இப்போதும் பொம்மைதான். அப்படித்தான் இருந்தாள். அவளை மடியில் வைத்திருப்பேனா? ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. பிரியமாய்ப் பழகிய இருவர் அறிமுகமே அற்றவர்களாக மீண்டும் சந்தித்திருக்கிறார்கள்.
வீட்டுக்குப் போனதும் பெண்கள் நால்வரும் தகப்பனையும் மகனையும் சூழ்ந்து கொண்டனர். “அண்ணா எப்பிடி இருக்கிறார்? லலிதாக்கா? பிள்ளைகள்?” என்று அடுக்கடுக்காகப் புவனா விசாரித்தார்.
“அகரன் வந்தவனாப்பா?” சிறுவயது நண்பனைப் பற்றித் தமயந்தியும் விசாரித்தாள்.
சுந்தரேசன் இங்கிலாந்துக்குப் போன பிறகுதான் திவ்யாவும் துவாரகாவும் பிறந்ததில், அவர்களுக்கு யாரையும் தெரியாது.
“எல்லாரும் நல்லாருக்கினம். ஆர்கலியப் பாக்கமாட்டாய், பெரிய பிள்ளையா வளந்திருக்கிறாள். சுந்தரண்ணாவ மாதிரியே அருமையான பிள்ளை. அகரனுக்கு வேலையாம். அதால வரேல்லையாம்.” வீட்டுடையை மாற்றிக்கொண்டு வந்து விறாந்தைச் சுவரிலேயே சரிந்து அமர்ந்துகொண்டு சொன்னார் கருப்பன்.
அம்மாவும் சகோதரிகளும் சுற்றி அமர்ந்துகொண்டு அவர்களைப் பற்றி விசாரிக்க, பிரணவன் அலெக்ஸோடு வாசலில் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தான்.
“சாப்பாட்டுக்குக் கூப்பிட்டனீங்களே?”
“அட! கதைல மறந்து போனனப்பா!” கருப்பன் சொல்ல முறைத்தார் புவனா.
“நல்ல ஆள் உங்கட அப்பா. வழிக்கு வழி சொல்லி விடுறன், மறக்காம சொல்லுங்கோ எண்டு. நீயாவது அப்பாக்குச் சொல்லியிருக்கலாமே தம்பி.” மகளிடம் முறையிட்டுவிட்டு மகனிடம் கேட்டார் புவனா.
“எனக்கும் நினைவு வரேல்லம்மா. இண்டைக்குத்தானே வந்து இருக்கினம். நாளைக்குச் சொல்லுவம்.” என்றான் அவன்.
தகப்பனுக்கும் தம்பிக்கும் உணவைக் கொண்டுவந்து கொடுத்தாள் தமயந்தி. தரையிலேயே அமர்ந்திருந்து உண்ண ஆரம்பித்தனர் இருவரும். உழைத்துக் களைத்த உடம்பு கருப்பனுக்கு. உணவு முடியவும் கண் சொக்கியது. எழுந்து உறங்கப்போனார்.
“சரி சொல்லு, எப்பிடியடா மாமா குடும்பம்?”
பெண்களும் உண்டு முடித்தபிறகு, அவனருகில் வந்திருந்து கேட்டார் புவனா. அவரைச் சுற்றி அமர்ந்துகொண்டார்கள் பெண்கள்.
“நல்லம் அம்மா! மாமா எல்லாரைப் பற்றியும் விசாரிச்சவர். மாமிதான் கொஞ்சம் சீன் போட்டுக்கொண்டிருந்தா.” தகப்பனிடம் எதையும் காட்டிக்கொள்ளாதபோதும் தாயிடம் பகிர்ந்தான் பிரணவன்.
“அவா அப்பவே அப்பிடித்தான். இப்ப இன்னும் மாறியிருப்பா. அதையெல்லாம் பெருசா எடுக்காத நீ. அப்பாக்கு அவே உயிரப்பு.” என்றார் அன்னை.
“ம்ம்… விளங்குதம்மா. ஆனா, நாங்க தள்ளி இருக்கிறதுதான் நல்லம்.” தன் மீது பாய்ந்த அலெக்சின் தலையைக் கலைத்துவிட்டபடி சொன்னான் பிரணவன். லலிதா அவர்களையெல்லாம் மதித்துப் பழகுவார் என்று தோன்றவில்லை அவனுக்கு.
“அப்பு இஞ்ச பார். லலிதா மாமி எப்பிடி நடந்தாலும் நாங்க மதிச்சு நடக்கோணும். அவே எங்கட சொந்தம். ஆனா, நாங்க அவேக்குச் சொந்தமில்லை. அப்பிடித்தான் நீ நினைக்கோணும். ஏன் எண்டால், ஆருமே இல்லாம நிண்ட அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்து, வளத்து ஆளாக்கி, என்னை அவருக்குக் கட்டிவச்சு, அவரையும் ஒரு மனுசனாக்கினது சுந்தரம் அண்ணான்ர அம்மாவும் அப்பாவும்தான். அதை நாங்க மறக்கக் கூடாது, விளங்கினதா?” எடுத்துரைத்தார் அன்னை.
அவனுக்கும் அவர்களை உதறும் எண்ணமில்லைதான். ஆனால், சொந்தமாக எண்ணிப் பழக முடியாமல் லலிதாவின் செய்கைகள் ஒவ்வொன்றும் தள்ளி வைத்தன.
அம்மா சொன்னதுபோல அதற்காக ஒதுங்கிப் போகவும் முடியாது. அவனது மகேந்திரம் தாத்தாவும் மனோன்மணி அம்மம்மாவும் கடைசிக் காலத்தில் சொத்தில் ஒரு பகுதியை அவனுடைய அப்பாவின் பெயரில் எழுதி வைக்க எவ்வளவு முயன்றார்கள் என்று அவனுக்கும் தெரியும்.
அவனுடைய அப்பாதான் உறுதியாக நின்று மறுத்திருந்தார். சுந்தரம் மாமாவும் அருமையான மனிதர். அவர்களுக்காகவாவது பேசாமல் இருக்க வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டான் பிரணவன்.
“அத விட்டுட்டு நீ சொல்லு, ஆர்கலி நல்லா வளந்திருப்பாள் என்ன! வடிவா இருக்கிறாளா? முந்தி நீதான் அவளைத் தூக்கிக்கொண்டு அலைவாய்.” என்று பேச்சை மாற்றினார் புவனா.
சட்டெனச் சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு. யாரை வைத்துக்கொண்டு என்ன கதைக்கிறார் அம்மா.
“அதையெல்லாம் இப்ப என்னத்துக்குக் கதைக்கிறீங்க?” என்று தடுத்தான் பிரணவன்.
ஆனால், புவனா சொன்னதே போதுமாக இருக்க, அவரின் மடியில் தலைவைத்துச் சரிந்திருந்த துவாரகா துள்ளிக்கொண்டு எழுந்தாள்.
“என்னது? எங்கட அண்ணா வெளிநாட்டுக்காரியத் தூக்கித் திரிஞ்சவனோ?” என்று அவள் ஆரம்பிக்க, “எங்களை எப்பவாவது தூக்கி இருக்கிறாரா அம்மா?” என்று சின்னவள் கேட்டாள்.
“அவன் தூக்காம நீங்க வளந்தனீங்களே? அப்ப நீங்க ரெண்டுபேரும் பிறக்கேல்ல. அவள்தான் இருந்தவள். இவன் அவளை விடவே மாட்டான். அவள் போய்ட்டாள் எண்டு கொஞ்சநாள் இவனுக்கு நல்ல காய்ச்சல்!” புவனா சிரிப்புடன் மகனைப் பார்த்தபடி சொன்னார்.
“அப்பவே அண்ணா பிரிவுத்துயர்ல வாடியிருக்கிறான்.” என்று சிரித்தாள் துவாரகா.
“அந்த எலிசபெத்தை தூக்கின நினைவே எனக்கில்லை. இதுல நீ வேற!” என்று அவன் சொல்ல,
“பாத்தியாக்கா அண்ணாக்கு எவ்வளவு கவலை எண்டு. அந்த நாள் நினைவு எல்லாம் மறந்துபோச்சாம்!” என்று வாரினாள் சின்னவள் திவ்யா.
“தூக்கினது மட்டுமா இன்னும் என்னென்னவோ செய்தவன். என்னம்மா?” என்று தமயந்தியும் சொல்ல, ‘நீயுமாக்கா?’ என்பதுபோலப் பார்த்தான் பிரணவன்.
இனி அவனை ஒரு வழி செய்யப் போகிறார்கள். “எல்லாரும் எழும்புங்க, நேரமாச்சு படுப்பம்!” என்று அவன் எழும்பப் போக, அவனை அமர்த்தி இருத்திவிட்டு உள்ளே போனார் புவனா.
அங்கே ஒரு குட்டியான பழைய ஆல்பம் ஒன்றைத் தேடி எடுத்துக்கொண்டு வந்தார்.
அதில், அந்த நாட்களில் கொண்டாடிய ஆர்கலியின் முதலாவது பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படங்களோடு இன்னும் சிலதும் இருந்தன.
அதில் இருந்த எல்லா புகைப்படங்களிலும் அவளுக்கு அருகிலேயேதான் நின்றிருந்தான் பிரணவன். ஒன்றில் அவளை ஒட்டிக்கொண்டு நின்றான், இல்லையோ அவளைப் பெரியவர்கள் வைத்திருக்கப் பெரிய மனிதன் போலத் தானும் பிடித்துக்கொண்டு நின்றான்.
இன்னொன்றில் அவன் கால்களை நீட்டி அமர்ந்திருக்க, அவன் மடியில் படுத்திருந்தாள் குட்டி ஆர்கலி. பார்க்க பார்க்க அவனையே அவனுக்கு அள்ளிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. அவ்வளவு அழகு அவன்.
என்னவோ புதையலைக் காப்பவன் போல ஒவ்வொரு புகைப்படத்தில் அவளைக் காத்துக்கொண்டிருந்தான்.
அடுத்த பக்கத்தைத் திருப்ப முதல் குறும்புடன் அவனைப் பார்த்துச் சிரித்தார் புவனா.
“என்னம்மா?” அவரின் சிரிப்பே சரியில்லை. அவனுக்கு மண்டைக்குள் மணியடித்தது.
கண்களில் சில்மிசம் மின்ன அடுத்த பக்கம் தட்டியபோது ஐந்து சோடிக் கண்களும் அங்கே குவிந்தன. பிராணவனுக்கு மானமே போயிற்று. பெண்கள் விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கினர்.
‘ஊர விட்டே ஓடிடுடா பிரணவா!’ அவன் மனம் கூக்குரலிட ஆல்பத்தைப் பிடுங்கிக்கொண்டு ஒரே பாய்ச்சலில் தன் அறைக்குள் புகுந்து கதவடைத்திருந்தான். முகமெல்லாம் இரத்தமெனச் சிவந்து போயிற்று!
ஆர்கலி ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருக்க, அவள் உதட்டில் முத்தமிட்டுக்கொண்டிருந்தான் பிரணவன். அந்த ஆல்பத்தாலேயே முகத்தை மூடியவனின் முகம் முழுவதும் வெட்கம்
அவன்தான் வெட்கம் கெட்ட வேலை பார்த்தான் என்றால் அதையும் யாரோ மெனக்கெட்டுப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இதை அந்தப் பெண் பார்த்தால் என்ன நினைப்பாள்? சிரிப்புடன் ஆல்பத்தை மீண்டும் திறந்து பார்த்தான்.
உலக நாயகனையே வென்ற முத்தம். ஹாஹா… சிரிப்புத் தாங்காமல் தலையணையின் கீழே ஆல்பத்தைப் போட்டுவிட்டு, முகம்வரை மூடிக்கொண்டு படுத்துவிட்டான் பிரணவன்.


