என் சோலை பூவே 12(1)

 

‘ரிபோக்’கில் வேலை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் கதைத்து, அவர்களுக்குத் தேவையான செருப்புக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோதும் ரஞ்சனின் எண்ணம் முழுவதும் தன் கடையைச் சுற்றியே வந்தது.

அவனது கடை திறந்தும் நான்கு நாட்கள் ஆயிற்று! 

அவன் எதிர்பார்த்ததை விடவுமே அதிகமாக வியாபாரமும் நடந்தது. நடந்து கொண்டிருந்தது.

எல்லாமே மகிழ்ச்சியான விடயம் தான். ஆனால், விற்க விற்க செருப்புகளும் அல்லவா குறைந்துகொண்டு போகும். அவற்றை இன்னுமின்னும் வாங்கிப் போட்டால் தானே வியாபாரம் தொடர்ந்து நடக்கும்.

ஒன்றைக் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்றாமல் கொடுத்தால் தானே அவர்கள் திரும்பவும் வருவார்கள். அப்படித்தானே வாடிக்கையைப் பெருக்க முடியும். அப்படி மீண்டும் மீண்டும் செருப்புகளை வாங்கிப் போடப் பணம் வேண்டும்!

மறுபடியும் பணப் பிரச்சினை அவன் முன்னால் வந்து நின்றது.

வியாபாரப் பணம் கையில் இருந்தாலும், அது போதுமானதாக இல்லை. அதைவிட, கடைக்கு வாடகை கொடுக்கவும் பணம் தேவைப் பட்டது. என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கான பதில் அவனிடம் இல்லாமல் இல்லை.

ஆனால்… 

இல்லை! இதற்கு மேலே எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது என்று முடிவெடுத்தான். எடுத்த முடிவு எடுத்ததாகவே இருக்கட்டும்!

சுகந்தனுக்கு அழைத்து, “இன்று எப்படிடா வியாபாரம்?” என்று விசாரித்தான்.

“நன்றாகப் போகுது மச்சான். போகிறபோக்கில் நாம் இருவர் காணாது போல. இன்னுமொருவர் வேலைக்கு வேண்டும். அல்லது நீயும் வரவேண்டும்.” என்றான் அவன்.

“ஓ..! கொஞ்ச நாட்களுக்குத்தான் இப்படி இருக்கும்டா. இது வருடப் பிறப்புக்கான வியாபாரம். அது முடிந்ததும் வழமைக்குத் திரும்பிவிடும். பிறகு எப்படியும் நானும் அங்கு வந்து விடுவேன் தானே..”

“அதுவும் சரிதான்.” என்று நண்பனின் பேச்சை ஏற்றுக் கொண்டவன், “நீ திரும்ப ஆர்டர் கொடுத்துவிட்டாயா?” என்று விசாரித்தான்.

“இன்றே கொடுத்துவிடுவேன் சுகந்தன். பெரும்பாலும் சனிக்கிழமை வந்து இறங்கிவிடும்.” என்றவன், “என்னமாதிரிச் செருப்புகள் அதிகமாக ஆர்டர் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனித்து வை. மதியம் நான் வருகிறேன்..”என்றான்.

“அன்றைக்குச் சித்ரா வாங்கினாளே.. அதில் குதி வைத்தது, வைக்காதது இரண்டு வகையுமே முடிந்துவிட்டது. வரும் இளம் பிள்ளைகள் எல்லாம் அதைத்தான் கேட்கிறார்கள்.” என்று சொல்லிக்கொண்டிருந்தவன்,”நீ மதியம் வா ரஞ்சன். அப்போது கதைக்கலாம். இப்போது ஆட்கள் கடைக்கு வருகிறார்கள்..” என்றவன், நண்பனின் பதிலை எதிர்பாராது கைபேசியை வைத்தும் விட்டான்.

இங்கே ரஞ்சனுக்கோ, அன்று சித்ரா வாங்கியது என்று எண்ணியதுமே, அன்று நடந்தவைகள் அனைத்துமே படமாக ஓடியது.

அவனது கடையில் அவள் முத்தமிட்டு வாழ்த்தியதும், வெளியே வந்தவனைக் குறுகுறு என்று பார்த்த ஜீவன், “இவ்வளவு நேரமும் உள்ளே என்னடா செய்தாய்?” என்று கேட்டான்.

“அது… இவளுக்கு குடிக்க ஏதாவது எடுக்கப் போனேன்..” 

“ஓ..! எடுத்துக் கொடுத்துவிட்டாயா?” கிண்டலாகக் கேட்டான் ஜீவன்.

அவன் கேட்டபிறகுதான், இருவர் கையையும் பார்த்தான். அங்கே பாட்டில் இல்லை என்று கண்டதும், ஜீவனை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை அவனால்.

அவனின் திண்டாட்டத்தை உள்ளூர ரசித்துக்கொண்டிருந்த சித்ராவை முறைத்துவிட்டு உள்ளே சென்றான்.

“நன்றாக இருந்தவனை ஒருவழியாக நாசமாக்கிவிட்டாய்..” என்றான் ஜீவன் சித்ராவிடம்.

“அதில் உங்களுக்குப் பொறாமை போலவே..” 

“எது? அவன் நாசமாவதைப் பார்த்து எனக்குப் பொறாமை? உன் தலை!” என்று வழக்கடித்தவனை, “ஆட்கள் வருகிறார்கள். அவர்களைப் பாருடா..” என்று விரட்டினான், குளிர்பானத்துடன் வந்த ரஞ்சன்.

“போகிறேன் போகிறேன்.. கடைக்குள்ளே இருந்து இந்த மாரியாத்தாவுடன் என்னால் மல்லுக் கட்ட முடியாது..” என்ற ஜீவன், தான் வெளியே நின்றுகொண்டு சுகந்தனை உள்ளே அனுப்பினான்.

அவன் பேச்சில் உதயமான புன்னகையோடு ரஞ்சனை சித்ரா திரும்பிப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

தன் கட்டுப்பாட்டை இழக்க வைத்துத் தன்னிலை மறக்க வைக்கும் அவளின் அருகாமையை எண்ணிக் கொண்டிருந்தவனின் விழிகளில் எதைக் கண்டாளோ.. என்ன என்று விழிகளாலேயே கேட்டாள் சித்ரா.

சட்டென்று மலர்ந்த இளம் புன்னகையுடன் ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்தான் ரஞ்சன்.

“உங்கள் அம்மாவும் தங்கையும் வரவில்லையா இதயன்?” 

“இல்லை. அவர்களிடம் சொல்லவில்லை.” 

“ஏன் சொல்லவில்லை?” என்று கேட்ட சித்ராவின் குரலோடு, கடைக்குள் வந்த சுகந்தனின் குரலும் சேர்ந்து ஒலித்தது.

“என்னடா இது? ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டான் அவன்.

என்னதான் அம்மாவின் மீது கோபம் இருந்தாலும், அதைச் சித்ராவின் முன் காட்ட விரும்பாது அமைதியாக நின்றான் ரஞ்சன்.

“சுகந்தன் அண்ணாவின் கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள் இதயன். ஏன் சொல்லவில்லை நீங்கள்? முதலில் அவரை அழைத்து வரச் சொல்லுங்கள்.”

அப்போதும் அவன் அமைதியாக நிற்க, அவன் சட்டைப் பைக்குள் இருந்த கைபேசியை எட்டி எடுத்தவள், “இப்போது நீங்கள் சொல்லவேண்டும். அல்லது என்னவானாலும் பரவாயில்லை என்று நான் அழைத்துச் சொல்லிவிடுவேன்.” என்று மிரட்டினாள்.

அவள் அம்மாவுக்கு அழைத்தால், அவள் யார், என்ன என்கிற கேள்விகளோடு அதுவேறு அடுத்த பிரச்சினையாக வந்து நிற்கும். அதோடு, கோபம் மனதில் இருந்தபோதும், கடையைத் திறந்த பிறகு அவனுக்கும் மனதுக்குள் தான் செய்தது பிழையோ என்கிற குற்ற உணர்ச்சி தாக்கிக் கொண்டுதான் இருந்தது.

அதானால், “தா, நானே சொல்கிறேன்.” என்றவன், அவளிடமிருந்து கைபேசியை வாங்கித் தாய்க்கு அழைத்தான்.

அந்தப் புறம் எடுத்ததுமே, “ரஞ்சன்..! சொல்லுப்பா..” என்ற இராசமணியின் குரலில், அதுநாள் வரை கோபமாக இருந்த மகன் தன்னைத் தேடி அழைத்துவிட்ட மகிழ்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

அதை உணர்ந்து கொண்டவனை, குற்றவுணர்ச்சி இன்னும் அதிகமாகத் தாக்கியது. ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “அம்மா.. அது இன்று கடை திறந்து இருக்கிறோம். நீங்களும் நித்தியும் வாருங்கள்.” என்றான்.

“ஓ..!?” என்றவரிடம் இருந்து சிலநொடிகள் பேச்சே வரவில்லை. அவன் சொன்னதை ஜீரணிக்க அவருக்கு அவகாசம் தேவைப் பட்டது போலும்!

தன்னைச் சமாளித்துக் கொண்டவர் பேசினார். “நாங்கள் எதற்கு ரஞ்சன்?” என்று கேட்டவரின் குரலில் இருந்த வலியும் வேதனையும் மிக நன்றாகவே தெரிந்தது. அதோடு அவர் சொன்ன ‘நாங்கள்’ ளும் அவனைத் தாக்கியது.

அந்த ‘நாங்களுக்குள்’ அவன் இல்லையா? அம்மாவின் மீது கோபம் இருந்தாலும் அவன் கஷ்டப் படுவது அவர்களுக்காகவும் தானே. அவன் தாயை மதியாத சொந்தங்களுக்கு முன்னால் அவரைத் தலைநிமிர்ந்து வாழ வைக்கத்தானே. 

