அன்று மாலை சுந்தரேசன் குடும்பம் கருப்பனின் வீட்டுக்கு வந்திருந்தார்கள். வேனில் வந்து இறங்கியவர்களைக் கருப்பனோடு சேர்ந்து நான்கு பெண்களும் வாசலுக்கே வந்து வரவேற்றார்கள்.
“மாமா, மாமி வாங்கோ! வாங்கோ!” என்று பிள்ளைகளும், “வாங்கோக்கா! வாங்கோ அண்ணா!” என்று புவனாவும் வாய் நிறைய வரவேற்க, அவ்வளவு அழகாய் இருந்தது அந்தக் காட்சி.
மனைவி மக்கள் என்று கருப்பன் வாழும் சந்தோசமான வாழ்க்கையைக் கண்டுவிட்டு, “குடுத்து வச்சவனடா நீ!” என்றார் சுந்தரேசன்.
“உனக்கு மட்டும் என்னண்ணா குறை? வாவா!” என்று அவர் அழைத்துச் செல்ல, புவனாவுக்கு ஆர்கலியிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. அவ்வளவு அழகு. அதைவிட துறுதுறு என்று மனத்தைக் கவருகிறவளாக இருந்தாள்.
புவனாவைக் கண்டதும், “கருப்ஸ் மாமாட லவ்வர் நீங்கதானே?” என்று கண்ணடித்துக் கேட்டு, அவரையே வெட்கப்பட வைத்தவளைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டார்.
“பெரிய பிள்ளையா வளந்திட்டாள், என்னக்கா?” அங்கிருப்பவர்கள் வேறு, தான் வேறு என்பதுபோல யாரோடும் உறவாடாமல் தனியாக நின்ற லலிதாவைப் பேச்சில் இழுத்தார் புவனா.
அதுவே லலிதாவுக்குச் சினத்தைக் கொடுத்தது. சற்றுமுன்னர் கணவர் சொன்ன, ‘குடுத்து வச்சவன்’னும் மனத்தில் இருந்ததில், “பின்ன என்ன, இருவது வருசம் கழிச்சும் இன்னும் கைக்குழந்தையாவே இருப்பாளே!” என்றார் நக்கலாக.
பெண்கள் நால்வரின் கண்களும் சட்டென்று ஒருமுறை சந்தித்து மீண்டன. லலிதா மாறவேயில்லை என்று புரிந்துபோயிற்று புவனாவுக்கு.ஆர்கலி அதற்குள் வீட்டுக்கும் வாசலுக்குமாகத் துள்ளிக்கொண்டு இருந்த அலெக்சிடம் ஓடியிருந்தாள்.
லலிதாவுக்கு அங்கு வருவதில் விருப்பமேயில்லை. ஆனாலும் கறுத்து, காய்ந்து, வறுமையில் வாடி வதங்கிப்போயிருக்கும் புவனாவிடம் வெளிநாட்டுக் குளிரில் இன்னுமே நிறமாகி மினுமினுப்பாக இருக்கும் தன்னைக் காட்டிவிடும் உந்துதல் சம்மதிக்க வைத்தது. நான் எப்படி இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய் என்று பார் என்று காட்ட நினைத்தார்.
ஆனால், முக்கால் கால் வரையிலான பாவாடை சட்டை அணிந்து, நெற்றி வகிட்டிலும் நெற்றியிலும் குங்குமம் இட்டு, கீற்றாகத் திருநீறு பூசி, நீண்ட கூந்தலுக்கு அளவாக எண்ணெய் வைத்து ஒற்றைப் பின்னலாகப் பின்னி, அந்த வயதிலும் பொன்னிறம் இன்னுமே மங்காமல் சிரித்த முகமாய் வரவேற்ற புவனாவைக் கண்டு, லலிதாவுக்கு முகம் சுருங்கிப் போயிற்று.
ஆங்காங்கே நரைத்திருந்த முடிகள் கூட அவரின் அழகை இன்னுமே மெருகேற்றுவது போலிருந்தது. மேக்கப்பில் பளபளத்த அவர் முகத்துக்கு ஈடு கொடுத்தது புன்னகையில் மலர்ந்திருந்த புவனாவின் முகம்.
இன்று வரையிலும் கொஞ்சம் கூட உடம்பு வைக்காமல், நாலு பிள்ளைகளைப் பெற்றவர் போல் இல்லாமல் இன்னுமே சின்ன பிள்ளை போல ஓடியாடி அவர்களைக் கவனித்தவரைக் கண்டு எரிச்சல் மிகுந்துபோயிற்று.
“நீங்களும் புவனா ஆன்ட்டி மாதிரி உடம்பைக் குறைக்கோணும் அம்மா. அவவப் பாருங்கோ சின்ன பிள்ளை மாதிரி இருக்கிறா.” என்று ஆர்கலி சொல்லும் அளவில் இருந்தார் புவனா.
“புவனா தோட்ட வேலை செய்ற ஆள். அதுதான் உடம்பு இல்ல. எனக்கு என்ன தலையெழுத்தே கூலி வேலை செய்ய? ஏறினா கார் இறங்கினா கார் எண்டு வாழுறவள் நான்.” லலிதாவிடமிருந்து வந்த பதிலில் ஆர்கலிக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது.
“பிறகு ஒரு நாளைக்கு ஏறவும் முடியாம இறங்கவும் முடியாம கட்டில்ல இருப்பீங்க அம்மா.” தாயின் மனத்தின் அழுக்கு அறியாத மகள் விளையாட்டுப் போலவே சொன்னாள்.
காணியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு கருப்பனும் சுந்தரமும் வந்தனர். “எங்கட தோட்டத்தில ஆஞ்ச தோடம்பழச் சாறு. குடியுங்கோ.” என்று புன்னகை முகம் மாறாமலேயே எல்லோருக்கும் பரிமாறினார் புவனா.
கிட்டத்தட்ட ஆறுமாத வித்தியாசத்தில் திருமணமாகி சுந்தரேசனின் வீட்டுக்கு வந்தவர்கள்தான் லலிதாவும் புவனாவும். காதலித்த காலத்தில் ‘என் உயிர் நண்பன்’ என்றுதான் கருப்பனைச் சுந்தரேசன் அறிமுகப்படுத்தியிருந்தார்.
திருமணமாகி வந்த பிறகு, அவர் எடுத்து வளர்க்கப்பட்ட அநாதை என்று தெரியவந்தபோது தானாகவே ஒரு அலட்சியம் லலிதாவுக்கு வந்திருந்தது.
அதேநேரம், புவனா கருப்பனுக்கு மனைவியாக வந்தபோது, மகேந்திரம் தம்பதியர் இருவரையும் ஒரே மாதிரி நடத்தியதையும் பொறுக்க முடியவில்லை.
‘இந்த வீட்டு மருமகள் நான். எனக்கு இணையாக அநாதைக்கு மனைவியாக வந்தவளா?’ என்று எண்ணினார். கிட்டத்தட்ட ஒரே வயதினர் என்பதா, அல்லது ஒரே வீட்டுக்கு வாழவந்த பெண்கள் என்பதாலா ஒருவித ஒப்பீடு தானாகவே உருவாகி, அவரைப் புகைய வைத்தது.
இருவருமே அழகிகள்தான். லலிதா புவனாவைவிட இன்னுமே நல்ல அழகி என்றாலும் புவனாவின் நிறம் அவருக்கில்லை. ஓடி ஓடி வேலை செய்து, மனோன்மணியின் பாசத்துக்குரிய பெண்ணாகவும் புவனா மாறியதை லலிதாவினால் பொறுக்க முடியவில்லை.
‘நல்லவளுக்கு நடிச்சு ஏமாத்துறாள்.’ என்றுதான் நினைத்தார்.
மகேந்திரமும் மனோன்மணியும் இருவரையும் சமமாக நடத்தினாலும், “மாமாக்கும் மாமிக்கும் இளகின மனம். அதுலதான் உங்கட மனுசனை எடுத்து வளத்திருக்கினம்.” என்றோ, “என்ர மனுசன் நண்பர் எண்டுதான் சொன்னவர். பாத்தா அவரும் இந்த வீட்டுல இருக்கிறார். எடுபிடி வேலைக்கு உதவும் எண்டு நினைச்சிருப்பார்.” என்றோ, சாதாரணமாகக் கதைத்துக்கொண்டு இருக்கும் பொழுதுகளில் சொல்லிச் சொல்லி, மறைமுகமாக இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லை என்பதைப் புவனாவுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தார் லலிதா.
இருவருமே தாய்மை அடைந்திருந்த நாள் ஒன்றில், “நான் அடிக்கடி யோசிச்சுப் பாக்கிறனான் புவனா. நாங்களும் இப்ப பிள்ளையைச் சுமக்கிறோம். இந்தப் பிள்ளையை எங்கயாவது விட்டுட்டுப் போவமா சொல்லுங்கோ? நான் நினைக்கிறன், உங்கட மனுசன் முறையாப் பிறக்கேல்ல போல. இல்லாட்டி என்னெண்டு ஒரு தாய் கோயில்ல விட்டுட்டுப் போவாள் சொல்லுங்கோ?” என்று சொல்லிவிட, உள்ளம் ஒருமுறை குலுங்க இருந்த இருப்பிலேயே இறுகிப்போனார் புவனா. கண்களில் கோடாய்க் கண்ணீர் பூத்துப் போயிற்று.


