அவர்கள் வெளியேறியதுமே புவனா கவலை தோய்ந்த முகத்தோடு கணவரைப் பார்த்தார். கருப்பனின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன.
“தம்பி வெளிநாட்டுக்கு வரவே வேணும் எண்டு லலிதாக்கா அவ்வளவு அழுத்தமாச் சொன்னா. வரமாட்டன் எண்டு சொன்னதா தம்பி சொன்னான். ஆரு இங்க வந்திருக்கிறாள். லலிதாக்கா சம்மதம் சொல்லிப்போட்டாவோ?”
ஆர்கலியும் கூடவே இருந்ததில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. இப்போதோ, அதுவரை தனக்குள்ளிருந்த சந்தேகத்தைக் கேட்டார் புவனா.
“சுந்தரம் மாமா சம்மதம் எண்டுதானேம்மா சொல்லிப்போட்டுப் போனவர். பிறகென்ன?” தமயந்தி சொன்னாள்.
“ஓம் பிள்ளை! ஆனா, லலிதாக்கா இன்னும் ஒண்டும் சொல்ல இல்லையே.” புவனாவுக்கு லலிதாவின் வாயினால் அறியாமல் ஆறுதல் கொள்ள முடியவில்லை.
கருப்பனும் அதையேதான் யோசித்துக்கொண்டிருந்தார்.
“என்னம்மா புதுசு புதுசா சொல்லுறீங்க?” அதுவரையிருந்த உற்சாகம் வழுவ, ஒன்றும் விளங்காமல் கேட்டனர் சின்னவர்கள்.
“ஓம் பிள்ளைகள்! சுந்தரம் மாமாக்கு விருப்பம்தான். லலிதா மாமிதான்… என்ன முடிவு எடுத்தாவோ தெரியேல்ல. இதுகள் இங்க சந்தோசமா போகுதுகள்.” அவருக்குப் பயமாயிருந்தது. என்னவோ மனமே சரியில்லை. அவளிடம் காட்டிக்கொள்ளாதபோதும் உள்ளுணர்வு எதையோ உணர்த்த முயன்றுகொண்டிருந்தது.
“இஞ்சருங்கோப்பா! நீங்க எதுக்கும் அண்ணாக்கு ஃபோனைப் போட்டுக் கேளுங்கோவன்!” என்றார் கணவரிடம்.
“மாமி ஓம் எண்டு சொல்லாம ஆரு வந்திருப்பாள் எண்டு நினைக்கிறீங்களோ?” துவாரகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“அவள் விளையாட்டுப்பிள்ளை. யோசிக்காம என்னவும் செய்வாளம்மா.”
கருப்பனுக்கும் அதே எண்ணம்தான் என்பதில் சுந்தரேசனுக்கு அழைக்க என்று ஃபோனை எடுத்த கணம் அது தானே அலறியது.
சுந்தரேசன்தான். எல்லோர் முகத்திலும் மெல்லிய பதட்டம்.
“ஆரு அங்க வந்தவளாடா?” அழைப்பை ஏற்றதுமே கேட்டார்.
“ஓம் அண்ணா! அதைச் சொல்ல எண்டு எடுக்க, நீ எடுக்கிறாய்!” என்றார் கருப்பன்.
“சரியடா வை! நான் பிறகு கதைக்கிறன்!” என்றவர் உடனேயே அழைப்பைத் துண்டித்திருந்தார்.
எல்லோர் முகத்திலும் குழப்பம். என்ன நடக்கிறது? ஒன்றும் விளங்கவில்லை.
எங்கென்று இல்லாமல் சும்மா ஊரையே சுற்றிவந்தான் பிரணவன். வயிற்றைக் கட்டிக்கொண்டு முதுகில் சாய்ந்திருந்து அவள் வந்தது சுகமாயிருக்க, அவனுக்கு அந்தப் பயணத்தை முடித்துக்கொள்வதில் விருப்பமில்லை. அவளும் நிறுத்தச் சொல்லிச் சொல்லவில்லை.
மெல்லிய இருட்டுக் கவிழத் தொடங்கியது. அவன் தன் காதலை உணர்ந்த இடமான இரணைமடுக்குளத்துக்கு அழைத்துச் சென்றான்.
குளக்கட்டின் மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்துகொள்ள, அவன் தோளில் சாய்ந்துகொண்டு கரத்தைச் சுற்றிக் கோர்த்துக்கொண்டாள் ஆர்கலி.
“கனவு மாதிரி இருக்குப் பிரணவன்!” மாலை மங்கிய பொழுதில், இதமாகக் குளத்தின் காற்று வீசிக்கொண்டிருந்தது. மனத்துக்கு நெருங்கியவனின் அருகே அமர்ந்திருக்கும் அந்தப் பொழுது வெகு ரம்மியமாய் இருந்தது அவளுக்கு.
அவனுக்கும்தான்! முதன் முதலாக அவன் ரசித்த பெண்ணே காதலியாக, நாளை மனைவியாக வரப்போகிறாள் என்பது அவனுக்கும் நிறைவாகத்தான் இருந்தது.
