வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த இருவரின் நெஞ்சிலும் பாரம் அழுத்தியது!
“என்னப்பா இது? அண்ணா ஒரு வார்த்த சொல்லேல்ல?” தாங்கமுடியாமல் கேட்டார் புவனா.
“என்ர ஆம்பிளைப்பிள்ள! அவனில்லாம என்னெண்டப்பா இருக்கிறது?” பிரிவை எண்ணியதுமே புவனாவுக்கு மளுக்கென்று பொங்கி வழிந்தது கண்ணீர்.
கருப்பனுக்கும் நெஞ்சில் பாரம்தான். தகப்பன் சாமியாக மாறி அவரையே பார்த்துக்கொள்ளும் மகனைப் பிரிவதை நினைக்கவே நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.
அவன் இருக்கும்போது அவரை ஒரு வேலை செய்ய விடமாட்டான். ‘படித்த பிள்ள மண்வெட்டி பிடிக்காத தம்பி’ என்றாலும் கேட்கமாட்டான்.
அவரின் தோற்றம் குறித்தோ, அவரின் முரட்டுத்தனம் குறித்தோ ஒருவர் ஒரு சொல் சொல்ல விடமாட்டான். அவனை எங்கோ தொலை தூரத்துக்கு அனுப்பிவிட்டு அவர் எப்படி இருப்பார்?
“பிள்ளைகள் நல்லாருக்கோணும் எண்டுறதுதானே எங்கட கனவு, ஆசை. அத நினை. அங்கபோனா தம்பி நல்லாருப்பான் எல்லோ!”
தாங்களே தங்கள் மனத்தைத் தேற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தவர்கள் வேலைக்குப் போயிருந்த மகனுக்கு அழைத்தனர்.
“கொஞ்சம் வேலையம்மா! வர இரவாகும்!”
“தம்பி! என்ன வேலை எண்டாலும் ஒருக்கா வந்திட்டுப் போய்யா! முக்கியமான அலுவல் ஒண்டு கதைக்கோணும்!” என்று, கைப்பேசியைத் தான் வாங்கிச் சொன்னார் கருப்பன்.
அவர் குரலில் தெரிந்த சந்தோசத்தில் ஒருகணம் இறுகிப்போனான் பிரணவன்.
‘அவளுக்குத் திருமண நாளைக் குறிச்சாச்சோ!’ அதை ஜீரணிக்கவே முடியாமல் விழிகளை இறுக முடித் திறந்தான். அவனுடைய பொம்முக்குட்டி அவனுக்கில்லை. இதயத்தில் பெரும் வலி தாக்கியது.
நடப்பதை எதிர்கொள்ளத்தானே வேண்டும்!
வீட்டுக்கு வந்தவனைப் பூரிப்பும் சந்தோசமுமாக மலர்ந்த முகத்தோடு குடும்பமே வரவேற்றது. ஒன்றும் விளங்காமல், “என்னப்பா விசயம்?” என்றான் வறண்ட குரலில்.
“ஆர்கலிய உனக்குப் பேசுவமா எண்டு சுந்தரண்ணா கேட்டவர் தம்பி.”
என்னது? அவனால் நம்ப முடியவில்லை. நாற்காலியில் அப்படியே விழுந்தான். ஆனந்தமா அதிர்ச்சியா வேதனையா பிரித்தறிய முடியாமல் கண்களை இறுக்கி மூடித் திறந்தான்.
அவன் கொண்ட காதல் கைகூட ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. ஆனால், அவர்கள் போனகாரியம்?
அவன் கண்களில் தெரிந்த கேள்வியைப் படித்துவிட்டு, “ஆருக்கு அந்தப் பெடியனைப் பிடிக்கேல்லையாம்!” என்றார் புவனா.
என்ன கட்டுப்படுத்தியும் முடியாமல் அவனிதயம் சந்தோசத்தில் துள்ளியது.
அவள் நேற்றிலிருந்து அவனுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கிறாள்தான். அவன்தான் திறந்தும் பார்க்கவில்லை. அவனைப் பிடித்திருக்கிறது என்று தன்னிடமே சொல்லிவிடுவாளோ என்கிற பயம்.
“எங்களுக்குச் சம்மதம் எண்டு சொல்லட்டா தம்பி?” ஆர்வமாய்க் கேட்டார் கருப்பன்.
“கலியாணத்துக்குப் பிறகு அவள் இங்க இருப்பாளாமா?” பிரச்சனையின் நுனியைச் சரியாகப் பிடித்து வினவிய மகனிடம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் கருப்பன்.
அதுவே பதிலைச் சொன்னது. வறட்சியாகப் புன்னகைத்தான். அவன் காதலன் மட்டுமல்ல. அந்த வீட்டின் ஒற்றை மகன். மூன்று சகோதரிகளுக்குச் சகோதரன்.
