ஊரெல்லாம் சுற்றிவிட்டுகே கடைசியாக சைக்கிள் தேர் சென்று சேர்ந்த இடம் அவனது இரணைமடுக்குளம்! அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழே நிறுத்திவிட்டு, பாயை விரித்துத் தலையணையையும் எடுத்துப் போட்டான். பால் செம்பு, பழங்களை எல்லாம் தலைமாட்டில் எடுத்து வைத்துவிட்டு, “ம்!” என்றான் அவளிடம்.
“என்ன ம்?” கலவரத்தோடு கேட்டாள் ஆர்கலி.
“அதுதான் இன்று முதலிரவு…” என்று அவன் மீண்டும் பாடத் தொடங்க, “டேய்! என்னடா விட்டா விளையாடிக்கொண்டே போறாய்! இப்ப என்ன உனக்கு முதலிரவு கொண்டாடோணும். அவ்வளவுதானே! வா!” என்றபடி அவள் சேலையில் கையை வைக்க, “அம்மாடி!” என்று அதிர்ந்து, அவளை விட வேகமாக அவளின் கையைப் பற்றி நிறுத்தியிருந்தான் அவன்.
“வெக்கமே இல்லையாடி உனக்கு!” அவனையே கதிகலங்க வைக்க அவளால்தானே முடியும்!
அவன் மிரண்டதைக் கண்டதும் சிரிப்புப் பொங்கியது அவளுக்கு! அடக்கமாட்டாமல் கலகலவென்று கண்ணீர் வருமளவுக்குச் சிரித்தாள். விழியோரம் கோடாய்ப் பதிந்துவிட்ட நீர் திரையும் சின்னப் புன்னகையுமாக அவளையே பார்த்திருந்தான் பிரணவன்.
அவளின் சிரிப்பும் மெல்ல மெல்லக் குறைந்தது. நெஞ்சில் நேசம் பொங்கிற்று! “கோவமா?” உரிமையாய் அவன் மார்பில் சாய்ந்தபடி கேட்டாள்.
அவனது கைகள் தாமாக உயர்ந்து அவளை மென்மையாக அணைத்தன. “ஓம் எண்டு சொல்லத்தான் விருப்பமா இருக்கு. ஆனா இருந்தாத்தானே?” அவளின் கன்னம் வருடிச் சொன்னான் அவன்.
“எண்டாலும் என்னைப் பாத்தா உனக்கு இரக்கப்பட்டு ஓம் எண்டு சொன்னவன் மாதிரியா இருந்தது?” ஆதங்கத்தோடு கேட்டான் பிரணவன்.
மீண்டும் கலங்கிப்போயிற்று அவள் விழிகள்!
“சொறி பிரணவன்!” வருத்தம் தோய்ந்த குரலில் அவனது கன்னம் வருடிச் சொன்னாள். “இப்ப இருக்கிறதை விட அப்ப நான் கொஞ்சம் சின்ன பிள்ளைதானே. அம்மா சொன்னதையெல்லாம் கேட்டதும் இதயமே உடைஞ்ச மாதிரிப் போயிற்று! ஆனா, போனமுறை வந்திட்டுப் போனபிறகு எல்லாமே விளங்கிட்டுது.” என்றாள்.
அப்படியே, விமான நிலையத்தில் வைத்து அவன் சொன்னதற்குப் பிறகு அப்பாவிடம் நடந்த முழுவதையும் கேட்டுத் தெரிந்துகொண்டதையும், அவளுக்காகத்தான் அவன் கலியாணத்தை மறுத்தான் என்பதை விளங்கிக்கொண்டதையும் சொன்னாள்.
“அடிப்பாவி! பிறகும் ஏன் இவ்வளவு நாளும் என்னோட ஒரு வார்த்த கதைக்கேல்ல.” மெய்யாகவே அதிர்ந்துபோய்க் கேட்டான் அவன்.
அதுவும் இரண்டாம் முறை போகும்போது எப்படிச் சொல்லிவிட்டுப் போனாள்? அதையெல்லாம் நினைத்து அவன் பட்ட வேதனைகள், கவலைகள் கொஞ்சமா நஞ்சமா? அவளானால் சின்னதாய் ஒரு பதிலைச் சொல்கிறாளே!
“அது…” என்றபடி அவன் மார்பில் தன் விரலால் கோடுகள் வரைந்தாள் அவள். “உங்கட குரலைக் கேட்டா என்னால அங்க இருக்க ஏலாது பிரணவா. ஓடி வந்திடுவன். அதுதான், நீங்க சொன்ன கடமைகள் எல்லாம் முடியிற வரைக்கும் உங்களை டிஸ்டப் செய்யக் கூடாது எண்டுதான் பெரும் பாடுபட்டுப் பொறுத்திருந்தனான். அண்டைக்கு நீங்க ஃபோன்ல சொன்னதைக் கேட்டு எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா?” என்றவள், அதைக் காட்டுகிறவளாக அவன் நெஞ்சில் தன் உதடுகளை அழுத்தமாக ஒற்றி எடுத்தாள்.
ஜில் என்று தாக்கிய இனிமையில் நெஞ்சில் அமைதி சூழ்ந்தாலும் வெளியே முறைத்தான் அவன்.
“பிறகு என்னத்துக்கு ஏர்போட்ல முறுக்கிக்கொண்டு நிண்டாய்?”
உடனேயே அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் அவள்.
“வேற என்ன செய்யோணுமாம்? ஒரு நாளாவது எனக்கு ஃபோன் பண்ணினீங்களா?” என்று சண்டைக்கு வந்தாள்.
