ஒன்றுமே சொல்லவில்லை பிரணவன். அவனைத் தேடி அவன் காலடிக்கு வந்துவிட்டு, அவனைக் காதலித்தே இருக்கக் கூடாது என்று ஆத்திரப்படுகிறவளிடம் என்ன ஆறுதல் சொல்லுவான்?
அவன் பொறுப்புள்ள ஒரு குடும்பத்தின் ஆண்பிள்ளை. காதலேயானாலும் பொறுப்பை உதறிவிட்டு வரமுடியாமல் அவன் அனுபவிக்கிற வேதனையை அவளிடம் எப்படி விளக்குவான்? மூளைக்கும் மனதுக்கும் தினம் தினம் யுத்தம் தானே.
இதுவே அவளுக்கு ஒரு தங்கையோ தம்பியோ இருந்து, அவளின் இந்த முடிவால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் நிலை இருந்தாலும் இதே முடிவை எடுத்திருப்பாளா? அவர்களுக்காக யோசித்திருப்பாள்தானே. அதைத்தானே அவன் செய்தான். அது தவறா?
அவனுக்குள்ளும் கோபம் கணகணத்தது.
“இப்ப என்ன செய்யோணும் எண்டு சொல்லுறாய்?”
“நீங்க எதுவுமே செய்யாதீங்க. இதுவரைக்கும் என்ன செய்தீங்க? எதுவுமே இல்ல. நான்தான் உங்களை விரும்பினான். அது தெரிஞ்சு அப்பா கெஞ்சிக் கேட்டதால சம்மதம் சொன்னீங்க. அதுவும், டிமாண்ட் எல்லாம் வச்சு. ஆரம்பத்தில இருந்தே நீங்க எல்லாத்திலையும் சரியாத்தான் நடந்திருக்கிறீங்க பிரணவன். நான்தான் விசரி! உங்களுக்குப் பின்னால பைத்தியம் மாதிரித் திரிஞ்சு… இப்பவும் ப்ச்!”
“பிறகு ஏனடி இஞ்ச வந்தனீ? வந்திட்டு அதைச் செய்தன் இதைச் செய்தன் எண்டு… இவ்வளவு நாளும் இருந்த மாதிரி அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே. உன்ன வரச்சொல்லி நான் கூப்பிட்டேனா?”
தன் இயலாமை கோபமாய்க் கிளம்ப இன்னும் எதையாவது சொல்லிவிடுவோமோ என்று பயந்து பட்டென்று எழுந்து, சற்றுத் தள்ளிப்போய் நின்றுகொண்டான்.
அப்படி அவன் வெடிக்கவும் அவள் இறுகிப்போனாள். அவமானத்தில் முகம் சிவந்துபோயிற்று! உண்மைதானே! அவளை வரச்சொல்லி அவன் அழைக்கவே இல்லைதானே! சூடான கண்ணீர் கன்னங்களை நனைத்துப்போயிற்று! அவனறியாமல் அவசரமாகத் துடைத்துக்கொண்டாள்.
பிரணவன் உள்ளமும் நிலைகொள்ளாமல் தவித்தது.
உண்மைதான். அவனால் தன் குடும்பத்தை விட்டுவிட்டு அவள் மட்டுமே வேண்டும் என்று போகமுடியவில்லைதான். அதற்காக அவள் மீது காதல் இல்லை என்று அர்த்தமா?
அவன் எதுவுமே செய்யவில்லையாம். என்ன செய்திருக்க வேண்டும்? விடலைப் பையன் போன்று அவள்தான் முக்கியம் என்று கலியாணத்தைக் கட்டிவிட்டு காலம் முழுக்க கண்ணீர் வடிக்க வேண்டுமோ?
தன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் கெட்டுப்போகட்டும் என்று பித்தனைப் போல அவள் பின்னால் போயிருக்க வேண்டுமோ? குடும்பத்தையும் காதலையும் இரண்டு கண்களாய்த் தாங்க நினைக்கிறான். அது பிழையா? மனம் ஆற மறுத்தது.
அன்றும் இன்றும் அவனை விளங்கிக்கொள்ளவே மாட்டேன் என்று நிற்கிறாளே.
இன்னுமே, டிமாண்ட் வைத்து அவன் சம்மதித்தான் என்பதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறவளை என்ன செய்வது? அப்படி என்ன டிமாண்ட் வைத்தானாம்? வெளிநாட்டுக்கு வரமாட்டேன் என்றான். அது ஒரு குற்றமா?
அவள்தான் முக்கியம் என்று அவள் பின்னே நாய் மாதிரி போயிருக்க வேண்டுமோ?
அப்போ அவனைத் தேடி வந்த அவள் என்ன நாயா?
சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
வாடிப்போயிருந்தது அந்தப் பூ முகம். வெயில் முற்றிலும் அகன்றிருக்க, மாலை நேரக் காற்று இலங்கைத் தீவுக்கேயுரிய மெல்லிய வெப்பத்தோடு வீசிக்கொண்டிருந்தது. அதற்கே சோர்ந்திருந்தாள். முகமெங்கும் களைப்பு. அதையும் தாண்டிய சோகம். அந்தக் கண்களில் அலைப்புறுதல்.
தன்னைத் தேடி வந்திருக்கவே கூடாது என்று சிந்திக்கிறாளோ? தவறான இடத்தில் மனத்தை விட்டு வாழ்க்கையையே பாழாக்கிக்கொண்டோம் என்று அழுகிறாளோ?
அந்தக் கணத்தில் அவள் உள்ளம் என்ன பாடுபடும் என்று நினைத்த மாத்திரத்தில் உதட்டைக் கடித்தான் பிரணவன்.
அவளின் அலைப்புறுதல்களை அவன் அகற்றியிருக்க வேண்டாமா? உன் அச்சம் அர்த்தமற்றது என்று நிரூபித்திருக்க வேண்டாமா? உன் முடிவு சரிதான் என்று அவளுக்கே உணர்த்தியிருக்க வேண்டாமா? அவளின் வலிகளைத் தான் வாங்கியவனாக உள்ளம் துடித்தது அவனுக்கு.
எழுந்து வந்ததை விட வேகமாக அவளருகில் சென்று அமர்ந்தான். அவள் தேகம் சுருங்கித் தனக்குள் ஒடுங்கியது. அவனுடைய அண்மையை வேண்டாம் என்கிறாள்.
அவளை அணைத்து உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. அவள் கரத்தை எடுத்துத் தனக்குள் பொத்தி வைத்துக்கொள்ள கைகள் பரபரத்தன. முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அவள் இப்போதும் அவன் பக்கம் திரும்பவேயில்லை.
“ஆர்கலி.” மெல்ல அழைத்தான்.
அவளிடம் அசைவில்லை. பெருமூச்சை இழுத்துவிட்டுத் தலையைக் கோதிக்கொண்டான்.
“அது ஏதோ…” என்றபோது அவளின் கைமட்டும் உயர்ந்து அவனைத் தடுத்தது.
“எதுவும் சொல்ல வேண்டாம்!”
“பொம்மா ப்ளீஸ்.” அவளின் கரம் பற்றப்போக, “என்னைத் தொட வேண்டாம்!” என்றாள் சீறலாக. கண்ணீர் துளியொன்று கன்னத்தில் விழுந்து சிதறியது.
அழுகிறாளா? அவனுடைய ஆர்கலி அழுகிற அளவுக்கு நொந்துபோனாளா? “டேய் பொம்மு…”
“அந்தப் பெயர் சொல்லாதீங்க! அந்தக் காலத்துல உங்களுக்கு நான் எண்டால் உயிராம். உயிரா இருக்கேக்க, எந்தப் பாசாங்கும் இல்லாம உண்மையான அன்பில கூப்பிட்ட செல்லப்பெயர் அது. அதைச் சொல்லி இப்ப கூப்பிடாதிங்க!” என்றாள் அழுகையில் தழுதழுத்த குரலில்.
“என்ர பிழை எனக்கு விளங்குது. நான் வந்திருக்கக் கூடாதுதான். ஆனா வந்திட்டன். ஒரு கிழமைதான், திரும்பப் போய்டுவன். அதுக்குப் பிறகு நீங்க நிம்மதியா சந்தோசமா இருங்கோ!”
அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வேண்டாம் என்றவனைத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்தது அவள். வா என்று ஒரு வார்த்தை அழைக்காதவனிடம் தானாகவே வந்ததும் அவள். அவளுடைய காதல் கொண்ட இதயம் மீண்டும் மீண்டும் அவன் காலடியில் அனாதையாகக் கிடந்து கதறுகிறதே!
அவ்வளவுதான். அவர்களின் பேச்சு முடிந்து போயிற்று! முன் சீட்டுக்கும் ஆட்கள் வந்துவிட கதைக்கவும் முடியவில்லை.
மனத்தில் வலியோடு இறுகிப்போய் அமர்ந்திருந்தான் பிரணவன்.


