இது நீயிருக்கும் நெஞ்சமடி 25 – 1

துவாரகாவின் திருமணநாளும் மிக அழகாக விடிந்திருந்தது. அதிகாலையிலேயே குடும்பத்தோடு வந்துவிட்டிருந்தார் சுந்தரேசன். அடர்ந்த மாம்பழ வண்ணப் பட்டுச் சேலையில், பொட்டு வைத்து, கழுத்தோரமாய்ப் பூச்சூடி, அளவான மேக்கப்பில் தயக்கம் கால்களைப் பின்ன நடந்துவந்தவளைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான் பிரணவன்.

அவன் ஆராதிக்கக் காத்திருக்கும் பெண்மை, நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டே போய்க்கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது.

அவளை ஈர்த்த அந்தப் பார்வையிலேயே இதயம் படபடக்கத் தொடங்க, அவனைத் தாண்டி நகரமுடியாமல் அங்கேயே நின்றாள் ஆர்கலி.

வீடே திருமணக்கோளம் பூண்டிருந்தது! அந்த வீட்டுக்கே இன்னும் அழகூட்டுகிறவனைப் போல வெள்ளை வேட்டி சட்டையில், கம்பீரமே உருவாக நின்றவனிடமிருந்து அவளால் விழிகளை அகற்ற முடியவில்லை.

இத்தனை வருடத்து ஏக்கம் தீருமளவுக்கு ஆற அமர இருந்து பேசவோ ஒருவர் மற்றவர் அண்மையை அனுபவிக்கவோ கடந்த நான்கு நாட்களும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் அமையவில்லை. அந்தளவில் திருமண வேலைகள் இருந்தன.

எப்போதாவது சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் தன் நேசத்தை, பிரிவினால் உண்டான தேடலை அவளிடம் அவன் காட்டத் தவறுவதே இல்லை. அத்துமீறல்களைக் கூட அதிகாரமாய்ச் செய்துகொண்டிருந்தான்.

‘அடுத்த திருமணம் எங்களுக்குத்தான்’ என்கிற எண்ணம் அவனுடைய கட்டுப்பாடுகளை எல்லாம் நொறுக்கிவிட்டதில் அவளைப் படாத பாடு படுத்திக்கொண்டிருந்தான்.

அதற்குள்ளே ஒரு கோபமும், ‘நீ எனக்குத்தான்!’ என்று அவளுக்கே உணர்த்தும் வேகமும் அவனுக்குள் இருப்பதை உணர்ந்துகொண்டிருந்தாள் ஆர்கலி.

இதற்குள் யாரோ அவனை அழைத்தனர். மிக வேகமாக நெருங்கி, “நல்ல வடிவா இருக்கிறாய் பொம்மு!” என்று கிசுகிசுத்துவிட்டு வேலைகளைப் பார்க்க விரைந்துவிட்டான். அவளின் முகம் பூவாய் மலர்ந்து போயிற்று

அங்கிருந்த அனைவரினதும் அதன் பிறகான நேரத்தைத் துவாரகா முற்றிலுமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

திருமண மண்டபம் ஆட்களால் நிறைந்து வழிந்தது! ஊரார், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்பதையும் தாண்டி, அவனோடு தொழில் புரிபவர்கள், ஊரின் முக்கிய புள்ளிகள், அவனுடைய வாடிக்கையாளர்கள் என்று நிறைந்து வழிந்தனர்.

அதைவிட, வருகிறவர்கள் அவனுக்குக் கொடுத்த மரியாதை வியக்க வைத்தது.

ஒவ்வொருவரையும் அணைத்து, வரவேற்று, வெண் பற்கள் தெரியச் சிரித்துப் பேசி என்று பம்பரமாகச் சுழன்ற பிரணவனையே லலிதாவின் விழிகள் சுழன்று சுழன்று படம் பிடித்துக்கொண்டிருந்தன.

நான்கு வருடங்களின் பின் தெரிந்த தலைகீழ் மாற்றத்தில் பிரமித்துப்போயிருந்தார்! சொன்னதைச் செய்து காட்டிவிட்டானே! திரும்பி மேடையில் துவாரகாவின் அருகில் நின்றிருந்த மகளைப் பார்த்தார்.

