“நேரமாகுது! காணும் குளிச்சது. கெதியா வாங்கோ!”
உள் பெனியனோடு ஷோர்ட்ஸ் மட்டுமே அணிந்து, தோளில் தொங்கிய டவலால் தலையைத் துவட்டியபடி கதவைத் திறந்துகொண்டு வந்தவன் அவளை முறைத்தான்.
அறைக்குள் உடைமாற்றப் போக அவளும் பின்னோடு வந்தாள். அரண்டுபோனான் அவன்.
“ஒரு ஆம்பிளை அரையும் குறையுமா நிக்கிறானே எண்டு கொஞ்சமாவது முகத்தைத் திருப்புறியா நீ?”
“சரிசரி வெக்கப்பட்டது காணும்! கெதியா உடுப்ப மாத்துங்க!” சாவகாசமாக அவன் கட்டிலில் அமர்ந்தபடி அவள் சொல்ல, கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.
“அம்மா தாயே! சத்தியமா உனக்கு முன்னால உடுப்பு மாத்திற அளவுக்கு எனக்குத் தைரியம் இல்ல. தயவுசெய்து ரெண்டு நிமிசம் வெளில இரு!” அவளைத் தள்ளிக்கொண்டு போய் வெளியில் தள்ளிவிட்டு, மறக்காமல் கதவின் கொழுக்கியை இழுத்துவிட்டான். அவளை நம்ப முடியாது!
அப்போதும் வாசலிலேயே நின்று, “முடிஞ்சுதா?”, “மாத்தியாச்சா?” என்று அவனது பொறுமையைச் சோதித்தாள் ஆர்கலி.
“என்னடி பிரச்சனை உனக்கு?” முறைப்போடு அவன் திறந்ததும் ஓடிவந்து,
“தாங்க! தாங்க!” என்றாள் பரபரப்பாக.
“என்னத்த?”
அவனுக்குத் தெரியாமலிருக்குமா? கண்களில் சிரிப்பு மின்னக் கேட்டான்.
“என்னவோ நேர்ல வா, தாறன் எண்டு நிறையச் சொன்னீங்க. ஒண்டையும் காணேல்ல.”
அவனை நெருங்கிக் கேட்டவளைப் பார்த்து அவன் உதட்டினில் மென்னகை படர்ந்தது. “இதுக்குத்தான் குளிச்சு, உடுப்பு மாத்துற வரைக்கும் வெய்ட் பண்ணினியா?” செல்லமாக அவள் மண்டையில் தட்டினான்.
“பின்ன! எதுவுமே சுத்தபத்தமா இருக்கோணும்தானே!”
“உனக்கு இந்த வெக்கம் ஏதாவது இருக்கா?”
“அதெல்லாம் எனக்கெதுக்கு? உங்களுக்கு இருக்கிறதே காணும்!” என்றவள், அவனை இறுக்கி அணைத்து அவன் மார்பிலேயே ஆசையாக முத்தமிட்டாள்.
“எனக்கு அங்கதான் எட்டுது.” முகத்தைச் சுருக்கிச் சோகத்தோடு சொன்னவளை ஒரே அள்ளாக அள்ளிக்கொண்டவன், “இப்ப தா!” என்றான் கிறக்கமாக.
அவளும் ஆசையாக அவன் கழுத்தை வளைத்து உதட்டில் கொடுக்க ஆரம்பித்தாள். கிறங்கிப்போனான் பிரணவன். மான்குட்டியாக அவளைத் தன் கைகளுக்குள் சிறைப்பிடித்து, மார்போடு சாத்தி, ஆசையாசையாக முகமெங்கும் முத்தமிட்டபோது, சுகமான மயக்கத்தில் துடித்துப்போனாள் அவனின் பொம்மா!
அவன் அவளை விடுவித்த பிறகும் சற்று நேரத்துக்குத் தன்னிலை மீளமுடியவில்லை அவளால். அவன் மார்புச் சூட்டில் முகம் புதைத்திருந்தவள் மெல்ல விழிகளைத் திறந்தபோது, உதட்டில் சிரிப்பும் கண்களில் காதலுமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் பிரணவன்.
