இது நீயிருக்கும் நெஞ்சமடி 18 – 3

சின்னவர்கள் இருவரும் ஆர்கலியிடம் செல்லத் தயங்கிக்கொண்டு அமைதியாகக் கீழேயே அமர்ந்திருந்தனர். தமயந்தி எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து பரிமாறினாள்.

சிறிது நேரத்தில் இறங்கி வந்தாள் ஆர்கலி. முதல்நாள் இரவு முழுக்க அழுத்திருக்கிறாள் என்று அப்பட்டமாகத் தெரியுமளவுக்குக் கண் மடலெல்லாம் வீங்கி, முகம் முழுக்கச் சிவந்திருந்தது.

சோர்ந்து முகம் வாடிப்போயிருந்தாள். ஓடிப்போய் அணைத்துக்கொள்ளத் துடித்த கைகளை அடக்கிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான் பிரணவன்.

எதிர்பாராமல் அவளின் விழிகள் அவனைச் சந்தித்துவிட்ட கணத்தில் சட்டென்று குளமாகிப் போயிற்று அந்தக் கண்கள்.

அவன் அவளை அவளைப் பார்க்க அதை உணர்ந்தவளோ அதற்குப் பிறகு அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. உதடுகள் நடுங்கி மீண்டும் அழத் தயாராகிக்கொண்டிருந்தன.

‘இப்பிடிப் பாக்காதயடா! நீ இரக்கப்பட்டுத் தந்தாலும் பரவாயில்ல, நீதான் வேணும் எண்டு வெக்கம் கெட்டுப்போய் சொன்னாலும் சொல்லிடுவன். அந்தளவுக்கு ரோசம் கெட்டுப்போய் நிக்குது என்ர மனம்!’ எழுந்து அவன் கைகளுக்குள் புகுந்துவிட வேண்டும் என்று எழுந்த ஆழமான உந்துதலில் பயந்து, சோபாவின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டாள் ஆர்கலி.

அவள் படும்பாட்டைப் பார்க்க பார்க்க எதையாவது தூக்கிப்போட்டு உடைக்க வேண்டும் போல வெறி வந்தது பிரணவனுக்கு.

‘ஏன்டி ஏன்டி நீயும் நொந்து என்னையும் சாகடிக்கிறாய்!’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.

அவர்களை அழைத்துச் செல்ல வாகனமும் வந்து சேர்ந்தது. கல்லாக இறுகிப்போய் நின்றான் பிரணவன்.

மற்றவர்கள் பெட்டிகளை ஏற்ற, பொருட்களை எடுத்துவைக்க என்று வேலைகளைப் பார்க்க, அதையெல்லாம் செய்யவேண்டியவனோ அசையாமல் நின்று அவளை எப்படித் தனியாகப் பிடிக்கலாம் என்று பார்த்திருந்தான்.

அழுத தடயத்தை அழிக்க ஆர்கலி வேகமாக மாடியேறினாள். முகம் கழுவிவிட்டுத் துவாலையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு வந்தவள் கதவடைக்கும் சத்தத்தில் அதிர்ந்து நிமிர்ந்தாள்.

அவளையே முறைத்தபடி நின்றிருந்தான் பிரணவன். மனம் படபடக்கத் துவங்கியது. பார்வையைத் தழைத்துக்கொண்டாள். கண்ணோரம் மீண்டும் கண்ணீர் முளைக்கட்ட ஆரம்பித்தது.

எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனைத் தானடி வெளியேறப் போனாள். அதற்கு விடாமல் அவளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, தன் மேலேயே போட்டுக்கொண்டான் பிரணவன்.

அவள் அவன் முகம் பாராமல் விடுபடப் போராடினாள். கோபம்தான் வந்தது அவனுக்கு. “அப்பிடி என்ன கோபம் உனக்கு?” என்றபடி, கணத்தில் தன் மனத்தை உணர்த்தும் வழியாகக் கோபத்தோடு அவளின் உதடுகளைக் கைப்பற்றினான் அவன்.

சற்று நேரத்தில் பிரிந்துவிடப் போகிறார்கள் என்கிற நினைவே நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்தது. இதில் அவன் மீது கோபத்தோடும் கண்ணீரோடும் போகப்போகிறாள் என்பது இன்னுமே அவனை வருத்தியது.

நிறுத்தி நிதானமாகக் கதைக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, அதைக் கேட்கும் மனநிலையில் அவளும் இல்லை. ஆக, அவன் மனத்தை உணர்த்த அவனுக்குத் தெரிந்த ஒரே வழி இதுவாகிப் போயிற்று!

ஆர்கலி இதை எதிர்பார்க்கவில்லை. அவன் தன் உயிரையே அவளுக்குள் கடத்துவதுபோலிருந்தது. கோபமாய் ஆரம்பித்தவன் தாபமாய்த் தேனருந்தி, பிரிவின் நினைவில் அவளைப் பிரியவிடாமல் முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.

