சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேகவேகமாகச் செய்தன அவர் கைகள்.
“அம்மா..”
அழைத்த மகளைத் திரும்பிப் பார்க்காமலேயே, “என்ன நித்தி?” என்று கேட்டார்.
“அம்மா..!” தாய் தன்னைப் பார்க்காததில் உண்டான கோபத்தில் மீண்டும் சற்று அழுத்தி அழைத்தாள் நித்யா.
“அம்மாவுக்கு என்ன? சொல்வதைக் கொஞ்சம் விரைவாகச் சொல்லு. நின்று கதை கேட்க எனக்கு நேரமில்லை. உன் அண்ணா சாப்பிட வரப்போகிறான். நீயும் வெளிக்கிடு..”
அப்போதும் அவர் தன்னைக் கவனிக்காததில் மனம் சுணங்க, “நான் எப்போதோ வெளிக்கிட்டுவிட்டேன்..” என்றாள் நித்தி.
அந்தக் குரலில் மனம் கேளாமல் மகளைத் திரும்பிப் பார்த்தார் இராசமணி. வெள்ளைச் சீருடையில் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதற்குத் தயாராக நின்றவளிடம், “என்ன சொல்லு?” என்று கேட்டார் அவதியாக.
“எனக்கு குதி வைத்த செருப்பு வேண்டும்”
“செருப்பா? திரும்பவுமா? இதைக் கேட்டால் உன் அண்ணா கத்துவான்..” என்றவர், சமைத்து முடித்துவிட்ட உணவுகளை சாப்பாட்டுப் பெட்டிகளுக்குள் அடைக்கத் தொடங்கினார்.
அப்போதும் முகத்தை நீட்டிக்கொண்டு அங்கேயே நின்றவளிடம், “போனமாதம் தானே ஒன்று வாங்கினாய். அது இன்னும் நன்றாகத்தானே இருக்கிறது. திரும்பவும் எதற்கு இன்னொன்று? ஒவ்வொரு மாதமும் செருப்பு வாங்கக் காசுக்கு எங்கே போவது?” என்று அதட்டிவிட்டு, “இந்தா, சாப்பிடு” என்று உணவுத் தட்டை நீட்டினார்.
அப்போது, “அம்மா.. சாப்பிடத் தாருங்கள்..” என்றபடி, அங்கு வந்தான் ரஞ்சன்.
அவனிடமும் இன்னொரு தட்டை அவர் நீட்ட, அதை வாங்கியவன் அங்கே நின்ற தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று சாப்பாடு மேசையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
இரண்டு வாய் உள்ளே வைத்தபிறகும் அங்கே வராமல் சமையலறையிலேயே நின்றவளை, “நித்தி, இங்கே வா..” என்று அழைத்தான்.
தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தமையனிடம் வந்தாள் நித்யா.
அவளின் தட்டில் உணவு இன்னும் அப்படியே இருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன?” என்று கேட்டான்.
அந்த ‘என்ன’ அதட்டலாக வந்ததில் அவளுக்குள் ஒரு நடுக்கம் ஓடியது. இந்த அண்ணா கொஞ்சம் தன்மையாகக் கேட்கக் கூடாதா என்று மனதில் எண்ணியபடி, “அது.. அது அண்ணா…” என்று இழுத்தாள்.
பொறுமை இழந்த ரஞ்சன், “சொல்வதைக் கொஞ்சம் விரைவாகச் சொல்.” என்றான் மீண்டும் அதட்டலாக.
அவன் முகம் பாராது, “எனக்குக் குதி வைத்த செருப்பு வேண்டும்..” என்றாள் நித்தி வேகமாக.
அதைக் கேட்டவன் அவளை முறைத்தான். அதில் உதறல் எடுத்தாலும், “என் தோழிகள் எல்லோரும் வைத்திருக்கிறார்கள். அதைப்போல எனக்கும் வேண்டும்..” என்றாள் கொஞ்சம் பிடிவாதக் குரலில்.