சிவந்திருந்த முகம் இன்னுமே இரத்த நிறம் கொள்ள, அவன் கழுத்தை வளைத்து, அந்தக் கழுத்துக்குள்ளேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் அவனது காதலி.
“ஹாஹா! ஆரோ வெக்கமே இல்லை எண்டு சொன்னமாதிரி இருந்தது!” வாய் சீண்டினாலும் ஆசையோடு அவளது கேசத்தை வருடிக்கொடுதத்தான் பிரணவன்.
அவள் இப்படித் தன்னவளாகத் தன் கைக்குள் இருக்கிறாள் என்பதை நம்பவே முடியவில்லை. ஆசையும் ஆவலுமாக அடிக்கடி அவளின் கன்னக் கதுப்பில் அவனது உதடுகள் பதிந்து மீண்டன.
ஒருமுறை அவளை இறுக்கி அணைத்தான். விரல்களோடு விரல்களைப் பிணைத்தான். இன்னோர் முறை அவளின் முகவடிவை அளந்தது அவனுடைய ஒற்றை விரல். இதழ்களின் ஈரலிப்பில் மோகம் கொண்டான். மேனியின் மென்மையில் தன்னையே மறந்தான்.
இழை இழையாகத் தொங்கும் அவளின் தலை முடியினைக் கோதிக் கொடுத்தான். தன்னிடம் மையல் கொண்டு மயங்கி நிற்கும் அந்தப் பொக்கிசமான பெண்ணைக் கொண்டாடியவனுக்குப் போதும் என்கிற உணர்வு வரவேயில்லை.
அவள் அவனது கரங்களில் கரைந்துகொண்டிருந்தாள். அவனின் தீண்டலில் சுகமான மயக்கத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள். ஒருவரின் அண்மையில் மற்றவர் உருகிக் கிடப்பதே போதுமாயிருக்க, வார்த்தைகள் அவர்களினூடு வரவேயில்லை.
பொழுது கரைந்துகொண்டிருந்தது.
மெல்லத் தன்னிலை மீண்டாள் ஆர்கலி. தன் உதடுகளை ஒருமுறை வருடிவிட்டு மீண்ட அவன் உதடுகளைக் கண்டு, “இதே மாதிரித்தான் அப்பவும் தந்தீங்களா?” என்று அசராமல் கேட்டாள்.
அவனுக்குச் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது.
“என்ன ஆளடி நீ?” ஆசையோடு அவளைத் தன்னோடு இறுக்கியபடி கேட்டான்.
அவன் கைகளுக்குள் அடங்கிவிடும் முயல்குட்டி அளவில் இருந்துகொண்டு, அவளின் வாய் மட்டும் எட்டுத்திக்கும் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டு வந்துவிடுகிறது.
“அந்த நேரமே லிப்லாக் போட்ட உங்கட ஆள்தான் நான்!” என்றவள், அவன் கைகளிலிருந்து துள்ளிக் கீழிறங்கினாள்.
“சரி சரி காட்டுங்க, அந்த ஃபோட்டோவை நான் பாக்கோணும்!” என்று கேட்க அவன் காட்டவேயில்லை.
பரிசாக ஓராயிரம் முத்தங்களை அவள் வழங்கியும் கிறங்கிப்போய்த் திருப்பிப் பரிசளித்தானே தவிர, முதல் முத்தத்தின் நிழலுருவைக் காட்டவேயில்லை அவன்.
“முதல் கலியாணம் நடக்கட்டும். பிறகு காட்டுறன்!” அவனுக்குத் தெரியும், அதை வைத்தே மானத்தை வாங்குவாள் என்று.
பிள்ளைகள் வரும் நேரமாதலால், புவனா வந்து சேர்ந்தார். அடுத்தடுத்துப் பெண்கள் மூவரும் வந்து சேர்ந்தனர். ஆர்கலியை அங்குக் கண்டதும் அவ்வளவு சந்தோசம் அவர்களுக்கு.
