இது நீயிருக்கும் நெஞ்சமடி 24 – 2

“தங்கச்சிக்குக் கல்யாணம் மாமா! மொத்தக் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வரவேண்டியது உங்கட பொறுப்பு!” அழுத்திச் சொல்லிவிட்டு, “உங்கட மகளிட்ட ஒருக்கா குடுங்க மாமா!” என்றான் தெளிவான குரலில்.

அவருக்கோ மிகுந்த குதூகலம். மகளை அழைத்துக் கொடுத்துவிட்டுப்போனார்.

“ஹலோ.”

“நானும் நீயும் வேற வேற எண்டு நான் நினைக்கேல்ல. எனக்குள்ளதான் நீ இருக்கிறாய். என்ர தங்கச்சியின்ர கல்யாண வீட்டுக்கு என்னை ஆரும் கூப்பிடவும் தேவையில்லை. அதை நான் எதிர்பாக்கவும் மாட்டன். உன்னையும் கூப்பிட்டுத்தான் நீ வரோணும் எண்டு நான் நினைக்கேல்ல. இது உன்ர வீட்டுக் கல்யாணம். உரிமையா முன்னுக்கு நிண்டு செய்யவேண்டியவள் நீ. ஆனா உன்னைக் கூப்பிடோணும் எண்டு நீ எதிர்பார்த்தால்…” என்றவனைச் சொல்லிமுடிக்க விடாமல், அந்தப் பக்கமிருந்து பச்சக் என்று அழுத்தமாக வந்த முத்தச் சத்தம் ஒன்றில் நிலைகுலைந்து நின்றான் பிரணவன்.

“பொம்மு…” அந்த ஒற்றை முத்தத்திலேயே தலைகுப்புற விழுந்திருந்தான் அவன்.

இச் இச் என்று கேட்ட பல சத்தங்களுக்குப் பிறகு அலைபேசி செயல் இழந்திருந்தது.

அப்படியே நின்றுவிட்டான் பிரணவன். அவள் வழங்கிய முத்தங்கள் இன்னுமே அவனைப் பித்தனாக்கிக்கொண்டிருந்தன. அவள் மீதிருந்த அத்தனை கோபதாபங்களும் கரைந்து காணாமல் போயிருந்தன.

என்னதான் அவனைப் போட்டுச் செய்கிறாள் அவனுடைய பொம்மா?

‘நீ முதல் வாடி! உனக்கு இருக்கு!’ பல்லைக் கடித்துக்கொண்டான்.

மொத்தக் குடும்பத்துக்கும் சுந்தரேசன் டிக்கெட் போட்டுவிட்டு அறிவித்த கணத்திலிருந்து அவன் அவனாயில்லை. இதயம் எம்பிக் குதித்தோடிப்போய் இப்போதே விமான நிலையத்தில் காவல் கிடந்தது!

‘நீ இப்பிடியே அவளுக்குப் பின்னால நல்லா அலையடா. அவள் உன்னத் திரும்பியும் பாக்கமாட்டாள்.’ அவனுடைய மனச்சாட்சியே அவனைக் கேவலமாகத் திட்டியது.

அவனுக்கோ இன்னுமே அவள் தந்த முத்தங்கள்தான் காதோரமாய்க் கேட்டுக்கொண்டேயிருந்தன. அதன் சுவையை ருசித்திடத் துடித்தான்.

எத்தனை நாட்களாயிற்று அவளைப் பார்த்து. இத்தனை நாட்களாகப் பொறுத்தவனுக்கு அவள் வரப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பது பெரும் கொடுமையாயிருந்தது.

காலையில் எழுந்துவிடும் சூரியன் மறைகிறான் இல்லையே என்று சபித்தான். ஓடாமல் நிற்கிற கடிகாரத்தினை வெறுத்தான். வேலையில் தன்னை மூழ்கடித்தாலும் பொழுது மட்டும் நகராதது போலவேயிருந்தது.

மீண்டுமொருமுறை அவனின் ஊணுக்குள்ளும் உயிருக்குள்ளும் அவள் எந்தளவு தூரத்துக்கு ஊடுருவிப்போயிருக்கிறாள் என்று அவனுக்கே உணர்த்தினாள் அவனுடைய பொம்மா!

போனதடவை சொல்லாமல் கொள்ளாமல் அவள் வந்ததில் இப்படியான தவிப்பை அவன் உணர்ந்ததில்லை. அதைவிட அவனுடைய கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டதில் அவனுக்கென்று கட்டுப்பாடுகளும் எதுவும் இல்லையே.

திவ்யா சின்னவள். ஆக, இனி அவர்களுக்குத்தான் டும் டும் டும். அந்த நினைவு உருவாக்கிய மனக்கிளர்ச்சி வேறு அவனைப் பந்தாடியது.

இன்று அவனும் முப்பது வயதாகிப்போன முழுமையான மனிதன் அல்லவா. இல்லற வாழ்வினை வாழ்ந்து சுகித்திட ஆவலாகவே இருந்தான்.

கொடுமைகள் நிறைந்த அவனுடைய அந்த நாட்கள் முடிவுக்கு வர, துவாரகாவை தமயந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டுக் குடும்பமே விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.

நீண்ட நேரம் காத்திருக்கும் அவசியம் இல்லாமல் சுந்தரேசன் குடும்பம் வெளியே வந்தனர். இந்த முறை அகரனும் வந்திருந்தான்.

வாட்ட சாட்டமாய் வெளிநாட்டில் வளர்ந்தவன் என்று சொல்லும் அத்தனை சாயல்களோடும் இருந்தான் அகரன். தகப்பனோடு பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு அவன் வர, தாயோடு வந்துகொண்டிருந்தாள் ஆர்கலி.

சுற்றும் உலகம் நின்று போய் அவள் மட்டுமே தெரிந்தாள் பிராணவனுக்கு. அவன் விழிகள் தாகத்தோடு அவளிலேயே குவிந்தன.

வெள்ளையில் கறுப்புப் பூக்கள் பூத்த, முழு நீளத்துக்கும் பட்டன் வைத்த, கையில்லாத கொலர் வைத்த லோங் பிளவுஸ் முழங்காலுக்குச் சற்று மேலே வரை யு ஷேப்பில் நிற்க, கறுப்பு நிறத்தில் லெக்கிங்ஸ் அணிந்து, காலுக்கு வெள்ளை நிறத்தில் மெல்லிய ஹீல் வைத்த ஷூ அணிந்து நளினமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் அவனது முயல்குட்டி!

சத்தியமாக அவனிதயம் அவனிடம் இல்லவே இல்லை. என்னதான் அவனைச் செய்துவைத்திருக்கிறாள்? இப்படி மிச்சம் மீதி இல்லாமல் மொத்தமாகப் பார்க்கும் கணத்திலெல்லாம் அவன் சிந்தையைத் தன்வசம் இழுத்துக்கொள்கிறாளே!

நெஞ்சம் மயங்க அவள் கண்களைச் சந்தித்தான். அவனைப் பார்த்தபடிதான் அவளும் நடந்து வந்துகொண்டிருந்தாள்.

தன் பார்வையைத் தவிர்ப்பாள் என்று நினைத்ததற்கு மாறாக, காந்த விழிகளால் அவனைக் கவர்ந்துகொண்டே வந்தவளைக் கண்டு, அவன் உதட்டோரம் சின்ன சிரிப்பில் துடித்தது.

அதைக் கண்டவள் விழிகளில் ஒரு தடுமாற்றம்! வேகமாக ஒருமுறை விழிகளை அகற்றிவிட்டு மீண்டும் கொண்டுவந்து அவன் விழிகளோடு கலந்தாள். இது போதும்! இதுதான் அவனுடைய பொம்மா. சட்டென்று உல்லாசம் தொற்றிக்கொண்டது அவனிடம்!

‘ஃபோன்ல முத்தம் தந்து உசுப்பேத்துறியா? வா… வா!’ புன்சிரிப்பில் மலர்ந்துவிட்ட உதடுகளை மறைக்க முகம் திருப்பிக் கேசத்தைக் கோதிக்கொண்டான்!

மின்னல் சிரிப்பொன்று மின்னி மறைந்தது அவள் விழிகளில்! கள்ளன்! வேகமாகப் பார்வையத் திருப்பிக் கருப்பன் புவனாவைப் பாசமாக நலம் விசாரித்தாள்.

“அண்ணி!” என்று ஓடிவந்து கட்டிக்கொண்ட திவ்யாவிடம் உரையாடினாலும் அவள் இதயம் அவன் நினைவுகளிலேயே நிறைந்திருந்தது.

கலங்கத் துடித்த விழிகளைச் சிமிட்டி வேகமாகச் சமாளித்துக்கொண்டு, அவன் பார்வையைத் தவிர்க்கவே கூடாது என்றுதான் அவனையே பார்த்தபடி நடந்துவந்தாள். ஆனால், அவளின் மொத்தக் கட்டுப்பாடுகளையும் உடைத்துப்போடும் வல்லமை அவனின் ஒற்றை உதட்டுச் சிரிப்புக்கும், முகம் திருப்பிக் கேசம் கோதும் அழகுக்கும் இருந்ததே!

அதைவிட அவன் தோற்றத்தில் போனமுறையை விடவும் மிகுந்த மாற்றம்! தன் விழிகளை அவனிடமிருந்து பிய்த்து எடுக்கவேண்டியிருந்தது அவளுக்கு.

அந்தளவுக்கு முக வசீகரம் இன்னுமே அதிகரித்திருக்க, செல்வநிலை கொடுத்த பொலிவோடு இன்னுமே கம்பீரமாக, பேசும் கண்களை அவள் மீதே குவித்து, அடர்ந்த மீசையின் அடியில் உல்லாசச் சிரிப்பைச் சிந்தியவனைக் கண்டு அவள் இதயம் தடம் புரண்டதே! காற்றிலாடிய கேசம்தான் அவளை இன்னுமே ஆட்டிப்படைத்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock