அப்போது, “கலியாணத்துக்கு என்ன உடுக்கப்போறாய்?” என்று ஆர்கலியிடம் விசாரித்தாள் துவாரகா. காதைத் தீட்டிக்கொண்டான் பிரணவன்.
“எதையோ அம்மா வச்சுவிட்டவா. நான் இன்னும் பாக்கேல்ல.” அக்கறை இல்லாமல் சொன்னாள் அவள்.
“ஐயோ அண்ணி, அப்பிடிப் பாக்காம இருப்பீங்களா? என்ன இருக்கு எண்டு பாருங்கோ, பிடிக்காட்டி வேற வாங்கலாம் எல்லா.” என்றாள் திவ்யா.
இப்போதெல்லாம் ஆர்கலி அவளுக்கு அண்ணியாகிப்போயிருந்தாள்.
அன்று இரவு அவளை வீட்டில் விடுவதற்கு வந்தான் பிரணவன். சுந்தரேசனும் கருப்பனும் ஏதோ வேலையாகப் போயிருந்தனர். இது அவ்வப்போது நடப்பதுதான். எப்போதுமே சுந்தரேசன் இருந்தால் இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுவான். அவர் இல்லையோ அமைதியாக சோபாவில் அமர்ந்துகொள்ளுவான்.
வீட்டைப் பார்த்துக்கொள்வதற்காக அமர்த்தப்பட்டிருந்த ராமநாதனும் அவர் மனைவி மரகதமும் ஒரு பக்கமாக அங்கேயேதான் தங்கியிருந்தனர். என்றாலும், அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போகமாட்டான். சுந்தரேசன் வந்துசேர நன்றாகவே பிந்திப்போனால் அவனின் உறக்கம் கூட அங்கேதான். இன்று, வண்டியை நிறுத்திவிட்டு அவளிடம் ஒரு பையை நீட்டினான்.
கேள்வியாகப் பார்த்தவளிடம், “உனக்குத்தான் பிடி!” என்றான், முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது.
அவளுக்கு மறுக்க வேண்டும் போலிருந்தது. மரக்கட்டை போன்று முகத்தை வைத்துக்கொண்டு எதற்குத் தருகிறானாம்? என்றாலும் வாங்கிக்கொண்டாள்.
அறைக்குள் கொண்டுபோய்ப் பார்த்தால், பட்டுச் சேலை ஒன்று. அடர்ந்த சிவப்பில் தங்கப் பூக்களை அள்ளித் தூவிவிட்டது போன்று மிகுந்த அழகாயிருந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு வாங்கித் தந்தானா? உன்னை நானா வரச் சொன்னேன் என்று கேட்டவன் எதற்குச் சேலை வாங்கித் தந்தானாம்? எடுத்து வைத்துவிட்டுப் பேசாமல் அமர்ந்துவிட்டாள்.
கட்டிக்கொண்டு வந்து காட்டுவாள், அல்லது நன்றாக இருக்கிறது என்று ஏதாவது சொல்லுவாள் என்று ஆர்வமாக எதிர்பார்த்தான் பிரணவன். அவனுடைய பொம்மா அவனை ஏமாற்றுவதில் வல்லவள் ஆயிற்றே! அது எதுவுமே நடக்கவில்லை.
அடுத்தநாள் அவர்களின் வீட்டுக்குச் சென்றவளிடம், “ஏதோ சாரி பிளவுஸ் தைக்கோணும் எண்டு சொன்னியாம் எண்டு அண்ணா சொன்னவர். கொண்டு வரேல்லையா?” வெறுமையாக இருந்த அவளின் கையைப் பார்த்துவிட்டுக் கேட்டாள் துவாரகா.
கதைப்பதை எல்லாம் கதைத்துவிட்டு அக்கறை உள்ளவன் மாதிரி பிளவுஸ் தைக்க ஏற்பாடு செய்வது. போடா! தனக்குள் அவனோடு சண்டையிட்டாலும் துவாரகாவிடம் அவனை விட்டுக்கொடுக்கவில்லை.
