ஏற்கனவே மனத்தளவில் சஞ்சலம் கொண்டிருந்தவருக்கு லலிதாவின் பேச்சு அபசகுனமாகப் பட்டுவிட, கடுமையாகச் சொல்லிவிட்டார்.
அதைக்கேட்டு ஆடிப்போனார் லலிதா. மனம் ஒருமுறை குலுங்கியது. அவரா அவளுக்காக யோசிக்கவில்லை? பிடிக்கவே பிடிக்காதபோதும் அவளுக்காகத்தானே சம்மதித்தார். அவளுக்காகத்தானே வெளிநாட்டுக்கு அவனை வரச்சொல்லி நிர்ப்பந்திக்கிறார்.
கணவரின் அநியாயக் குற்றச்சாட்டு ஆத்திரத்தையும் அழுகையையும் கொடுத்தன. “நான் நல்ல தாயா இல்லாமையே இருந்திட்டுப் போறன். முதல் அவள் எங்க எண்டு கேளுங்கோ!” அழுகையில் குரல் அடைத்துக்கொண்டு வரவும் பேச்சை நிறுத்திவிட்டார்.
சுந்தரேசனும் அழைத்துக் கேட்க அவர்கள் சொன்ன பதில் லலிதாவுக்கு இன்னுமே கோபத்தைக் கொடுத்தது. ஒரு கணம் என்றாலும் அவளைக் காணவில்லை என்று பதறிப்போனார்தானே! பெண் பிள்ளை அல்லவா!
லலிதா கோபமாகப் பேசத் தொடங்கவும் ஃபோனை வைத்துவிட்டார் சுந்தரேசன்.
“பாத்தீங்களா? நீங்க எடுக்கிற வரைக்கும் பேசாம இருந்துபோட்டு, அதச் சொல்ல எடுத்தவராம். நல்லாருக்குக் கதை! அவரின்ர ஆம்பிளைப் பிள்ளை எண்டுறதாலதானே இவ்வளவு அலட்சியம். ஒண்டுக்கு மூண்டு பெட்டையளைப் பெத்து வச்சிருக்கிற மனுசருக்குத் தெரியாதோ, என்ன செய்யோணும் எண்டு! நாளைக்கு ஏடாகூடமா நடந்தா நாங்கதானே அழவேணும்! அவேக்கு என்ன, பின்பக்க மண்ணத் தட்டிப்போட்டுப் போவீனம்!”
சுந்தரேசனுக்கும் இந்த விசயத்தில் கருப்பன் மீது அதிருப்திதான்.
“ஆரு தானாத்தான் போனாளோ தெரியாது!” மெல்லச் சொன்னார்.
“அவளா போனா? கூப்பிட்டு வச்சுக்கொண்டு இருப்பீனமோ? அவேக்கு சப்போர்ட் பண்ணியே ஆகோணும் எண்டு நிக்காம ஒழுங்கா யோசிங்க! அவளுக்குத்தான் அறிவில்ல, இவேக்குமா அறிவில்ல? உடன கொண்டுவந்து இங்கயெல்லோ விட்டிருக்க வேணும்! பெரியாக்கள் கலந்துபேசி, ஒரு முடிவச் சொல்ல முதல், கல்யாணம் பேசினவனோட ஒரே வீட்டுல இவள் இருக்கலாமோ? தங்கட மகளை இப்பிடி எங்கயாவது அனுப்புவீனமோ? அவன்ர தங்கச்சியாக்கள் இஞ்ச ஆருவோட இருக்க வந்தாலே, இருட்டினதும் வந்து கூட்டிக்கொண்டு போயிடுவான். வெளில இருட்டிப்போட்டுது. இன்னும் அவள் வரேல்ல! நாங்களே நினைச்சாக்கூடி கலியாணத்தை நிப்பாட்டக் கூடாது எண்டு திட்டம் போட்டுச் செய்யுதுகள்! கேடுகெட்ட கூட்டம்!”
“போதும் நிப்பாட்டு லலிதா! அவன் அப்பிடி நடக்கமாட்டான்! எனக்குத் தெரியும்!” என்றவர், விருட்டென்று திரும்பி மாடியேறினார்.
லலிதாவின் பேச்சிலும் நியாயமிருந்தது. நண்பன் குடும்பத்தை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை. அங்கிருந்தால் இன்னும் பேச்சு வளர்ந்து பிரச்சனையில்தான் வந்து முடியும்!
தேவையானவற்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டார் சுந்தரேசன்.
‘நல்ல பொறுப்பில்லாத தகப்பன்! நம்பிக்கையாம் நம்பிக்கை! நாளைக்கு ஏடாகூடமா ஒண்டு நடந்தபிறகு இந்த நம்பிக்கையை வச்சு என்ன செய்யிறது?’ ஆத்திரத்தோடு மகள் வரட்டும் காத்திருந்தார் லலிதா.
சற்று நேரத்திலேயே துள்ளல் நடையும், முகம் கொள்ளாச் சிரிப்புமாக வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவளைக் கண்டதும் பளார் என்று அறைந்துவிட்டார் லலிதா.
“அம்மா!” இதை முற்றிலும் எதிர்பாராதவள் தடுமாறி விழப்போனாள். ஓடிவந்து தாங்கினான் பிரணவன்.
“என்ன மாமி இது?” அவனது கேள்வியைப் பொருட்படுத்தவில்லை லலிதா!
ஆனால், மகளை அவன் பிடித்திருந்த காட்சியைச் சகிக்க முடியவில்லை. ஒரே இழுவையில் இழுத்து அவளைத் தன் முன்னே நிறுத்தினார்.
“எங்கயடி போனனீ?”
ஆர்கலிக்கு வார்த்தைகளே வரவில்லை. இதுவரை அடிவாங்கிய அனுபவமே இல்லை. அதிர்ச்சியில் தாயின் மீதே பார்வை நிலைகுற்றிவிட, உறைந்துபோய் நின்றிருந்தாள்.
“ஆரக் கேட்டு வெளில போனனி? எவ்வளவு தைரியமடி உனக்கு!” மீண்டும் அவர் அறையப்போக, வேகமாக இடையில் புகுந்து அவளைத் தன் பின்னே கொண்டுவந்து, “என்னட்டத்தான் வந்தவள் மாமி!” என்றான் பிரணவன்.
“எவ்வளவு தைரியமடா உனக்கு! என்னட்டையே சொல்லுறாய் உன்னட்டத்தான் வந்தவள் எண்டு! இப்படித்தான் உன்ர தங்கச்சியையும் அனுப்புவியா? எவனிட்டையோ?”
“மாமி!” இரைந்தான் பிரணவன். “கதைக்கிறதைக் கவனமா கதையுங்கோ!” ஆத்திரத்தை அடக்கி எச்சரித்தான்.
“நீ கவனமா நடந்தியோ? உன்ர தங்கச்சியைச் சொன்னதும் கொதிக்குது. இவளும் அவளை மாதிரி ஒரு பொம்பிளைப் பிள்ளதானே? இவளைக் கூட்டிக்கொண்டு நீ போனது சரியா? இல்ல ஒரு வார்த்தை எடுத்துச் சொன்னியா, அங்கதான் நிக்கிறாள் எண்டு?”
அவனுக்கு என்ன தெரியும், அவள் சொல்லாமல் வந்தது?
“சொறி மாமி! சொல்லித்தான் இருக்கோணும்! சொல்லாம விட்டது என்ர பிழைதான்.” அவளைக் காப்பாற்றத் தணிந்துபோனான். பிழையைத் தன் மீதே போட்டுக்கொண்டான்.
“உன்ர பிழை இல்ல! நீ எல்லாம் திட்டம் போட்டுச் செய்யிறவன்! ஆனா, இவளுக்கு எங்க போனது அறிவு? லண்டனிலையே ஆறுமணி தாண்டி வெளில நிக்கக் கூடாது எண்டு சொல்லி இருக்கிறன். தெரியாத ஊருல ஒருத்தருக்கும் சொல்லாம வீட்டுப்படி தாண்டிப் போவியாடி?” அவனுக்குப் பின்னால் நின்றவளை எட்டி முன்னே இழுக்க அவர் முனைய, “தெரியாமச் செய்திட்டாள். விடுங்கோ மாமி! இனிச் செய்யமாட்டாள்!” என்று மீண்டும் தடுத்தான் அவன்.
அவளுக்காக அவன் பேசியது அவருக்கு ஆவேசத்தைக் கிளப்பியது!
“கூட்டிக்கொண்டு போனவன் நீதான்! நீ கதைக்காத! முதல் நீ வெளில போ!” கையை வெளியே நீட்டி ஆவேசமாக உத்தரவிட்டார்.
“நான் போறன்! ஆனா அவளுக்கு அடிக்காதீங்க!” என்று அழுத்தமாகச் சொன்னான் அவன்.
அது அவரை உசுப்பிவிட்டது. “இவ்வளவு பாசம் இருக்கிறவன்தான் அவளை வேண்டாம் எண்டு சொன்னியாக்கும்!” என்றார் நக்கலாக.
அந்தக் கேள்வியில் அவ்வளவு நேரமாகத் தாய்க்குப் பயந்து அவனது முதுகைப் பற்றியபடி நின்றவளின் கையிலோடிய அதிர்வை மிகவுமே தெளிவாக உணர்ந்தான் பிரணவன். மனம் பதறத் தொடங்கியது!
“இப்ப என்னத்துக்கு நல்லவனுக்கு நடிக்கிறாய்? நீ போட்ட ரூல்ஸ் எல்லாத்துக்கும் இவளின்ர அப்பா ஓம் எண்டு சொன்ன பிறகுதான் அவளில் உனக்குப் பாசம் அக்கறை எல்லாம் பொத்துக்கொண்டு வருது போல!” அவருக்கு அவனது முகத்திரையைக் கிழித்துவிடும் ஆவேசம்.
அவனே துணை என்பதுபோல அதுவரை நேரமும் முதுகோடு ஒண்டிக்கொண்டு நின்றவள் நடுக்கத்துடன் விலகுவது தெரிந்தது.
‘ஐயோ பொம்மா!’ அவன் மனம் துடித்தது! ‘விலகாதடி!’ அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தன. அவளுடைய தாயார் கண்முன்னால் நின்றதில் கையாலாகாதவனாக நின்றான்.
ஆர்கலி மெல்ல அவன் முன்னால் வந்து நின்றாள். அவள் விழிகளில் நம்பமுடியாத அதிர்ச்சி! கலங்கிச் சிவந்து போயிருந்த அகன்ற விழிகளில் பெரும் வலி.
‘பொம்மா அவசரப்படாதயடி!’ கண்களால் இறைஞ்சினான்.
“என்னை வேண்டாம் எண்டு சொன்னீங்களா?” கேட்டு முடிக்க முதலே கேவல் வெடித்தது அவளிடம்.


