சுட்டெரிக்கும் வெய்யில் காரணமா, யாழ்ப்பாணம் கிளிநொச்சி என்று அலைந்ததா, அல்லது திருமண வேலைகளால் உண்டான மேலதிக அலைச்சலா ஏதோ ஒன்று லலிதாவின் உடல் நிலையும் சரியில்லை. மனநிலையும் சரியில்லை. அடிக்கடி நடக்கும் கணவருடனான வாய்ப்போரில் மனத்தளவில் மிகவுமே சோர்ந்து போயிருந்தார்.
திருமணமான ஆரம்ப நாட்களுக்குப் போய்விட்டது போலிருந்தது. அப்போதும் இப்படித்தானே. இங்கிலாந்தில் வாழ்ந்த நாட்களில் இப்படி நடந்ததில்லையே!
தான் அவரிடம் கோபப்படுவதும் பதிலுக்கு அவர் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் மனத்தை மிகவும் வருத்தியது. என்னவாவது செய்யட்டும் என்றுவிட்டு இருக்க முடியாமல் மகளின் எதிர்காலம் மிரட்டியது!
இதில் அவரின் அண்ணி வேறு அழைத்து முடிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். எதற்கு இழுத்தடிப்பான் என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டிருந்தார் லலிதா.
“உனக்கும் உன்ர மனுசனுக்கும் என்ன விசர் பிடிச்சிருக்கே? போயும் போயும் என்ன குலம், என்ன இனம் எண்டு தெரியாத ஒருத்தனுக்குக் கட்டிக்குடுக்க ஓம் எண்டு சொல்லி இருக்கிறீங்கள். அவளுக்குப் பிடிச்சிருக்கு எண்டு சொன்னா கிணத்துக்கையும் தள்ளி விடுவீங்களே? இல்லைதானே?” என்றவரின் கோபத்தில் திரும்பவும் மனம் குழம்பி நின்றார் லலிதா.
“நல்லது கெட்டது பாத்துச் செய்யத்தானே பெரியாக்கள் எண்டு நாங்க இருக்கிறது. எனக்குக் கண்ணுக்கையே நிக்கிறாள் அவள். அவ்வளவு வடிவு! நல்ல இடத்து மாப்பிள்ளைகள் நீ நான் எண்டு போட்டி போட்டுக்கொண்டு வருவாங்கள். வசதி இருக்கு. இருந்தும் என்னடியப்பா செய்து வச்சிருக்கிறீங்கள்? எனக்குத் தெரியாது லலிதா, உன்ர மகள் நீதான் முடிவு எடுக்கோணும். தெரிஞ்சே கொண்டுபோய் அவளைப் படுகுழிக்க தள்ளாத! அவ்வளவுதான் சொல்லுவன்!” என்றுவிட்டு வைத்துவிட்டார் அவர்.
ஏற்கனவே விருப்பம் இல்லாமல் குமைந்துகொண்டிருந்தவருக்கு மனம் இன்னுமே தடுமாறிப் போயிற்று!
‘அதுதானே, அவளுக்கு என்ன இல்லை எண்டு இவனுக்குக் குடுக்கோணும்? இவனிட்ட என்ன இருக்கு? குலம்தான் தெரியேல்ல எண்டாலும் நல்ல நிலமைல இருக்கிறானா? அதுவும் இல்ல. ஒரு முன்னேற்றத்தையும் காணேல்ல. சும்மா முன்னேறுவன் முன்னேறுவன் எண்டு சொன்னா காணுமா? இவன் முன்னேறி வாறதுக்கிடைல அவளுக்கு வயசு போய்ச் சேர்ந்திடும்!’ என்ன பாடுபட்டாவது இந்தத் திருமணப் பேச்சை முறித்துவிட வேண்டும் போலிருந்தது.
தன்னை, தன் எண்ணத்தை மதிக்காமல் சம்மதம் சொல்லிவிட்டு வந்த கணவரிடம் போய்த் திரும்பக் கதைக்கவும் விருப்பமில்லை.
ஆத்திரமா அழுகையா இயலாமையா என்ன என்றே பிரித்தறிய முடியாத சுழலில் சிக்கி, மனம் சோர்ந்துபோனதில் முடியாமல் சரிந்தவர் நன்றாக உறங்கிவிட்டிருந்தார்.
எத்தனையோ நாட்களாக இல்லாமலிருந்த உறக்கத்தை மொத்தமாக உறங்கி எழுந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது.
‘அச்சோ! பாவம் பிள்ள. தனியா இருந்து போரடிச்சிருக்கும்!’ வேகமாக எழுந்து முகம் கழுவி, அவளுக்கும் சேர்த்துத் தேநீர் ஆற்றிக்கொண்டு படியேறி அவளின் அறைக்குப் போனார்.
அங்கே அவளைக் காணவில்லை. எங்கே போய்விட்டாள்? ஒருகணம் அதிர்ந்து பதறி, வீடு முழுக்க அலசிய பிறகுதான் நின்று நிதானித்து யோசித்தார்.
அடுத்த கணமே ஊகித்துக்கொண்டதும் சுர் என்று கோவம் கிளம்பியது. ‘அவன்தான் கூட்டிக்கொண்டு போயிருப்பான்! ஒரு வார்த்த கூடச் சொல்லாம!’
வந்த கோபத்துக்கு விறுவிறு என்று கீழிறங்கி வந்தவர் படபடவென்று சுந்தரேசனைத் தட்டி எழுப்பினார்.
சுந்தரேசனுக்கும் மனத்தில் இன்னதென்று புரியாத போராட்டம்தான். லலிதாவுக்குக் கருப்பனின் குடும்பத்தைப் பிடிக்காது என்றாலும், அவரின் கேள்விகள் எல்லாவற்றையும் தட்டிவிட முடியவில்லை.
சின்ன துன்பத்தையும் அனுபவிக்காமல் வளர்ந்த ஆர்கலி, அந்த வீட்டில் சமாளித்துக்கொள்வாளா என்கிற கேள்வி மெல்ல மெல்ல அவருக்குள் எழுந்து மருட்டியது!
அவளுக்கு அவனைத்தான் பிடித்திருக்கிறது என்று தெரிந்தபிறகு, வேறோர் இடம் என்கிற பேச்சுக்கே போகமுடியவில்லை.
ஆனால், அவனும் வளைக்கிற பக்கம் வளைகிறவன் அல்ல என்று தெளிவாகப் புரிய வைத்திருந்தான்.
அது, வாழ்வின் முன்னேற்றத்துக்கு மிகச்சிறந்த தகுதியாக இருந்தாலும் குடும்ப வாழ்வுக்கு எவ்வளவு தூரத்துக்குக் கைகொடுக்கும் என்று அவரால் கணிக்க முடியவில்லை.
நல்லவன்தான். அருமையான பெடியன்தான். அவனை மகள் சமாளிப்பாளா? மகளின் சிறுபிள்ளைக் குணத்தை அவன் அனுசரிப்பானா? எல்லாமே சரியாக அமைந்தாலும் எப்போது இந்தத் திருமணத்தை நடத்துவது? சிந்தனையின் வசத்திலிருந்தவரும் தன்னையறியாமலேயே உறங்கியிருந்தார்.
திடீரென்று யாரோ படபடவென்று தட்டவும் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தார்.
“சொல்லாம கொள்ளாம எங்கயோ போய்ட்டாள் உங்கட மகள். எங்கயோ என்ன அவன்தான் கூட்டிக்கொண்டு போய்ட்டான். ஒரு வார்த்தை எங்களுக்குச் சொல்லேல்ல! முதல் அவேன்ர வீட்டுக்கு ஒரு ஃபோனைப் போடுங்கோ! இண்டைக்கு குடுக்கிறன் கிழி!” படபடவென்று மனைவி சொன்னது என்ன என்று கிரகிக்கவே அவருக்குச் சில வினாடிகள் பிடித்தது.
“வீடு முழுக்கப் பாத்தியா?” மகள் அப்படிச் சொல்லாமல் போனது அவருக்கும் பிடிக்கவில்லை.
“எல்லாம் பாத்தாச்சு! கண்டறியாதவன், ஓம் எண்டு சொன்ன அடுத்த நிமிசமே எங்களை இந்தப்பாடு படுத்துறான்! முதல் இது என்ன முறைகெட்ட பழக்கம். இன்னும் முறையா ஒண்டும் கதைச்சுப் பேசி முடிக்கேல்ல. அதுக்கிடையில என்ன இது? எனக்கு என்னவோ நாங்க பிழையான முடிவு எடுத்திட்டம் எண்டுதான் படுது! இந்தக் கலியாணப் பேச்சை நிப்பாட்டுறதுதான் நல்லது!”
“வாய மூடு! என்ன தாய் நீ? எப்ப பாத்தாலும் கலியாணத்தை நிப்பாட்டு, வேண்டாம், வரமாட்டன் எண்டு அபசகுனமாவே கதைச்சுக்கொண்டு! நீ பெத்த மகள்தானே அவள்! நீ நினைச்சதே நடக்கோணும் எண்டு ஆடாம அவளுக்காகவும் கொஞ்சம் யோசி!”