கண்ணீர் வழிய அவன் கைகளுக்குள் அடங்கினாள் ஆர்கலி. அப்போதுதான் அவன் இதயம் கொஞ்சமேனும் அமைதியுற்றது.

“என்ர வாழ்க்கையப் பாக்கோணுமா நான்? என்ர வாழ்க்கையே நீதானேடி!” மீண்டும் அவளின் இதழ்களைத் தன் உதடுகள் கொண்டு மூடினான். இன்னொருமுறை அவள் அந்த வார்த்தைகளைச் சொல்லிவிடாதபடிக்குத் தன்னை அவளின் உயிருக்குள் கலந்தான். தன் கோபமும் தாபமும் அடங்கியபோதுதான் அவளை விட்டான்.

“இந்த முத்தம் சொல்லுமடி நான் பிடிச்சுச் சம்மதிச்சனா இல்லையா எண்டு!” காதோரமாகச் சீறினான் அவன்.

அவளோ அவன் முகம் பாராமல் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். மீண்டும் இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். அழுத்தமாய் நெற்றியில் முத்தமிட்டான். முதுகை வருடிக்கொடுத்தான். கேசம் கோதிவிட்டான்.

“அழாம போய்ட்டுவா!” என்றான், செருமிச் சீர் செய்த கரகரத்த குரலில்.

அவள் கண்ணீருடன் விலக, அப்போதும் விட மறுத்தான். “கடைசிவரைக்கும் என்ன சொல்ல வாறன் எண்டு கேக்கவே இல்ல என்ன நீ?” அவனுக்கு மனம் ஆற மறுத்தது.

அவள் கண்ணீர் மட்டுமே வடித்தாள். அவன் முகத்தையும் பார்க்கவில்லை. என்ன சொல்ல வருகிறான் என்று கேட்கவும் இல்லை. அது அவனைச் சினம்கொள்ள வைத்தது.

“என்னைப் பாத்தா உனக்கு இரக்கப்பட்டு ஓம் எண்டு சொன்னவன் மாதிரியா இருக்கு?” என்று சீறினான்.

அவளோ அவனிடமிருந்து விடுபடுவதில் மட்டுமே முனைப்பாக இருந்தாள். மீண்டும் ஆவேசமாக இழுத்துத் தன்னருகே கொண்டுவந்து, “ஒரு வார்த்த போயிட்டு வாறன் எண்டு சொல்ல ஏலாது என்ன உனக்கு? அவ்வளவு பிடிவாதம்? போடி!” என்று கோபத்தில் தள்ளிவிட்டான்.

அவள் போய்க் கட்டிலில் விழுந்தாள். அவள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு விறுவிறு என்று இறங்கி வந்துவிட்டான் அவன்.

அவன் அறைக்குப் போனது, முகம் சிவக்கக் கோபத்தோடு இறங்கி வந்தது அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார் லலிதா.

அவரின் கண் முன்னே மகளின் அறைக்குள் அவன் போய்விட்டு வருகிறான். இருந்தும் ஏதும் செய்ய முடியாமல் வாய் மூடி நிற்கிறார் அவர். ஏதாவது சொல்வாரா என்று கணவரைப் பார்த்தார். அவர் அதைக் கவனித்தாரா என்று கூடித் தெரியவில்லை.

அவராலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அவரின் பேச்சுத்தான் இப்போது செல்லாக்காசு ஆயிற்றே! நெஞ்சில் பாரத்தோடு, வாயை மூடிக்கொண்டு அமர்ந்துகொண்டார்.

“கொழும்புக்கு வாறியா பிரணவா?” வாகனம் புறப்படத் தயாராகக் கேட்டார் சுந்தரேசன்.

“இல்ல மாமா. அப்பாவும் அம்மாவும் வாறீனம் தானே. நான் நிக்கிறன்.” என்றவனின் கண்கள் அவளிடம் பாய்ந்தன. ‘நீ கூப்பிடு, நான் வாறன்!’

அவள் அதைச் செய்யவில்லை.

துடைக்க துடைக்கப் பெருகிய கண்ணீருடன் தன்னைச் சமாளிக்க முடியாமல் போராடிக்கொண்டிருந்தாள். பார்த்தவனின் இதயத்திலும் பாரம். பெரும் கோபமும் வந்தது. பிரியப்போகும் நேரத்தில் கோபத்தைக் காட்டி என்ன பயன்? ஜன்னலினூடு அவளின் கரம் பற்றி அழுத்திக்கொடுத்தான். கலங்கிச் சிவந்திருந்த விழிகளினூடு வலியைச் சுமந்து பார்த்தாள் ஆர்கலி.

“கவனமா போயிட்டு வா!” என்று உதடுகளை அசைத்தான் பிரணவன்.

கண்ணீரோடு அவனையே பார்த்தபடி பிரிந்து சென்றாள் அவனுடைய பொம்மா.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock