பிரணவனை அவளுக்கே சொந்தமான அந்த மழலைத் தமிழ் மயக்கியது! அவளின் குரல் செவிகளுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் அவன் பலமிழந்துகொண்டிருந்தான்.
‘அடேய்! மானங் கெட்டவனே! உன்ர கோவமெல்லாம் எங்கயடா போயிட்டுது?’ காறித் துப்பியது மனச்சாட்சி!
அவள் வந்திருக்கிறாள். மனச்சாட்சியாவது மண்ணாங்கட்டியாவது! அதைக் கடாசிவிட்டுப் பார்வையைச் சுழற்றினான். இப்போதே அவளைத் தனியாகக் கடத்த முடிந்தால்?
நடக்கவே நடக்காது என்று உணர்த்தியது சூழ்நிலை. லலிதாவைப் பார்த்தான். இன்னுமே மெல்லிய இறுக்கம் தெரிந்தது அவர் முகத்தில். அவர் மாறப்போவதில்லை. அதனால் அவனுக்கு இனிக் கவலையுமில்லை! அகரன் நன்றாகவே அவனோடு நட்புறவு கொண்டாடினான்.
சாரதிக்குப் பக்கத்தில் கருப்பனும் அகரனும் அமர்ந்துகொள்ள பின்னுக்கு முதல் சீட்டில் சுந்தரேசனும் லலிதாவும் அமர்ந்துகொண்டனர்.
அடுத்த சீட்டினைப் புவனா பிடித்திருக்க பின்பக்கத்தை ஆர்கலியும் திவ்யாவும் சொந்தமாக்கியிருந்தனர். உள்ளே ஏறி, அவளையே பார்த்துக்கொண்டு தாயின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான் பிரணவன்.
அவ்வளவு நேரமும் ஓட்டுனரின் பார்வையில் அலெக்ஸ் வேனுக்குள்தான் இருந்தான். இவளைக் கண்டுவிட்டு அவள் மீதே பாய்ந்து பாசமழை பொழிந்தான்.
பார்த்த பிராணவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இது அவன் செய்ய வேண்டியது. அலெக்ஸை நன்றாக முறைத்துத் தள்ளினான். என் பின்பக்கத்துக்கு முறை என்று வாலை ஆட்டிக் காட்டிவிட்டு அவளோடே இருந்துகொண்டான் அலெக்ஸ்.
ஆர்கலியும் இவன் பக்கம் திரும்பவேயில்லை.
‘போடி!’ எப்படியாவது அவளைத் தன்னருகில் வைத்துக்கொள்ள மாட்டோமா என்று அவன் இதயம் ஏங்கியதில் திட்டிக்கொண்டான்.
சலசலப்பாக்கவே ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல அடங்கி, ஆளாளுக்கு உறங்கி வழிய ஆரம்பித்தது. அப்போது மெல்ல அவனைத் தட்டினாள் திவ்யா.
திரும்பிப் பார்த்தவனிடம், உறக்கக் கலக்கம் நிறைந்திருந்த விழிகளோடு, “நீங்க பின்னுக்கு வாறீங்களாண்ணா?” என்று மெல்லக் கேட்டாள் அவள்.
வீட்டின் கடைக்குட்டி. இன்னுமே உறக்கத்துக்குத் தாயின் அண்மை வேண்டும்! உதட்டினில் சிரிப்பு அரும்ப அவனது செல்லக்குட்டியைப் பார்த்தான்.
தலை சற்றே சரிந்திருக்க ஆழ்ந்து உறங்கிப்போயிருந்தாள். அடுத்த மூலையில் அலெக்ஸும் வாலைச் சுருட்டிக்கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தான்.
மென்னகையுடன் தங்கையைத் தாயருகில் நகர்த்திவிட்டு அவளுக்குப் பக்கத்தில் மிக வேகமாகத் தாவியிருந்தான் பிரணவன்.
கடந்துகொண்டிருந்த வாகன வெளிச்சத்திலும் ஆங்காங்கே அழுது வடிந்த மின்கம்ப விளக்கின் ஒளியிலும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், மெல்ல அவளின் மென் விரல்களைப் பற்றி வருடினான்.
சட்டென்று விழித்துப் பார்த்தாள் ஆர்கலி. நெருக்கத்தில் அவளையே பார்த்தபடி அவன்! கண்கள் நான்கும் கவ்விக் கலந்துகொள்ள, அவள் விழிகள் மெல்லக் கலங்க ஆரம்பித்தன.
