இது எதுவும் அறியாத ஆர்கலியோ அவனோடு கதைத்துவிடத் துடித்துக்கொண்டிருந்தாள்.
அங்கே அவன் நிலையும் அதேதான்! சற்று நேரத்துக்கு அவனால் நம்பவே முடியவில்லை. சுந்தரேசன் மாமா சம்மதம் சொல்லிவிட்டா போனார்? அவனுடைய பொம்மா இனி அவனுக்கே அவனுக்கா? அவனே அவனைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டான். இதை முதலே செய்யாமல் எவ்வளவு துடித்துப்போனோம்? அதையெல்லாம் நினைக்க இப்போது சிரிப்பு வந்தது.
அவளோடு கதைக்க வேண்டும் என்று உள்ளம் ஏங்க, ஆர்கலி அவனுக்கு அழைக்க நினைத்த அந்த நிமிடம், “ஹாய்!” என்று பிரணவன் அனுப்பினான்.
“எங்க நிக்குறீங்க? வந்து கூட்டிக்கொண்டு போங்க!” என்று உடனேயே அனுப்பினாள் அவள்.
“வேலை இருக்குடா…” என்று அவன் அனுப்ப, அவ்வளவு கோபம் வந்தது அவளுக்கு. எவ்வளவு ஆசையாகக் கூப்பிடுகிறாள். அவனுக்கு வேலையாம். “போடா!” என்று வாய்விட்டு முனகிவிட்டுப் போய்க் கட்டிலில் விழுந்தாள்.
அவளின் நிலை அவனுக்கு விளங்காமல் இருக்குமா என்ன? ஆனால், வேலைக்கு இடையில்தானே சுந்தரேசனோடு கதைக்க வந்தான். இதற்கிடையிலேயே வரச்சொல்லி பல மெசேஜ் வந்துவிட்டிருந்தது.
அவளைச் சமாதானப்படுத்த எண்ணி உடனேயே அழைத்தான். அவள் கோபமாக, “ஹலோ!” என்றதுதான் தாமதம் அந்தப்பக்கமிருந்து முத்தங்களால் அர்ச்சித்தான் அவளின் பிரணவன்.
காதைத் தீண்டிய முத்தச் சத்தம் நாடி நரம்புகளையெல்லாம் தீண்டிச் சென்றது. வெட்கத்தில் உதட்டைக் கடித்தவளுக்கு அவன் மீதிருந்த கோபம் என்னாயிற்று என்றே தெரியாமல் போயிற்று!
“எனக்கு மட்டும் உன்னைப் பாக்கோணும் மாதிரி இருக்காதா? உடன கோவிக்கிற? கட்டாயம் இண்டைக்கு நான் போகோணும் பொம்மா. பின்னேரம் நேரத்துக்கே வாறன். இப்ப தந்தத நேர்ல தாறதுக்கு. ரெடியா இரு ஓகே!” சரசமாக அவன் காதுக்குள் கிசுகிசுத்தபோது அவள் கரைந்தே போனாள்.
“எனக்கு இப்பவே உங்களைப் பாக்கோணும்!” அவளின் செல்லச் சிணுங்களில் அவன் தொலைந்துகொண்டிருந்தான்.
“எனக்கும்தான்!”
“அப்ப வாங்கோ!”
“ஃபேஸ் டைமுக்கு வாடா!” என்று அவனும் உருகினான்.
“ஃபேஸ் டைமுக்கா?” ஏமாற்றமாய்ச் சொன்னாலும் உடனேயே ஓன் செய்தாள்.
இருவருக்கும் முகம் கொள்ளாச் சிரிப்பு. சின்னதாக வெட்கமும். கண்கள் சந்திக்கத் தடுமாறின. ஒருவரை மற்றவர் ஆசையாசையாகப் பார்த்துக்கொண்டார்கள். சிரித்துக்கொண்டார்கள்.
அவன் கேசம் கோதினான். வீதியில் ஒரு ஓரமாக நிற்கிறான் என்று அவனுடைய பின்னணி காட்டிக்கொடுத்தது. என்ன கதைக்க என்று ஆர்கலி தடுமாற, சட்டெனக் கண்ணடித்தான் அவன்.
“பெடியனப் பிடிச்சிருக்கா?” சட்டைக் கொலரை இழுத்துவிட்டுக்கொண்டு குறும்புடன் கேட்டான் அவன்.
“கிட்ட இருந்தீங்க எண்டா சொல்லுவன் எவ்வளவு பிடிச்சிருக்கு எண்டு!” என்றாள் அவள்.
“அப்ப வரவா?”
“டேய் வாடா!” அவளின் அழைப்பில் வாய் விட்டுச் சிரித்தான் பிரணவன்.
இது சரிவராது என்று தெரிந்து போயிற்று. அவனை விட அவள் மகா மோசமாக இருக்கிறாளே. “வேலைக்குக் கிட்ட வந்திட்டன் பொம்மா. பின்னேரம் வாறன், ரெடியா நில்லு!” என்றுவிட்டு வைத்தான்.
எதிர்காற்று முகத்தில் வீச வண்டியை வீதியில் விட்டவனின் நரம்புகளில் எல்லாம் யாரோ இசை மீட்டிவிட்டதுபோல உற்சாகம் பீறிட்டது. முகம் முழுவதும் அவ்வளவு பிரகாசமான சிரிப்பு! மாலை எப்போது வரும் என்று அப்போதே ஏங்கிக்கொண்டு கம்பனிக்குள் நுழைந்தான்.
விறுவிறு என்று அன்றைய வேலைகளை நேரத்துக்கே முடித்துவிட்டு, ‘கடவுளே இண்டைக்கு ஆரும் என்னைக் கூப்பிடக் கூடாது!’ என்று எண்ணிக்கொண்டு, “ரெடியா நில்லு! வீட்டப்போய் குளிச்சிட்டு வாறன்!” என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். உடனேயே வீட்டை நோக்கிப் பாய்ந்தது பிரணவனின் வண்டி.
வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு! அவனுடைய பொம்மா அலெக்சோயோடு அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
அவன் முகமெங்கும் சிரிப்புத் தொற்றிக்கொண்டது. இந்த நேரத்தில் அவன் வீட்டில் யாருமே இருக்கமாட்டார்கள் என்பதில் ஜாம் மரத்தின் கீழிருந்த வாங்கிலில் தாடையைத் தாங்கியபடி அவளும், அவளை விடச் சோகமாக அலெக்ஸும் அமர்ந்திருந்தனர்.
“வெயில் இன்னும் போகவே இல்ல. உன்னை ஆரு இங்க வரச்சொன்னது?”
“நீங்கதான்!” துள்ளிக்கொண்டு ஓடி வந்தவள், அவன் நிறுத்தவும் வேகமாகப் பின்னால் ஏறிக்கொண்டாள்.
அலெக்ஸுக்கு கோபம் வந்துவிட்டது. வள் வள் என்று பாய்ந்தான்.
“போடா டேய்! இனி இந்த இடம் எனக்குத்தான்!” என்று அவனோடு சண்டைக்குப் போனாள் ஆர்கலி.
அவன் விடுவானா? உனக்குப் பின்னால்தான் இடம் என்று நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரே தாவலில் தாவிப் பிராணவனின் கைகளுக்குள் ஏறி அமர்ந்துகொண்டான்.
கலகலத்துச் சிரித்த ஆர்கலிக்கு இன்னும் குதூகலமாயிற்று. “இங்கயே ஒரு ரவுண்ட்! ப்ளீஸ் ப்ளீஸ்!” அவன் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு கெஞ்சினாள்.
அவன்தான் அரண்டு போனான். அவளைக் கண்டதுமே அவனுக்குள் என்னென்னவோ மாற்றங்கள்தான். நிதானமாகக் காட்டிக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்க அவளோ அவனைச் சோதித்துக் கொண்டிருந்தாள்.
“கெஞ்சிக் கெஞ்சியே காரியம் சாதி!” என்றபடி, அவளின் ஆசையை நிறைவேற்றினான்.
“நீ வருவாய் எண்டு தெரியாதுதானே. அம்மா தோட்டத்துக்கு அப்பாட்ட போயிருப்பா. அக்கா வேலை.”
அவன் சொல்லி முடிக்க முதலே, “எல்லாம் தெரியும். நீங்க கதவைத் திறவுங்க!” என்று அவசரப் படுத்தினாள் அவள்.
“ஏதாவது தரவா குடிக்க?” வண்டியின் திறப்பை கதவருகில் இருந்த மான் கொம்பில் கொழுவிவிட்டு, தன் பாக்கை மேசையில் வைத்துவிட்டு, குளிக்கத் தயாராகிக்கொண்டு கேட்டான்.
“ஒண்டும் வேண்டாம்! நீங்க கெதியா குளிச்சிட்டு வாங்கோ!” அவன் பின்னாலேயே அவள் வால் பிடிக்க, அவளுக்குப் பின்னால் அலெக்ஸ் அலைந்துகொண்டிருந்தது.
“என்னடி வேணும் உனக்கிப்ப?” ஆசை அடங்காமல் அவளைச் சட்டென்று அணைத்துக்கொண்டு கேட்டான் பிரணவன்.
“ம்கூம்ம்கூம்! வேர்வை நாறுது! ஓடிப்போய்க் குளிங்க!” என்று மூக்கைச் சுளித்துக்கொண்டு தள்ளிவிட்டாள் ஆர்கலி.
“வேலைக்குப் போயிட்டு வாறவனிட்ட வேர்வை நாறாம வேற என்ன நாறும்?” திமிறி விலகப்பார்த்தவளை வேண்டுமென்றே ஒருமுறை இறுக்கி அணைத்துவிட்டு ஓடிப்போய் அவர்களது திறந்தவெளி பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டான்.
அவளும் அங்கேயே போய்க் குந்திக்கொண்டாள். அவளுக்குப் பக்கத்தில் அலெக்ஸ்.
“முடிஞ்சுதா…”
“சோப்புப் போட்டாச்சா…”
“இன்னும் என்ன செய்றீங்க பிரணவன்?” வெளியே குந்தியிருந்து நிமிடத்துக்கு ஒருமுறை குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள் ஆர்கலி.
அவளோடு சேர்ந்து அலெக்ஸும் பின்பாட்டுப் பாடிக்கொண்டிருந்தது.
“உன்ன!” அவனுக்குச் சிரிப்போடு செல்லக் கோபமும் உண்டாயிற்று.


