பிரணவன் யாருக்கும் அழைக்கவுமில்லை. பிரணவனுக்கும் யாரும் அழைக்கவில்லை. ஆர்கலியைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியிலேயே நின்றான்.
ஆனால் அங்கே, “குளிச்சிட்டு வாறதுக்கிடைல ஆரப்பா திருத்தினது?” என்று கேட்டுக்கொண்டு வந்தவளின் பேச்சு அப்படியே நின்றுவிட்டதிலேயே, அவனது தகப்பனாரைப் பார்த்துப் பேச்சற்று நிற்கிறாள் என்று இவனின் புறக்கண்ணுக்குத் தெரிந்தது.
அவளும் அப்பாவை அருவருப்பாக, அலட்சியமாகப் பார்ப்பாளோ என்று நினைத்த கணத்தில் உடல் விறைத்து நிமிர்ந்தது.
“வணக்கம் மாமா! நீங்க மிஸ்டர் கருப்ஸ்தானே!”
அந்தக் கேள்வியில் கருப்பனின் முகம் மலர்ந்ததோ இல்லையோ பிரணவனின் முகம் பளீர் என்று மலர்ந்தது. விறைத்து நின்ற தேகமும் தளர்ந்தது. அவனைப் போலவே ‘மிஸ்டர் கருப்ஸ்’ என்று அழைத்தவளை மிகவும் பிடித்துப் போயிற்று!
லலிதாவின் மகளாகப் பிறந்த பாவத்தை இதற்காகவே மன்னிக்கலாம்!
அவளின் முகம் பார்க்க உந்திய மனத்தை அடக்கிக்கொண்டு இன்னும் என்ன கதைக்கப்போகிறாள் என்று காதைத் தீட்டிக்கொண்டு அங்கேயே நின்றான்.
“ஓம் அம்மாச்சி! நான்தான் அது. சுகமா இருக்கிறியா பிள்ளை?” தன்னை இனம் கண்டுகொண்டாளே என்று பெரும் சந்தோசமாயிற்று அவருக்கு.
இயல்பாக வந்து அவர் அருகில் அமர்ந்து, “எஸ் ஓம்! நான் நல்ல சுகமா இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க மாமா?” என்று, தத்தித் தவழ்ந்துவரும் குழந்தையைப் போலவே ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டுவிட்டு அவள் கதைத்த தமிழை அப்படியே அள்ளிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது பிராணவனுக்கு.
‘தமிழச்சி! அழகிடி நீ!’ அவன் அப்பாவைக் கொண்டாடியதாலேயே அவளைப் பார்க்க முதலே அவன் நெஞ்சில் அவள் மீதான பிரியம் உண்டாகிப் போயிற்று!
அவர்களின் நலவிசாரிப்புகளின் தொடர்ச்சியாக, “அப்பா கறுப்பு அடிக்கிற மாதிரி நீங்க உங்கட முடிக்கு வெள்ளை அடிச்சு இருக்கிறீங்களா மாமா?” என்ற அவளின் கேள்வியில் அவன் முகமெங்கும் புன்சிரிப்பு.
கருப்பனுக்குக் கொஞ்சமும் கொட்டாத அடர்ந்த கேசம். ஆனால் என்ன வெள்ளை வெளேர் என்று இருந்தது.
“இது அடிக்காத வெள்ளை. உன்ர அப்பாக்கு அடிச்ச கறுப்புப் போல இருக்கே.” கருப்பனும் அவளோடு கேலி பேசிச் சிரித்தார்.
“மாமா, இப்பிடி பப்ளிக்கா சொல்லக் கூடாது. என்ர அப்பா பாவம் எல்லோ.” கண்களில் குறும்புமின்ன தகப்பனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சொன்னாள் அவள்.
“அவனுக்குப் போட்டுக் குடுத்திட்டு இப்ப நான் பாவமோ!” என்று சுந்தரேசனும் கலந்துகொள்ள, அதற்குமேல் முடியாமல் அங்கு வந்தான் பிரணவன்.
ஆர்கலி திரும்பிப் பார்க்க, “ஹாய்!” என்றான் உற்சாகமாக.
“ஹாய்!” என்றவளின் விழிகளிலும் அவனைக் கண்டு ஆச்சரியம்தான். இந்த ஆச்சரியத்தில் அழகிருந்தது; ரசனையிருந்தது; பிரமிப்பு இருந்தது.
அவன் வந்து அமரும்வரை அவனையே மொய்த்த அவள் பார்வையில் மெல்லச் சிவந்தது அவன் முகம்.
பெண்களைத்தான் இப்படி ரசிப்பார்கள். அவனையுமா? அதுவும் ஒரு இளம் பெண். இதழ்கடையோராம் சிரிப்பு மூட்டினாள் ‘எலிசபெத்’.
இலகுவான முழு நீளப் பைஜாமா செட்டில் இருந்தாள். மிக மிக மெல்லிய உடல்வாகு. அப்பழுக்கில்லாத பளிங்கு முகம்.
“நீங்கதானே பிர…ண…வன்.” அவன் பெயர் அவள் வாயில் நுழையச் சற்றே சிரமப்பட்டது.
“எங்கட அப்பா உங்களைப் பற்றியெல்லாம் அடிக்கடி கதைப்பார். அவருக்கு நீங்க எண்டால் உயிர். சிலநேரம் எனக்குப் பொறாமையா இருக்கும்.” என்றாள் குறும்புடன்.
சகோதரிகளைப் பற்றி நலம் விசாரித்தாள். அவனுடைய தாயை மாமி என்று விழித்துக் கதைத்தாள். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் அவளிடம் கொஞ்சியதுதான். அவளுக்கு அதுதான் அழகு என்று நினைத்தான் அவன்.
பொழுதும் நன்றாக இருட்டிவிடவே, “சாப்பிட்டுப் போடா!” என்று தடுத்த சுந்தரேசனிடம் இன்னொரு நாள் வருவதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றனர் தகப்பனும் மகனும்.
“தனியா இருக்க அலுப்பா இருந்தா வீட்டுக்கு வாம்மா. நாளைக்குப் பிள்ளைகளை வரச் சொல்லுறன். அவையளோட இருந்தா பொழுது போகும்!” என்று அழைத்தார் கருப்பன்.
“வெயில் போனபிறகு கட்டாயம் வாறன் மாமா.”
‘ஆகா, இவளுமா?’ என்று அவன் நினைக்க, மணிக்கட்டுவரை இருந்த கையை உயர்த்திவிட்டுக் காட்டினாள். “ஒரே ஒருக்காத்தான் வெளில வந்தன். இங்க பாருங்கோ… கொதிக்குது.” என்று காட்ட, பார்த்த பிரணவனே திகைத்துப் போனான்.
பெரிய பெரிய கட்டிகள்போல் கொப்பளித்திருந்தது. நன்றாகவே கொதிக்கும்தான். எப்படித் தாங்கப்போகிறாள்?
இதில் நக்கலாக வேறு நினைத்தது நெஞ்சைச் சுட்டது.
“இதென்னடா இப்பிடி இருக்கு?” கருப்பனும் அதிர்ந்துபோய்க் கேட்டார். அந்தளவுக்குப் பெரிதாக நீர் கோர்த்திருந்தது.
“டொக்ட்டரிட்ட காட்டி மருந்து எடுத்தது கருப்பா. இஞ்ச வந்து செய்த முதல் வேலையே அதுதான். முதல் முதல் வந்திருக்கிறாள் எல்லோ. ஆசியாவுக்கே இதுதான் முதல் முறை எண்டுறதால அவளின்ர தோல் பழகோணுமாம்.”
“கவனம் அம்மாச்சி! இனி வெளில திரியாத. பிள்ளைகளை நாளைக்கு அனுப்பி வைக்கிறன். வீட்டுக்க இருந்து கதைங்கோ!” என்றார் கருப்பன்.
அவனுக்கும் ஆறுதலாக அவளிடம் எதையாவது சொல்ல வேண்டும்போலிருந்து. என்ன என்றுதான் பிடிபடவில்லை. கண்களால் ஒருமுறை ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அவளுக்கும் அது விளங்கியிருக்க வேண்டும். தலையசைத்து விடைகொடுத்தாள்.
தகப்பனை அழைத்துக்கொண்டு சென்ற பிரணவனின் எண்ணங்கள் அவளின் கொப்பளங்களிலேயே நின்றன.
“அருமையான பிள்ளை!” ஆர்கலியைச் சிலாகித்தார் கருப்பன். அவனும் தனக்குள் ஆமோதித்துக்கொண்டான்.
“சின்ன வயதில அவளை நீ விடவே மாட்டாய் தம்பி!”
ஆகா! இதென்ன புதுக் கதையா இருக்கு?
“என்னப்பா சொல்லுறீங்க?”
“உனக்கு நினைவு இல்லையா?” என்றவர் சந்தோசமாக இரைமீட்டத் துவங்கியிருந்தார்.
“அகரனுக்கு தமயந்தி எண்டால் உயிர். விடவே மாட்டான். அவே ரெண்டு பேரும் கொஞ்சம் வளந்த பிள்ளைகள். நேர்சரி, பிறகு பள்ளிக்கூடம் எல்லாம் ஒண்டாத்தான் போய்வாறவே. அவே என்ன கைல வச்சிருந்தாலும் அது வேணும் எண்டு கேட்டு அடம்பிடிச்சு அழுது நீ வாங்கிப்போடுவாய். அதால அவே உன்னைச் சேர்க்கிறேல்ல. உனக்கு மூண்டு வயதா இருக்கேகதான் ஆர்கலி பிறந்தவள். அவளை நீ லலிதாட்ட கூடக் குடுக்கமாட்டாய் தம்பி. மடில தரச்சொல்லி அழுது அடம்பிடிச்சு வாங்கி வச்சிருப்பாய். விழுத்தவே மாட்டாய். அந்த வயசிலேயே பக்குவமா பாப்பாய். அவள் எண்டால் உனக்கு அவ்வளவு விருப்பம். ‘என்ர பொம்மா!’ எண்டு சொல்லுவாய். அவளும் பொம்மை மாதிரியே இருப்பாள்.” அவர் சொல்ல சொல்ல அவன் உதடுகளில் பூத்த புன்னகை விரிந்துகொண்டே போயிற்று!


