சந்தானத்துக்கும் முகத்துக்கு நேரே அவனிடம் மறுக்க முடியவில்லை. அதற்காக அவ்வளவு பெரிய பணத்தைக் கொடுக்கவும் முடியாதே. அவரும் என்ன சொல்வது என்று அறியாது அவனையே யோசனையோடு பார்த்திருந்தார்.
கணவனையும் ரஞ்சனையும் பார்த்த லக்ஷ்மிக்கு யோசனையாக இருந்தது. கணவரின் இளகிய மனம் அவர் அறியாதது அல்ல. மறுக்கமுடியாமல் அவர் பணத்தைக் கொடுத்து அவன் ஏமாற்றிவிட்டால்?
ஏமாற்ற வேண்டாம். அவனாலேயே கொடுக்க முடியாத நிலை வந்துவிட்டால்? கொடுத்த பணத்தைத் திரும்பிப் பெறுவதற்காக கோர்ட் கேஸ் என்று அலையமுடியுமா? அல்லது அவன் பின்னால்தான் அலைய முடியுமா? சும்மாவே முடியாமல் இருக்கும் கணவருக்கு எதற்கு வேண்டாத வேலைகள்?
சாதாரண மாரடைப்பு என்று வைத்தியர் சொல்லிவிட்டபோதும், இப்போது சட்டென்று சோர்ந்துவிடும் அவருக்கு சிறு பிரச்சினை தன்னும் உருவாவதில் உடன்பாடு இல்லை. நாளைக்கு அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை எடுத்துப் பார்க்க ஆண்பிள்ளையையா பெற்றிருக்கிறார்கள். எனவே கணவரை முந்திக்கொண்டார் லக்ஷ்மி.
“உனக்கு என்ன தேவையோ தெரியவில்லை ரஞ்சன். ஆனால் அவ்வளவு பணத்துக்கு நாங்களும் எங்கே போவது? இவரின் வைத்தியத்துக்கே காசு நிறையச் செலவாகிவிட்டது. அதோடு, வெளியே போகும் பணம் திரும்பி வராவிட்டால்…” என்றவரை வேகமாக இடைமறித்தான் ரஞ்சன்.
“இல்லை ஆன்ட்டி. நிச்சயமாக நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். என் சம்பளத்தில் மாதாமாதம் நீங்கள் பிடித்துக் கொள்ளலாம். என் வீடும் அங்கிளுக்குத் தெரியும். பிறந்ததில் இருந்து அங்குதான் இருக்கிறேன். அங்கு நீங்கள் யாரிடமும் விசாரிக்கலாம். ஏன், இங்கே மூன்று வருடமாக வேலை செய்கிறேன். யாரையாவது எதற்காவது ஏமாற்றி இருகிறேனா என்று விசாரியுங்கள்.” என்று சற்றுக் கோபமாகவே சொன்னான்.
“நீ ஏமாற்றுவாய் என்று நானும் சொல்லவில்லை ரஞ்சன். உன்னால் திருப்ப முடியாவிட்டால்..? உன் அங்கிளுக்கும் உடம்பு முடியாது. ஒரு பிரச்சினை என்றால் அவரால் முன் போல் அலையவும் முடியாது. ஒரு ஐந்து, பத்து ஆயிரங்கள் என்றால் பரவாயில்லை…” என்றவர், “சரி, ஒரு ஐம்பதாயிரம் வரை என்றாலும் வாங்கிக் கொள். அதைத் திருப்பித் தந்துவிட்டு வேண்டுமானால் பிறகு இன்னொரு ஐம்பதாயிரம் வாங்கிக் கொள்.” என்றார் லக்ஷ்மி.
அவர் என்ன விளக்கம் சொன்னாலும், வெளிப்பூச்சுப் பூசிச் சொன்னாலும் அவர் சொன்னதன் அர்த்தம் இதுதான். அவன் ஏமாற்றினாலோ, அல்லது பணத்தை வாங்கிவிட்டு ஏதாவது பிரச்சினை பண்ணினாலோ அவர்களால் அதற்கு அலைய முடியாது என்கிறார். அதாவது, அந்த இரண்டையும் அவன் செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கிறார். வெட்கிப்போனான் ரஞ்சன்!
அவன் மீது நம்பிக்கை இல்லை என்பதே அவர் இவ்வளவு நேரம் சொன்னதன் சாராம்சம்.
ஏன் நம்பிக்கை இல்லை? அப்படி எதில் உங்களை எமாற்றினேன் என்று கோபத்தோடு கேட்க நினைத்தவனின் மனது அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது.
உன் அம்மாவே உன்னை நம்பாத போது, அடுத்தவர் நம்பவில்லை என்று எதற்குக் கோபம் வரவேண்டும்?
அதுதானே என்று எண்ணியவனின் மனம் முழுவதும் கசந்து வழிந்தது. அதற்கு மேலும் அவர்கள் முன் நிற்க விரும்பாது, வெளியே செல்லத் திரும்பினான்.
அதுவரை அவன் முகத்தையே பார்த்திருந்த சந்தானம், “கொஞ்சம் நில் ரஞ்சன்.” என்றார்.
அவருக்கு அவன் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. அதற்காக வெறும் நம்பிக்கையின் பெயரில் அவ்வளவு பணத்தைக் கொடுப்பதும் முடியாதுதான். மறுத்துவிட்ட மனைவியின் பேச்சை மீறியும் கொடுக்க விருப்பமில்லை.
அவரே மனைவியை மதிக்காவிட்டால் மற்றவர்கள் மதிப்பார்களா?
எனவே, “ஒரு.. ஒரு லட்சம் தருகிறேன் ரஞ்சன். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பு.” என்றார்.
இதை எந்த நம்பிக்கையில் தரப்போகிறீர்களாம் என்று ரோசத்தில் கேட்கத் துடித்த மனதையும் நாவையும் அடக்கினான்.
முன்னுக்கு வரவேண்டுமானால் சில அவமானங்களையும் வேதனைகளையும் சந்திக்கத் தானே வேண்டும். “நன்றி அங்கிள். நிச்சயமாக உங்கள் பணத்தைத் திருப்பித் தருவேன்.” என்றான் உறுதியான குரலில்.
அடுத்தநாள் வெள்ளிக் கிழமை. மனைவியுடன் வந்த சந்தானம், அவன் கேட்ட ஒரு லட்சத்தைக் கொடுத்தார். மேலும் மூன்று லட்சங்களைக் கொடுத்து வங்கியில் வைப்புச் செய்யும்படி சொன்னார்.
“நன்றி அங்கிள்.” என்றபடி, தன் பணத்தைப் பெற்றுக் கொண்டவன் அவரது பணத்தையும் வங்கியில் வைப்புச் செய்தான்.
கையில் இருக்கும் பணம் போதாதே என்று யோசித்தவன், நடப்பதைக் கண்டுகொள்வோம் என்று எண்ணி, தன்னுடைய மோட்டார் வண்டியையும் சுகந்தன், ஜீவனின் உதவியுடன் அன்றே விற்றான்.
“அப்பா வாங்கித் தந்ததுடா..” என்று அவர்கள் தயங்கியபோது, “விடுங்கடா. சிலதை நினைக்கவே கூடாது.” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டான்.
அதில் ஒரு ஐம்பதாயிரம் வரவே, ஒன்றரை லட்சத்துக்கு செருப்புக்களை ஆடர் செய்தான்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. விசேச நாட்களை முன்னிட்டுக் கடைகள் திறக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டமோ வீதிகளிலும் கடைகளிலும் நிரம்பி வழிந்தது. அப்பாவுக்குத் துணை என்கிற பெயரில் ரஞ்சனைப் பார்க்கும் ஆவலில் சித்ராவும் வந்திருந்தாள்.
பூவைச் சுற்றும் வண்டாய் வேலையில் பம்பரமாகச் சுழன்றவனையே அவள் விழிகள் சுற்றிச் சுற்றி வந்தது. அதை உணர்ந்தாலும் ரஞ்சன் அவளைக் கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
அந்த மதிய வேளையில், நெற்றியில் வழிந்த வியர்வையைக் கூடத் துடைக்க நேரமின்றி வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தவனைப் பார்க்கப் பார்க்க, ஓடிச்சென்று அவன் நெற்றி வியர்வையைத் தன் கையால் துடைத்துவிட்டு அந்தப் பரந்த நெற்றியிலே இதழ்களைப் பதிக்கும் ஆவல் எழுந்தது அவளுக்கு.
