“பாத்தீங்களா அவன? எவ்வளவு திமிரா, மரியாதையே இல்லாமக் கைய நீட்டிப் பேசிப்போட்டுப் போறான்!” அவன் மறைந்ததும் அங்காரமாக ஆரம்பித்த லலிதாவை, “நிப்பாட்டு! போதும் எல்லாம்!” என்றார் சுந்தரேசன், கல்லாக இறுகிப்போன முகத்தோடு!
“நீயெல்லாம் எண்டைக்கும் திருந்திற ஆளே கிடையாது! உன்னத் திருத்தவும் ஏலாது! என்ன பொம்பிளை நீ? வயசுக்கேத்த மாதிரிக் கொஞ்சமாவது பொறுமையா நிதானமா நடக்கத் தெரியுதா உனக்கு? இனிமேல் ஆருவைப் பற்றி ஏதாவது கதைச்சுக்கொண்டு வந்தாய் எண்டு வை… நான் மனுசனா இருக்கமாட்டன்!” விரல் நீட்டி எச்சரித்தவர் பார்த்த பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட்டது லலிதாவுக்கு!
“இனிமேல் என்ர கண்ணுக்கு முன்னால வராத! உன்ர முகம் பாக்கவே வெறுப்பா இருக்கு! என்ர மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்குடுக்க எனக்குத் தெரியும்!” வெறுப்பை உமிழும் விழிகளோடு மொழிந்துவிட்டுத் தன்னறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டார் சுந்தரேசன்.
முகம் சிவந்து கண்கள் கலங்கிவிட அப்படியே நின்றுவிட்டார் லலிதா! அறை வாங்கியது போலிருந்தது. அதைவிட, கணவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்…
‘என் முகம் பாக்க வெறுப்பா இருக்காமா?’ காதலித்து மணந்தவரின் உள்ளம் ஆழமாகக் காயப்பட்டுப் போயிற்று! பொல பொல என்று கண்ணீர் கொட்ட அப்படியே நின்றுவிட்டார்.
அறைக்குள் புகுந்த சுந்தரேசனோ அப்படியே தொய்ந்து அமர்ந்துவிட்டார். எல்லாமே அவரின் கையை மீறிப் போய்விட்டதே. பிரணவனை எப்படிச் சமாளிப்பது? ஆர்கலிக்கு எப்படி விளங்கப்படுத்துவது? பத்திரகாளியாக நிற்கும் மனைவியை எப்படி வழிக்குக் கொண்டுவருவது?
இந்தத் திருமணத்தை நடத்தி, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தது எல்லாம் இனி நடக்கும் என்கிற நம்பிக்கையே இல்லை. கருப்பனிடம் பட்ட கடன் தீராமலேயே தன் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்றும் அஞ்சினார்.
பெற்றவர்கள் இறந்தது நாட்டுப் பிரச்சனை உச்சத்திலிருந்த காலப்பகுதியில். கடைசியாகக் கதைத்த அம்மா அவரிடம் சொன்னது, “சொத்து சுகத்துக்கு ஆசைப்படாத அருமையான பிள்ளை அவன். நாலு பிள்ளைகளைப் பெத்து வச்சிருக்கிறான். அவனைக் கை விட்டுடாத!” என்பதுதான்.
கருப்பன் செய்தவற்றுக்குத் தன்னாலான சின்ன பிரதியுபகாரம் என்று எண்ணிப் பிரணவனை அனுப்பச் சொல்லிக் கேட்டபோது, அவர் சம்மதிக்கவில்லை.
இலங்கைக்கு வருவதாக முடிவானபோது, எப்படியாவது சொத்தில் பாதியைக் கொடுக்க வேண்டும், இல்லையோ ஒரு தொகைப் பணத்தை நான்கு பிள்ளைகளின் பெயரிலும் வைப்புச் செய்ய வேண்டும் என்று முடிவு கட்டிக்கொண்டுதான் வந்தார்.
ஆனால், பிரணவனைப் பார்த்த கணத்திலிருந்து அவனை அவ்வளவு பிடித்துப் போயிற்று. கதையோடு கதையாக யாரையும் விரும்புகிறானா என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவனுடைய எதிர்காலத் திட்டங்கள், குடும்பத்தின் மீதான பற்று என்று அவர் பார்த்தவரைக்கும் அருமையான பிள்ளை என்று தெரிந்ததால் ஆர்கலியை அவனுக்கே கொடுத்தால் என்ன என்று பலமுறை நினைத்திருக்கிறார்.
ஆனால், அவளுக்குச் சயந்தனைப் பற்றிச் சொல்லிவிட்டு மாற்றிக் கதைக்கக் கூடாது என்றுதான் பேசாமலிருந்தார். தன் நன்றிக்கடனை அவள் மீது திணிக்கவும் விருப்பமில்லை.
