தான் உயிராக நேசிப்பவனால் நிராகரிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பெரிய அடியாக இருந்தது அவளுக்கு.
“லூசு! சும்மா அழாத!” லலிதா நிற்பதையும் மறந்து அவளைத் தன்னிடம் இழுக்க முனைந்தான் அவன்.
கைகளால் தடுத்துவிட்டுத் தள்ளி நின்றாள் ஆர்கலி. கன்னத்தில் வழிந்த கண்ணீரைப் பரபரவென்று துடைத்தாள். அவனை நேராக நோக்கிக் கேட்டாள்.
“சொல்லுங்க, என்னை வேண்டாம் எண்டு சொன்னனீங்களா?” அவன் சொல்லப்போகிற பதிலில்தான் அவளின் உயிர்ப்பே தொங்கிக்கொண்டிருந்தது. இல்லை, அவனால் அப்படிச் சொல்லியிருக்க முடியாது! கண்களில் நம்பிக்கையைத் தேக்கிக்கொண்டு பார்த்தாள்.
“ஏன் எண்டு கேளு பொம்மா.”
அதிலேயே உடைந்தாள் அவள்.
“அப்ப சொல்லித்தான் இருக்கிறீங்க!”
“காரணத்த கேளடி!”
இப்போது அழுகையோடு ஒரு ஆக்ரோசமும் சேர்ந்திருந்தது அவளிடம்.
“காரணம் எதுவாவும் இருக்கட்டும்! உங்களால என்னை வேண்டாம் எண்டு சொல்ல முடிஞ்சிருக்கு. நான் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியும் எண்டு நினச்சு இருக்கிறீங்க. ஆனா நான்? எனக்கு…” தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினாள். “வலிக்குது பிரணவன். செத்திடோணும் போல இருக்கு!” உடைந்த குரலில் சொன்னாள்.
“லூசாடி நீ! உளறாத!” அவன் பதற லலிதாவும் துடித்துத்தான் போனார்.
செத்துவிடலாமா என்று நினைக்கும் அளவுக்கு மகளைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டானே! அவள் சாவதற்கா அவர் இந்தப்பாடு படுகிறார்? அதிர்வோடு மகளைப் பார்த்தார்.
“என்னால இன்னுமே நம்ப முடியேல்ல பிரணவன். உண்மையாவே என்னை வேண்டாம் எண்டு சொன்னீங்களா?”
விழிகள் இரண்டிலும் நிறைந்து வழிந்த கண்ணீரோடு தன் முகம் பார்த்துக் கேட்டவளிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறிப்போய் நின்றான் பிரணவன்.
லலிதாவுக்கோ மகள் துடிப்பதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
“அவனே சொல்லுறான், பிறகு என்ன நம்ப முடியேல்ல எண்டுறாய். நீ அவனை விரும்புறாய், வேற மாப்பிள்ளை பாக்கேலாது எண்டு சொன்ன பிறகுதான் ஓம் எண்டு சொன்னவன். அதுவும் வெளிநாட்டுக்கு வரமாட்டன் எண்டு கண்டிஷன் போட்டுச் சொல்லி இருக்கிறான். நாங்க பெத்தது பொம்பிளைப் பிள்ளையாச்சே! நீ அவனை மனசில நினச்சபிறகு இன்னொருத்தனுக்குக் கட்டிக்குடுக்கவா ஏலும்? அவன் சொல்லுறதுக்கு எல்லாம் தலையை ஆட்டத்தானே வேணும்! அதுதான் அப்பா கெஞ்சிச் சம்மதிக்க வச்சவர்.”
மகளை இந்த நிலையில் நிறுத்திவிட்டான் என்கிற ஆக்ரோசத்தில் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தார் லலிதா.
ஆர்கலியின் உள்ளம் முற்றிலும் நொருங்கியே போயிற்று. அவளை மணக்கச் சம்மதிப்பதற்கு இத்தனை பாடா? இத்தனை விதிமுறைகளை விதித்து மணக்கவேண்டிய அளவுக்கா அவள் போய்விட்டாள்?
வெளிநாட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்னதாக அவன் சொன்னபோதுகூட அதை அவள் இவ்வளவு பெரிய விடயமாக எடுக்கவே இல்லையே. அவன் மீது உயிரையே வைத்துவிட்ட உள்ளம் துடியாய் துடித்தது. இதைவிடவும் அதிகமாக அவளின் நேசத்தை அவனால் நசுக்க முடியாது என்றே நினைத்தாள்.
“அம்மா சொல்லுறது உண்மையா?” தாயின் பேச்சை அவள் அப்போதும் நம்பவில்லை. அவனைத்தான் கேட்டாள்.
“கேள்வி கேக்கிறதை விட்டுட்டு விளக்கம் சொல்லவிடு பொம்மா!” கெஞ்சினான் பிரணவன்.
“எந்த விளக்கமும் எனக்கு வேண்டாம்! நான் கேட்டதுக்கு மட்டும் பதிலச் சொல்லுங்க!”