“அவர்களிடம் இருப்பது எல்லாம் உன்னிடம் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏன், உன்னிடம் இருக்கும் செருப்புகள் எல்லாமே உன் தோழிகள் எல்லோரிடமும் இருக்கிறதா?”
“அது.. நீங்கள் ஷூக்கள் விற்கும் கடையில் வேலை செய்வதால், என்னிடம் எல்லா வகைச் செருப்புகளும் இருக்கிறது. அவர்களின் அப்பாக்கள் எல்லோரும் என்ன செருப்புக் கடையிலா வேலை செய்கிறார்கள்?”
அதைக் கேட்டவனின் முகம் இறுகியது. கோபத்தில் எதையாவது சொல்லிவிடுவோமோ என்று பயந்து, மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து மடமட என்று பருகினான்.
கிளாசை மேசையில் வைத்தபடி, “இங்கே பார். நான் செருப்புக் கடையில் தான் வேலை செய்கிறேன். அதற்காக வீடு முழுவதும் செருப்புகளைக் கொண்டுவந்து நிரப்ப முடியாது. வீட்டில் இருப்பதை முதலில் போடு. பிறகு புதிது வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம்.” என்றான் கண்டிப்பான குரலில்.
இனி என்ன சொன்னாலும் தமையன் கேட்க மாட்டான் என்று தெரிந்ததில் முகம் தொங்க நின்றவளை, “சாப்பிடு!” என்கிற அவனின் ஒரு அதட்டல், வேகமாக உணவை வாய்க்குள் அடைக்க வைத்தது.
முகம் சோர உணவை உண்ணும் நித்தியைப் பார்க்க, சொன்னதைக் கொஞ்சம் தன்மையாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது ரஞ்சனுக்கு.
அவளின் காதில் தோடு என்கிற பெயரில் ஒட்டிக்கொண்டிருந்த குண்டுமணித் தங்கத்தைப் பார்த்தவனுக்கு, கழுத்து கைகள் எல்லாம் வெறுமையாக இருப்பதும் பட்டது. பள்ளிக்கூடத்துக்கு நகைகள் போடக்கூடாது என்றாலும், போடுவதற்கும் அவளிடம் ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை!
அனுமதி இல்லாமலேயே அவன் வேலை செய்யும் கடை முதலாளியின் மகளின் செழிப்பு கண்முன்னால் வந்து போனது. அந்தப் பெண்ணின் காதில் தொங்கும் வகை வகையான தோடுகள் மட்டுமே அவனறிந்து பலது. அவள் ஒரு தடவை அணிந்த உடைகளை மறுதடவை அணிந்து அவன் கண்டதே இல்லை. அவளை விட இவளுக்கு என்ன ஒரு இரண்டு வயது குறைவாக இருக்குமா?
அவன் தங்கை என்ன நகை நட்டா கேட்டாள்? ஒரு சோடிச் செருப்புதானே?
சமையலறைப் பக்கம் திரும்பி, “நித்தி பள்ளிக்கூடத்தால் வந்தபிறகு அவளோடு கடைக்கு வாருங்கள் அம்மா…” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “அண்ணா.. உண்மையாகவா? வாங்கித் தருகிறீர்களா?” என்று உற்சாகத்தில் குதித்தாள் நித்யா.
“ம்.. ஆனால் இதுதான் கடைசி. இனி நீ கேட்கக் கூடாது!” என்றான் கண்டிப்பான குரலில்.
“சரியண்ணா.. இனிக் கேட்கமாட்டேன்.”
“சாப்பிட்டுவிட்டாய் என்றால் கிளம்பு, நேரமாகிறது..” என்றபடி எழுந்து கையைக் கழுவினான்.
இதை எல்லாம் சமையலறையில் வேலைகளைச் செய்தபடியே கேட்டுக்கொண்டிருந்த இராசமணிக்கு, தன் பிள்ளைகளை நினைத்து வேதனையாக இருந்தது.