“நினைச்சுப் பாக்கவே இல்ல பிரணவன். உங்களைப் பாப்பன், உயிராக் காதலிப்பன், இப்பிடி உங்களோட இங்க இருப்பன் எண்டெல்லாம் எதிர்பார்க்கவே இல்ல. ஆனா, நடக்கேக்க அவ்வளவு சந்தோசமா இருக்கு!” என்று அவள் சொன்னபோது, அவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களை வருடிக்கொண்டிருந்தவனுக்கும் வார்த்தைகள் இல்லாமல் போயிற்று!
அவன் வைத்துவிட்ட மருதாணி இன்னுமே அழியாமல் அப்படியே இருந்தது. அதன்மீது மீண்டும் மீண்டும் கோலம் வரைந்துகொண்டிருந்தான்.
“என்ன ஒண்டுமே சொல்லுறீங்க இல்ல?” தன் முகம் பார்த்துக் கேட்டவளையே பார்த்தான்.
“எங்கட கல்யாணம் நடக்கக் கொஞ்சக்காலம் போகோணும் பொம்மா.” குரலில் மெல்லிய தயக்கம் தெரியச் சொன்னான்.
“இப்பயே கட்டிப் பிள்ளையெல்லாம் பெற என்னாலயும் ஏலாது!”
அவள் சொன்ன விதத்தில் அவன் உதட்டினில் சிரிப்பு முளைத்தது.
“அப்ப கிஸ் எல்லாம் தரளாமா பொம்மா?” அவள் முகத்தருகே நெருங்கிச் சிரிப்புக்குரலில் கேட்டான்.
“கிஸ்ஸுக்கு பிள்ளை பிறக்காது. இல்லாட்டி ஒரு வயசிலேயே எனக்குப் பிள்ளை பிறந்திருக்கும்! அதால தரலாம்!” அவளா அசருவாள்? கண்ணைச் சிமிட்டிக் குறும்புடன் சொன்னவளின் தலையில் குட்டினான் அவன்.
“அத விடவே மாட்டியா நீ!” அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அன்று மத்தியானம் திகட்ட திகட்டக் கொடுத்து வாங்கிய முத்தங்களைக் காட்டிலும் இனிமை நிறைந்த முத்தமாய் இருந்தது அந்த ஒற்றை முதல் முத்தம்! முகம் திருப்பிக் கேசம் கோதப்போக அவள் விடவில்லை.
அவன் தாடையைப் பிடித்துத் தன்பக்கம் திருப்பி, “ம்ம்… இப்ப செய்ங்க!” என்றாள், குறும்பு விழிகளால் அவனையே பார்த்தபடி.
முகம் கொள்ளா அவன் சிரிப்பைக் கண்களால் களவாடியவளை என்ன செய்வது என்று தெரியாமல் திணறினான் பிரணவன்.
“போடி!” என்று அவன் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவனது பக்கவாட்டுத் தோற்றம் மனதை அள்ளியது.
கவிழ்ந்துகொண்டிருந்த மெல்லிய இருளில், உல்லாசச் சிரிப்பை அடக்கித் தோற்ற உதடுகள், அந்த உதட்டினை உரசிக்கொண்டிருக்கும் அடர்ந்த மீசை, கோபமும் வரும் என்று சொல்லும் நீண்ட நாசி, குடைபோல விரிந்த நீண்ட இமைகளோடு சிரிப்பில் பளபளத்த கண்கள், இது எல்லாவற்றுக்கும் மேலே அவள் காதலிக்கும் அடர்ந்த கேசம் காற்றிலாடிக் கொண்டிருக்க, உலகில் சிறந்த ஓவியனால் தீட்டப்பட்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம் போல அவளின் காதல் ஊற்றைப் பொங்கச் செய்துகொண்டிருந்தான் அவளின் பிரணவன்.
அவனது தோற்றத்தினால் பொங்கிய தன் உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்கத் தெரியாமல், எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். அதிர்ந்த பிரணவன் அவளை முறைத்துவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான்.
“அதெல்லாம் பாத்தாச்சு, ஒருத்தரும் இல்ல!” என்றாள் அவள்.
“உன்ன! வெளி இடத்தில வச்சு இப்பிடிச் செய்யிறேல்ல! இனிச் செய்தா பேச்சு வாங்குவாய்!” என்று அதட்டினான் அவன்.
“ஓகே பாஸ்! இப்ப சொல்லுங்கோ, ஏன் இப்ப கல்யாணம் வேண்டாம் எண்டு சொன்னீங்க?”
மனதிலிருந்த உல்லாசம் மெல்ல மட்டுப்பட ஆரம்பித்தது.
“முதல் அக்காக்குச் செய்யோணும் பொம்மா! துவாரகாக்கும் முடிச்சிட்டுத்தான் எங்களைப் பற்றி யோசிக்கலாம். அதுக்குக் கொஞ்சக் காலம் போகும்.”