சட்டென்று மூண்டுவிட்ட கோபத்தோடு, “இதென்னம்மா கேள்வி? நீங்கள் வராமல் எப்படி? நித்தி பள்ளிக் கூடத்தால் வந்ததும் அவளையும் கூட்டிக் கொண்டு வாருங்கள்.” என்றான் அழுத்தமான குரலில்.

“நாங்கள் வராமல் எப்படி என்பது உனக்கு இன்றுதான் தெரிந்ததா ரஞ்சன்? அல்லது இன்றுதான் திடீரென்று கடையைத் திறந்தாயா? அதனால்தான் உன்னால் எங்களிடம் முதலே சொல்ல முடியவில்லை போல..” 

இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் ரஞ்சன் அமைதியானான். அதுவும் சில வினாடிகளே!

“நான் சொல்லித்தான் நீங்கள் வரவேண்டும் என்றில்லை அம்மா. வெளியாட்களுக்குத்தான் சொல்லவேண்டும். வீட்டினருக்கு அது தேவையில்லை. அதனால் பின்னேரம் வாருங்கள்.” என்று தாயிடம் மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னவன், கைபேசியை அணைத்தான்.

வெளியே சென்ற ஜீவனோ, அவர்களின் கடை வாசலைத் தாண்டிச் செல்ல யாரையுமே விடவில்லை.

“அம்மா வாங்க.. அண்ணா வாங்க, அக்கா வாங்க.. தங்கச்சி வாங்க.. புதிதாகக் கடை திறந்திருக்கிறோம். வந்து பார்த்துவிட்டுப் போங்க..” என்று அந்த வீதியால் சென்ற அனைவரையுமே உள்ளே இழுத்தான்.

வெட்கம் பாராது, அப்படிச் செய்யும் நண்பனின் செயலில் நெகிழ்ந்து நின்ற ரஞ்சனுக்கு அதன் பிறகான நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

சித்ராவுக்கும் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் போகவே, “நான் கிளம்புகிறேன் இதயன். அப்பாவுக்குத் தெரிந்த யாராவது என்னைப் பார்த்தால் வம்பு. கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டேன் என்று அம்மா வேறு கோபத்தோடு இருப்பார். அவரையும் சமாளிக்க வேண்டும்.” என்றபடி கிளம்பிவிட்டாள்.

அவனுக்கும் வந்துகொண்டிருந்த வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதோடு,சுகந்தனுக்கு இது புதுத் தொழில் என்பதால், அவனையும் அதற்குப் பழக்கப் படுத்த வேண்டியிருந்தது.

கிடைத்த இடைவெளியில், “என்னடா விஷயம்?” என்று ரஞ்சனின் விழிகளை நேராகப் பார்த்துக் கேட்டான் சுகந்தன்.

அவன் விழிகளைப் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பியவன், “எல்லாம் காரணமாகத்தான்டா..” என்றான் இறுகிய குரலில்.

“காதலைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஒரு பெண்ணைக் காதலிக்கக் கூடாது ரஞ்சன். அது உனக்கும் கேவலம். அவளுக்கும் அவமானம்.”

“அதையெல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை.” என்றான் அவன் அழுத்தமான குரலில்.

அதைக் கேட்ட சுகந்தன் நம்ப முடியாத பார்வை பார்த்தான்.

எதிலுமே நேர்மையை எதிர்பார்க்கும் அவன் நண்பனா இது?

“ஆனால் உன் கண்ணில் காதலை நான் பார்த்தேன். அவளை நீயும் விரும்புகிறாய்..” என்றவனுக்கு எந்தப் பதிலுமே சொல்லாமல் நின்றான் ரஞ்சன்.

அவனையே சிலநொடிகள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “நீ மாறிவிட்டாய் ரஞ்சன்..” என்றவனின் குரலில் இருந்தது வேதனையே.

“நானாக மாறவில்லை. என்னை மாற்றிவிட்டார்கள். இனி நானாக நினைத்தாலும் மாறமுடியாது!”

“சும்மா சாட்டுச் சொல்லாதே. நீ நினைக்க விரும்பவில்லை என்று சொல்!” 

“அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!”

“நீ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள். ஆனால், ஒரு பெண்ணின் பாவத்தைச் சம்பாதிக்காதே! அதுவும் சித்ரா.. பாவம்டா. மிகவும் நல்ல பெண்.” என்றவனை ஏளனமாக நோக்கின ரஞ்சனின் விழிகள்.

“என்னடா? உன் நண்பன் நான் கெட்டவனாகி விட்டேன். இன்று ஒருநாள் பார்த்த அவள் நல்லவள் ஆகிவிட்டாளா? அந்த நல்லவளைத்தான் ஏதாவது செய்யவேண்டும் என்று அன்று நீயும் ஜீவனும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தீர்கள். மறந்துவிட்டதா?” 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock