“ரெண்டு பேருமே உங்களுக்குப் பிடிச்ச மனுசன்மாரோட நல்லாருப்பீங்க. அதுக்கு நான் பொறுப்பு! அழாதீங்கடி!” என்றான் தன்னவளிடம் கண்ணால் சிரித்தபடி.
முகம் சிவந்து போயிற்று ஆர்கலிக்கு. பார்வையை வேகமாக யாதவனிடம் திருப்பி, “ஹாப்பி மேரிட் லைஃப் அண்ணா!” என்று வாழ்த்தினாள்.
“வெகு விரைவில உங்களுக்கும் அமையட்டும்!” மனைவி மூலமாக அனைத்தையும் அறிந்திருந்தவனும் இருவருக்கும் மனதார வாழ்த்தினான்.
கீழிருந்து பார்த்திருந்த பெற்றவர்கள் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர். பிரணவன் யாரின் அனுமதியையும் கோரவில்லை. ஆனால், ஊருக்கே அவள் அவனுக்கு யார் என்று அறிவித்துவிட்டிருந்தான்.
அந்த அங்கீகாரத்தை ஆர்கலி மறுக்கவில்லை. முகம் விகசிக்க ஏற்றுக்கொண்டாள். சுந்தரேசன் ஒருமுறை, ‘பார்த்தாயா’ என்பதுபோல மனைவியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டார்.
லலிதாவுக்கு இது இன்றல்ல என்றோ புரிந்துபோயிற்றே! ஆனாலும், கணவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.
மிக மிகச் சந்தோசமாக எல்லாம் முடிந்து வீடு திரும்பியவர்கள் ஆனந்த அயர்ச்சியோடு இலகுவாக அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, “வெளில போய்ட்டு வாறம்!” என்றுவிட்டு, அவளை இழுத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கமாக வெளியேறினான் பிரணவன்.
மாமரத்தின் கீழே ஒரு அறுதப்பழைய ஜென்ஸ் சைக்கிள் மறைவாக நின்றிருந்தது. அதன் பின்பக்கக் கரியரில் தலையணை வைத்துச் சுற்றப்பட்ட ஒரு ஓலைப்பாய். அதன்மீது பலூன்களைக் கட்டிப் பறக்க விட்டிருந்தான்.
ஒற்றைச் செம்புவேறு ஒரு பக்கமாகப் பாலோடு தொங்கிக் கொண்டிருந்தது. பழங்களை ஒரு பாக்கில் போட்டு ஹாண்டிலில் தொங்கவிட்டிருந்தான். ஒன்றும் விளங்காமல் அவள் பார்க்க, வேட்டியோடு மிக லாவகமாக ஒரு காலைத் தூக்கிப்போட்டு ஏறி அமர்ந்து, “ஏறு!” என்றான், முன்பக்கத்தைக் காட்டி.
“எங்க போக?”
“பின்னுக்குப் பாத்தா தெரியேல்ல? இண்டைக்கு எங்களுக்கும் முதலிரவு!” என்றான் பிரணவன்.
திகைத்து நின்றவளை இழுத்து ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்!
அப்படி, முதலிரவுக்கான பாய் தலையணை, பால் பழங்களோடு அவர்கள் புறப்பட்ட காட்சி அவளுக்கே சிரிப்பைக் கொடுத்தது. “என்ன பிரணவன் இது?” என்றாள் திரும்பி அவனைப் பார்த்து.
“உன்னக் கல்யாணம் கட்டுறதுக்கு இரக்கப்பட்டுத்தானே சம்மதிச்சனான், அதுதான் இரக்கப்பட்டு முதலிரவையும் முடிப்பம் எண்டு முடிவு செய்திட்டன்!”
வீட்டைச் சுற்றிக்கொண்டு முன்பக்கமாக வாசலை நோக்கி அவனுடைய சைக்கிள் செல்ல, வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவர்கள் இவர்களைக் கண்டுவிட்டு ஒருகணம் அதிர்ந்து, பின் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.
ஆர்கலிக்கு முகத்தை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
இப்படி மானத்தை வாங்குறானே!
வெட்கமே இல்லாமல் ஊர்முழுக்க வலம் வந்தான். வீதியில் கண்டவர்கள் எல்லோரும் பொங்கிச் சிரித்தனர். அவளால் முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை.
“ஐயோ பிரணவன் போதும்! நிப்பாட்டுங்கோ!” எவ்வளவு கெஞ்சியும் அவன் செவி சாய்க்கவேயில்லை!
“நோ டார்லிங்! உன்ர காதலன் முழுக்க முழுக்க முதலிரவு மூட்ல இருக்கிறான்!” என்றவன் பாடவும் ஆரம்பித்து இருந்தான்.
“இன்று முதல் இரவு…!
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு..!
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு!
உண்ணவா…! உனை கிள்ளவா…!
இல்லை அள்ளவா…!
நீ வா….!”
சைக்கிளை மிதித்தபடி அவன் காதோரமாகப் பாடவும் தடுமாறிப்போனாள் ஆர்கலி. அநியாயத்துக்கு அவன் குரல் வேறு காந்தமாய்க் கவர்ந்திழுத்து இம்சை செய்தது!
“பிரணவன் ப்ளீஸ் போதும்!” அவள் கெஞ்ச, “அண்டைக்கு எவ்வளவு கெஞ்சினான்! கேட்டியா நீ? கதவை அறைஞ்சு சாத்திப்போட்டு உள்ளுக்க இருந்தனி என்ன?” காதுக்குள் குமுறினான் அவன்.
சட்டென்று அவள் விழிகள் கலங்கிப் போயிற்று! இதுவரை விளையாட்டுக்குச் செய்கிறான் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், அன்று நடந்தவை எல்லாம் மிக ஆழமாக அவனைக் காயப்படுத்தி இருக்கிறது! அந்தக் கோபத்தை அவளிடம் காட்டும் சக்தி இல்லாமல் இப்படிச் செய்துகொண்டிருக்கிறான்.
அமைதியாகிவிட்டாள் ஆர்கலி! அவன் கோபம் தீரட்டுமே!


