அந்தக் கசப்பு அவனைப் பாதிக்க அவனுடைய உதட்டோரம் வளைந்தது. “உண்மைதான். ஒவ்வொருநாளும் குறைஞ்சது ரெண்டு தரமாவது கதைக்கிற உனக்கு என்னோட கதைக்காம இருக்கேலாதுதான்.” என்று நக்கலாய்ச் சொன்னான்.
“அதாலதான் உங்கட அக்கான்ர கலியாணத்துக்கு நீங்க என்னைக் கூப்பிடேல்லை போல!” அவளும் கசப்போடு சென்னாள்.
அவனுடைய அழைப்பை எதிர்பார்த்திருக்கிறாள். அப்போதுதான் அவனுக்கும் அது புத்தியில் உறைத்தது. அவன் அவளைத் தனியாக அழைக்கவே இல்லை என்பதும். என்றாலும்… “அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சியாக்கள் எல்லாரும் உன்ன வரச்சொல்லிச் சொன்னவேதானே.” என்றான்.
“ஆனா கூப்பிட வேண்டிய நீங்க கூப்பிடேல்லை.”
அவளை அழைக்காமல் விட்டதை, ‘அவளை அவன் பொருட்டாக நினைக்கவில்லை’ என்று எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
“பாவம் பாத்து என்னைக் கட்டுறதுக்கு நீங்க ஓம் எண்டு சொன்னதே பெரிய விசயம். இதுல, உங்கட அக்கான்ர கலியாணத்துக்குக் கூப்பிடுவீங்க எண்டு நான் எதிர்பாக்கிறது எல்லாம் ஓவர் தானே.” என்றாள் ஆர்கலி, ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதுபோல் முகத்தை வைத்தபடி.
பிரணவனின் முகம் இறுகியது. எப்படியெல்லாம் வார்த்தைகளை வீசுகிறாள்!
அவளின் தாடையைப் பற்றித் தன் புறமாகத் திருப்பினான். அவன் கண்களில் கோபம் தெறித்தது. “என்னைப் பாத்தா உனக்கு அப்படியா தெரியுது?”
“உண்மை அதுதானே?” அவன் கண்களைப் பாராமல் சொன்னாள் அவள்.
“பெரிய உண்மை! அத என்ர கண்ணைப் பாத்துச் சொல்லன்!” என்றான் கோபத்தோடு.
உதடு கடித்தாள் அவள்.
“அதை விடு!”
அவள் விளங்காமல் புருவம் சுருக்கி அவனைப் பார்க்க, ஈரம் தோய்ந்த அவளின் உதடுகளில் அவன் பார்வை சென்றது.
“சும்மாவே உறைப்புச் சாப்பிட்டுச் சிவந்துபோயிருக்கு. இதுல நீ வேற அடிக்கடி துன்பம் கொடுக்கிறாய்!” என்றான் அவன், அதற்கான அனுமதியைத் தனக்குத் தராமல் வைத்திருக்கிறாள் என்கிற கோபத்தோடு.
வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள் அவள்.
எதைப் பற்றிக் கதைத்துக்கொண்டு இருக்கும்போது எதைப் பற்றிப் பேசுகிறான். மீண்டும் உதட்டினைக் கடிக்கப் பார்த்தாள். அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்து அடக்கிக்கொண்டாள்.
அவள் படுகிற பாட்டைப்பார்த்து அவன் உதட்டினில் மீண்டும் உல்லாசச் சிரிப்பு முளைத்தது. அவளைச் சுற்றிக் கையைப் போட்டான்.
“விடுங்கோ!”
“மாட்டன்!”
“ப்ளீஸ்! விடுங்கோ பிரணவன்!” அழுத்திச் சொன்னதுமல்லாமல் அவள் மெய்யாக அவனிடமிருந்து விடுபட முயலச் சினம் பொங்கிற்று அவனுக்கு! பொங்கிய உல்லாசம் பட்டென்று பொசுங்கிப் போயிற்று. அவமானப்பட்ட உணர்வு தாக்கியதில் முகம் சிவந்தது.
“இப்பிடி முறுக்கிக்கொண்டு இருக்கிறவள் என்னத்துக்கு இஞ்ச வந்தனீ? வராமையே இருந்திருக்கலாம்!” அவனுக்குள் மட்டுப்பட்டிருந்த கோபமும் மனத்தாங்கல்களும் மீண்டும் எழும்பி வந்தன.
அந்தக் கேள்வியில் அவள் விழிகள் கலங்கிப் போயிற்று.
“வந்திருக்கக் கூடாதுதான்.” அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு தலையை அசைத்தாள். அவன் இன்னுமே தனக்குள் அடிவாங்கினான். என்ன சொல்கிறாள்?
“என்னை வேண்டாம் எண்டு சொன்ன நீங்க எனக்கும் வேண்டாம் எண்டு இருக்கத்தான் விருப்பமா இருந்தது. இவ்வளவு நாளும் அதுக்குத்தான் முயற்சியும் செய்தனான். ஆனா, என்னைவிட அதிகமா நீங்க நேசிக்கிற பல விசயங்கள் உங்களுக்கு இஞ்ச இருக்கிற மாதிரி, உங்களை விட அதிகமா நான் எந்த விசயத்தையும் நேசிக்கேல்லை போல. டான்ஸ் கிளாஸ், வேலை, ஃபிரெண்ட்ஸ், ட்ரிப்ஸ் எண்டு எல்லாம் ட்ரை பண்ணிப் பாத்திட்டன். எல்லாமே ஆரம்பத்துக்குத்தான் நல்லா இருந்தது. பிறகு உங்கட நினைவுதான். அதுதான் வந்தனான்.” அதைச் சொல்லவே பிடிக்காமல் சொன்னாள்.
