அவனைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் தன்னுடைய குடும்பத்தையும் சேர்த்தே பதில் சொல்லிக்கொண்டிருந்த பிரணவனை சுந்தரத்திற்கு மிகவுமே பிடித்தது.
“அப்ப சொல்லு! வாட்டசாட்டமான ஆம்பிளையா இருக்கிறாய். நல்லா கதைக்கிறாய், பகிடி விடுறாய். ஆரையாவது காதல் கீதல்?” என்று விசாரித்தார் சுந்தரேசன்.
அப்படிக் கேட்பார் என்று எதிர்பாராத பிரணவன் ஒரு கணம் திகைத்துப் பின் சிரித்து, “சேச்சே! அப்படியெல்லாம் இல்ல மாமா!” என்றான் வேகமாக.
ஆனால், அந்தக் கேள்வியில் தகப்பனின் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு, “இதுவரைக்கும் இல்ல!” என்றான் திரும்பவும் கண்களில் விசமத்துடன்,
சட்டெனக் கோபமுகம் கொண்டார் கருப்பன். “பாத்தியாண்ணா தைரியத்தை! தான் பெரிய ஆள் எண்டு நினைப்பு. எப்பவும் இதுதான் கதை. எவளையாவது கூட்டிக்கொண்டு வரட்டும்; அப்ப இருக்கு!” என்று தமையனிடம் மகனை முறையிட்டார்.
“அவன் அருமையான பிள்ளையடா. காதலிச்சா கட்டிக்குடு. நல்ல பிள்ளையைத்தான் அவனும் காதலிப்பான்.” என்றார் சுந்தரேசன்.
“உங்கட காதலுக்கே உதவி செய்த அப்பா என்ர காதலுக்குச் செய்யாம விடுவாரா மாமா? அதெல்லாம் கட்டித்தருவார், என்னப்பா?” பெற்றவரைக் குழந்தையாக மாற்றிச் சீண்டி விளையாடியவனைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு பிடித்தது சுந்தரேசனுக்கு.
“செய்வன் செய்வன்! ரெண்டு உனக்குப் போட்டுட்டுச் செய்வன்!” என்று சூடானவரைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.
“புவனாட வேலை அண்ணா. சும்மா இருக்கிற நேரம் அவளின்ர வாயைப் பிடுங்கி கதையை வாங்கிப்போட்டு கதைக்கிற கதையப்பார்!” என்ற கருப்பனின் முகத்தில் குழந்தைத்தனமான வெள்ளைச் சிரிப்பு.
இப்படிச் சந்தோசமாக அவர்களோடு அளவளாவிக்கொண்டிருந்தாலும் மனைவியைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரேசன்.
கூப்பிட்டு எவ்வளவோ நேரமாயிற்று? கேட்காமல் இருக்காது. அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று காதை இங்கேதான் வைத்துக்கொண்டு இருப்பார். ஆனாலும் வரவில்லை. தகப்பன் மகன் அறியாமல் அவரது பார்வை அடிக்கடி வீட்டுக்குள் சென்று சென்று வந்தது.
அதைக் கருப்பன் உணராதபோதும் பிரணவன் கவனித்தான். அதோடு, லலிதா மாமியை அவர் அழைத்து எவ்வளவோ நேரமாயிற்றே. அம்மாவும் மகளும் இன்னுமே வெளியே வரவேயில்லை.
சுந்தரேசனுக்கு மனத்துக்குள் சினம் பொங்கத் துவங்கியிருந்தது. இந்தக் கருப்பனால்தான் அவர் லலிதாவையே தைரியமாக மணந்தார். அதைவிட, அவரின் அப்பாவும் அம்மாவும் ஆறுமாத இடைவெளியில் மீளாத்துயில் கொண்டபோது சொந்தப் பேரனாக நின்று கொள்ளி வைத்தது பிரணவன்.
காலத்துக்கும் நன்றிக்கடன் படவேண்டிய மனிதர்கள் வந்திருக்க, எட்டியும் பாராமல் இருக்கும் லலிதாவின் அலட்சியத்தில் சுந்தரேசன் கோபம் கொண்டார்.
“இரடா வாறன்!” சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.
அங்கே, லலிதா கண்ணாடியின் முன்னே நின்று புருவங்களைத் திருத்திக்கொண்டிருந்தார்.
‘முக்கியம்தான்!’
“என்ன லலிதா இது? கருப்பன் வந்திருக்கிறான், வந்து வாங்கோ எண்டு ஒரு வார்த்தை சொல்லமாட்டியா?”
“அவர் என்ன பெரிய கொம்பரே வந்து வரவேற்க? வேலைக்காரனை நீங்க கூப்பிட்டதே போதும்!” சற்றே பருமனாக, நிறமாக இருந்த லலிதா, மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்தபடி அலட்சியமாகச் சொன்னார்.
“இண்டைக்கு நீ இவ்வளவு ராங்கியா நிண்டு கதைக்கக் காரணம் அவன். அத மறந்திடாத!” என்றார் சுந்தரம் சினத்துடன்.
லலிதாவுக்கு முகம் கன்றிச் சிவந்தது.
“இப்ப என்ன, நீயும் அவனை மாதிரித்தான் எண்டு சொல்லிக்காட்டுறீங்களோ?”
“இல்ல, வந்த பாதைய மறந்திடாத எண்டு சொல்லுறன்.”
“போதும் போதும். எப்பவோ செய்த ஒண்டுக்குத்தான் காலம் முழுக்க எங்கட சொத்தில வாழுறீனமே, இன்னும் என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு?”
“அவன் எங்க எங்கட சொத்துல வாழுறான்? மனச்சாட்சியே இல்லாமக் கதைக்காத லலிதா! இது வரைக்கும் எங்கட சொத்தையெல்லாம் அழியாமக் கட்டிக்காத்து வச்சிருக்கிறது அவன்தான்.”
வெளிநாடுகளில் வசிப்பவர்களின் காணிகளை, அதுவும் அந்த நாட்டுப் பிரஜாவுரிமை பெற்றவர்களின் காணிகளை அரசாங்கம் தன் வசப்படுத்தி, காணிகள் இல்லாதவர்களுக்குப் பெயர் மாற்றிக் கொடுத்துக்கொண்டிருக்க, அவர்களின் அத்தனை நிலங்களையும் பாதுகாத்து வைத்திருப்பது கருப்பன்தான்.
சுந்தரேசன் கொழும்பில் இருப்பதாகப் பொய் சொல்லி, பெயருக்கு ஒரு வீட்டைத் தன் செலவிலேயே கட்டி, பற்றைகள் வளராமலிருக்க நிலங்களை எல்லாம் உழுது பயிரிட்டு, அங்கே ஆட்கள் வாழ்வது போன்று பசுமையாக வைத்திருப்பதும் அவர்தான்.
உள்நாட்டு யுத்தத்தில் மின்சாரம் இல்லாமல் இருக்க, அரசாங்க உத்தியோகத்தர்களிடமெல்லாம் அலையோ அலை என்று அலைந்து மின்சாரம் எடுத்து என்று எல்லாம் செய்து வைத்திருந்தார்.
இதையெல்லாம் கருத்திலும் எடுக்காத லலிதாவுக்கு, அவர்களின் நிலத்தில் கருப்பன் பயிரிட்டுக் காசீட்டுகிறார் என்பது மட்டுமே தெரிந்தது.
“சும்மா என்னவோ பெரிய தியாகம் செய்த மாதிரிச் சொல்லாதீங்கோ! மாமாவும் மாமியும் சொந்தப்பிள்ளை மாதிரி வளத்த கடனுக்கு அவர் இன்னும் எவ்வளவு செய்தாலும் தகும்!” என்று தன் பிடியிலேயே நின்றார் லலிதா.
“அம்மா அப்பாக்குத்தான் அவன் கடன் பட்டிருக்கிறான். எங்களுக்கில்ல. அப்பிடியும் சொல்லேலாது. அவேக்கு அவனும் என்னை மாதிரி ஒரு பிள்ளைதான். கடைசிவரைக்கும் கூட இருந்து பாத்ததும் அவன்தான். ஆனா, நாங்க அவனுக்குக் கடன் பட்டிருக்கிறம்!” சினம் மிகவுறச் சொன்னார் சுந்தரேசன்.


