கிளிநொச்சியில் வந்து இறங்க நடுச்சாமமாகியிருந்தது. அவளது சூட்கேஸினை அவன் எடுக்க, தடுத்து அவளே வைத்துக்கொண்டாள். வெளியே வந்ததும், “பாய் பிரணவன்!” என்று விடைபெற்றாள்.
அவன் திகைத்துப்போனான். அதுவரை நேரமும் அவளின் கோபம் அடங்கட்டும் என்று அனைத்துக்கும் பொறுமையாகப் போனவன் அவள் கைபற்றித் தடுத்தான்.
“எங்க போறாய்? அதுவும் இந்த நேரத்தில.”
“எங்கட வீட்டுக்கு!”
“விசரக் கிளப்பாம வா! பட்டப்பகல்ல தனியா போறதே பாதுகாப்பு இல்ல. இதுல இந்த நேரத்தில போகப்போறாளாம்!”
“நீங்க முதல் கையை விடுங்கோ! இப்ப எனக்கு உங்களோட கதைக்க மனதிலையும் தெம்பில்ல, உடம்பிலையும் தெம்பில்லை.” என்றபோது, அவன் கை தானாக அவளை விட்டிருந்தது.
அவனையே சுற்றி சுற்றி வந்தவள். ஒரு கணமேனும் அவனைப் பிரிய விரும்பாதவள். இன்று தன்னைத் தள்ளியே வைக்கிறாள். அந்தளவுக்குக் காயப்பட்டுப்போனாளா?
அவளோ விழிகளைச் சுழற்றி யாரையோ தேடினாள். அங்கே வந்துகொண்டிருந்தார் ராமநாதன். சுந்தரேசனின் வீட்டினைக் கவனித்துக்கொள்பவர்.
இவர் எப்படி? யார் அழைத்துச் சொன்னது என்று யோசித்தான் பிரணவன்.
“ஆரும்மா! வாங்க வாங்க. அம்மா இந்த நேரத்தில ஃபோன் பண்ணவும் பயந்துபோய் எடுத்தா, சந்தோசமான விசயம். முகத்தைப் பரபர எண்டு கழுவிக்கொண்டு ஓடிவாறன்” என்றார் அவர்.
“சுகமா இருக்கிறீங்களா?” அவனைத் திரும்பியும் பாராது அவரோடு நடந்தவளைக் கண்டு கோபம் வந்தாலும், அடக்கிக்கொண்டு அவனும் அவர்களோடு நடந்தான். அவனிடம் கொடுக்கமறுத்த அவளின் பெட்டி ராமநாதனின் கையில் இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் குளித்து உடைமாற்றி வெளியே வந்த ஆர்கலி, கீழே சோபாவில் சரிந்திருந்த பிரணவனைக் கண்டுவிட்டு இறங்கி வந்தாள். அன்று ஒருநாள் இப்படி அவள் இறங்கி வந்து, தன் இதய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்த நினைவுகள் அவனுக்குள் கிளம்பின. தன் முன்னே நின்றவளைப் பார்த்தான்.
அவளோ, “பிரணவன் ப்ளீஸ். நடிக்காம நீங்க உங்கட வீட்டுக்குப் போங்கோ! உங்கட மனதில நான் எந்தளவுக்கு இருக்கிறன் எண்டு எனக்கே தெரியும். அதுக்குப் பிறகும் இதெல்லாம் தேவையில்லை.” என்றவளை முறைத்தவன், அவளே எதிர்பாராத கணத்தில் அவளைப் பற்றியிழுத்து அவளின் உதடுகளைச் சிறை செய்திருந்தான்.
அந்த முத்தத்தை அந்த நேரத்தில் எதிர்பாராதபோதும் விலகவில்லை அவள். அவன் என்னவோ தன் கோபத்தைக் காட்டத்தான் முத்தமிட்டான். ஆனால், உள்ளுக்குள் நமநமத்த வேதனைக்கு அது மருந்தாகிப்போனதில் முத்தம் முடிவுறச் சற்று நேரமெடுத்தது.
“அண்டைக்குச் சொன்னதுதான், இந்த முத்தம் சொல்லும், எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் எண்டு!” என்றான், கரகரத்த குரலில்.
“குற்றம் மட்டுமே சுமத்திக்கொண்டு இருக்கிறாய் பொம்மு. விளக்கம் சொல்ல விடுறியே இல்ல. அது தெரியுதா உனக்கு?” பற்றியிருந்த கைகள் அவளின் முக வடிவை அளந்துகொண்டிருக்க மனத்தாங்கலோடு கேட்டான் அவன்.
“விளங்காட்டித்தான் விளக்கம் வேணும். எனக்கு எல்லாமே விளங்குது.”
“போடி! நீயும் உன்ர விளக்கமும்!” என்று அவளைத் தள்ளிவிட்டான் அவன்.
தடுமாறி சோபாவில் விழுந்தவளிடம், “மேல ஓடிப்போய்டு! எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்வன் எண்டே தெரியாது! மாமா எங்கட வீட்டை நிக்கிறார். அதால உன்னத் தனியா விட்டுட்டுப் போகமாட்டன். இந்த நேரத்தில போய் அவரை எழுப்பிக்கொண்டு வரவும் ஏலாது. அதால நானும் இங்கதான் படுக்கப்போறன். போ, போய்ப் படு!” என்று அவளை மேலே அனுப்பிவிட்டான்.
‘கூலா இருக்கிறவனையே கொடுமைக்காரனா மாத்திடுவா!’ சோபாவில் சரிந்தவனுக்கு அவளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்கிற யோசனைதான்.
அடுத்து வந்த நாட்களில் அதற்கான சந்தர்ப்பத்தை அவள் கொடுக்கவே இல்லை. அவனுக்கும் அமையவில்லை. அடுத்தநாள் காலையிலேயே அவனுடைய வீட்டுக்குச் சென்றவளை எல்லோருமே சந்தோசமாக வரவேற்றனர்.
அவளுக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் தொற்றிக் கொண்டிருந்தது. பலகாரங்கள் செய்வது, வீட்டை அலங்கரிப்பது, தேவையான பொருட்கள் வாங்குவது என்று துவராக, திவ்யா இருவரோடும் சேர்ந்து உதவிக்கொண்டிருந்தாள்.
அலெக்ஸுக்கு நிறைய நாட்களுக்குப் பிறகு அவளைக் கண்டதில் பிராணவனுக்கு இணையான கோபமும் சந்தோசமும் பொங்கின. குரைத்துக் கோபத்தைக் காட்டினான். அவளோடு வந்து உராய்ந்து பிரியத்தைக் காட்டினான். அச்சொட்டாக அவன் எஜமானனின் குணம் அப்படியே அவனுக்கும் வந்திருந்தது.
சுந்தரேசனுக்கும் வரவில்லை என்ற மகள் வந்துவிட்டதால் சந்தோசம். கருப்பன், புவனாவைப் பிடிக்கவே முடியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தனர்.
இவள் வருவாள் என்று முதலே தெரியாததால், பிரணவனுக்கும் பிரத்தியேகமாக நேரம் ஒதுக்க முடியவில்லை. கடைகளின் வேலைகளைக் கவனிக்க வேண்டும். கூடவே தமயந்தியின் திருமண வேலை. உண்மையிலேயே உறக்கமே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தான்.
அன்று மத்தியான உணவை உண்பதற்காக மாலைப் பொழுதில்தான் களைத்துப்போய் வந்தான்.
“சாப்பிட்டுக் கொஞ்சம் படுத்து எழும்பு தம்பி!” என்றபடி அவனுக்கு உணவைக் கொடுத்தார் புவனா.
அங்கே பக்கத்திலேயே அமர்ந்திருந்து பயற்றம் பணியாரத்துக்கு உள்ளுடலை உருண்டை பிடித்துக்கொண்டு இருந்தனர் பெண்கள் நால்வரும்.
ஆர்கலியின் பார்வை ஒருமுறை பிரணவனிடம் சென்றது. கலைந்த கேசம் கோதி, நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கி முத்தமிட்டால் நிறைவாக உணர்வான் என்று அவளுக்குத் தெரியும்.
பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள், அவனின் வேலைப்பளுவை. ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான். முன்னர் போன்று இருக்கவோ, சிரித்து விளையாடவோ அவனுக்கு நேரமே இல்லை. பலமுறை பாவமாயிருக்கும். அவளுக்காகவும்தான் இப்படியெல்லாம் ஓடுகிறான் என்று விளங்கியது.
அவளின் அருகில் இருக்கும் பொழுதுகளில் எல்லாம் ஏக்கத்தோடு அவன் பார்வை அவளைத் தழுவுவதைக் காண்கையில் நெஞ்சு கனத்துப் போய்விடும்.
எதற்கு இந்த விலகல்? அவனுக்கு அவள்தான். அவளுக்கு அவன்தான். அதில் மாற்றமில்லை. மாற்றம் வருவதற்கு அவனும் விடமாட்டான். அதுதான், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவனுடைய உரிமையை முத்தத்தின் வாயிலாக அவளிடம் நிலைநாட்டி விடுகிறானே! பிறகு எதற்கு அவனைப் போட்டுப் பந்தாடுகிறாள்?
ஒரு வலி. சின்ன இதயம் கொண்ட அழகான நேசத்தை அவன் மறுத்தான் என்கிற துயர். எதற்கு வந்தாய் என்று வேறு அன்று கேட்டானே? அவளின் மனம் சமாதானம் ஆகாமல் எப்படி அவனோடு இணக்கமாக உறவு கொண்டாடுவது?
அவளே மறக்க நினைத்தால் கூட முடியாமல் அந்த நிகழ்வுகள் நினைவில் வந்து அவளைப் பந்தாடின. கண்கள் கலங்கிவிடும் போலிருக்கத் தலையைக் குனிந்துகொண்டு உருண்டை பிடிப்பதில் கவனம் செலுத்த முயன்றாள்.
பிரணவனின் கண்கள் அடிக்கடி தன்னவளிடம் ஓடிக்கொண்டிருந்தன. வேலை தெரிகிறதோ தெரியவில்லையோ தானும் வீட்டுப் பெண்ணாக மாறி, அனைத்திலும் கலந்துகொள்ளும் அவளின் இயல்பு, அவன் மனத்தை மயிலிறகைப் போல் வருடிக்கொடுத்தது.


