“அண்டைக்கு அம்மாவும் சொன்னவா என்ன? ஏன் இன்னும் தமயாக்காக்குப் பாக்கேல்ல?”
“பாக்கேல்லை எண்டு ஆர் சொன்னது?”
“பின்ன?”
“அக்கா, ஒரு ஆளை விரும்பி இருக்கிறா. அவர் கிளிநொச்சி மகாவித்தியாலத்தில வாத்தி.”
“தமயா அக்கா விரும்புறாவோ?” ஆச்சரியமாக வினவினாள். அமைதியாக, பொறுப்பாக, மென்மையாக இருக்கும் தமயந்தி காதலிப்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
“அப்ப உங்கட குடும்பமே காதல் குடும்பம் எண்டு சொல்லுங்கோ! கருப்ஸ் மாமாவும் மாமிய லவ்வித்தானே கட்டினவராம்!”
அவனுக்குச் சிரிப்பு வந்தது. புவனா பிறக்கும்போதே தாய் இறந்துவிட, குடிகார அப்பா எங்கு என்றே தெரியாமல் மறைந்துவிட, அப்பாவின் தங்கை வீட்டில்தான் வளர்ந்தார்.
தாற்காலிகப் பணியாகக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எடுப்பதற்காகக் கிளிநொச்சிக்கு வீடு வீடாக வந்த இடத்தில், அவரைப் பார்த்ததும் காதலில் விழுந்தாராம் கருப்பன்.
அன்றே புவனா தங்கியிருந்த இடத்துக்குத் தேடிச்சென்று, காதலைச் சொல்லியிருக்கிறார். அதில், பெரும் பிரச்சனையாகி, பயந்து நடுங்கிய புவனாவிடம் மகேந்திரம்தான் எடுத்துச் சொல்லிக் கட்டிவைத்திருந்தார்.
இதைப் புவனாவின் வாயைக் கிண்டி அறிந்துகொண்டிருந்தாள் ஆர்கலி.
“மாமா மாமிக்கு விருப்பமா?”
“அவரின்ர வீட்டுலையும் விருப்பம்தான்.”
“பிறகு என்ன? டக்கென்று திருமணத்தை முடிக்க வேண்டியதுதானே?” என்றவள் தயங்கி, “காசு இல்லையா?” என்று மெல்லக் கேட்டாள்.
அவன் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை.
“சரண் அண்ணா எதையும் எதிர்பார்க்கவே இல்ல. ஆனா எனக்குத்தான் அக்காவ சும்மா அனுப்ப விருப்பமில்லை!” என்றான் அவள் முகம் பாராமல்.
ஒரு ஆண்பிள்ளைக்கு, தன் வீட்டு நிலைமையைக் காதலியிடம் கூடச் சொல்வது அவ்வளவு இலகுவல்லவே!
தானும் கட்டிப்போனால் தன் சம்பளமும் இல்லாமல் தம்பி இன்னுமே சிரமப்படுவான் என்றுதான் தமயந்தி திருமணத்தைத் தள்ளிப்போடுகிறாள் என்று எப்படிச் சொல்லுவான்?
“பிறகு ஏன் நீங்க அப்பா கூப்பிட்ட நேரம் லண்டனுக்கு வரேல்ல? வந்திருக்க, எப்பவோ தமயாக்காக்குத் திருமணம் நடந்திருக்குமே!” என்றாள் அவள் குறையாக.
அவன் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான்.
“மாமா உன்னட்ட ஒண்டும் சொல்லேல்லையா?”
“ஏன் நீங்க சொல்லுங்கோவன்.” சலுகையோடு சொன்னாள் அவள்.
“அவர் கேக்கேக்கையே சொல்லிப்போட்டன், அங்க வரமாட்டன் எண்டு. அதுக்கு அவர் ஓம் எண்டு சொன்ன பிறகுதான் கல்யாணத்துக்கே ஓம் எண்டு சொன்னனான்.” குரலில் ஒருவித இறுக்கத்தோடு சொன்னான் பிரணவன்.
அந்த இறுக்கத்துக்கே அதிர்வோடு அவனைப் பார்த்தாள் ஆர்கலி. அவளின் முகம் பாராமல் அவன் சொன்ன விதம் அவளின் இதயத்தின் ஏதோ ஒரு புள்ளியைத் தாக்கியது. முகம் கூம்பிப் போயிற்று!
அவனை நேசிக்கிறோம் என்று உணர்ந்த கணத்திலிருந்து அவனைத் தாண்டிய எதுவும் அவளின் நினைவிலேயே இல்லை. அவன் வேண்டும், அவனது அண்மை வேண்டும், இதோ இப்போதுபோல அவனது கையோடு கை கோர்த்துக்கொண்டு கால முழுமைக்கும் அவனது தோளில் சாய்ந்திருக்க வேண்டும். இவைதான் அவளின் உச்சபட்ச ஆசைகளாக இருந்தன.
ஆனால் அவனோ எல்லாவற்றையும் தெளிவாகக் கதைத்துப் பேசித்தான் முடிவு செய்திருக்கிறான். ஒரு வியாபார ஒப்பந்தம் போல.
இதெல்லாம் அவள் சந்தித்திராத சூழ்நிலைகள். கண்கள் கலங்கும் போலிருந்தது. என்றாலும் சமாளித்தாள்.
“வாங்கோ எண்டு நானும் சொல்லேல்லையே பிரணவன். ஏன் வரேல்ல எண்டுதான் கேட்டனான். அங்க உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எண்டுறதாலதான் அதையும் கேட்டனான்.” என்றாள்.
அவன் ஒரு மாதிரிச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் கூடக் காயப்பட்டாள் ஆர்கலி. அவளை மயக்கும் புன்னகை அல்ல அது!
“ஒண்டுமே சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்?” மனத்தாங்கலோடு கேட்டாள் ஆர்கலி.
“இங்க எதிர்காலம் இல்லையெண்டு ஆர் சொன்னது?”
“இருந்திருந்தா இத்தனை நாளைக்கு முன்னேறி இருப்பீங்களே!”
சட்டென்று அவன் முகம் இறுகிப்போயிற்று! “இப்ப என்ன சொல்ல வாறாய்?” கூரிய விழிகளை அவள் முகத்தில் நிறுத்திக் கேட்டான்.
விழிகள் விரியப் பார்த்தாள் ஆர்கலி. அவளின் பிரணவன் அவளிடம் கோபப்படுகிறான்! சாதாரணமாகச் சொன்ன ஒன்றுக்காக!
வலித்தது அவளுக்கு. முதன் முறையாக முகம் திருப்பித் தன் உணர்வுகளை மறைத்தாள். அந்தக் கூர்மை அவளின் மென் இதயத்தைக் கீறுவது போலிருந்தது!
“சொல்லு ஆர்கலி!”
பொம்மாவல்ல ஆர்கலி!
“ஒண்டுமில்ல! அத விடுங்கோ!” என்னவோ அவன் மூலம் தான் இன்னுமின்னும் காயப்படுவதை அவள் விரும்பவில்லை.
“என்னப் பார்!” அவளின் தாடை பற்றித் தன்புறமாகத் திருப்பினான்.
நம்ப முடியாத அதிர்வில் விரிந்த விழிகளோடு அவள் பார்க்க, அந்த விழிகளில் எதைக் கண்டானோ அவன் சினம் மெதுவாய் அடங்கியது!
