அதில் அவனைக் கவலையோடு பார்த்தார் சுந்தரேசன். தன் பிடியிலேயே நிற்கிறானே! தமயந்திக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம், சின்னவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கலாம், நாளைக்கு அவனுடைய பெற்றோரையும் அழைத்து அங்கே வைத்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.
“நாட்டுப்பிரச்சனை நடந்த நேரமே நான் எங்கயும் போகேல்ல மாமா. இப்ப ஏன் போகவேணும்? இனி இங்க தொழில் செய்யலாம்! முன்னேறவும் செய்யலாம். தேவையா இருக்கிறது, அயராத உழைப்பு மட்டும்தான்.” என்று நின்றான் அவன்.
அவரின் முகத்தில் கவலை படிந்தது. எப்படி இவனைச் சம்மதிக்க வைக்கலாம் என்கிற ஆற்றாமையோடு பார்த்தார்.
அவனுக்கு மனம் கனிந்து போயிற்று! அவனது குடும்பத்துக்காகவும் சேர்த்துத்தான் அவர் கதைக்கிறார். என்ன, அவர் சொல்லும் அனைத்தையும் இங்கிருந்தே செய்ய முடியும் என்கிறான் அவன். தன்னை இன்னுமே விளக்குகிறவனாக, உடைத்துப் பேச ஆரம்பித்தான் பிரணவன்.
“மாமா, இதை உங்களிட்டக் கதைக்கக் கூடாது எண்டுதான் இருந்தனான். ஆனா, இப்ப… வேற வழி இல்ல. உங்களுக்குத் தெரியாது மாமா, மனோன்மணி அம்மம்மாவும் மகேந்திரம் தாத்தாவும் கடைசி காலத்தில உங்களுக்காக எவ்வளவு ஏங்கினவே எண்டு பக்கத்தில இருந்து பாத்தவன் நான். பக்கத்தில பெத்த மகன் மாதிரி அப்பா இருந்தும், அம்மா கூடவே இருந்து பாத்தும், பேரப்பிள்ளைகள் மாதிரி நாங்க இருந்தும் கூட உங்களையும் உங்கட பிள்ளைகளையும் பாக்கிறதுக்கு ஏங்கித் தவிச்சவே.” என்றபோதே கலங்கிப்போனார் சுந்தரலிங்கம்.
“உங்களிட்ட என்ன சொல்லிச்சினமோ தெரியாது, ஆனா கடைசியா ஒரு முறையாவது உங்களப் பாத்திட மாட்டோமா எண்டு அவ்வளவு கலங்கினவே. அப்பவே முடிவு செய்திட்டன், எதுக்காகவும் அம்மா அப்பாவை விட்டு எங்கயும் போறேல்ல எண்டு. அவேக்கு அந்தமாதிரி ஒரு நிலை வரவிடக் கூடாது எண்டு. கொழும்புக்கே நான் போகாததுக்கு அதுதான் முக்கிய காரணம். எனக்கு இங்கதான் சந்தோசம் மாமா. என்ர வாழ்க்கை இந்த மண்ணிலதான்.”
அவன் சொல்ல சொல்ல வார்த்தைகளற்று, கண்கள் கலங்க அப்படியே நின்றார் சுந்தரேசன். மனம் முழுவதிலும் தனக்காக ஏங்கிய அம்மா அப்பாவின் முகங்களே நிறைந்து நின்று வதைத்தன.
இனி அவர் தலைகீழாக நின்றாலும் அவர்களைப் பார்க்க முடியுமா? ‘நீ சந்தோசமா இருந்தா காணுமப்பு’ என்று தலையை வருடிச் சொன்ன அம்மா இப்போது இல்லை. மனம் ஓலமிட்டது!
‘ஒன்றுக்கும் கவலைப்படாம போய்ட்டுவா, நான் இருக்கிறன், அம்மாவ நான் பாப்பன்.’ என்று ஆசிர்வதித்து விடைகொடுத்த அப்பா. அவரை இனிப் பார்க்கவே முடியாது.
வளர்ந்து, திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகும் தன்னைக் குழந்தையாகத் தாங்கிய அவர்களுக்கு எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்துவிட்டார். ஆறிப்போயிருந்த காயம் கீறிவிடப்பட்டதில் துடித்துக்கொண்டிருந்தார் அந்த வளர்ந்த குழந்தை.
அவரை உணர்ந்தவனாக நெருங்கி வந்து அணைத்துக்கொண்டான் பிரணவன். “தாத்தாவையும் அம்மம்மாவையும் நாங்க நல்லாத்தான் பாத்துக்கொண்டம் மாமா. உங்களைப் பாக்கேல்லை எண்டுறதைத் தவிர வேற எந்தக் குறையும் இல்ல. நீங்க குறை வைக்கவும் இல்லை. சும்மா மனதைப் போட்டுக் குழப்ப வேண்டாம். அவே எங்க இருந்தாலும் நீங்க சந்தோசமா இருக்கிறதை மட்டும்தான் பாக்க ஆசைப்படுவினம்.”
அன்பும் கண்டிப்புமாகத் தேற்றியவன் தகப்பன் சாமியாகவே அவர் கண்ணுக்குத் தெரிந்தான்.