ஒன்றும் சொல்லாமல், இருவருமாகச் சேர்ந்து துவாரகாவின் ஸ்கூட்டியில் சென்று, துணியை எடுத்துக்கொண்டு போய்த் தைக்கக் கொடுத்துவிட்டு வந்தார்கள்.
திருமண நாளும் அழகாய் விடிந்தது. அதிகாலையிலேயே சுந்தரேசனோடு வந்து இறங்கிவிட்டாள் ஆர்கலி. பார்த்த பிரணவனின் முகம் இறுகிப் போயிற்று! அவன் வாங்கிக்கொடுத்த சேலை அல்ல அது! வேறு ஒன்று.
“இது நாங்க தைச்ச பிளவுஸ் சாரி இல்லையே?” பாத்ததும் கேட்டாள் துவாரகா.
“இது வேறதான். எனக்கு என்னவோ அதைவிட இதுதான் பிடிச்சது. ஏன், நல்லா இல்லையா?”
இதைத்தான் அவளுக்கு அதிகமாகப் பிடித்திருக்கிறது என்று சொன்னதில் முகம் இறுக, அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு புறப்பட்டான் பிரணவன்.
ஆர்கலி வந்துவிட்டதை அறிந்து ஓடிவந்த திவ்யா நடப்பதைக் கலவரத்தோடு பார்க்க, “ஒண்டும் நடக்காது. அந்தச் சாரியை கட்டவச்சு அண்ணா கூட்டிக்கொண்டு வருவார்.” என்றாள் துவாரகா சிரிப்புடன்.
அதேபோல பைக்கில் அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பிடித்த பிடி விடாமல் விறுவிறு என்று மாடிக்கு அழைத்துச் சென்றவன் அவளின் அனுமதி இல்லாமலேயே அவளின் சேலையைக் கழற்றி எறிந்தான்.
“பிளவுசை நீ மாத்துறியா, இல்ல நான் மாத்திவிடவோ?”
அவன் கேள்வியில், அவன் முகத்தில் தெரிந்த பிடிவாதத்தில் அரண்டுபோனாள் ஆர்கலி.
அதைக் காட்டிக்கொள்ளாமல் முறைத்தாள். “பிளவுசை நான் மாத்துவன். சாரி ஆர் கட்டி விடுறது? மரகதம் ஆண்ட்டியும் உங்கட வீட்டை போய்ட்டா.” என்றாள் அவள்.
“நான் கட்டி விடுவன், நீ மாத்திப்போட்டுச் சொல்லு.” என்றுவிட்டு வெளியே வந்தவனுக்குள் பெரும் போராட்டம்.
ஒரு வேகத்தில் கோபத்தில் சேலையைக் கழற்றிவிட்டான்தான். அதன் பிறகுதான் அவளின் கோலமே கண்களில் பட்டது. காதலனாய் அவனுக்குள் பல மாற்றங்கள். பார்வை வேறு கண்டபாட்டுக்கு பாய முயன்றது. அவனே பயந்துபோய்த்தான் வெளியே ஓடி வந்திருந்தான்.
“மாத்தியாச்சு.” தயக்கத்தோடு அவள் குரல் கொடுத்தாள்.
தலையை உலுப்பிக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் நிலமை படு மோசமாகத்தான் இருந்தது.
கண்கள் பார்த்த அழகைக் கைகள் உணரத் துடித்தன. இடையில் செருகிய போது விரல்கள் உணர்ந்த மென்பாகங்கள் அவனுக்குள் உஷ்ணத்தைப் பரப்பின. அவளின் அழகான வளைவுகளும் நெளிவுகளும் அவனுடைய மனத்திடத்துக்குச் சவால் விட்டன. சேலை மடிப்புகளை செருகுகையில் அவளிடம் தெரிந்த சிலிர்ப்பு, அந்த வெட்கம் அவனை இன்னுமே உசுப்பேற்றின.
‘தேவையில்லாத வேல பாத்திட்டமோ.’ உண்மையிலேயே பயந்துபோனான்.
சேலையைக் கட்டியதும் கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்தாள். நேர்த்தியாகத்தான் கட்டிவிட்டிருந்தான். அவளுக்கு மிக நன்றாகவும் இருந்தது. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் வெளியேறப் போக, இப்போது விட்டால் இனித் தனிமை வாய்க்காது என்று அறிந்து வேகமாகப் பின்னிருந்து அணைத்தான் அவன்.
அதற்குமேல் மெய்யாகவே அவனால் முடியவில்லை. காணாத பல பாகங்களைக் கண்டு, கை தீண்டி வாலிபத்தின் உச்சகட்ட சோதனைகளை எல்லாம் அனுபவித்துத் தோற்றுப்போயிருந்தான்.
அவளும் விலக முயற்சிக்கவில்லை. அதில் அவன் வேகம் கொண்டான். இடையை அவன் கரம் பற்றியபோது அவள் சிலிர்த்தாள். அவளைத் திருப்பி நெற்றியில் உதடுகளை ஒற்றியபோது விழிகளை மூடிக்கொண்டாள்.
கிறக்கத்தோடு மூடியிருந்த விழிகளில் பதிந்த அவன் உதடுகள் கன்னங்களை ஈரமாக்கி துடித்த இதழ்களின் துடிப்பை அடக்கியபோது, ஆர்கலி தன்னையே மறந்து அவன் கைகளில் கரைந்துபோனாள்.
அவளின் ஒத்துழைப்பில் வேகமாக எல்லைகளை அவன் மீறத்தொடங்கிய வேளையில், “இதைச் சாரியக் கட்டமுதல் செய்திருக்க வேண்டியதுதானே, கசங்குது!” என்று காதோரமாகக் கேட்ட அவளின் குரலில் திடுக்கிட்டுப் போனான் அவன்.
சேலையைக் கட்டிவிட முதல் இதை ஆரம்பித்திருக்க அவனுடைய அக்காவுக்கு முதல் அவனின் திருமணம்தான் முடிந்திருக்கும். இவளாவது தடுத்தாளா? இப்பவும் என்ன சொன்னாள்? சேலையைக் கட்ட முதல் செய்திருக்கலாமாம்! இவளை…
இதில் அவனோடு அவளுக்குக் கோபமாம்! காதல் பொங்க அழுத்தமாய் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, உதட்டில் மலர்ந்த மோகச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
அவன் விழிகளைச் சந்திக்காமல் தலையைக் குனிந்தபடி தனக்குத் தெரிந்த வகையில் சேலையைச் சரிசெய்வதில் முனைப்பாக இருந்தாள் அவள். முகம் இரத்தமெனச் சிவந்திருந்தது. அப்படியே அவளை அள்ளிக்கொள்ளத்தான் ஆசை எழுந்தது. உதட்டினைக் கடித்தபடி கேசம் கோதினான் அவன்.
அவளோ இன்னும் சேலையைச் சரி செய்வதில் மும்முறமானாள்.
“விடு!” என்றுவிட்டு, தானே ஒழுங்கு செய்யப்போனான் அவன்.
“இல்ல வேண்டாம்.”
ஏன் தடுக்கிறாள் என்று விளங்காதா? சன்னச் சிரிப்போடு, “இனி ஒண்டும் செய்யமாட்டன், விடு!” என்றுவிட்டு ஒழுங்குசெய்துவிட்டான். “தலையும் கலைஞ்சிருக்கு. மேக்கப்பையும் ஒருக்கா பார்.” என்றுவிட்டு வெளியேறினான்.
ஊப்ஸ்! காற்றை ஊதி வெளியே தள்ளியவனுக்கு என்னவோ பெரும் ஆபத்துக்குள் இருந்து தப்பிய உணர்வு! உண்மைதானே! அவனை முற்றிலும் சுழற்றி அடித்துப்போடும் அழகிய ஆபத்துத்தானே அவள்! உதட்டில் மலர்ந்த சிரிப்போடு அவளுக்காகக் காத்திருந்தான்.
‘அக்கான்ர கலியாணம் முடியட்டும். இவளைக் கடத்திக்கொண்டு போயாவது எல்லாத்தையும் சொல்லிச் சமாதானப்படுத்த வேணும்!’ மனத்தில் எண்ணிக்கொண்டான்.