அத்தனை நேரத்து நடிப்பு அப்போது செல்லுபடியாகவில்லை. பார்வையை வேகமாக விலக்கிக்கொண்டாள். அதுவே அவளும் அவளாயில்லை என்று உணர்த்த, முன்னிருக்கைகளை ஒருமுறை ஆராய்ந்தான் பிரணவன்.
எல்லோருமே குறட்டை விடாத குறையாக உறங்கிக்கொண்டிருந்தனர். ட்ரைவர் தன் வேலையிலேயே கவனமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, அவள் கன்னத்தில் வேக முத்தமொன்றைப் பதித்தான் அவன்.
அவள் தேகம் ஒருமுறை சிலிர்த்ததை உரசிக்கொண்டிருந்த அவன் தேகம் உணர்ந்தது. அவளோ திரும்பி அவனை முறைத்துவிட்டுக் கன்னத்தைத் துடைத்துக்கொண்டாள்.
‘துடைக்கிற நீ…’ முறைப்போடு மீண்டுமொருமுறை முத்தமிட்டான். எப்போதடா கொடுப்போம் என்று காத்திருந்தவன் காரணமே கிடைத்துவிட்டால் விடுவானா?
அவள் மீண்டும் துடைக்கப் போக, கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டான். அவள் முறைத்துக்கொண்டு திரும்ப, ஆசையோடு கன்னத்தில் முத்தமிடப் போனவனின் உதடுகள் அவள் உதட்டோடு முட்டிக்கொண்டது!
அதிர்ந்துபோனவள், கண்களால் மற்றவர்களைக் காட்டி முறைத்தாள்.
‘பேசாம விட்டிருக்க ஒண்டோட அடங்கி இருந்திருப்பன். துடச்சு ஏத்தி விட்டது நீதான்!’ அவனுக்கு என்ன, எந்தப் பக்கத்தாலும் இலாபம்தானே. குறும்புடன் கண்ணைச் சிமிட்டினான்.
கன்னச் சிவப்பை வாகனத்தைச் சூழ்ந்திருந்த இருள் மறைத்துவிட்டபோதும் கண்களில் மின்னிய நாணத்தைக் கண்டுகொண்டவனின் உள்ளம் கனிந்து போயிற்று!
அவளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னோடு சாய்த்துக்கொண்டான். அவள் விடுபட முயன்றாள். விடாதவனின் பார்வை அவளிடமே ஆசையோடு படிந்தது. உணர்ந்து சிவந்தவளின் மெல்லிய திமிறலும் அடங்கிப்போயிற்று!
உதட்டோரம் சிரிப்பில் துடிக்க ஒன்றுமே கதைக்கவில்லை அவன். அவளையே பார்த்திருந்தான். எதுவும் கதைக்க வேண்டும் போலிருக்கவில்லை. தன்னிடம் அவள் வந்துவிட்டதே போதுமாயிருந்தது. “பேசாம கண்ண மூடு!” என்றான் காதருகில் குனிந்து.
சில்லென்று மேனி நனைத்த இரவு நேரக் குளிர் காற்றுக்கு இதமாக, கழுத்தோரத்தை உரசிச் சென்ற அவன் மூச்சுக்காற்றில் தேகம் சிலிர்த்தாலும், வேண்டுமென்றே கண்களை முழித்து அவனையே பார்த்தாள்.
சொல் பேச்சுக் கேட்கமாட்டாளாம்!
சிரிப்புடன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான் பிரணவன். படக்கென்று விழிகளை மூடிக்கொண்டவள் முகத்தை அவன் மார்புக்குள்ளேயே புதைத்துக்கொண்டாள். மௌனச் சிரிப்பில் உடல் குலுங்க ஆசையோடு அணைத்துக்கொண்டான் பிரணவன்.
அதுநாள் வரை அவள் மீது ஆயிரம் குறைகளைச் சுமத்திக்கொண்டிருந்த உள்ளம், அவளின் அந்த ஒற்றைச் செய்கையில் அப்படியே அமைதியாகிப் போயிற்று! தன் கைக்குள் அவள் இருக்கிறாள். அவளுக்கும் அவன் மட்டும்தான் வேண்டும்! இதை விட வேறென்ன வேண்டும்?
இந்த அன்புக்கு முன்னால் கோபமாவது, கொந்தளிப்பாவது! இது போதும் அவனுக்கு! கோபத்தில் கணகணத்துக்கொண்டிருந்த அவன் இதயத்துக்கு இந்தச் சரணாகதி அவசியமாயிருந்தது.
அவள் நெற்றிமீது இதழ்களை ஆதுரமாகப் பதித்து மீட்டு, “நித்திரையை கொள்ளு!” என்றவனும் எந்தச் சிந்தனைகளும் இன்றிக் கண்களை மூடிக்கொண்டான்.