இயலாமை ஆத்திரத்தைக் கொடுக்க, “ஓமடி! சொன்னனான் தான்! ஆனா என்ன காரணம் எண்டும் கேளடி!” என்று வெடித்தான் அவன்.
“தேவையில்லை பிரணவன். நான் உங்கள விரும்பினதுக்காகப் பிடிக்காத என்னை நீங்க கட்டத் தேவையில்ல. நீங்க உங்கட வாழ்க்கையை பாருங்க!” அழுகையோடு சொல்லிவிட்டு மாடியேறினாள்.
இதற்குள் லலிதாவின் கோபக்குரலும் மகளின் அழுகைக் குரலும் கேட்க, அரைகுறைக் குளியலோடு உடை மாற்றிக்கொண்டு அரக்கப்பரக்க ஓடிவந்தார் சுந்தரேசன்.
அவரைக் கண்டதும் ஆத்திரமும் அழுகையும் வந்தன அவளுக்கு!
“என்ர மகளுக்கு வாழ்க்கை குடு எண்டு கெஞ்சினீங்களா அப்பா? அந்தளவுக்கு மோசமா போய்ட்டனா நான்? போனா போகட்டும் எண்டு எனக்கு வாழ்க்கை தாறாரா அவர்? கல்யாணம் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிக் கட்டுறது அப்பா. யாசகமா கேட்டு நீங்களும் என்னைக் கேவலப்படுத்தீட்டிங்களே!” என்றவள் வாயைப் பொத்திக்கொண்டு அறைக்குள் ஓடிவிட்டாள்.
பிரணவனின் முகம் கறுத்துக் களையிழந்து போயிற்று! அவன் மனத்தை அறியாமல் என்னவெல்லாம் சொல்லிவிட்டாள்?
அவள் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றவனுக்கு அங்கிருந்த இருவரின் முகம் பார்க்கவும் பிடிக்கவில்லை. வெறுத்துப் போயிற்று!
சுந்தரேசன் எல்லாவற்றையும் அவளுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்க அவனது நிலையையும் அவள் விளங்கியிருப்பாள் இல்லையா? அவர் சொல்லவில்லையென்று அவனுக்கு எப்படித் தெரியும்?
வேகமாக மாடியேறிப் போய்க் கதவைத் தட்டினான்.
“பொம்மா! கதவைத் திற!”
அவள் அழும் சத்தம் மட்டும் கேட்டது!
“செல்லம்மா அழாதடா! நான் சொல்லுறதைக் கேக்காம நீயா ஒரு முடிவு எடுக்காதயடி!” தடதட என்று இடைவெளியே விடாமல் கதவை உடைத்துவிடுகிறவன் போன்று தட்டினான்.
“ஒரே ஒருக்கா என்ன எண்டு கேளு பொம்மா!” எவ்வளவு கெஞ்சியும் பலனில்லை.
தட்டத்தட்ட அவளிடமிருந்து சத்தமேயில்லை. திறக்கவுமில்லை.
“கோபத்தைக் கிளப்பாம திறடி!” குரலைத் தணித்துச் சீறினான்.
கீழே அவர்கள் நிற்பது வேறு அவமானமாய் இருந்தது. இனியும் எந்தளவுக்கு இறங்கிப்போய்க் கெஞ்சுவது என்று தெரியவில்லை. அவன் பக்க நியாயத்தைச் சொல்லவே விடவில்லையே!
“இப்பிடியே இருந்து அழு! நான் போறன்! என்ன சொல்லவாறன் எண்டு கூடிக் கேக்க விருப்பம் இல்லாதவளிட்டக் கெஞ்ச எனக்கும் விருப்பமில்லை! போடி!” என்றுவிட்டுத் தடதடவென்று கீழிறங்கி வந்தவன், அங்கு நின்றவர்களைத் திரும்பியும் பாராமல் வெளியேறினான்.
அடுத்த கணமே புயலென மீண்டும் இருவர் முன்னும் வந்து நின்றான்.
“நாங்க ரெண்டு பேரும் சண்டை பிடிச்சிட்டம். இனிப் பிரிச்சிடலாம். அவளை வேற ஒருத்தனுக்குக் கட்டிக்குடுக்கலாம் எண்டு மட்டும் கனவு காணாதீங்க! அப்பிடி ஏதும் நடந்திச்சு…” என்றவன் லலிதாவை விரல் நீட்டி எச்சரித்தான்.
“எதுக்கும் பயப்பிடாம உங்கட வீட்டுக்கையே புகுந்து, உங்களத் தூக்கிக்கொண்டு வந்து இவரிட்டக் குடுத்த அந்தக் கருப்பன்ர மகன் நான் எண்டுறதை எப்பவும் மறந்துடாதீங்க! எண்டைக்கா இருந்தாலும் அவள் எனக்குத்தான்!” அழுத்தம் திருத்தமாய் அவரின் கண்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனான் பிரணவன்.