அப்படியிருக்க, அவளே அவனைப் பிடித்திருப்பதாகச் சொன்னபோது, எப்பாடு பட்டாவது இத்திருமணத்தை நிகழ்த்திவிடத்தான் ஆசைப்பட்டார். அதனால்தான் அவனைச் சம்மதிக்கவும் வைத்தார்.
இன்றோ அனைத்தும் மீண்டும் கேள்விக்குறியாகிப் போயிற்று! இனிக் கருப்பன் குடும்பத்துக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
புயலென அங்கிருந்து கிளம்பிய பிரணவன் மீண்டும் இரணைமடுக்குளத்துக்கே வந்து சேர்ந்திருந்தான். சற்றுமுன்னர் அவளோடு அமர்ந்திருந்த அதே இடத்தில் வானம் பார்த்துச் சரிந்தவனுக்கு உள்ளம் உழைக்களமெனக் கொதித்துக்கொண்டிருந்தது.
ஒரு முறை ஒரே ஒரு முறை அவன் பக்கத்து நியாயத்தைக் கேட்டாளா? வெக்கம் மானம் பாராமல் மூடிய கதவின் முன்னே நின்று எவ்வளவு கெஞ்சினான். அவமானத்தில் கண்கள் சிவந்தது! அதுவும் அவளுடைய தாயாரின் முன் அவனை அவள் புறக்கணித்துவிட்டாளே!
மீண்டும் சென்று அவளின் அறைக்கதவை உடைத்து, கேளடி என்று வலுக்கட்டாயமாகச் சொல்லிவிட்டு வர வேண்டும் போலிருந்தது.
‘மாட்டன்! அவ்வளவு கெஞ்சியும் கேக்காதவளுக்கு இனி ஒரு விளக்கமும் சொல்லமாட்டன்! நல்லா கிடந்து அழடி!’ அவளது கண்ணீர் முகம் வந்து அவனைக் கொன்றது!
நெஞ்சு முழுக்க அவளே நிறைந்திருந்தும் அதை வாயைத் திறந்து சொல்ல முடியாத நிலையில் நிறுத்திவிட்டாளே!
தானும் தேவை இல்லாமல் நொந்து அவனையும் நோகடித்து… ப்ச்! சினம் பொங்கிக்கொண்டு வந்தது.
‘வேண்டாம் எண்டு சொன்னா உன்னப் பிடிக்காது எண்டு அர்த்தமா? விசரி! ஏனடா எண்டு ஒரு வார்த்த கேட்டியாடி?’ மனத்தோடு அவளிடம் சண்டையிட்டவனுக்கு மனம் ஆறவேயில்லை.
‘இனி நானா உன்னத் தேடி வாறனா பாப்பம்!’ சபதம் எடுத்துக்கொண்டான்.
நடந்ததை அறிந்த கருப்பன் வீட்டினருக்கும் குற்ற உணர்ச்சியாகிப் போயிற்று! அவள் வந்தபோது, ‘சுந்தரண்ணாவின் மகளாக’ நினைத்துத்தான் பேசாமலிருந்தார்கள்.
அவரின் மகள் அவர்களின் வீட்டுக்கு வருவதில் என்ன இருக்கிறது? லலிதா சொன்னதுபோல மகனுக்குப் பேசிய பெண் என்றும் பார்த்திருக்க வேண்டுமோ? யாரோ ஒரு வீட்டுப் பெண்ணாக இருந்திருக்கப் பார்த்திருப்பார்கள்தான். இவள்தான் அவர்களின் சுந்தரம் அண்ணாவின் மகளாயிற்றே!
அடுத்தநாள் காலையே கருப்பன் சுந்தரேசனைத் தேடிப்போனார். நண்பனைக் கண்ட சுந்தரேசனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஆனால், கருப்பனுக்கு அப்படி எதுவும் இருக்கவில்லை.
“தம்பிக்கு அவளைக் கட்டிவச்சாலும் வைக்காட்டியும் அவள் உன்ர மகள். உன்ர மகள் என்ர வீட்டை வாறதில என்ன இருக்குச் சொல்லு? அப்பிடித்தான் நான் நினச்சனான். அவள் சொல்லாம வந்தது பிழைதான். ஆனா, சின்ன பிள்ளைதானே. எங்கட வீட்டை எண்டுதான் ஓடி வந்திருப்பாளா இருக்கும். அதைப் பெருசா எடுக்காத!” என்று சமாதானம் சொன்னவர், “எங்க பிள்ளை? கூப்பிடு, கதைப்பம்!” என்றார். லலிதா அடித்தார் என்று தெரிந்து மனதே சரியில்லை அவருக்கு.