புவனா எல்லோருக்குமாகத் தேநீர் ஆற்றிக் கொடுத்தார். கூடவே தோட்டத்திலிருந்து கொண்டுவந்த மரவள்ளிக் கிழங்கினை அவித்து, தொட்டுக்கொள்ளத் தனிச் செத்தல்மிளகாய்ச் சம்பலும் செய்து கொண்டுவந்து வைத்தாள் தமயந்தி.
அதைப் பார்த்துட்டே பின்வாங்கினாள் ஆர்கலி. தன் உதடுகளை அழுத்தி ஒற்றி எடுத்தாலே சிவந்துவிடும் அவளின் இதழ்கள் அந்த உறைப்பைத் தாங்காது என்று உணர்ந்து, சீனி கொண்டுவந்து கொடுத்தான் பிரணவன்.
“அக்கா பார் பார் பார்! நடக்கிறதைப் பார்!” கண்கொத்திப் பாம்பாக இவர்களையே கவனித்திருந்த சின்னவள் உடனேயே ஆரம்பித்துவிட்டிருந்தாள்.
மாலையாகி வீடு வந்த கருப்பனுக்கும் அவளை அங்குக் கண்டதில் அவ்வளவு சந்தோசம். அவர்கள் எல்லோரும் வரமுதலில் அவனுக்குப் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தவள் அதன்பிறகு அவனைக் கண்டுகொள்ளவேயில்லை.
புவனாவிடம் செல்லம் கொஞ்சி, கருப்பனை வம்பிழுத்து, தங்கைகளோடு அடிபட்டுக்கொண்டு, அவர்களைத் தமயந்தியிடம் போட்டுக் கொடுத்துக்கொண்டு என்று இவனைத் திரும்பியே பார்க்கவில்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், சமையலறையில் புவனாவிடம் என்னவோ பெரிய பெண் மாதிரி கேட்டுக்கொண்டிருந்தவளின் அருகே சென்று நின்றான். அப்படியே தண்ணீர் அருந்துவதுபோல் அருந்திவிட்டு அவளின் இடுப்பைக் கிள்ளிவிட்டு வந்துவிட்டான்.
“அம்மா!”
“என்னம்மா?” கையில் வேலையாக இருந்த புவனா அவளிடம் திரும்பிக் கேட்டார்.
“அது மாமி… விழப்பாத்தன்!” என்று சமாளித்துவிட்டுத் திரும்பி இவனை முறைக்க, குறும்புடன் கண்ணடித்துவிட்டு ஓடி வந்துவிட்டான் பிரணவன்.
‘வெளில போவமா?’ கண்ணால் கேட்டாள் ஆர்கலி.
‘அம்மா அப்பா இருக்கீனம். முடியாது!’ என்று கண்ணாலேயே மறுத்தான் அவன்.
அவனை முறைத்துவிட்டு, “மாமி, உங்கட மகன் வெளில வர வெக்கப்படுறார். நான் ஒருக்கா கூட்டிக்கொண்டு போகட்டா?” என்று அவள் கேட்டுவிட, கேட்டிருந்த கருப்பனுக்கே சிரிப்பு வந்துவிட்டது.
“கூட்டிக்கொண்டு போ தம்பி. இன்னும் ஒரு கிழமைதானே நிக்கப்போறாள்.” என்று சொல்ல, அவனுக்கு மானமே போயிற்று!
சிரித்துப் புரண்ட தங்கைகளை முறைத்துவிட்டு, ‘வாடி!’ என்று வாயசைத்தவன் அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
“நடக்கட்டும் நடக்கட்டும்!” என்றபடி பின்னால் வந்த தோழிகளிடம், “பாய் டார்லிங்ஸ்!” என்று ஒரு பறக்கும் முத்தத்தை வழங்கிவிட்டு, ஆத்திரத்தோடு அவளை பார்த்துக் குரைத்த அலெக்ஸுக்கு பழிப்புக் காட்டிவிட்டு அவனோடு பறந்தாள் ஆர்கலி.


