சூரியன் தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்துகொண்டிருந்த பொழுதில், அனல் கலந்த காற்று முகத்தில் மோத ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த சித்ராவின் இதழ்களில் புன்னகை மறைவேனா என்றிருந்தது.
அந்தப் புன்னகைக்குக் காரணம் அவளது இதயனே!
அவன் கோபக்காரன் என்று தெரிந்தாலும் அவனைக் கோபப் படுத்திப் பார்க்கவே அவளுக்குப் பிடித்தது! அவனது அதட்டல்களைக் கேட்கவே பிடித்தது. கோபத்தில் அவளை முறைப்பவனின் விழிகளை ரசிக்கவே பிடித்தது. மொத்தத்தில் அவனை அவளுக்கு மிக மிகப் பிடித்தது!
இதெல்லாம் எத்தனை நாளாக? தெரியாது!
ஆனால் இனி அவனின்றி அவளுக்கென்று ஒரு வாழ்வில்லை. அதுமட்டும் மிக நன்றாகத் தெரிந்தது!
இப்படியே அவனைச் சுற்றிய எண்ணங்களோடு பயணித்தவளுக்கு வீடு விரைந்து வந்துவிட்டது போல் இருந்தது. அவனது நினைவுகள் விடுபடப் போகிறதே என்று மனம் சிணுங்க, ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவளை முறைப்போடு எதிர்கொண்டார் லக்ஷ்மி.
“இவ்வளவு நேரமாக எங்கேடி போனாய்?”
“ம்..! மாடு மேய்க்க.” வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக அவர் கேள்வி கேட்டதில் எழுந்த கடுப்பில் சொன்னாள் சித்ரா.
“பிறந்தநாள் அதுவுமா உன்னை அடிக்க வேண்டாம் என்று பார்க்கிறேன். எனக்குக் கோபத்தைக் கிளப்பாதே. கோவிலுக்குப் போய்விட்டு, அதிலே ஓடிப்போய்க் கடையில் ‘பில்’லைக் கொடுத்துவிட்டு வர ஒரு மணித்தியாலம் போதும். நீயானால் மூன்று மணித்தியாலம் கழித்து வருகிறாய்.” என்றவரை இப்போது சித்ரா முறைத்தாள்.
“ஒரு மணித்தியாலம் போதும் என்றால் அதை நீங்களே செய்திருக்க வேண்டியது தானே. என்னை எதுக்கு அனுப்பினீர்கள்? ஒரு மனுஷி வெளியே போனால் அவளுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் என்று கொஞ்சமாவது யோசிக்கிறீர்களா?” என்று படபடத்தவள், எப்போதும் படபடக்கும் லக்ஷ்மியின் மகள் தான் என்று நிரூபித்தாள்.
“என்னது? உனக்கு ஆயிரத்தெட்டு வேலையா? அதில் ஒன்றைச் சொல்லு பார்ப்போம்? எல்லாமே உருப்படியில்லாத வேலைகள்.”
“அதை எல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது. வயது போன காலத்தில் வாயை வைத்துக்கொண்டு பேசாமல் இருங்கள். அங்கே அடுப்படியில் ஏதாவது வேலை இருக்கும். போங்கள்! போய் அதைப் பாருங்கள்.” என்றவளின் பேச்சைக் கேட்டபடி, மாடியில் இருந்து வந்துகொண்டிருந்த சந்தானம் பெருங்குரல் எடுத்துச் சிரித்தார்.
லக்ஷ்மி கோபமாக அவரிடம் திரும்பினார்.
“என்ன சிரிப்பு? உங்கள் மகள் என்னை வேலைக்காரி என்று சொல்லாமல் சொல்கிறாள். அதைக் கேட்டு உங்களுக்குச் சிரிப்பா வருகிறது?” என்று கணவரிடம் பாய்ந்தார் அவர்.