அதைச் செய்ய முடியாமல் போனதில் தகப்பனிடம் விரைந்தாள். “அப்பா, தொண்டை வரண்டுவிட்டது. ஏதாவது குளிராகக் குடிப்போமா?” என்று கேட்டாள்.
“வாங்கிக் குடியேன் சித்து. இதையெல்லாமா கேட்டுக் கொண்டிருப்பாய். அப்படியே எனக்கும் சொல்லு..”
“அப்பா, நாம் மட்டும் குடித்தால் நன்றாகவா இருக்கும்? சும்மா இருக்கும் நமக்கே இப்படி என்றால், வேலை செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்? வெய்யில் வேறு அனலாகக் கொதிக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து வாங்குவோமா.. அவர்களும் பாவம்தானே.” என்று நயமாகக் கேட்டாள்.
“அட! என் மகளுக்கும் பொறுப்பாக நடக்கத் தெரிகிறதே.” என்று கேலி பேசியவர், “அவர்களுக்கும் சேர்த்தே சொல்லு.” என்று அவளின் வேண்டுகோளுக்குச் சம்மதித்தார்.
“சரிப்பா..” என்றபடி, துள்ளலோடு சென்றவள் முருகனை அழைத்தாள்.
“என்னக்கா..” என்றபடி வந்தவனிடம், “முருகா, கடையில் வேலை செய்யும் எல்லோருக்கும் சேர்த்துக் குளிர்பானம் ஏதாவது வாங்கி வா..” என்று சொல்லி, பணத்தைக் கொடுத்து அனுப்பினாள்.
கொண்டு வந்தவனிடம் மூன்று பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டவள் “மீதியை எல்லோருக்கும் கொடுத்துவிடு..” என்றுவிட்டு, தன்னிடம் இருந்ததில் ஒன்றைத் தகப்பனுக்குக் கொடுத்தாள்.
இன்னொன்றை எடுத்துக்கொண்டு ரஞ்சனிடம் சென்றவள், “இதயன், இந்தாருங்கள். இதைக் குடித்துவிட்டு வேலையைப் பாருங்கள்.” என்று நீட்டினாள்.
ஒரு வாடிக்கையாளரும் அருகே நின்றதில், அவர் முன்னால் அவளிடம் மறுக்க முடியாதபோதும், அவன் பார்வை மற்றவர்களைப் பார்த்தது. முருகன் ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தான். குளிர்பானம் தனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டபிறகே வாங்கிக் கொண்டான்.
அவனையே விழியகற்றாது கவனித்துக் கொண்டிருந்தவள், அவன் குளிர்பானத்தை வாங்கியதும், “அதென்ன, நான் தந்தால் வாங்க மாட்டீர்களா? மற்றவர்களைச் சுற்றிப் பார்க்கிறீர்கள்? குளிர்பானம் என்றபடியால் எல்லோருக்கும் கொடுத்து உங்களுக்கும் தந்தேன். ஆனால், என் இதயத்தை உங்களுக்கு மட்டும்தானே என்னால் தரமுடியும். அப்போது யாரைப் பார்த்துவிட்டு அதை வாங்குவீர்கள்?” என்று கேட்டாள்.
எதற்கும் இலகுவில் பதறாத ரஞ்சனையே பதற வைத்தது அவளது பேச்சு. “விசராடி உனக்கு. எங்கே வைத்து எதைக் கதைப்பது என்று இல்லையா..” என்று அவளிடம் மெல்லிய குரலில் சீறியபடி, அவனருகில் நின்ற வாடிக்கையாளரைப் பார்த்தான்.
அவர் அங்கு இல்லாததைக் கண்டு ஆசுவாசப் பட்டவனிடம், “அவர் அந்தப்பக்கம் போய்விட்டார்.” என்றவள், “அப்போ தனியிடத்தில் வைத்து என்றால் என்னை ஏற்றுக் கொள்வீர்களா..” என்று கேட்டாள்.
அப்போதும் அவனுக்குத்தான் பதட்டமாக இருந்தது. யாராவது பார்த்துவிட்டாலோ அல்லது அவளின் உளறலைக் கேட்டுவிட்டாலோ என்ன செய்வது?
“சும்மா எதையாவது உளறி எனக்குக் கோபத்தைக் கிளப்பாமல் போ!”
“நான் சும்மா சொல்லவில்லை இதயன். எனக்கு உங்களைப் பிடித்திருகிறது. உங்களுக்கும் என்னைப் பிடிக்கும் தானே..” என்று கேட்டவளை, என்ன செய்வது என்று தெரியாது பார்த்தான் ரஞ்சன்.
எவ்வளவு இலகுவாக, அதுவும் அவர்களின் கடையில் வைத்தே, உள்ளறையில் அவளது அப்பாவும் இருக்கும்போதே, இவ்வளவு பேர் சூழ தயக்கம் என்பதே சிறிதும் இன்றிச் சொல்பவளை, மெய்யாகவே புரிந்துகொள்ள முடியாத பார்வை பார்த்தான் ரஞ்சன்.
அவள் விழிகள் பேசும் மொழிகளை மிக நன்றாகவே புரிந்து கொள்ளத் தெரிந்தவனுக்கு, அந்த விழிகளில் அப்போது விளையாட்டு எண்ணம் சிறிதும் இல்லை என்று மிக நன்றாகவே தெரிந்தது.
முகத்திலும் அவன் சம்மதிக்க வேண்டும் என்கிற ஆவலே வடிவாக நின்றவளின் பார்வையைத் தாங்க முடியாமல் விழிகளை அகற்றிக் கொண்டவன் என்றுமில்லாத விதமாக அவளிடம் தன்மையாகக் கதைக்க முயன்றான்.
“கஷ்டம் என்பதை அனுபவிக்காமலே வளர்ந்ததில் உனக்கு எல்லாமே விளையாட்டாகத் தெரிகிறது. அதுதான் இப்படி எதையெதையோ உ.. சொல்கிறாய். தயவுசெய்து என்னுடன் உன் விளையாட்டை வைத்துக் கொள்ளாதே. உனக்கு நானும் பொருத்தமில்லை. எனக்கு நீயும் பொருத்தமில்லை.”
“ஏன் நான் உங்களுக்குப் பொருத்தமில்லை? என்னைத் தவிர வேறு எவளையாவது உங்களுக்குப் பொருத்தமாக்க நினைத்தீர்கள் என்று வையுங்கள். உங்களைத் தொலைத்துக் கட்டிவிடுவேன்.” என்றவளைப் பார்த்தவனுக்கு, இப்போது ஏனோ கோபத்துக்குப் பதிலாகச் சிரிப்புத்தான் வந்தது.
ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை அவன். சும்மாவே ஆடுவாள். இதில் அவன் சிரிப்பது வேறு தெரிந்தால் தலை மேலேயே ஏறி அமர்துவிடுவாள் என்று நினைத்து அதை மறைத்தவன், கடுமையை முகத்தில் பூசிக் கொண்டான்.
“எனக்குப் பொருத்தமாக வேறு ஒருத்தி இருக்கிறாள். அதுவும் சின்ன வயதில் இருந்தே. உன்னால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்துகொள். இப்போது என்னை விடு. நான் வேலையைப் பார்க்கவேண்டும்.”
“என்னது? சின்ன வயதில் இருந்தா? என்ன காதலா? இதை நான் நம்ப வேண்டுமாக்கும்? இந்தச் சிடுமூஞ்சிக்காக எவளாவது சின்ன வயதில் இருந்தே காத்திருப்பாளா? ஏதோ, நான் என்றபடியால் பாவம் பார்த்து உங்களைக் காதலிக்கிறேன். அந்த அவளிடம் சொல்லி வையுங்கள். நீங்கள் எனக்குத்தான். எனக்கும் உங்களுக்கும் இடையில் அவள் வந்தால்.. அவளை.. அவளை.. என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.” என்று கோபமாகப் படபடத்தவள், விசுக்கென்று அங்கிருந்து நகர்ந்தாள்.
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் உதடுகள் புன்னகையைச் சிந்தின. மனதுக்குள் ஒருவித குதூகலம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.
ஆனால்…..
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.