சடங்குகளில் துவாரகாவுக்கு உதவியாக இருந்தாலும் நொடிக்கு ஒரு தடவை அவள் விழிகள் உயர்ந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தது! அவனும் அப்படித்தான்!

ஒரு வழியாக ஐயர் மந்திரமோத மங்கல நாணைத் துவாரகாவின் கழுத்தில் பூட்டித் தன் திருமதியாக ஏற்றுக்கொண்டான் யாதவன்.

பெரியவர்களின் கால்களில் மணமக்கள் விழுந்து வணங்கத் தொடங்க, மேடையிலிருந்து இறங்கி வந்து தாயினருகில் அமர்ந்துகொண்டாள் ஆர்கலி.

இவ்வளவு சிறப்பாகத் தனக்கு எல்லாம் செய்த தமையனை அழைத்து, அவன் பாதங்களிலும் கணவனோடு துவாரகா விழப்போக, “ஒரு நிமிசம் பொறு!” என்றுவிட்டு இறங்கி வந்தான் பிரணவன்.

அவன் தன்னை நோக்கி வரவும், விழிகள் விரியப் பார்த்தாள் ஆர்கலி.

“வா!” என்று அழைத்துக் கரம் பற்றியவன், மண்டபம் முழுக்க நிறைந்திருந்த எல்லோரும் அவர்களையேப் பார்த்திருக்க, பற்றிய கரத்தை விடாது மேடைக்கு அழைத்துச் சென்றான். அவன் பின்னே நடந்தவளின் பார்வை அவனிடத்திலேயே இருந்தது. மேடையேறிச் சென்று தங்கை முன்னே சோடியாக நின்று, “இப்ப விழு!” என்றான்.

துவாரகாவின் முகமெங்கும் சிரிப்பு மலர்ந்தது.

“அடியேய் அண்ணி! பதினாறும் பெத்து சீரும் சிறப்புமா இருக்கோணும் எண்டு ஆசிர்வாதம் செய்யடி!” என்றபடி அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினாள்.

அதிர்ந்து ஆனந்தித்து, திக்குமுக்காடித் திணறிப்போய்ப் பிரணவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆர்கலி. விளையாட்டுப்பெண் அவளை எந்தப் பெரிய இடத்தில் நிறுத்திவிட்டான்.

அவளை மறுத்தான் என்று குற்றம் சாட்டி, இரக்கப்பட்டுச் சம்மதித்தான் என்று முடிவே செய்து பிரிந்துபோனவளிடம் மட்டுமில்லை, அங்கிருந்த எல்லோரிடமும் தன் நெஞ்சில் இருப்பது யாரென்று அடித்துச் சொல்லிவிட்டானே!

உணர்வுகள் பொங்கிக் கண்ணீராகக் கண்களிலிருந்து பொலபொலவென்று கொட்ட, அவசரமாக அவளைப் பற்றித் தூக்கி அணைத்துக்கொண்டாள் ஆர்கலி.

“நீ நல்லா இருப்பாயடி! எந்தக் கவலையும் இல்லாம சந்தோசமா நிறைவா வாழவேணும்!” வார்த்தைகளை யார் சொல்லிக்கொடுத்தார் என்றே தெரியாமல் ,அவளின் ஆழ் நெஞ்சம் மனப்பூர்வமாக வாழ்த்தியது.

“நீயும் தானடி அண்ணி! என்ர அண்ணா உன்ன லவ்வுற லவ்வுக்குக் கட்டாயம் பதினாறு பெறுவாய்! அழாத!” என்று துவாரகா சொல்ல, அழகாய் முகம் சிவந்து பிரணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் கண்களும் அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தன. பூரிப்பில் உள்ளம் துள்ள பெண்கள் இருவருமே சந்தோசத்தில் திக்கு முக்காடிக் கண்ணீர் விட, அவர்களை அணைத்துக்கொண்டான் பிரணவன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock