“அவன் வேண்டாமாம் அண்ணா.” சுந்தரேசனுக்கு அழைத்துத் தயங்கி தயங்கிச் சொன்னார் புவனா.
கேட்ட லலிதாவுக்குச் சுர் என்று ஏறியது. ‘பாத்தீங்களா?’ என்று கண்ணாலேயே கணவரை எரித்தார். பொறு என்பதாகச் சைகை செய்துவிட்டு, “ஏனாம்?” என்று கேட்டார் சுந்தரேசன்.
அவன் சொன்னதைச் சொல்லவா முடியும்? “வெளிநாட்டுக்கு வர விருப்பம் இல்லப்போல அண்ணா.”
“பிரணவன் எங்க? குடு, நான் கதைக்கிறன்!”
“அவன் சொல்லிப்போட்டுத் திரும்ப வேலைக்குப் போய்ட்டான்.”
“ஓ…! நாளைக்கு விடிய வாறன். அவனை நிக்கச் சொல்லு!” என்றுவிட்டு வைத்தார்.
வைத்ததுமே வெடித்தார் லலிதா.
“அவனுக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா வேண்டாம் எண்டுவான். எவ்வளவு திமிர். நாங்களா கேட்டதால வந்த அகம்பாவம். அவன் வேண்டாம் எண்டு சொல்லுற இடத்திலயா ஆரு இருக்கிறாள். எல்லாம் உங்களால வந்தது. ஊர் உலகத்தில மாப்பிள்ளையே இல்லை எண்டமாதிரி அவனைப் போய்க் கேட்டிங்க, தேவைதான் இந்த அவமானம்! இதுகள் எல்லாம் காலம் முழுக்க கிடந்து கஷ்டப்படத்தான் லாயக்கு!”
அவன் வேண்டாம் என்று சொல்லுமிடத்தில் மகளை நிறுத்திவிட்டாரே என்று கணவர் மீது பயங்கரக் கோபம் வந்திருந்தது லலிதாவுக்கு.
“இப்பவே அவளுக்கு இதைச் சொல்லுறன்! அவளே தூக்கிப்போடுவாள் அவனை. அவனுக்கெல்லாம் அதுதான் வேணும்!” என்று படியேறப் போனவரை எட்டித் தடுத்தார் சுந்தரேசன்.
“நாளைக்கு அவனோட கதைக்கிற வரைக்கும் பேசாம இரு!”
சுந்தரேசனும் இதை எதிர்பார்க்கவில்லை. மனத்தில் மெல்லிய சுணக்கமும் ஏமாற்றமும் பரவிற்று! அடுத்தநாள் காலையிலேயே அவனைப் பிடித்தார்.
அவர் முகம் பார்க்கச் சங்கடப்பட்டான் பிரணவன். பெற்றவர்களிடம் இலகுவாகச் சமாளித்துவிட்டான். அவரிடம்?
“அவளைப் பிடிக்கேல்லையா உனக்கு?” அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு வீட்டினர் வெளியேறிவிட விசாரித்தார் சுந்தரேசன்.
அவளைப் பிடிக்காதா அவனுக்கு? உதட்டோரம் விரக்தியான புன்னகை ஒன்று வழியப் பார்த்தது.
“இல்ல மாமா! அப்பிடி எதுவுமில்லை!”
“பிறகு ஏன் மறுக்கிறாய்?”
அவனால் அந்தக் கேள்விக்குப் பதிலிறுக்க முடியவில்லை.
“உனக்குப் பிடிக்காட்டி நான் வற்புறுத்த மாட்டன் பிரணவா. இது திருமணம். பிடிக்காம வாழ ஏலாது. ஆனா, நீ மறுக்கிறதுக்கு லலிதாவோ வேற எதுவும் காரணமெண்டால், அது என்ன எண்டு சொல்லு. கதைச்சுப்பேசி முடிவெடுக்கலாம். நீ ஆர்கலியைப் பற்றி மட்டும் யோசி. உன்ர விருப்பத்தைப் பார். அவளும் உன்னைத்தான் ஆசைப்படுறாள். ‘எனக்குப் பிரணவனப் பிடிச்சிருக்கப்பா’ எண்டு சொன்னபிறகு இன்னொரு மாப்பிள்ளையை என்னெண்டு பாப்பன் சொல்லு? ஓம்(ஆம்) எண்டு சொல்லு பிரணவன்.” உரிமையோடு கேட்டார் சுந்தரேசன்.
அவனுடைய பொம்மாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறதாமா? நெஞ்சுக்குள் இனித்துக்கொண்டு இறங்கியது அவர் சொன்ன வார்த்தைகள்.
துள்ளிக் குத்திக்கச் சொல்லி உடலின் ஒவ்வொரு அணுவும் உந்தித் தள்ளின. தன் சந்தோசம் மறைக்க முகம் திருப்பிக் கேசம் கோதினான்.
அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது எனும்போது பேசிப்பார்க்கச் சொல்லி ஆசைகொண்ட உள்ளம் உந்தித் தள்ள அவரிடம் திரும்பினான்.
“பொ… ஆருவ பிடிக்காம மறுக்கேல்ல மாமா. பிடிச்சிருக்கு. ஆனா எனக்குப் பொறுப்பும் இருக்கே மாமா.” நயமாகவே ஆரம்பித்தான்.
அதற்கு ஒன்றும் சொல்லாமல், சொல்ல நினைப்பதை எல்லாம் சொல்லட்டும் என்று அவனைப் பேசவிட்டார் சுந்தரேசன்.
“எனக்கு என்ர குடும்பம் முக்கியம். எந்தக் காரணத்துக்காகவும் ஆருக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டன். அக்கா, தங்கச்சியாக்கள் கட்டினாப்பிறகும் நாளைக்கு அவேக்கு ஒண்டு எண்டால் நான்தான் நிக்கோணும். அவேக்கு கட்டி வச்சாச்சு, என்ர கடமை முடிஞ்சுது எண்டு ஓட ஏலாது.” என்றவன் ஒரு நொடி நிறுத்தினாலும் தொடர்ந்து பேசினான்.
“அப்பாவுக்கு வயது போயிட்டுது. அம்மாவும் பாவம். கடைசிவரைக்கும் இங்க இருந்து அவே எல்லாரையும் நான் தான் பாக்கவேணும். இதுக்கெல்லாம் நீங்க சம்மதிக்க மாட்டீங்க. எனக்குத் தெரியும். என்ர கடமைகள் முடிஞ்ச பிறகு கல்யாணம் எண்டாலும், பிறகு லண்டனுக்கு வா எண்டு கூப்பிடுவீங்க. இல்ல, ஆர்கலியை இங்க இரு எண்டு நான் சொல்லோணும். அது அவளுக்கும் ஏலாது. மாமிக்கு என்னைப் பிடிக்காது. ஆரு இங்க இருப்பாளா தெரியாது. இதையெல்லாம் யோசிச்சுப்போட்டுத்தான் வேண்டாம் எண்டு சொன்னனான்.” என்று தன் மனத்தை எடுத்துரைத்தான் அவன்.
தன்மையாகவும் பணிவாகவும் பேசினாலும் தன் கருத்தில் அவன் உறுதியாகத்தான் இருக்கிறான் என்று சுந்தரேசனுக்கு மிக நன்றாகவே புரிந்துபோயிற்று.
ஆனாலும், “ஏனடா அங்க வரமாட்டன் எண்டு சொல்லுறாய்? வந்தா உன்ர குடும்பமே நல்லாருக்குமே! எல்லா பிரச்சனைக்கும் அது நல்ல தீர்வே பிரணவா.” என்று அவரும் நயமாகவே தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
வெளிநாடு மட்டுமே விடிவிளக்கு என்று அறுதியாய் நம்பும் பலரில் அவரும் ஒருவர் என்று உணர்ந்து புன்னகைத்தான் அவன்.
“இங்க என்ன குறை மாமா? அங்க டொய்லெட் கழுவ ரெடியா இருக்கிற மனுசர் இங்க இறங்கி வேலை செய்யத் தயாரில்லை. அது மட்டும்தான் இங்க பிரச்சனை. இது நான் பிறந்து வளர்ந்த தேசம். இங்க என்ன இல்ல எண்டு அங்க வர? இங்க இருந்தே முன்னேறிக் காட்டுறன்!” அதுவரை இருந்த இலகு தன்மை அகன்று தீவிரத்தோடு சொன்னான் அவன்.