“அவள் பேச்சை ரசிப்பதை விட்டுவிட்டு எதற்குக் கோபப் படுகிறாய்?” என்று சொன்னவர் மகளிடம் திரும்பி, “கண்ணனிடம் ‘பில்’லைக் கொடுத்துவிட்டாயா சித்து?” என்று வினவினார்.
“நீங்களும் இல்லாமல் அவர் எப்படிப்பா வங்கிக்குப் போவார்? அதனால் இ.. ரஞ்சனிடம் அதைக் கொடுத்துவிட்டேன்.” என்றவள், சட்டெனக் குறும்பு மிளிர, “இந்த அம்மா எப்போது பார்த்தாலும் கிழவி மாதிரி என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறார் அப்பா. அதனால் இவரை விவாகரத்துச் செய்து விடுங்கள். நான் உங்களுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கிறேன்.” என்றாள்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த மனைவியின் முகம் கடுப்பதைப் பார்த்தவாறே, “நீ எப்போது கேட்பாய் என்று நான் காத்திருந்தேன் சித்து. எனக்கும் உன் அம்மாவின் முகத்தைப் பார்த்துப் பார்த்தே அலுத்துவிட்டது. சமையலும் சலித்துவிட்டது. புதிதாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.” என்றார் அவரும் மகளுக்கு இணையாக.
“ஓ..! இந்தக் கிழட்டுப் பிள்ளைக்கு புதுப்பெண் கேட்கிறதோ? நெருப்புக்கட்டை தான் வரும்!” என்று கணவரை மிரட்டியவர், அவரிடம் மகளைப் பற்றி முறையிடவும் மறக்கவில்லை.
“அவள்தான் என்னவோ உளறுகிறாள் என்றால், நீங்களும் அவளுக்கு இணையாகக் கதைக்கிறீர்கள்? அதுவும் வயதுக்கு வந்த பெண்ணிடம்? என்ன பழக்கம் இதெல்லாம்.” என்று சினந்த மனைவியையும், அவளது கோபத்தை வேடிக்கை பார்க்கும் மகளையும் பார்த்தவருக்கு இருவரும் இரு துருவங்கள் என்றுதான் தோன்றியது.
“எதற்கு உனக்கு இப்படி எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது லக்ஷ்மி? நீ இப்படிக் கோபப்படுவதால் தான் அவளும் உன்னை எப்போதும் சீண்டுகிறாள்.” என்று மனைவியைச் சமாதானப் படுத்தப் பார்த்தார் அவர்.
“அதுசரி! என்றைக்கு நீங்கள் உங்கள் மகளை விட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள்? எப்போது பார்த்தாலும் என்னிடம் மட்டும் எதையாவது சொல்லுங்கள்.” என்று நொடித்துக் கொண்டார், பாசத்தைக் கூட கோபமாகக் காட்டும் அந்தப் பெண்மணி.
“அவள் என் மகள் என்றால் நீ யாராம்? நீயில்லாமல் அவள் எனக்கு எப்படி வந்தாளாம்?” என்று கேட்டவர் கண்ணால் மனைவியிடம் சிரித்தார்.
லக்ஷ்மிக்கோ சட்டென முகம் சிவந்துவிட்டது. அதை மகளுக்குத் தெரியாமல் மறைக்க முயன்றபடி, “ஐயோ.. உங்களை! எப்போது எதைச் சொல்வது என்று விவஸ்தையே இல்லையா..” என்று கடிந்து கொண்டார்.
தாய் தந்தை இருவரையும் குறுகுறு என்று பார்த்துக்கொண்டே, “ஹலோ ஹலோ இங்கே என்ன நடக்கிறது? நான் ஒருத்தி இருப்பது உங்கள் இருவருக்கும் தெரிகிறதா இல்லையா? என்னை வைத்துக்கொண்டே ரொமான்ஸ் செய்கிறீர்களே.” என்று அவர்களுக்குள் இடை புகுந்தாள் மகள்.
இந்தக் காலத்துப் பெண்ணான சித்ராவுக்கு பெற்றவர்களிடம் ‘ரொமான்ஸ் செய்கிறீர்களா’ என்று கேட்பது மிகவும் சாதரணமாக இருந்தது. ஆனால் அந்தக்காலத்து மனுஷியான, குடும்பக் கூட்டுக்குள்ளேயே வளர்ந்த அவளது தாய்க்கு அது அபத்தமாகப் பட்டது.
பதற்றமும் கோபமும் ஒருங்கே வந்துவிட்டது அவருக்கு. “பார்த்தீர்களா, எப்போதும் என்னையே குற்றம் சொல்வீர்களே. அம்மா அப்பாவிடம் கதைக்கும் கதையா இது? எனக்கு இவளையும் இவளின் வாய் துடுக்கையும் நினைத்தால் பயமாக இருக்கிறது. முதலில் இவளுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வையுங்கள். கண்ட கருமத்தையும் நம்மிடமே கதைக்கிறாள்.” என்று முறையிட்டார்.
“ஆமாம் அப்பா. விரைவாக அந்த வேலையைப் பாருங்கள். உங்கள் மகளுக்குத் திருமணம் செய்துகொள்ளும் ஆசை வந்துவிட்டது.” என்று வாய்க்குள் முனகினாள் சித்ரா.
“என்னடி சொல்கிறாய்? சத்தமாகச் சொல்!” லக்ஷ்மி அவளை அதட்டினார்.
“ம்..! அந்த வேலையை முதலில் பாருங்கள் என்றேன். இல்லாவிட்டால் காலம் முழுவதும் இங்கேயே இருந்து உங்களைத் தொல்லை பண்ணுவேன்.” என்றவள், தாயின் முறைப்பைக் கண்டுவிட்டு, “அப்பா, இனி அம்மா பாடப்போகும் பாட்டை நீங்களே கேளுங்கள்.” என்றுவிட்டு தன்னுடைய அறையை நோக்கி வேகமாக மாடியேறிச் சென்றாள்.
“கடவுளே! அவள் பேச்சைக் கேட்டீர்களா? நல்ல நாள் அதுவுமா இப்படி அபசகுனமாகப் பேசுகிறாளே. அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பாருங்கள் என்று எத்தனை தடவை சொல்கிறேன். கேட்கிறீர்கள் இல்லையே! இன்றோடு இருபத்தியொரு வயதாகிறது. இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறாள். ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லையே. ஏதும் கஷ்ட துன்பம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.” என்று பதறினார் அவள் அன்னை, அவரின் வாய் முகூர்த்தம் பலிக்கப் போவதை அறியாமல்.
கணவன், குழந்தை என்று குடும்ப வாழ்க்கை வாழ்வதே ஒரு பெண்ணின் சிறப்பு என்று எண்ணும் அவருக்கு அவளின் பேச்சு நெஞ்சைப் பதற வைத்தது.
இந்தக் காலத்துச் சிட்டுக் குருவியான மகளைப் புரிந்துகொள்வது அவருக்குச் சிரமமாகவே இருந்தது. அதனாலேயே தாய்க்கும் மகளுக்கும் எப்போதும் வாக்குவாதம் உண்டாகும்.
மனைவியின் பதட்டத்தை உணர்ந்து கொண்ட சந்தானம் அவரது தோளில் தட்டிக் கொடுத்தார். “சும்மா, தேவையில்லாமல் கவலைப்படாதே லக்ஷ்மி. அப்படி ஒன்றும் நடக்காது. முதலில் அவள் படிப்பை முடிக்கட்டும். மிகுதியைப் பிறகு பார்ப்போம்.” என்று அவரைத் தேற்றினார்.
“மிகுதியை எப்போது பார்க்கப் போகிறீர்கள்? எப்போது சொன்னாலும் படிப்பை முடிக்கட்டும் என்கிறீர்களே, படித்து முடித்ததும் அவளை என்ன வேலைக்கா அனுப்பப் போகிறோம். கல்யாணம் தானே செய்து வைக்கப் போகிறோம். அதை இப்போதே செய்யுங்களேன். உங்களுக்கும் முடியவில்லை. அவளுக்கும் வயது வந்துவிட்டது. அவள் கல்யாணத்தை முடித்துவிட்டு, கடைகளையும் வாடகைக்குக் கொடுத்துவிட்டு வீட்டோடு நிம்மதியாக இருங்கள் என்றால் கேட்கிறீர்கள் இல்லையே..” என்று கவலைபட்டார் அவர்.
“எனக்கு என்ன முடியவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீதான் வேலைகளைப் பார்க்க விடுகிறாய் இல்லை.” என்ற கணவரை முறைத்தார் லக்ஷ்மி.
“சும்மா வாயால் சொல்லாதீர்கள். படியிறங்கி வந்ததே உங்களுக்குக் களைக்கிறது. வந்ததும் வராததுமாக எதற்கு இப்போது சோபாவில் சாய்ந்தீர்களாம்? முன்னர் எல்லாம் நீங்கள் இப்படி ஓரிடத்தில் அமருகிற ஆளா?”
“சரிம்மா, விடு. கொஞ்ச நாளானால் எனக்கு எல்லாமே சரியாகிவிடும். பிறகு சித்துவுக்கும் உன் ஆசைப்படி மிகச் சிறப்பாக திருமணத்தைச் செய்வோம். விளையாட்டுக்கு அவள் சொல்வதை எல்லாம் நீ கணக்கில் எடுக்காதே.” என்று மனைவியைத் தேற்றிய சந்தானத்துக்கே தெரியவில்லை, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், ஒருவித கட்டாயத்திலேயே அவளது திருமணம் நடக்கப் போகிறது என்பது!
அப்போது காயப்பட்ட மனதோடு, கையாலாகாத தனத்தோடு கையைக் கட்டி அந்தத் திருமணத்தை அவர் வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறார் என்பதும்.
மேலே தன்னுடைய அறைக்குச் சென்ற சித்ராவின் உள்ளத்தில் மீண்டும் அவள் மனக் கள்வனே வந்து நின்றான். சும்மாவல்ல, கோபப்பார்வையுடன்.
“அடப்பாவி! கற்பனையில் கூட வந்து முறைக்கிறானே. இவனை எல்லாம் காதலிக்க வைத்து, ஒரு கல்யாணத்தைக் கட்டி நான் குடும்பத்தை நடத்தின மாதிரித்தான்!” என்று செல்லமாக வாய்விட்டே சலித்துக் கொண்டாள்.
தன் கைப்பையில் இருந்த அவனது கைக்குட்டையை எடுத்தவள், அதை ஆசையுடன் தடவிக் கொடுத்தாள். அதிலிருந்த வியர்வை அவனுடைய உழைப்பைச் சொல்வது போலிருந்தது அவளுக்கு.
அதைத் தன் கையாலேயே அலசிக் குளியலறையில் காயப்போட்டாள். அன்று மட்டுமல்ல அடுத்தடுத்த நாட்கள் கூட ரஞ்சனுடன் அவள் என்னவெல்லாம் பேச நினைகிறாளோ அதை எல்லாம் அந்தக் கைக்குட்டையுடனே பேசிக் கொண்டாள்.
அந்தச் சில நாட்களிலேயே மனதளவில் அவன் அவளுக்கு மிக நெருக்கமானவனாகிப் போனான்.
இங்கே ரஞ்சனுக்கு சித்ரா வராததில் அடுத்தடுத்த நாட்கள் நிம்மதியாகவே கழிந்தது.
