சுந்தரேசனுக்கும் அவரின் விளக்கத்தைக் கேட்டபிறகு ஒருமாதிரி ஆகிப்போயிற்று! நடந்த நிகழ்வுக்கு இப்படி ஒரு பக்கமும் உண்டுதானே. அதை யோசிக்காமல் கருப்பனின் மீது அதிருப்தி கொண்டிருந்தாரே.
“இப்ப வேண்டாமடா! விடு!” மெல்லச் சொன்னார்.
கருப்பன் ஏன் என்பதுபோலப் பார்க்க, “இரவு நான் கதைக்கப் போகவே, ‘எனக்கு ஒரு விளக்கமும் வேண்டாம். என்னைச் சும்மா விடுங்கோ!’ எண்டு சொல்லிப்போட்டாள். விடு கொஞ்சம் நிதானத்துக்கு வரட்டும். பிறகு கதைப்பம்.” என்றார் சுந்தரேசன்.
“தங்கச்சி எங்க?”
“வீட்டுக்கதான் எங்கயாவது இருப்பாள்!” அக்கறையின்றிச் சொன்னார்.
முதல் நாளிரவுக்குப் பிறகு சுந்தரேசன் லலிதாவுக்கு முகம் கொடுக்கவேயில்லை. உண்மையிலேயே எல்லாமே வெறுத்துப் போனது போலாயிற்று அவருக்கு!
“தங்கச்சி கொஞ்சம் படபட எண்டு கதைப்பாதான். அதுக்காக நீயும் கோவப்படாத! கொஞ்சம் பொறுமையா இரு அண்ணா.” என்றவரைப் பார்வையால் அளந்தார் சுந்தரேசன்.
இந்த வெள்ளை மனத்துக்காரனுக்கு அவர் பட்ட கடன்கள் கொஞ்சமா நஞ்சமா? பிரதியுபகாரமாக என்ன செய்யப்போகிறார்?
“நான் பொறுமையா போகோணும் எண்டால் நான் சொல்லுறதை நீ கேக்கோணும்!” மெல்ல ஆரம்பித்தார் சுந்தரேசன்.
கருப்பனின் உதட்டினில் சிரிப்பு மலர்ந்தது. “சொல்லு, என்ன செய்யோணும்?” தன் வெள்ளைக் கேசத்தைக் கையால் அளைந்தபடி எந்த யோசனையும் இன்றிக் கேட்டார்.
“உனக்கு ஏதாவது செய்யச் சொல்லி அம்மா கடைசிநேரம் என்னட்டச் சொன்னவாடா!” தாயின் பெயரைச் சொன்னால் கேட்டுக்கொள்வார் என்று தெரிந்து சொன்னார். உண்மையும் அதுதானே!
“அதுதான் அண்ணா அம்மா!” தாய் மீதான பாசத்தில் உள்ளம் கனியச் சொன்னார் கருப்பன்.
“அப்ப நான் செய்றதை மறுக்காம வாங்கு கருப்பா! அப்பதான் அம்மாட ஆத்மாவும் சாந்தியடையும். எனக்கும் உன்னட்டப் பட்ட கடன் பாரமிறங்கும்.”
“அப்ப என்னை நீ உன்ர சகோதரமா நினைக்கேல்ல என்ன?” கருப்பனின் கேள்வியில் வாயடைத்துப்போனார் சுந்தரேசன்.
“அம்மா அப்பாக்கு நான் மகனில்லை. உனக்குச் சகோதரமில்ல. அதாலதான் நான் செய்தது எல்லாம் உனக்குக் கடனா பட்டிருக்கு. இப்ப அந்தக் கடனைத் திருப்பித் தர நிக்கிறாய். அப்பிடியே?” நிதானமாகக் கேட்டார் கருப்பன்.
“விசர் கதை கதைச்சியெண்டா வாற கோவத்துக்கு ஓங்கி அறைஞ்சு விட்டுடுவன்! நான் என்ன சொல்லுறன், நீ என்ன கதைக்கிறாய்?” படபடத்தார் சுந்தரேசன்.
“பிறகு என்ன அண்ணா. நீ என்ர அண்ணா. அவே என்ர அம்மா அப்பா. தம்பிட்ட அண்ணா என்ன கடன் படவேண்டி இருக்கு?” கருப்பன் நிதானம் இழக்கவே இல்லை.
“நல்லா கதைக்கப் பழகிட்டடா! அது மட்டும் தெரியுது!” தன் சொல்லைக் கேட்கிறான் இல்லையே என்கிற சினத்துடன் மொழிந்தார் சுந்தரேசன்.
கருப்பன் சிரித்தார். “அண்ணா இங்க பார்! சும்மா நீயா எதையாவது மனசில நினைச்சுக்கொண்டு பாரத்தைச் சுமக்காத! உண்மையாவே நான் நல்லா இருக்கிறன். எனக்கு ஒரு குறையும் இல்ல. நீ எந்தக் கவலையும் படாத. அப்பிடியே நாளைக்கு எனக்கு ஏதாவது தேவை எண்டால் கட்டாயம் உன்னட்டத்தான் வருவன். அப்ப செய்! எனக்கும் உன்ன விட்டா வேற ஒருத்தரும் இல்ல. இப்ப எதுவும் வேண்டாம். தாங்களாவே முன்னேறத் துடிக்கிற பிள்ளைகள் என்ர பிள்ளைகள். அவேன்ற ஆசைப்படியே எல்லாம் நடக்கட்டும்!” என்றார்.
அப்போதும் தெளிவில்லாமல், “எல்லாம் சரியடா. என்ர சந்தோசத்துக்காக ஏதாவது செய்யவும் விடன். நான் தந்தா நீ வாங்க மாட்டியா? அந்தளவுக்குப் பெரிய மனுசனா நீ?”ஆதங்கத்தோடு கேட்டார் சுந்தரேசன்.
“இந்த வாழ்க்கையே நீ தந்ததுதான் அண்ணா. இதைவிட வேற ஒண்டும் வேண்டாம் எண்டுதான் சொல்லுறன். ஊரார் என்னை அநாதை எண்டு சொல்லலாம். இன்னும் ஆயிரம் சொல்லலாம். ஆனா எனக்கு நான் அநாதை இல்ல. எனக்கும் அம்மா அப்பா இருக்கு. அண்ணா நீ இருக்கிறாய். அண்ணா குடும்பம் இருக்கு. அந்த நினைப்புப் போதும் எனக்கு. அதமட்டும் நான் ஆருக்காகவும் விட்டுக் குடுக்க மாட்டன். நீ நிம்மதியா இரு! இதுக்குமேலயும் எனக்கு ஏதும் செய்ய நினச்சா நான் கேக்கிறதை மட்டும் செய்து தா!” என்றார் கருப்பன்.
“என்னடா? சொல்லு சொல்லு! தலைகீழா நிண்டு எண்டாலும் செய்வன். சொல்லு!” பரபரத்தார் சுந்தரேசன்.
“உன்ர மகள்தான் எனக்கு மருமகளா வரோணும் அண்ணா. எந்தச் சொத்தையும் விட மதிப்பில்லாத சொத்து அவள். அவளை என்ர மகனுக்கே குடு! அதுகள் சந்தோசமா வாழட்டும்!” கெஞ்சலாகக் கேட்டார் கருப்பன்.
சுந்தரேசன் உடைந்தே போனார். “என்ன மனுசனடா நீ!” என்றவர் வேகமாக அவரை அணைத்துக்கொண்டார். கண்கள் பனித்துப் போயிற்று!
“நான் எப்பவோ பிரணவனுக்குச் சொல்லிப்போட்டன்! அவள் அவனுக்குத்தான்! இத நீ கேக்கவே வேண்டாம்!” என்றார் மனத்திலிருந்து!
கருப்பன் கீழே வந்திருப்பது தெரிந்தும் வெளியே வரவில்லை ஆர்கலி. மனதெங்கும் வலி. யாரைப் பார்த்தாலும் உடைந்து அழுதுவிடுவோம் என்று தெரிந்ததால் யாரையும் பார்க்கவே இல்லை.
இரவு விளக்கம் சொல்ல வந்த தந்தையையும் தவிர்த்துவிட்டாள், காலையில் உணவோடு வந்த தாயையும் தவிர்த்துவிட்டாள்.
அவனாக அவளிடம் சொல்லாமல் விட்டபிறகு யார் சொல்லும் விளக்கமும் அவளுக்குத் தேவையே இல்லை.
அவன் வெளிநாடு வரமாட்டேன் என்றதோ, அதனால் அவள் வாழ்க்கை இங்கேதான் என்பதோ விடயமே அல்ல. அவனால் அவளை மறுக்க முடிந்திருக்கிறது. அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழலாம் என்று நினைக்க முடிந்திருக்கிறது.
அதைவிட அவளுடைய விருப்பம் அறிந்த பிறகுதான் அவன் சம்மதித்தான் என்பது… என்னவோ அவள் மிகவும் தரம் தாழ்ந்து போனமாதிரி, வாழ்க்கையை இறைஞ்சிப் பெற்ற மாதிரி ஒரு தோற்றம் உருவாக்கி அவளை வதைத்தது!
சட்டென்று இரண்டு நீர் மணிகள் விழுந்து சிதறின. அவன் வேண்டுமென்பதற்காக அவள் எதுவும் செய்வாளே. அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இருக்கவில்லையே. கெஞ்சிக்கேட்டு அப்பா சம்மதம் வாங்கினாரா? அதிலேயே நின்று துடித்தது அவளிதயம்.
அன்று மட்டுமல்ல அடுத்து வந்த மூன்று நாட்களுமே வெளியே வரவில்லை ஆர்கலி.
விடுமுறை முடிந்து இங்கிலாந்துக்குப் புறப்படும் நாளும் வந்தது. ‘நானா அவளத் தேடிப் போறேல்ல!’ என்று அவன் எடுத்திருந்த முடிவைத் தூக்கி எறிந்துவிட்டு, காலையிலேயே தன் குடும்பத்தோடு வந்துவிட்டான் பிரணவன்.
நான்கு நாட்களாயிற்று அவளைக் கண்டு. மேலேதான் தயாராகிக்கொண்டு இருப்பாள் என்று தெரியும். ஓடிப்போய்ப் பார்த்துவிடத் துடித்த மனத்தை அடக்கிக்கொண்டு மாடியை மாடியைப் பார்த்துக்கொண்டு காத்திருந்தான்.
லலிதாவிடம் இன்னுமே முகம் கொடுக்கவில்லை சுந்தரேசன். புவனாவும் கருப்பனும் இயல்பாக நடக்க முயன்றுகொண்டிருந்தனர்.