“மற்றும்படி எனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு மாமா. இனி நீங்கதான் முடிவு சொல்லோணும்! அப்பிடிச் சம்மதம் எண்டால், கலியாணத்துக்குப் பிறகு நான் வெளிநாட்டுக்கு வரோணும் எண்டோ, உங்கட மகள் கஷ்டப்படுறாள் எண்டோ கதை வரக் கூடாது மாமா.” தன்மையாகவே தன் மனத்தையும் தெளிவாக எடுத்துரைத்தான்.
விளையாட்டுப்பிள்ளை போலத் தெரிகிறவனின் தீர்க்கமான பேச்சில், தெளிவான சிந்தனையில், பெற்றவர்கள் மீது அவன் கொண்டிருக்கும் பாசத்தில், கூடப் பிறந்தவர்களின் மீதான பிரியத்தில் மனத்தில் இருந்த கவலையையும் மீறிக்கொண்டு
அவருக்கு நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்து போயிற்று! அவனை இறுக்கி அணைத்துக்கொண்டார்.
“அருமையான பிள்ளையடா நீ. கருப்பன் குடுத்துவச்சவன். இண்டைக்கு நெஞ்சு நிறையச் சொல்லுறன், நீ என்ர மகளுக்குத்தான். உன்ன மாதிரி அருமையான ஒரு பிள்ளையை நான் வேற ஆருக்கும் விட்டுக் குடுக்க மாட்டன். ஆரு இனி உன்ர பொறுப்பு. உன்ர குடும்பத்துக்காக இவ்வளவு யோசிக்கிற நீ, உன்னை நம்பி வாறவளுக்காகவும் யோசிக்கோணும். அவளைச் சந்தோசமா வச்சிருக்க வேண்டியதும் உன்ர பொறுப்பு. உன்ன நம்பித் தாறன். நீயும் சந்தோசமா இருந்து அவளையும் சந்தோசமா வச்சிரு!” மனத்திலிருந்து சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அவரின் உள்ளமெல்லாம் தாய் தகப்பனின் நினைவுகளே.
மகளை நல்லவனின் கையில் கொடுக்கப்போகிறோம் என்கிற நிறைவும், பெற்றவர்களின் கடைசி காலத்து ஆசை நிறைவேறாமலே போய்விட்டதே என்கிற வருத்தமுமாக வீடு வந்தவரைக் கண்டுவிட்டு ஓடிவந்தாள் ஆர்கலி.
காலையில் அவர் புறப்பட்டபோது தானும் வருகிறேன் என்றவளிடம், “ஒரு முக்கியமான விசயம் அவனோட கதைச்சாத்தான் முடிவு தெரியும். நீ வீட்டுல இரு. வந்து சொல்லுறன்!” என்றுவிட்டுப் போயிருந்தார் அவர்.
“என்னவாம் அப்பா பிரணவன்?” ஆர்வத்தில் விழிகள் மின்ன விசாரித்தாள் ஆர்கலி.
“ஓம் எண்டு சொன்னவனம்மா!” அவரின் முகத்தையே கூர்ந்தபடி நின்ற லலிதாவின் முகம் பாராமல் சொன்னார் சுந்தரேசன்.
“உண்மையாவாப்பா?” முகமெங்கும் மத்தாப்பு வெடிக்கக் கேட்டாள். அவளை வேண்டாம் என்பானா அவன்? உள்ளம் துள்ளியது அவளுக்கு! “இனி நான் அவரோட கதைக்கலாம் தானே?” தாயிடம் சொல்லிவிட்டு, அவனோடு கதைக்க என்று மேலே ஓடிய மகளையே பார்த்திருந்தார் சுந்தரேசன்.
“லண்டனுக்கு வருவானாமா?”
லலிதாவின் கேள்விக்கு உடனேயே பதில் சொல்லவில்லை அவர்.
கோபத்தில் முகம் சிவந்தது லலிதாவுக்கு.
“இல்லப் போல?”
“ம்ம்.”
“பிறகு என்னத்துக்கு அவளிட்ட ஓம் எண்டு சொன்னனீங்க?”
“அப்ப நான் இல்லாம உங்கட மகளுக்குக் கல்யாணம் செய்துவைக்க நீங்க ரெடி. அப்பிடித்தானே.”
“நீயும் ஏன் அவன் வந்துதான் ஆகோணும் எண்டு அடம் பிடிக்கிறாய்?”
“அடம் பிடிக்கிறனா?” முறைத்தார் லலிதா.
“அவன் வந்து எனக்கு என்ன ஆகப்போகுது? ஆருக்காகத்தான் சொல்லுறன்! அங்க பிறந்து வளந்த பிள்ளை இங்க என்னெண்டு வாழுவாள்? ஆனா உங்க யாருக்கும் அது விளங்காது. பட்டபிறகுதான் அழுவீங்க போல. அப்ப எந்தப் பிரயோசனமும் இருக்காது. அவளுக்கு என்ர சம்மதம் முக்கியமில்ல, உங்களுக்கு நானே முக்கியமில்லை. பிறகு இதைக் கதைச்சு என்ன பிரயோசனம்?” அழுகை வந்துவிட சரக்கென்று அறைக்குள் சென்று அடைந்துகொண்டார் லலிதா.