அவ்வப்போது கடைக்கு வந்து செல்லும் சந்தானத்தோடு, அவரது சோர்வு காரணமாக லக்ஷ்மி அம்மாளும் கூடவே வந்ததில், அவரைத் தனிமையில் சந்தித்துப் பணம் கேட்கும் சந்தர்ப்பம் அவனுக்கு அமையவே மறுத்தது.
லக்ஷ்மியைப் பற்றியும் அவரது படபடப்பான குணத்தைப் பற்றியும் அறிந்திருந்தவனுக்கு, அவர் முன்னிலையில் அதுபற்றிக் கதைக்கத் தயக்கமாகவும் இருந்தது.
அப்படியிருந்தும் ஒருநாள் கணவனும் மனைவியுமாக அவர்கள் வந்திருந்தபோது, கடையில் லக்ஷ்மி செருப்புக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு சந்தானத்திடம் விரைந்தான் ரஞ்சன்.
“அங்கிள், உங்களோடு கொஞ்சம் கதைக்கவேண்டும். நேரமிருகிறதா?” என்று கேட்டவன் தொடர்ந்து, “முடியுமா?” என்று அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கேட்டான்.
சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து, “முடியாமல் என்னப்பா. சொல்லு, என்ன கதைக்கவேண்டும்?” என்று அவர் கேட்கையிலேயே ஒரு சோடிச் செருப்புக்களுடன் அறைக்குள் வந்தார் லக்ஷ்மி.
அங்கு நின்றிருந்த ரஞ்சனைக் கண்டுவிட்டு, “வாப்பா ரஞ்சன், அம்மாவும் தங்கையும் எப்படியிருக்கிறார்கள் ?” என்று விசாரித்தார்.
“எல்லோரும் நன்றாயிருகிறோம் ஆன்ட்டி.” என்று அவனது வாய் சொன்னாலும், மனதோ இனி எப்படி அங்கிளிடம் பணத்தைக் கேட்பது என்று தடுமாறியது.
அமைதியாக நின்றவனைப் பார்த்து, “சொல்லு ரஞ்சன், ஏதோ கதைக்க வேண்டும் என்றாயே.” என்றார் சந்தானம்.
“அது அங்கிள்..” என்று இழுத்தவனின் விழிகள் கணவன் மனைவி இருவரையும் பார்த்தன. ஆரம்பித்த விசயத்தைக் இடையில் விடவும் மனதில்லை. அதேநேரம் லக்ஷ்மியின் முன்னால் பணம் வேண்டும் என்று கேட்பதை நினைக்கவே அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.
“சொல்லப்பா…” என்று, தயங்கியவனை ஊக்கினார் சந்தானம்.
இப்படி அடுத்தவரிடம் கையேந்தும் நிலையில் நிற்கும் தன்னிலையை நொந்தவன் நடப்பதைக் கண்டுகொள்வோம் என்று மனதைத் திடம் படுத்திக் கொண்டு கேட்டான். “எனக்கு.. கொஞ்சம் பணம் வேண்டும் அங்கிள்.”
அவன் ஆயிரங்களில் கேட்பதாக எண்ணி, “இதற்கா இவ்வளவு தயங்கினாய். எவ்வளவு வேண்டும் சொல்லு.” என்று சாதாரணமாகக் கேட்டார் சந்தானம்.
“அது.. இரண்டு லட்சம்.”
அதைக் கேட்ட கணவன் மனைவி இருவரினதும் விழிகள் அவசரமாகச் சந்தித்துக் கொண்டன. மனைவியின் விழிகளில் மறுப்பைக் கண்டவர், ‘கொஞ்சம் பொறு’ என்று பார்வையிலேயே சொல்லிவிட்டு, “உனக்கு ஏன் இவ்வளவு பணம் ரஞ்சன்? என்ன தேவை.” என்று கேட்டார் அவர்.
என்ன பதிலைச் சொல்ல முடியும் அவனால்? பொய் சொல்லவும் வராமல் மௌனத்தையே பதிலாகக் கொடுத்தான் ரஞ்சன்.