“அநியாயமா பொய் சொல்லாத பொம்மு! எடுக்க எடுக்க நீதான் எடுக்கவே இல்ல!”
“நான் எடுக்காட்டி நீங்க எடுக்காம விட்டுடுவீங்களா? அவ்வளவு தைரியம்? திரும்ப திரும்ப எடுத்திருக்கோணும்! என்னை எப்படியாவது சமாதானம் செய்திருக்க வேணாமா?”
‘அடிப்பாவி! கடைசியில் அவனையே குற்றவாளி ஆக்கிவிட்டாளே!’ வாயைப் பிளக்காத குறையாகப் பார்த்தான் அவன்.
“அதுதான் கதைக்கேல்ல! இவ்வளவு தூரம் நான் வந்திருக்கிறன்! மிச்சத் தூரம் நீங்களா வரவேணும் எண்டுதான் கதைக்கேல்ல!” என்றாள் அவள்.
அவளின் நியாயம் கேட்டு அவனுக்குத் தலை சுற்றியது!
“என்ன ஆளடி நீ!” ஆசையாய் அவளைத் தன்னோடு இறுக்கிக்கொண்டான் பிரணவன்!
இவளிடம்தானே அவன் தலை சுற்றி வீழ்ந்ததும்!
அந்தப் பாயிலேயே அமர்ந்திருந்து ஆசை தீர, ஏக்கம் தீரக் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டனர்.
அவன் மீண்டும் அந்தப் பாயையும் தலையணையையும் சுருட்டிச் சைக்கிளின் பின்னே வைக்க, “ஐயோ! திரும்ப இதை என்னத்துக்கு காவுறீங்க?” என்றாள் அவள்.
அவளுக்கு மீண்டும் அதையும் கட்டிக்கொண்டு வீடு வரைக்கும் போவதை நினைத்தாலே சிரிப்பாயிருந்தது.
“இந்தப் பாயிலதான் எண்டைக்கா(என்றைக்காக) இருந்தாலும் எங்களுக்கு முதலிரவு.” என்றபடி சைக்கிளை எடுத்தவன், கொஞ்ச நேரமாக விட்டிருந்த பாட்டை மீண்டும் ஆரம்பித்திருந்தான்!
“இன்று முத…” என்று ஆரம்பிக்க, அவன் கைகளுக்குள் இருந்தவள் சட்டென்று திரும்பி அவன் உதடுகளில் தன் உதடுகளைப் பொருத்திப் பாட்டை நிறுத்தினாள்.
அவனோ மொத்தமாய் அசையாது அதிர்ந்து நின்று சுற்றுமுற்றும் வேகமாகப் பார்த்துவிட்டு அவளை முறைத்தான்.
“ஒருத்தரும் இல்ல! ஆனா திரும்பப் பாடினீங்க ஆர் இருந்தாலும் பரவாயில்ல எண்டு இதையேதான் செய்வன்!” என்றாள் மிரட்டலாக.
“எடியேய்! என்ர குடும்பத்தில ஆரு ஆம்பிள ஆரு பொம்பிளை எண்டே தெரியாமாக் கிடக்கு!” என்றபடி சைக்கிளை வீடு நோக்கிப் பறக்கவிட்டான் பிரணவன்.
அப்படியேதான் வீட்டுக்கும் வந்து சேர்ந்தான். அவர்களைக் கண்ட லலிதாவின் முகத்திலும் புன்னகை அரும்பிற்று!
மகளைப் பார்த்தார். இந்த நான்கு வருடங்களாக அவளிடம் இல்லாமல் போயிருந்த உயிர்ப்பு இப்போது உயிர்த்திருந்தது. கண்களில் அத்தனை மின்னல்.
சைக்கிளை விட்டு இறங்கியபிறகும் வீட்டுக்குள் வரவில்லை. அவன் சைக்கிளை நிறுத்திவிட்டு வரும்வரை காத்திருந்து அவனோடு தோள்கள் உரச நடந்து வந்தாள்.
அவனோடு ஒருமணி நேரம் போய் வந்ததற்கே இவ்வளவு சந்தோசமென்றால் காலமெல்லாம் வாழடி பெண்ணே என்று விட்டால்? கண்கள் பனித்துப் போயிற்று!
முழுமையாக அவரின் உள்ளம் மாறிவிட்டதா என்றால் இல்லைதான். ஆனால், அவரா இங்கு வந்திருந்து வாழப்போகிறார்? அவள்தானே! அவளும் அந்த வீட்டுக்குள் அழகாகப் பொருந்திப்போய்விட்டாள். அவர்களும் அவளைப் பொருத்திக்கொண்டனர். பிறகு என்ன? அவளுக்கு அவன்தான் என்று தெளிந்திருந்தார்.
“செத்திடலாம் போல இருக்கு பிரணவன்” என்று அன்று அவள் சொன்னபோதே இந்த முடிவை எடுத்திருந்தார். அது வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு.
இன்று விரும்பியே நினைத்தார். தான் நினைத்தது போல் அல்லாமல் அவன் முன்னேறிக் காட்டியது வேறு நிறைவைக் கொடுத்தது. அவர் எண்ணிப் பயந்தது போலல்லாமல் மகளை நல்ல நிலையில் நிச்சயம் வைத்திருப்பான்!
சுயநலம்தான்! அதற்கென்ன? பெண்ணைப் பெற்ற எந்த அம்மாவும் சுயநலமாகத்தான் யோசிப்பாள்! பெற்றெடுத்த பெண் நன்றாக வாழ வேண்டாமா? அவருக்கு அதனால் எந்தக் குறையுமில்லை. நிறைவோடு முடிவெடுத்துக்கொண்டார்.