அதுவும் பதினெட்டு வயது நிரம்பிய நித்தியின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போகும்போது, அவள் படும் பாட்டைப் பார்க்கையில் மிகவும் கஷ்டமாக இருக்கும் அவருக்கு.
‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று சும்மாவா சொன்னார்கள்.
பிறந்ததில் இருந்தே வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்திருக்க, ஒருவேளை நித்திக்கு இப்படியான ஆசைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். பதின்மூன்று வயதுவரை செல்வச் செழிப்பில் வளர்ந்தவளை திடீரென்று வறுமை தாக்கினால், என்னதான் செய்வது?
இராசமணியின் கணவர் வெங்கடேசன். வைத்தியராகப் பணிபுரிந்தவர். கைராசிக்காரர் என்று பெயர் எடுத்து இருந்ததாலேயே கைநிறையச் சம்பாதித்தார். அதைவிட குடும்பச் சொத்துக்களும் இருந்ததில் அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ பணத்துக்கு என்றுமே குறைவு வந்ததில்லை.
அதனாலேயே, அந்தப் பணம் இருக்கையில் அதைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. அவருக்கு மட்டுமல்ல, கணவனை மலைபோல் நம்பியிருந்த இராசமணிக்கும் அது தோன்றாமலே போயிற்று!
அன்று அவர் கொஞ்சமாவது சேமித்து வைத்து இருந்திருக்க, இன்று அவரின் மனைவி பிள்ளைகளுக்கு இந்த நிலை வந்திருக்காது.
ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியுமா என்ன?
அப்படித்தான் ஒருநாள் மிகவும் சிக்கலான ஆபரேஷன் ஒன்றை வெற்றிகரமாக முடித்துவிட்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரின் உயிரை, வீதி விபத்து ஒன்று தனக்கு விருந்தாக்கிக் கொண்டது.
அன்றிலிருந்து அவரின் குடும்பநிலை தலைகீழாக மாறிப் போனது.
வெங்கடேசன் உயிருடன் இருந்த காலத்தில் சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னபோது, நீங்கள் தான் அண்ணா எங்கள் சொத்தே என்று சொன்ன அவரின் சகோதரர்கள் மூவரும், அந்த அண்ணா இறந்ததுமே அடித்துப் பிடித்துச் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டார்கள்.
இதில் இன்றுவரை இராசமணிக்குப் புரியாத புதிராக இருப்பது, எவ்வளவோ சொத்துக்கள் இருந்தும் அவற்றைப் பிரித்தபோது அவர்கள் குடியிருக்கும் இந்த வீடு மட்டுமே அவர்களுக்குச் சொந்தமாக வந்தது எப்படி என்பதுதான்?
கேள்விகள் பல இருந்தாலும் அதைக் கேட்கும் தைரியமோ உரிமையோ அவருக்கு வழங்கப்படவில்லை. அப்போது பக்குவப்படாத பதினெட்டு வயதில் இருந்த ரஞ்சனுக்கும் அவற்றைப் பிரித்தாராயும் புத்தி இருக்கவில்லை. அதைவிட கண்ணா, ராசா என்று கொஞ்சும் இரண்டு அத்தைகளையும் சித்தப்பாவையும் சந்தேகப்படவும் தோன்றவில்லை.
ஏன், இந்தப் பெரிய வீடு அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதில் அப்போது அவனுக்குப் பெருமையும் கூட!
ஆனால் இன்று? அவர்களின் சுயரூபங்களை அறிய அறிய தனக்குள் இறுகிக் கொண்டே போய்விட்டான். அவன் இயல்பாகச் சிரிப்பதை மறந்தே பலகாலம் ஆகியிருந்தது.
தகப்பனை இழந்துவிட்ட இந்த ஐந்து வருடங்களில், அவன் அடைந்த இழப்புக்கள் எத்தனை? அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் எத்தனை? இதை எல்லாம் எண்ணிப் பார்த்த இராசமணிக்கு நெஞ்சே அடைத்துவிடும் போலிருந்தது.
ஆனாலும் தன்னைத் தேற்றிக் கொண்டார். அது அவருக்குப் புதிதா என்ன?
அவர்கள் இருவரினதும் மதிய உணவோடு வந்தவர், “உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா ரஞ்சன்?” என்று மகனிடம் கேட்டார். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும், மாதக் கடைசி கையைக் கடித்தது.
“என்னிடம் எங்கே..?” என்று மெல்லிய சினத்தோடு ஆரம்பித்தவன், தாயின் முகம் கலங்குவதைக் கண்டு தன்னை அடக்கினான்.
“பொறுங்கள் பார்க்கிறேன்..” என்றவன் தங்கையிடம் திரும்பி, “வா..” என்றுவிட்டு, வாசலை நோக்கி நடந்துகொண்டே தன்னுடைய ‘பர்ஸ்’சை எடுத்து ஆராய்ந்தான்.
அதில் இருந்ததைப் பொறுக்கிக் கொடுத்துவிட்டு, “இவ்வளவு தான் இருக்கிறது. ஏதும் அவசரத் தேவையா? முதலாளியிடம் முன் பணம் வாங்கவா?” என்று கேட்டான்.
கண்கள் கலங்கிவிடும் போல் இருந்தது இராசமணிக்கு. அவர் மகன் இன்னொருவரிடம் கடனுக்குக் கை நீட்டுவதா?
கைகட்டியே வேலை செய்கிறானாம் என்று துடித்த மனதை அடக்கி, “சமையல் சாமான்கள் கொஞ்சம் வாங்கவேண்டும். அதுதான். இது போதும்..” என்றார்.
“சரிம்மா. வருகிறோம்.” என்றவன், தன்னுடைய உணவுப் பையையும் எடுத்துக்கொண்டு, மோட்டார் வண்டியில் தங்கையையும் ஏற்றிக்கொண்டு வேலைக்குச் சென்றான்.
அவளைப் பள்ளிக்கூட வாசலில் இறக்கி விட்டுவிட்டு, “போகும்போது கவனமாகப் போ..” என்று, தினமும் சொல்வதை இன்றும் சொல்லிவிட்டுத் தன்னுடைய கடைக்குச் செல்லும் வழியில் வண்டியை விட்டான்.
சிரித்த முகத்தோடு செல்லும் பள்ளி மாணவர்களைப் பார்க்கையில் அவன் முகத்தில் ஏக்கம் படர்ந்தது. அவனும் முன்னொரு காலத்தில் இப்படித்தானே.
அப்போதெல்லாம் சோகம் என்றால் என்னவென்று அறிந்திருப்பானா? கஷ்டம் என்றால் என்னவென்று தெரியுமா? ஏன், இந்த வறுமை, வெறுமை, இயலாமை, கோபம், ஆத்திரம், இறுக்கம் என்று எதையுமே அவன் அறிந்ததில்லையே!
இன்று?
மனதின் இறுக்கம் முகத்தில் தெரிய நிமிர்ந்தவனின் பார்வையில், எதிரில் வந்துகொண்டிருந்த சாதனா பட்டாள். அவனின் பெரியத்தை மல்லிகாவின் மகள்!
அவனைக் கண்டும் காணதது போல் செல்பவளைப் பார்த்து அவன் முகம் கல்லாக இறுகியது. ஒரு காலத்தில் ‘ரஞ்சன் மச்சான்’ என்றபடி அவன் பின்னாலேயே சுற்றியவள்.
“உங்களுக்குத்தான் என்னைத் திருமணம் செய்து வைப்பார்களாம். உண்மையாகவா ரஞ்சன் மச்சான்..?” என்று இமைகளைப் படபடவென்று கொட்டியபடி கேட்டவள்!