“என்னால இங்க இருந்து எங்கயும் வரேலாது பொம்மா! இது நான் பிறந்து வளந்த மண்! இங்க எல்லா வளமும் இருக்கு, வழிகளும் இருக்கு. என்ர எதிர்காலத் திட்டம், இலட்சியம் எல்லாம் இந்த மண்ணிலதான் எழுதியும் வச்சிருக்கிறன். நாங்க முன்னேறாம இல்ல. முன்னேறித்தான் இருக்கிறோம். அது வெளில இருந்து பாக்கிற உனக்கு விளங்காது. அடித்தளம் போடக் கொஞ்சகாலம் எடுக்கும்தான். பிறகு கட்டிடம் கெதியா எழும்பிடும்!”
தணிந்த குரலில் என்றாலும் தீர்க்கமாகச் சொன்னவனின் விழிகள், கூர்மையாக மாறி அவளின் இதயத்தைத் துளைத்தன.
வேகமாகத் தலையைக் குனிந்து தன் விரல்களை ஆராயத் தொடங்கியிருந்தாள் ஆர்கலி. அதற்காகவே காத்திருந்ததுபோல் பொங்கிய அவள் விழிகள் இரு துளிக் கண்ணீரை வெளியே தள்ளிவிட்டன.
அவன் சொன்னதில் தவறில்லை. சொன்ன விதம் நெஞ்சை நோகடித்தது. அவளுடைய வார்த்தைகள் அவனை எங்கோ ஒரு புள்ளியில் காயப்படுத்திவிட்டது போலும். தெரிகிறதுதான்! என்றாலும் ‘நாங்க’ ‘வெளில இருந்து பாக்கிற உனக்கு’ போன்ற அவனுடைய வார்த்தைகள் அவளைத் தள்ளி நிறுத்துவதாய் உணர்ந்தாள்.
வலித்தது. சின்ன இதயத்துக்கு மிக மிக வலித்தது. அவனுக்கு எதிர்ப்பக்கக் கையால் கண்களைத் துடைக்க, பிரணவன் அதைப் பார்த்துவிட்டான்.
“பொம்மா! அழுறியா என்ன?” அவளைப் பிடித்துத் தன்புறம் திருப்பினான். அவளோ அழுததை மறைத்துச் சிரித்துச் சமாளிக்கப் பார்த்தாள். ஆனால், கண்ணீர்த் துளிகள் கன்னம் நனைத்து அவளைக் காட்டிக்கொடுத்தன.
“விசரா உனக்கு? இதுக்கெல்லாம் அழுதுகொண்டு! என்னடி!” அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது. அவளை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். அவள் சட்டென்று உடைந்தாள்.
“என்னால அங்கேயெல்லாம் வரேலாடி எண்டு சொன்னாலே போதும் பிரணவன். இவ்வளவு கோவமா… இறுக்கமா… பயமா இருக்கு!” என்று அவள் விம்ம, “சரிசரி! நான் ஏதோ எண்ணத்தில… இனி கோவிக்கமாட்டன்! விடும்மா! அழாத எண்டு சொல்லுறன் எல்லா!” என்று அதட்டி, கெஞ்சி, கொஞ்சி சமாளிப்பதற்குள் பெரும் பாடுபட்டுப்போனான் அவன்.
“என்னடியப்பா… ஒரு சின்ன விசயத்துக்கு இந்தப்பாடு படுத்துறாய்?” மெய்யாகவே களைத்துப்போயிருந்தான் அவன்.
அவனது இறுக்கமான கையணைப்புக்குள் இருந்தவளுக்கு இப்போது சிரிப்பு வந்தது. “எதுவா இருந்தாலும் என்னட்ட நீங்க சொல்லலாம் பிரணவன். சொல்லவேணும். நீங்க சொன்னா நான் விளங்கிக்கொள்ளுவன். இப்பிடிக் கோபப்படாதீங்கோ.” அவன் முகம் பார்த்துச் சொன்னவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கிக் குரல் கரகரத்தது.
“அம்மா தாயே! திரும்ப ஆரம்பிக்காத ப்ளீஸ்!” அவன் பயந்தே போனான். அவனது நடுக்கத்தைப் பார்த்து அவள் கலகலவென்று சிரித்தாள்!