அதிர்வோடு பாத்திருந்தான் பிரணவன்.
“இஞ்ச நான் வந்ததை நான் என்ர அடி மனதில இருந்து வெறுக்கிறன். ஆனாலும், என்னால உங்கட நினைவுகள்ல இருந்து வெளில வர முடியேல்ல. அதுதான், போராடிப் பாத்துத் தோத்துப்போய் வந்திட்டன். உங்களை விட முக்கியமா அங்க இருக்கிற எதுவும் எனக்குப் படவே இல்ல. என்னட்ட வரவிடாம உங்களை இஞ்ச பிடிச்சு வச்சிருக்க ஏதோ ஒண்டு மாதிரி, உங்களிட்ட வரவிடாம என்னைப் பிடிச்சு வைக்கிற சக்தி அங்க இருக்கிற எதுக்கும் இல்லப்போல. அல்லது உங்களால் என்னைப் பிரிஞ்சு இருக்கக் கூடிய அளவுக்கு என்னால உங்களைப் பிரிஞ்சு இருக்க முடியேல்ல போல.”
திரும்பத் திரும்ப அதையே சொன்னாள். அதுவே இத்தனை வருடத்து அவளின் போராட்டத்தையும் அதில் தோற்று நிற்கும் கசப்பையும் அப்பட்டமாகச் சொல்லின.
அவள் தன்னைத் தேடி வந்ததை தோல்வியாக எண்ணுகிறாள். ஆனால், இது தோல்வியா என்ன?
“எனக்கும் உன்னைப் பிரிஞ்சு இருக்கிறது கஷ்டமாத்தான் இருந்தது.” இன்னுமே அவள் தன்னை உணர்ந்துகொள்ளவே இல்லை என்கிற வேதனையோடு மெல்லச் சொன்னான் அவன்.
“இருக்கலாம். ஆனாலும் அதையும் தாங்கி உங்களால இருக்க முடிஞ்சிருக்கு. இப்ப நான் வராட்டி இன்னும் இருந்து இருப்பீங்க. காலப்போக்கில இன்னொரு வாழ்க்கைக்குள்ளயும் போயிருப்பீங்க.” என்று அவள் சொன்னபோது வேகமாகப் பதில் சொன்னான் அவன்.
“இருந்திருப்பன் எண்டு சொல்லு, அதுக்காக வேற வாழ்க்கைக்க போயிருப்பன் எண்டு சொல்லாத.”
அவனைப் பார்த்து வெற்றுப் புன்னகை சிந்தினாள் அவள்.
“காலத்துக்கும் என்னை நினைச்சுக்கொண்டு தனியாவே இருந்து இருப்பீங்க எண்டு சொல்லுறீங்களா? ‘எங்கட கடைசி காலத்தில நீ குடும்பம் குட்டியா இருக்கிறதைப் பாக்க ஆசைப்படுறோம்’ எண்டு மாமாவும் மாமியும் சொன்னாலும் இல்லை எண்டு இருந்து இருப்பீர்களா?”
குடும்பத்தின் மீதான அவனுடைய பாசத்தை வைத்து அவள் கேள்வி எழுப்புவதை அறிந்து கோபம் கொண்டான் அவன்.
“நீ மட்டும்…”
“நிச்சயமா! நான் அப்படியேதான் இருந்திருப்பன். ஆர் என்ன சொன்னாலும் மாறி இருக்க மாட்டன். இஞ்ச நீங்கதான் நிறைஞ்சுபோய் இருக்கிறீங்க! உங்களைத் தவிர இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வரவே ஏலாது!” நெஞ்சைத் தொட்டுக் காட்டிச் சொன்னாள்.
அவன் மீதான காதலை மிகுந்த வலியோடு சொன்னவளைப் பதிலின்றிப் பார்த்தான் அவன். எனக்கும் அப்படித்தான் என்று சொன்னால் அவள் நம்பவே போவதில்லை.
“அம்மா, அப்பா, அண்ணா வேற ஆரெல்லாம் உங்களை விட முக்கியம் எண்டெல்லாம் யோசிச்சுப் பாத்திட்டன். அப்பிடி ஆருமே இல்ல. ஆருக்காகவும் நான் மாறியிருக்க மாட்டன். உங்கட அம்மா அப்பா மாதிரித்தான் என்ர அம்மா அப்பாவும் என்னைப் பெத்து, கண்ணுக்க வச்சுப் பாசமா வளத்தவே. அம்மா மற்றவைக்கு எப்படியோ தெரியாது. ஆனா எனக்கு அடுத்த பிறப்பிலையும் அவவுக்குத்தான் மகளா பிறக்கோணும் எண்டு நினைக்கிற அளவுக்கு பெஸ்ட் அம்மா. ஆனாலும், உங்களுக்கு உங்கட குடும்பம் மாதிரி எனக்கு அவே முக்கியமா படவே இல்ல. நீங்க… நீங்க மட்டும் தான் வேணும் எண்டு மனம் சொல்லுது. போனமுறை நான் இஞ்ச வந்திருக்கவே கூடாது! இல்லாட்டியும், அம்மாவை மாதிரி உங்களோட பழகியிருக்கக் கூடாது, உங்களைக் காதலிச்சு இருக்கக் கூடாது, இப்ப இஞ்ச வந்திருக்கவும் கூடாது!”
தன் கட்டுப்பாட்டினை இழந்து சொல்லிக்கொண்டே போனாள்.