அந்தப் பார்வையிலேயே அவனைக் கிறுகிறுக்க வைத்தவள்!
உள்ளுக்குள் மலர்ந்த பெருமையோடு, “உன்னை நான் கட்ட மாட்டேன் போ..” என்று அவனைப் பொய்யாகச் சொல்ல வைத்தவள்!
பெற்றவரை இழந்து பரிதவித்து நின்றபொழுது, ஆறுதல் தேடி அலைந்த அவன் விழிகளைக் கண்டுவிட்டு அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவள்!
வெங்கடேசன் இறந்தபோது அவன் உயர்தரப் பரீட்சையை(ப்ளஸ் டூ) முடித்திருந்தான். வேதனையோடு நாட்கள் கடக்க, நல்ல பெறுபேற்றோடு பரீட்சையில் சித்தி அடைந்ததில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடமும் கிடைத்தது அவனுக்கு. அதுவும் அவனது அப்பாவைப் போலவே மருத்துவனாக ஆசைப்பட்டவனுக்கு மருத்துவ பீடமே கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி.
அந்தச் சந்தோசத்தில் ஓரளவுக்கு தந்தையின் இறப்பில் இருந்து மீண்டு, மகிழ்ச்சியோடே படிக்கச் சென்றான்.
அதன்பிறகு வந்த இரண்டு வருடங்கள் மிக நன்றாகத்தான் சென்றது. அவனுக்குப் பிடித்த படிப்பு, புதிய சூழல், புதிய நண்பர்கள் என்று அவன் நாட்கள் கடந்தன.
அப்போதெல்லாம் விடுமுறைக்கு வீட்டுக்கு வருபவன், அத்தைகளின் வீட்டுக்கோ சித்தப்பாவின் வீட்டுக்கோ போகலாம் என்றால், தாய் எதையாவது சொல்லித் தடுத்துவிடுவார். ஏன் என்கிற கேள்வி எழுந்தாலும், அதை அவன் ஆழமாக யோசித்தது இல்லை.
இரண்டாவது வருடக் கடைசியில், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவனின் வாழ்க்கை மீண்டும் ஒருமுறை தலைகீழாக மாறிற்று!
அன்று மாலை இராசமணி நித்தியுடன் கோவிலுக்குச் சென்றுவிட, தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவனை வீட்டுத் தொலைபேசி தொல்லை செய்தது.
எடுத்துக் காதில் வைத்தவனின் தலையில், “தம்பி, அம்மாவிடம் வரும் திங்களுக்கு முதல் நகைகளுக்கு வட்டியைக் கட்டச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் எல்லாமே அறுதியாகிவிடும்..” என்று குண்டை இறக்கினார், அந்தப் பக்கம் பேசிய நகை அடகு வைக்கும் கடைக்காரர்.
என்ன நகை? என்ன வட்டி? என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றவனின் பார்வையில், கோவிலால் வந்த தாயின் வெறும் கழுத்தும் கைகளும் அப்போதுதான் பட்டது.
அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்!
அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந்த சமையலறை வரை பட்டது.
பட்ட நொடி உள்ளத்தால் துடித்துத்தான் போனான். இதை இவ்வளவு நாட்களாக கவனிக்காமல் விட்டோமே என்று மருகினான். அவனுக்காக அவர்கள் கஷ்டப் பட்டார்களா?
அம்மாவையும் தங்கையையும் இப்படிக் கஷ்டப்பட விட்டுவிட்டு அத்தைகளும் சித்தப்பாவும் என்ன செய்கிறார்கள் என்று கோபத்துடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றவனை, அங்கிருந்த ஒருவர் கூட வரவேற்காதது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது.
இவர்கள் எல்லாம் அவன் சொந்தம் தானா? முன்னர் பாசத்தை மட்டுமே கொட்டிய அந்த மனிதர்கள் தானா என்கிற பெரும் சந்தேகமே எழுந்தது.
அப்போதும், பெரும் சிரமப் பட்டுத் தனிமையில் சாதனாவைச் சந்தித்து, “என்ன சது, நீயாவது அம்மாவையும் நித்தியையும் பார்த்துக் கொள்ளக் கூடாதா..?” என்று மனத்தாங்கலோடு கேட்டான்.
வருங்காலத்தில் அவனது மனைவியாகப் போகிறவள் அல்லவா! அந்த உரிமையில் வந்திருந்தது அந்த மனத்தாங்கல்.
அலட்சியமாக அவனைப் பார்த்து, “அதென்ன நீயாவது என்று கேட்கிறீர்கள். நானென்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா?” என்று கேட்டாள் அவள்.
“விளையாடாதே சது. என் வருங்கால மனைவி நீதானே அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும்..”
“என்னது? நான் உங்கள் வருங்கால மனைவியா? கனவு காணாதீர்கள். என் அப்பா எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கப் போகிறார்..” என்றாள் எள்ளலும் பெருமையும் குரலில் மிதக்க.
அதைக் கேட்டவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “இவ்வளவு நாளும் என் பின்னால் சுற்றினாயே. அது எதற்கு? என்னிடம் இருந்த பணத்துக்காகவா?” என்று சீறினான்.
ஒரு நொடி அவள் முகம் கன்றியது. உடனேயே நிமிர்ந்து, “அப்போதெல்லாம் என்னைக் கட்ட மாட்டேன் என்று சொன்ன நீங்கள் இன்று வந்து வருங்கால மனைவி என்கிறீர்களே? என்னிடம் உள்ள பணத்துக்காகவா ரஞ்சன்?” என்று திமிராக அவன் கேட்ட கேள்வியையே திருப்பிக் கேட்டாள் அவள்.
ரஞ்சன்?
மச்சான் என்கிற சொற்பதம் காணாமல் போயிருந்தது. சொற்பதம் மட்டுமல்ல சொந்தமும் என்று தெளிவாகப் புரிந்து போயிற்று அவனுக்கு!
‘திரும்பவும் பணம் சம்பாதித்து உன்னையே கட்டிக் காட்டுகிறேன்டி!’ என்று மனதால் உறுதி பூண்டான். ஆத்திரத்தோடு முறைத்துப் பார்த்தவனிடம் ஏளனம் மிக்க வெட்டும் பார்வை ஒன்றை அலட்சியமாக வீசினாள் சாதனா.
கோபத்தில் கையை நீட்டி விடுவோமோ என்று பயந்து விறுவிறு என்று திரும்பி வந்துவிட்டான்.
அன்றோடு அவன் படிப்பும் நின்றுபோனது. கனவுகளும் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது.
வேலை தேடியாகவேண்டிய கட்டாயம்! எங்கே என்ன வேலை தேடுவது? அதை எப்படித் தேடுவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
வழி தெரியாது விழி பிதுங்கி நின்றவனுக்குப் போன இடமெல்லாம் கிட்டியது தோல்வியே!
படித்து முடித்தவனுக்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்க, படிப்பை இடையில் நிறுத்தியவனுக்கு?
அவர்களுக்குத் தெரிந்த ஒருவர், அவன் இப்போது வேலை செய்யும் ‘ரிபொக்’ செருப்புகள் விற்கும் கடைக்கு ஆட்கள் வேலைக்கு வேண்டுமாம், போகிறாயா? என்று கேட்டபோது, அவனுக்குக் கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது.
நான் என்ன அந்தளவுக்கு கேவலமானவனா? போயும் போயும் ஒரு செருப்புக் கடையில் வேலை செய்வதா? என்று ஆத்திரப் பட்டான்.
நாட்கள் இப்படியே கடக்க, நகைகள் எல்லாம் அடவு கடைக்காரனுக்கே சொந்தமாகிப் போக, இனி விற்றோ அடவு வைத்தோ சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலை.
வாழ்க்கையே வெறுத்தது. செத்துவிடலாமா என்று கூட யோசித்தான். அப்போது அவனருகில் வந்தமர்ந்த தங்கையைப் பார்த்ததும் கண்களில் நீர் துளிர்த்தது அவனுக்கு.
அவனும் இறந்துவிட்டால் தங்கைக்கும் தாய்க்கும் யார் துணை?
இல்லை! நான் அழக்கூடாது. வாழ்ந்து காட்டுகிறேன்! முன்னுக்கு வந்து காட்டுகிறேன்! என்று வைராக்கியமாக முடிவை எடுத்தான்.
‘நீ ஒரு மருத்துவனாகி ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும்’ என்று சொல்லும் தந்தையின் கனவு என்னாவது என்று கேட்டது உள்ளம்.
ஏழைகளுக்குச் சேவை செய்ய யாரும் வருவார்கள். என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள நான் மட்டும்தானே இருக்கிறேன் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
அடுத்தநாளே அந்த மனிதரைத் தேடிச் சென்று செருப்புக் கடை வேலைக்குச் சம்மதித்தான்.
என்னதான் முடிவை எடுத்து விட்டாலும், கடை வாசல்படியை மிதிக்கையில் இப்படியே திரும்பி ஓடிவிட்டால் என்ன என்றுதான் தோன்றியது. அந்தளவுக்கு வலித்தது.
தூணாக நின்ற தந்தையின் இழப்பைப் பல மடங்காக அந்த நொடி உணர்ந்தவன் பல்லைக் கடித்துக்கொண்டு வேலைக்குச் சேர்ந்தான்.
ஓடிற்று! இதோ கண்ணை மூடித் திறக்க முதல் மூன்று வருடங்கள் மிக வேகமாக ஓடிற்று!
ஆனால், அவன் நினைத்தது போன்று முன்னுக்கு வரத்தான் முடியவில்லை.
காலை எட்டு மணிக்குத் தொடங்கும் வேலை இரவு எட்டு மணிக்கு முடியும் என்பது பேச்சாக இருந்தாலும்,அந்த முடிவு நேரம் ஒன்பது, பத்து, பதினொன்று ஏன் நடுச்சாமம் பன்னிரண்டு கூட ஆனதுண்டு.
ஒரே ஒரு ஆறுதல். நல்ல சம்பளம்! இவர்கள் இன்னும் ஐந்து செருப்புக் கடைகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பதாலோ என்னவோ, வேலை செய்பவர்களுக்கு மனம் நோகாத அளவுக்கு இருந்தது அவர்கள் கொடுக்கும் சம்பளம்.
ஆனால், முன்னேறத் துடிக்கும் அவனுக்கு அது போதாதே!
வண்டியைக் கொண்டுவந்து கடைக்கு முன்னால் நிறுத்தியவனது மனம் என்றும்போல் இன்றும் கொந்தளித்த போதும், இன்று சற்று அதிகமாகவே சஞ்சலப் பட்டது.
சாதனாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டதனால் அப்படி இருக்கிறது போலும் என்று எண்ணிக்கொண்டே, உணவுப் பையுடன் கடைக்குள்ளே காலடி எடுத்துவைத்தான்.
“இதயரஞ்சன்! இங்கே வாருங்கள்!” சற்று அதிகாரமாக அழைத்தது ஒரு பெண்குரல்.
அந்த அதிகாரத் தொனியே ஒருவித எரிச்சலைக் கொடுத்தது என்றால், அவனது முழுப் பெயரைச் சொல்லி அழைத்தது சினத்தைக் கொடுத்தது.
அதையெல்லாம் முதலாளி வர்க்கத்திடம் தொழிலாளி வர்க்கம் காட்டவா முடியும்?
பொறுமையைக் இறுக்கிப்பிடித்தபடி அவன் திரும்பிப் பார்க்க, நான்கைந்து பெண்கள் புடைசூழ நின்றுகொண்டிருந்தாள் சித்ரயாழி!