அடுத்த வாரத்தில் ரஞ்சன் ஆடர் கொடுத்திருந்த செருப்புகளும் வந்திரங்கிவிடவே, அவனுக்கு வேலை! வேலை! வேலை! என்று மட்டுமே ஆனது.
காலையில் ‘ரிபோக்’க்கு வந்தால், அங்கு இரவு எட்டு மணிக்கோ அல்லது ஒன்பது மணிக்கோ வேலை முடிந்தால், தன்னுடைய கடைக்கு அப்படியே செல்பவன், வீடு செல்வது அடுத்த நாள் விடியல் காலையில் இரண்டு மணிக்கோ மூன்று மணிக்கோ தான்.
உறங்கும் நேரம் இரண்டு அல்லது மூன்று மனித்தியாலங்களாகச் சுருங்கியபோதும், அவனது மனமோ உடலோ சோர்வு அடையவே இல்லை. இன்னும் இன்னும் ஆர்வமும், கஷ்டப் படுவதில் இஷ்டமும் தான் உண்டானது. சுகந்தனும் ஜீவனும் கூட அவனுக்குச் சளைக்காது கஷ்டப்பட்டனர்.
வீட்டில், தாயுடன் சும்மாவே தேவைக்கு மட்டுமே கதைப்பவன், இப்போது இன்னுமே பேச்சைக் குறைத்துக் கொண்டான். அப்படிக் கதைப்பதற்கு அவனுக்கு நேரமும் இல்லை.
திங்கட்கிழமை கடையை திறக்க இருப்பதால், அந்த வாரத்தின் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் மூன்று நாட்களும் சந்தானத்திடம் கேட்டு விடுப்பு எடுத்துக் கொண்டான் ரஞ்சன்.
அன்று வெள்ளிக் கிழமை. வங்கியில் பணம் போட நடையில் சென்றுகொண்டிருந்தான் ரஞ்சன். இன்னும் இரண்டு நாட்களே இருந்தன கடை திறப்பதற்கு. அடுத்து செய்யவேண்டிய வேலைகளை மனதில் வரிசைப் படுத்திக்கொண்டே நடந்து கொண்டிருந்தவனின் அருகில் ஸ்கூட்டி ஒன்று திடீரென்று வந்து நின்றது.
அந்த ஸ்கூட்டியே வந்திருப்பது யார் என்பதை உணர்த்த, முறைத்தான்.
“சாதரணமா பார்க்கவே தெரியாதா உங்களுக்கு?” கேட்டது சாட்சாத் சித்ராவே தான்.
அவளுக்குப் பதிலைச் சொல்லாது, தங்களை யாராவது பார்க்கிறார்களா என்று வேகமாகச் சாலையை ஆராய்ந்தன அவன் விழிகள்.
“யாரும் பார்க்கவில்லை. அப்படியே பார்த்தாலும் என்னைக் கண்டுபிடிக்க மாட்டார்கள்.” என்றவளைக் கேள்வியோடு அவன் பார்க்க, “அதுதான் ஹெல்மெட் போட்டு இருக்கிறேனே..” என்றாள் அவள்.
“என்ன, கெட்டித்தனமாக நடப்பதாக நினைப்போ?” என்று குத்தலாகக் கேட்டவனுக்கு, அவனை அங்கே சந்திப்பதற்கு அவள் முதலே திட்டமிட்டுத்தான் வந்திருக்கிறாள் என்பது மிக நன்றாகவே விளங்கியது. அதற்கான காரணமும் தெரியாமல் இல்லை.
ஆனாலும், இதென்ன அசட்டுத்தனம்? அதைவிட இவள் ஏன் இப்படி திரும்பத் திரும்ப நடந்துகொள்கிறாள் என்கிற கேள்வி எழுந்தது.
கோபத்தில் முகம் கடுக்க அவளை முறைத்துவிட்டு நடக்கத் தொடங்கினான்.
“என்னோடு கதைக்காமல் போனீர்கள் என்றால் ஹெல்மெட்டைக் கழட்டிவிட்டு உங்களுக்குப் பின்னாலேயே வருவேன்.”
அதைக் கேட்டவனின் நடை நிற்க, முகம் இன்னும் கடுப்புற்றது. “கொஞ்சமாவது அறிவோடு கதைக்கப் பழகு. நீ ஹெல்மெட்டோடு நிற்கிறாய். உன்னைத் தெரியாது, சரி. ஆனால் என்னை? என்னைத் தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இதில் ஹெல்மெட்டை வேறு கழட்டப் போகிறாளாம். சாலையில் வைத்து ஒரு ஆணுடன் நின்று கதைக்க உனக்கு வெட்கமாக இல்லையா?”
“நான் எதற்கு வெட்கப்பட? யாரோ ஒரு ஆணுடன் நான் கதைக்கவில்லை. என் இதயனுடன் தான் கதைக்கிறேன். அதனால் எனக்கு ஒன்றுமில்லை.” என்றாள் அவளும் அவனுக்குச் சளைக்காது.
அவள் சொன்ன ‘என் இதயன்’ அவன் மனதை நிறைக்காமல் இல்லை. எவ்வளவு தடுக்க முயன்றாலும் இதயம் குளிராமல் இல்லை. ஆனாலும் இதற்கு எதிர்காலம் இல்லையே!
“நான் உன் இதயன் இல்லை.” என்றான் கடுமையான குரலில் மனதை மறைத்து.
“நீங்கள் என் இதயன் தான். எனக்கு மட்டும்தான் நீங்கள் சொந்தம்.” என்று, அவனுக்குக் குறையாத அழுத்தமான குரலில் சொன்னவள், “சரி சொல்லுங்கள். அன்று நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்?” என்று கேட்டாள்.
“அதற்கு அன்றே பதில் சொல்லிவிட்டேன்..”
“எது? உங்களுக்காக எவளோ ஒருத்தி காத்திருப்பதாகச் சொன்னதா? அதை யாராவது மூளை இல்லாதவள் இருப்பாள், அவளிடம் போய்ச் சொல்லுங்கள்.” என்று கோபப் பட்டவள், சற்று நிறுத்தித் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு பேசினாள்.
“நான் கேட்பது உங்களுக்குப் புரியவில்லையா இதயன்? அல்லது நானாக உங்களைத் தேடிவந்து என் அன்பைச் சொல்வதால் இளக்காரமாக இருக்கிறதா?” அவன் விழிகளைப் பார்த்துக் குரலடைக்கக் கேட்டவளை அதிர்ச்சியோடு பார்த்தான் ரஞ்சன்.
எதையுமே அதிகாரமாகவே பேசிப் பழகியவள், அடம் பிடித்துப் பழகியவள் அந்தக் குரலில் சொல்வதை அவனுக்குக் கேட்கவே முடியவில்லை. மனதுக்குள் வலித்தது.
சித்ரா அப்போதும் அவனிடமிருந்து விழிகளை அகற்றாது சொன்னாள். “நான் யாரிடமும் எதற்காகவும் இப்படிக் கெஞ்சியது இல்லை இதயன். இப்படி நடந்து கொண்டதும் இல்லை. நீங்கள் நாளையில் இருந்து மூன்று நாட்கள் கடைக்கு வரமாட்டீர்கள் என்று கண்ணன் அண்ணா சொன்னார். அந்த மூன்று நாட்களும் உங்களைப் பார்க்காமலோ என் மனதைச் சொல்லாமலோ என்னால் இருக்க முடியாது என்பதற்காக, இன்று எப்படியும் வங்கியில் பணம் போட இந்தப் பாதையால் வருவீர்கள் என்பதால், உடம்புக்கு முடியவில்லை என்று கல்லூரியில் பொய் சொல்லிவிட்டு மதியமே அங்கிருந்து வந்து, அதோ அந்தக் கடையில் அப்போதிலிருந்து உங்களுக்காக் காத்திருந்தேன். இதோ இப்போது நீங்கள் கோபமாகக் கதைத்தாலும், உங்கள் முன்னால் நின்று கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். எனக்கே என்னை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. அப்படியிருந்தும் நீங்கள் வேண்டும் என்றுதான் மனம் அடம்பிடிக்கிறது.” என்றாள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து.
எப்போதும் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் அவளிடமிருந்து வந்த உள்ளார்ந்த பேச்சில் வாயடைத்து நின்றான் ரஞ்சன்.
“இதெல்லாம் என் இயல்பில்லை இதயன். அன்று முகேஷ் அநாகரிகமாக நடந்துகொண்டான் என்று அவனுடன் கதைப்பதையே நிறுத்திவிட்டேன். அவனுக்கு உதவினால் என்று ராகினியுடனும் கதைப்பதில்லை. அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். அவர்களையே தூக்கி எறிந்த என்னால், என் கழுத்தை நெரித்து அவமதித்த உங்களை ஒதுக்கவே முடியவில்லை. உங்கள் கோபம், ஆத்திரம், அலட்சியம் எல்லாமே இன்னுமின்னும் பிடிகிறதே தவிர குறையவே இல்லை. என்னால் நீங்கள் இல்லாமல் வாழ முடியாது இதயன்.” என்றவளின் குரலில் இருந்த வேண்டுதலில், முகத்தில் இருந்த எதிர்பார்ப்பில், அந்த விழிகளில் தெரிந்த காதலில் சிலையாகி நின்றான் ரஞ்சன்.
தன்னை மறந்து அவளையே பார்த்திருந்தவனின் விழிகளை அவள் விழிகளும் தயங்காது தாங்கின.
அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ, பெரும் இரைச்சலுடன் அவர்களைக் கடந்து சென்ற ‘பஸ்’ஸின் சத்தத்தில் கனவில் இருந்து விழித்தவன் போன்று அவனைச் சூழ்ந்திருந்த மாயவலையில் இருந்து வெளிவந்தான் ரஞ்சன்.
அவளின் காதலை மறுக்கவே பிடிக்காத போதும், அவன் தந்தையின் ஆசை, அவனைத் தூக்கி எறிந்த சாதனாவின் திமிரை அடக்க அவன் எடுத்திருந்த முடிவு, தங்கையின் எதிர்காலம் என்று அனைத்தையும் நினைத்துப் பார்த்து, தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, “இல்லை..” என்றபடி நிமிர்ந்தவனின் பார்வையில் பட்டாள் சாதனா.
சும்மாவல்ல ஒரு இளைஞனின் கையோடு தன் கையைக் கோர்த்தபடி, கர்வத்துடன் ரஞ்சனையே பார்த்தபடி நின்றிருந்தாள். அந்த இளைஞன் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறான் என்பது அவன் நடை, உடை, பாவனையிலேயே தெரிந்தது.
அவனைப் பார்த்துக்கொண்டிருந்த சாதனாவின் விழிகளில் இருந்த ஏளனம், கர்வம், அலட்சியம் அனைத்துமே அந்த நொடியில் ஒரு முடிவை ரஞ்சனை எடுக்க வைத்தது.
அந்தச் சின்ன வயதில், கஷ்ட துன்பங்கள் என்றால் என்னவென்றே அறியாத பருவத்தில் அவளிடம் இருந்து கிடைத்த புறக்கணிப்பு அவன் மனதில் ஆறாத வடுவாக மாறியிருந்தது.
அந்த வடு அந்த நொடியில் அவளைக் காயப் படுத்தும் வேகத்தைக் கொடுத்தது. நீயில்லாமல் நான் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை என்று காட்ட வைத்தது. அவள் முன்னால் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும் என்கிற வெறி எழுந்தது.
அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சித்ராவின் கேள்விக்குப் பதிலைச் சொல்லவைத்தது.
“எனக்கும் உன்னைப் பிடித்திருகிறது.” என்றான் சடாரென்று.
அதைக் கேட்ட சித்ராவின் விழிகள் மலர, முகம் மலர, இதழ்கள் அழகிய புன்னகையைச் சிந்தின. அவளின் காதல் நிறைவேறிவிட்ட மகிழ்வில் விழிகளில் நீர் தளும்பியது.
“இதயன்..! உண்மையாகவா.. மெய்யாகவா?” என்று சந்தோசத்தில் என்ன கேட்பது என்றே தெரியாது தடுமாறினாள் சித்ரா.
“ம்.. உண்மையாகத்தான்.” சிரித்துக்கொண்டே சொன்னவன், சாதனா இன்னும் அங்கு நிற்கிறாளா என்று மேல் கண்ணால் ஆராய்ந்தான்.
புருவங்கள் சுருங்க, சித்ராவை யார் என்பதாக அவள் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவும், “நீ பின்னால் நகரு, ஸ்கூட்டியை நான் ஓட்டுகிறேன்.” என்றான்.
அவன் சொன்னதை நம்பமுடியாமல் அதிசயத்துடன் பார்த்தவளை, “நகரு..” என்றான் மீண்டும்.
அப்போதும் வியப்பு மாறாது சித்ரா பின்னுக்கு நகரவும், ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தவன், “என் தோள்களைப் பிடித்துக்கொள்..” என்றான்.
“என்னது?” நடப்பது எல்லாம் மெய்தானா என்று நம்ப முடியாமல் அவள் கேட்க, “ம்.. பிடித்துக்கொள்.” என்றான் மீண்டும்.
எதையுமே நம்ப முடியாமல் அவன் தோள்களை ஆசையுடன் பற்றிக் கொண்டாள் சித்ரா. ரஞ்சன் எதையும் யோசியாது ஸ்கூட்டியை வங்கியை நோக்கிச் செலுத்தினான்.
யார் எவ்வளவு நிதானமாக, சமயோசிதமாக நடப்பவராக இருந்தாலும், அவர்கள் எடுக்கும் நொடி நேர முடிவுகள் அவர்கள் வாழ்க்கையை உச்சத்துக்கும் கொண்டுபோக வல்லது. அதலபாதாளத்துக்கும் கொண்டு போக வல்லது.
காதல் என்பதை உணர்ந்து உண்மையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிலைக்கும். இங்கே காதலை அவன் உணர்ந்திருந்தாலும், யாரோ ஒருத்தியைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது அவனைப் பாதிக்குமா அல்லது சித்ராவைப் பாதிக்குமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்!
ரஞ்சனின் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்த சித்ரா இந்த உலகத்திலேயே இல்லை! வானில், முகில் மூட்டங்களுக்கு நடுவில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாள்.
அவ்வளவு சந்தோசத்தை, வார்த்தைகளால் வடிக்க முடியாத நிறைவைக் கொடுத்தது அவன் வார்த்தைகள்!
“இதயன்..?” என்று மெல்ல அழைத்தாள்.
“ம்..?”
“ஏதாவது கதையுங்களேன்..”
“ஏன்?”
“இல்லை… இப்படி நீங்கள் என்னுடன் வருவது உண்மைதானா என்று நம்பவே முடியவில்லை. அதுதான்..”
அப்போதும் அவன் அமைதியாக வரவும், “என்னைத் திட்ட மட்டும்தான் வாயைத் திறப்பீர்களா?” என்று கேட்டாள்.
அதற்கும் அவன் மௌனத்தையே பதிலாகக் கொடுக்க, அதை அவள் பொருட் படுத்தவே இல்லை.
“நாளைக்குக் கடைக்கு வரமாட்டீர்களா?” என்று தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
“இல்லை..”
“ஏன்?”
“வேறு ஒரு வேலை இருக்கிறது.”
அது என்ன வேலை என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. அது ஒரு குறையாக அவளுக்குத் தோன்றவே இல்லை. அவன் அவளை ஏற்றுக் கொண்டதே போதுமானதாக இருந்தது.
என்னவென்றே இல்லாது அவனுடன் சலசலத்த படியே வந்தவளிடம் ஒரு சொல் பதில்களையே கொடுத்தான் ரஞ்சன்.
வங்கியின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தி இறங்கியவன், “நீ வீட்டுக்குப் போ..” என்றான் அவளிடம்.
“இல்லை. பணத்தை வைப்புச் செய்துவிட்டு வாருங்கள். ஒன்றாகவே போகலாம்.”
“ப்ச்! நான் என்ன சொன்னாலும் கேட்கவே கூடாது என்று முடிவேதும் எடுத்திருகிறாயா? நம்மை யாராவது இப்படி ஒன்றாகப் பார்த்தால் பிரச்சினை. அதனால் நீ போ.” என்றான் அவன் அதட்டலாக.
ஏன், ஸ்கூட்டியில் ஒன்றாக வரும்போது யாரும் பார்த்திருக்க மாட்டார்களா என்று எதிர்த்துக் கேட்க நினைத்தவள், முதன் முதலாக காதலனாக அவன் சொன்ன ஒன்றை மறுத்துப் பேச விரும்பாது, சரி என்பதாக தலையாட்டிவிட்டு ஸ்கூட்டியை இயக்கினாள்.
சட்டென்று ஏதோ தோன்றியவளாக அவன் சட்டைப் பையில் கிடந்த கைபேசியை எட்டி எடுத்தாள்.
“ஏய்! என்ன செய்கிறாய்…” என்றவனிடம், “என்னை ஏய் என்று கூப்பிடாதீர்கள் என்று உங்களிடம் சொல்லியிருக்கிறேன்..” என்று அவள் வாய் சொன்னபோதும், கையோ அவன் கைபேசியில் இருந்து தன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தது.
அது ஒலி எழுப்பியதும், அவன் கைபேசியை நிறுத்திவிட்டு, “இந்தாருங்கள்..” என்று அவனிடம் கொடுத்துவிட்டு, “பாய் இதயன்..” என்றபடி ஸ்கூட்டியில் சிட்டெனப் பறந்தாள் சித்ரா.
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன், அவள் பார்வைக்கு மறைந்ததும் ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டு வங்கியின் உள்ளே சென்றான்.
அதன் பிறகு வந்த அவனது நேரம் முழுவதும் அவனுக்குச் சொந்தமாக இல்லாமல் வேலை வெட்டி முறித்தது.
அடுத்த இரண்டு நாட்களும் மிக மிக வேகமாகப் பறந்தது அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும். இரவு பகல் பாராது கடுமையாகக் கஷ்டப் பட்டார்கள். அதுவரை வாங்கிய செருப்புகள் போதாமல் இருந்தாலும், அவற்றைப் பரவலாக அந்தக் கடை முழுவதும் அடுக்கினார்கள்.
பெயர்ப் பலகை செய்வது கூட அந்த நேரத்தில் அனாவசியச் செலவாகப் பட, பெயரற்ற கடையாக திங்கட் கிழமை திறப்புவிழா கொண்டாடக் காத்திருந்தது அவர்கள் கடை.
போதுமான செருப்புகள் இன்றி, ஒரு பெயர் இன்றி, சாதாரணம் என்று கூடச் சொல்ல முடியாத அளவுக்கு கடை இருந்தாலும் அவர்களின் மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை.
பின்னே, அது அவர்களின் சொந்தக் கடை அல்லவா! அவர்கள் மூவரினதும் எதிர்காலத்தின் ஒளிக்கீற்று அல்லவா.