“இதெல்லாம் சரியா வராதப்பா!” என்றான் தன் காலடியில் வந்து அமர்ந்திருந்த அலெக்சின் தலையைத் தடவியபடி.
“ஏன் சரிவராது? ஏன் இப்பிடிச் சொல்லுறாய்?” நல்ல எதிர்காலம் அமையும்போது கண்ணை மூடிக்கொண்டு சம்மதிப்பதை விட்டுவிட்டு இதென்ன கேள்வி கேட்கிறான் என்கிற பரிதவிப்பு அவருக்கு.
ஒரு நெடிய மூச்சுடன் தகப்பனைப் பார்த்தான். அவரின் அருகிலேயே சகோதரியார் மூவரும் ஆவலோடு அவனையே பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
அவனுக்கோர் வளமான வாழ்க்கை அமையப்போகிறது என்கிற பூரிப்பு அவர்களிடம். நெஞ்சம் கனிந்துபோயிற்று! அவர்கள் பிறந்த வயிற்றில்தானே அவனும் பிறந்தான். காதல்… அது அவனுக்குள்ளேயே புதைந்து போகட்டும்!
அவன் முகத்தில் எதைக் கண்டாரோ, அவனை நெருங்கி, “உன்ர மனதுக்க என்னப்பு கிடக்கு? அதைச் சொல்லு!” என்று பாசத்தோடு கேசம் கோதிக் கேட்டார் புவனா.
தாயின் மடி சாய்ந்து அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
தன் உள்ளம் கிடந்து படும் பாட்டை எப்படிச் சொல்லுவான்?
“அக்கா, தங்கச்சியாக்களைப் பற்றி யோசிக்காத. கடவுள் வழி காட்டுவார்!” என்றார் அன்னை.
“அண்டைக்கு சுந்தரம் மாமா செய்த அதே காரியத்தை இண்டைக்கு என்னச் செய்யச் சொல்லுறீங்களா அம்மா?” அவரை நேராகப் பார்த்துக் கேட்டான் மகன்.
அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டார் புவனா. எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு பெற்ற வயிறு குளிர்ந்து. அவரின் வளர்ப்பு பிழைத்துவிடவில்லை. பொல பொலவென்று கண்ணீர் வடியக் கணவரைப் பார்த்தார். கருப்பரும் தன் உணர்வுகளைச் சமாளிக்கப் போராடிக்கொண்டிருந்தார்.
“நான் உங்கட மகனப்பா! எனக்கு விருப்பமில்லையாம் எண்டு சொல்லிவிடுங்கோ!” என்றவன் விருட்டென்று எழுந்து வெளியேறிவிட்டான்.
அவளை அவனே மறுக்கும் நிலையில் வைத்த கடவுளை என்ன செய்வான்?
காதல் எதையும் யோசிக்காமல் அவனுக்குள் துளிர்த்துவிட்டதுதான். கல்யாணம் அப்படியல்லவே!
ஆர்கலிக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை. கிளிநொச்சிக்கு வந்ததுமே பிரணவனைப் பார்க்கத் துடித்தாள். அவனோடு பேச ஆசைப்பட்டாள். எதுவுமே நடக்காதாம்.
“ஒரு முடிவும் தெரியாம அப்பிடியெல்லாம் போகேலாது. பேசாம இரு!” என்றுவிட்டார் லலிதா.
கருப்பன் தம்பதியர் வந்தபோது, “மாமா மாமி!” என்று ஓடி வந்தவளை, “பெரியாக்கள் கதைக்கேக்க இங்க நிக்குறேல்ல, அறைக்குள்ள போ ஆரு!” என்று அப்போதும் துரத்திவிட்டார்கள்.
சரி என்று அறைக்குள் போயிருந்து பிரணவனுக்கு அழைத்தபோது அவன் ஏற்கவே இல்லை. அனுப்பும் எந்த மெஸேஜையும் பார்க்கவும் இல்லை. ஆனால், அவ்வப்போது வந்துபோகிறான் என்று மட்டும் தெரிந்தது.
“மச்சான் மாட்டுடா வச்சு செய்யிறன்!” என்று அவனுக்கே அனுப்பிவிட்டு தொப்பென்று கட்டிலில் விழுந்தவள் உள்ளம் அவன் அருகண்மைக்கு ஏங்கிப் போயிற்று!
உணரவே இல்லாமல் அவன் தோள் சாய்ந்த நாட்கள், கரம் கோர்த்த பொழுதுகள், மடி சாய்ந்து உறங்கிய நினைவுகள் எல்லாம் வந்து சிலிர்ப்பூட்டின. இன்று அந்த நிகழ்வுகளைக் காதலோடு மீண்டும் ஒத்திகை பார்க்க உள்ளம் ஏங்கியது. அவனோ கண் முன்னே வராமல் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தான்.


