகளுக்கு இடையில் ஒற்றையாகப் பிறந்த ஆண்குருத்து. அவனைப் பிரிவதா?
கஞ்சியோ கூழோ இதுவரை அவர்கள் வீட்டில் சந்தோசத்துக்குக் குறைவிருந்ததில்லை. இனி? வயதான காலத்துக்கும் அவனைத்தான் நம்பிக்கொண்டு இருந்தார்கள். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
மகனைத் தேடிவரும் நல்ல எதிர்காலத்தை அவர்களுக்காக வேண்டாம் என்பதா?
கருப்பன் சுந்தரேசனைப் பார்த்தார். சுந்தரேசனால் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. குற்றவுணர்ச்சி குத்தியது.
இதே நிலையில்தானே இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரும் தன் பெற்றவர்களை நிறுத்தினார். அன்று என்ன பாடுபட்டார். ‘அதே நிலையில என்னையும் கொண்டுவந்து நிப்பாட்டுறியா அண்ணா?’ என்று கருப்பன் கேட்பது போலிருந்தது.
அவர்களுக்காவது அன்று கருப்பன் இருந்தார். இன்று இவர்களுக்கு யார் இருக்கிறார்கள்? சுந்தரேசனையே பார்த்திருந்த கருப்பனின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. தன் வெள்ளைக் கேசத்தைத் தடவிக்கொடுத்துவிட்டு, “எங்களுக்குச் சம்மதம்தான் சுந்தரண்ணா. நாங்க எதுக்கும் தம்பியோட கதைச்சிட்டுச் சொல்லுறோம்!” என்றுவிட்டு மனைவியோடு புறப்பட்டார்.


