கடை வாசலில் கால் பாதிக்கும் போதே சித்ராவின் விழிகள் ரஞ்சனைத் தேடின. அவனும் அவளைக் கண்டுவிட்டான். ஆனாலும் காணாதது போல் நின்றுகொண்டான்.
அவனை முறைத்துக்கொண்டே தந்தையுடன் உள்ளே சென்றவள், எதைச் சாட்டி அவருடன் கடைக்கு வந்தாளோ, அதை அவரின் தலையிலேயே கட்டிவிட்டு ரஞ்சனைத் தேடி வந்தாள்.
அவனருகில் சென்று, “என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் மனதில்?” என்று படபடத்தாள்.
அவள் தன்னைத் தேடி வருவாள் என்பதை ஊகித்திருந்த ரஞ்சனும் மற்றவர்களின் பார்வை படாத இடத்திலேயே நின்றிருந்தான்.
இருந்தபோதிலும், “மெல்லக் கதை!” என்று அதட்டினான்.
சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் சித்ரா. அதில், அன்று அவன் கடையில் வைத்துப் பார்த்த இளகல் மருந்துக்கும் இல்லை. அவன் விழிகளில் காதல் இல்லை. உதடுகளில் சிரிப்பில்லை.
மொத்தத்தில் பழைய ரஞ்சனாக இருந்தான். ஆனால், அந்த ரஞ்சனைத் தானே சித்ராவும் காதலித்தாள். எனவே, “என்ன இதயன், ஏதாவது பிரச்சினையா?” என்று இதமாகக் கேட்டாள்.
அதைக் கேட்டவனுக்கு உள்ளே சுருக்கென்று வலிக்க, அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையும் ஒரு நொடிதான். அவள் விழிகளில் இருந்த நேசம் அவனை என்னவோ செய்ய, வேகமாகத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். “நீ பாட்டுக்கு என்னைத் தேடிவந்து கதைக்கிறாய். யாராவது பார்த்தால்?”
“அப்படிப் பார்த்தால் பார்க்கட்டும். ஏன், இதற்கு முன் நான் உங்களோடு கதைத்ததே இல்லையா.. சரி, அதை விடுங்கள். ஏன், நான் அழைத்தபோது எடுக்கவில்லை. ஒரு மெசேஜுக்கும் பதில் இல்லை.”
ஒதுங்க நினைப்பவனை விடாமல் துரத்திவந்து அக்கறை காட்டும் அவளின் அன்பு அவனைப் பலவீனப் படுத்தப் பார்த்தது.
அதைக் காட்டிக்கொள்ளாமல், “நேரமே இல்லை.” என்றான்.
“ஒரு இரண்டு நிமிடம் கூடவா இல்லை?” என்று கேட்டவளை முறைத்தான் ரஞ்சன்.
“ஆமாம்! இல்லைதான். இப்போ என்ன அதற்கு?”
“இப்போது எதற்கு உங்களுக்குக் கோபம் வருகிறது? நியாயமாகப் பார்த்தால் ஆத்திரப்பட வேண்டியவள் நான்தான்.” என்றவளை இடைமறித்தது அவன் பேச்சு.
“நீ எதற்கு ஆத்திரப் படவேண்டும்?”
“பிறகு கொஞ்சுவார்களா? என்னோடு கதைக்க ஒரு ஐந்து நிமிடம் கூடவா உங்களால் ஒதுக்க முடியாது? சரி, நேரமில்லை என்பதையாவது மெசேஜாகத் தட்டி விட்டிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதற்கு நீங்கள் என்னை விரும்பாமலேயே இருந்திருக்கலாம்.”.
“ஒருவரை ஒருவர் விரும்பினால் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று கட்டாயமா என்ன?” என்றவனின் பேச்சை அவள் இடைமறிக்கப் பார்க்கவும், கையை நீட்டித் தடுத்தான் ரஞ்சன்.
“நான் சொல்வதைக் கேள். இப்படித் தனியாக நாமிருவரும் நின்று கதைப்பது நல்லதில்லை. இனிமேல் இப்படி என்னைத் தேடிவந்து கதைக்காதே. உன் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரிந்தால் பிரச்சினை. அதோடு, காதலிப்பவர்கள் இந்தக் கைபேசியில் கதைப்பது, மெசேஜ் அனுப்புவது எல்லாம் செய்யவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. யார் செய்தாலும் என்னால் முடியாது. அதனால் இனி நீயும் எனக்கு அழைக்காதே. அப்படியே அழைத்தாலும் நான் கதைக்க மாட்டேன். அதோடு, நீ உன் படிப்பைக் கவனி. நான் என் வேலையைக் கவனிக்க வேண்டும்.” என்றான் அவன்.
“சரி! இனி இப்படி உங்களைத் தேடிவந்து கதைக்கவில்லை. ஆனால்,கைபேசியிலும் கதைக்க வேண்டாம், மெசேஜும் அனுப்ப வேண்டாம் என்றால் வேறு என்னதான் செய்வது?” என்று கேட்டாள் சித்ரா.
பதில் சொல்லமுடியாமல் அவன் நிற்க, “வருகிறீர்களா, வெளியே எங்கேயாவது போவோம்?” என்று வேண்டுமென்றே கேட்டவளை முறைத்தான் அவன்.
“அதற்கும் மாட்டீர்கள். இப்படி ஒரு வழியிலும் உங்களோடு கதைக்காமல் என்னால் இருக்க முடியாது இதயன்.” என்றவளை, ஒருவித இயலாமையுடன் பார்த்தான் அவன்.
முடிந்தவரை அவளைத் தள்ளி வைக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் விடுகிறாள் இல்லை. ஒதுங்க நினைத்தாலும் தேடிவந்து கதைக்கிறாள்.
அவளது பிடிவாதக் குணமும், அவன் மீது கொண்ட காதலும் ஒன்றாகச் சேர்ந்து அவனை ஆட்டிப் படைத்தது. அவனைப் புரிந்து கொள்கிறாள் இல்லையே என்றிருந்தது. தேடிவந்து நேசக்கரம் நீட்டும் அவளிடம் அவனாலும் ஒரு அளவுக்கு மேல் ஒதுங்க முடியவில்லை.
“இவ்வளவு நாளும் எப்படி இருந்தாயோ அப்படியே இரேன்..” என்றவனை இப்போது அவள் முறைத்தாள்.
“உங்களை..! போயும் போயும் உங்களைக் காதலித்தேனே நான்.” என்று பல்லைக் கடித்தவள், சொன்னாள்.
“முன்னர் மாதிரி இருப்பதற்கு நானும் நீங்களும் யாரோ கிடையாது. அதனால் நீங்கள் என்னுடன் தினமும் கைபேசியில் கதைக்க வேண்டும். நான் மெசேஜ் அனுப்பினால் பதில் வரவேண்டும். இல்லையானால் என்ன ஆனாலும் சரி என்று இங்கே வந்து உங்களுடன் கதைப்பேன். அப்படியே யாராவது பார்த்தாலும் என்ன நடக்கும்? நம் திருமணம் தானே. அதற்கு நான் எப்போதோ தயாராகிவிட்டேன்..” என்றாள் அந்தப் பிடிவாதக்காரி.
அவன் மறுத்தும் உன்னோடு கதைப்பேன், நீயும் கதைக்கவேண்டும் என்றவளின் பால், எவ்வளவு தடுக்க முயன்றும் அவன் மனம் சாய்ந்துகொண்டே சென்றது.
அதோடு, அவனாக வேலையை விடும்வரைக்கும் அவனுக்கு அந்தக் கடையில் வேலை செய்தாகவேண்டும். அதற்கு அவளால் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்றும் நினைத்தான். எனவே, அவள் கடையில் வைத்துக் கதைக்கமாட்டேன் என்றதே போதுமானதாக இருக்கச் சம்மதித்தான் ரஞ்சன்.
அவன் சம்மதித்த பிறகே அவனை விட்டு சந்தானத்திடம் சென்றாள் சித்ரா. அவருக்கு ஓய்வைக் கொடுத்துவிட்டு மெய்யாகவே கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
வேலை ஒருபக்கம் நடந்தபோதும், அவ்வப்போது கடைக்குள் வந்து ரஞ்சனைப் பார்ப்பதும் யாரும் பார்க்காதபோது அவனைப் பார்த்துக் கண்ணடிப்பதும், நாக்கைத் துருத்திக் காட்டுவதும், குறுஞ்சிரிப்பு மின்ன அவனையே விழிகளால் தொடர்வதும் என்று அவனைச் சித்தரவைதை செய்யத் தவறவில்லை அந்தச் சித்திரப் பெண்.
உள்ளூர அதையெல்லாம் ரசித்தபோதும், வெளியே முறைத்தான் ரஞ்சன். அவனது இயல்பு அதுதான் என்று கணித்திருந்த சித்ராவும் அதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப் படவும் இல்லை. தன் குறும்புச் செயல்களை நிறுத்தவும் இல்லை.
அதன்பிறகு வந்த நாட்களில் எல்லாம் சித்ரா அவனுக்கு அழைக்கத் தவறியதுமில்லை. அவன் அவளின் அழைப்புக்களை ஏற்கத் தவறியதும் இல்லை. ஆனால், முடிந்தவரை சுருக்கமாகத் தன் பேச்சுக்களை முடித்துக் கொண்டான்.
அப்படியே ஓடிப்போனது நாட்கள். மாத முடிவை நெருங்குகையில் அந்த மாதத்துக்கான மொத்த வருமானமே மூன்று லட்சங்களை நெருங்கியது ரஞ்சனுக்கு. அவனே எதிர்பாராத வியாபாரம்!
உடனேயே சந்தானத்தின் இரண்டு லட்சங்களை மீண்டும் அவரது வங்கியில் வைப்புச் செய்தான்.
மாதக் கடைசியில் மட்டுமே நிலுவையைச் சரிபார்க்கும் சந்தானத்துக்கு, மாதத் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட பணம் மாதக் கடைசியில் வைப்புச் செய்யப் பட்டது தெரியவராமலேயே போனது.
பல வருடப் பழக்கம் என்பதால், வங்கியையும் அவர் சந்தேகப் படவில்லை. ரஞ்சனையும் சந்தேகப் படவில்லை.
அடுத்த மாதமும் பிறந்தது. முதல் வாரத்தில் சந்தானம் வங்கியில் போடச் சொல்லிக் கொடுத்த பணத்தில் ஒன்றரை லட்சங்கள் எடுத்தவன், தன்னிடம் இருந்த ஒரு லட்சத்தையும் சேர்த்துச் செருப்புகளைக் கொள்வனவு செய்தான்.
அந்த மாதமும் முடியும் முன்னரே திரும்பவும் எடுத்த பணத்தை மீண்டும் வைப்புச் செய்தான் ரஞ்சன்.
அவன் கடையில் இலாபமும் வரவர சந்தானத்திடம் எடுக்கும் பணத்தின் அளவு குறைந்துகொண்டே சென்றது.
மூன்றாவது மாதம் எண்பது ஆயிரங்கலாகக் குறைந்தது அவரிடம் அவன் எடுத்து மீண்டும் வைத்த பணத்தின் தொகை.
அடுத்த மாதத்தில் இருந்து எடுக்கத் தேவையில்லை என்று எண்ணியபடி இருந்தவனை, அந்த வார இறுதியில் வந்த சித்ராவின் விழிகள் யோசனையுடன் தழுவின. யோசனையை மட்டுமல்ல, இன்னும் பல பாவங்களைத் தாங்கி நின்றன அவள் விழிகள்.
முதலில் அதைக் கவனிக்காதபோதும் அவளது பார்வையில் இருந்த வித்தியாசத்தை விரைவாகவே கண்டுகொண்டான் ரஞ்சன்.
எப்போதும் அவள் விழி வழி வரும் செய்திகளைத் தெளிவாக விளங்கிக் கொள்பவனால் அன்று அவளது பார்வையின் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அதை அலட்சியப் படுத்தப் பார்த்தவன் முடியாமல் ஒரு கட்டத்தில் என்னவென்பதாக விழிகளாலேயே அவளிடம் கேட்டான்.
அதை எதிர்பாராத சித்ரா சட்டென்று தடுமாறிப்போனாள். அவன் விழிகளைப் பாராது ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்துவிட்டு தந்தையின் அறைக்குள் சென்றுவிட்டாள்.
ரஞ்சன் ஒருநொடி அப்படியே நின்றுவிட்டான். ஒருநாளும் இல்லாத அவளின் அந்தச் செயல் அவனிடம் ஒருவிதப் படபடப்பையும், பதற்றத்தையும் தோற்றுவித்தது.
குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா! அவனுள்ளம் பலதையும் எண்ணிக் கலங்கியது. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், முதன்முறையாக அவனாக அவளுக்கு அழைத்தான்.
அழைப்புப் போய்க்கொண்டே இருந்தது.
என்னவாகிற்று அவளுக்கு.. என்று அவன் சிந்தனை ஓட, “ஹ..லோ…” என்றது அவள் குரல், அழைப்பு நிற்கும் தருவாயில்.
“ஏன்டி இவ்வளவு நேரமாக எடுக்கவில்லை..” இருந்த பதட்டத்தில் பாய்ந்தான் ரஞ்சன்.
“அது.. அப்பா..”
“ஓ.. அங்கிள் அருகில் நிற்கிறாரா?” என்று கேட்டவன், “அவரைவிட்டுத் தள்ளி வா..” என்றான்.
“ம்.. சரி…”
அப்போதுதான் அவள் குரலில் இருந்த ஒதுக்கத்தையும், சுருக்கமாக வரும் பதில்களையும் கண்டுகொண்டான் ரஞ்சன். வார்த்தைக்கு வார்த்தை அவள் சேர்க்கும் ‘இதய’னை காணோம்.
இது அவள் இயல்பில்லையே!
அவனாக ஒருநாளும் அவளைத் தேடி அழைப்பதில்லை என்று எப்போதும் குறைபடுபவள், இன்று அவன் அழைத்தும் இப்படிக் கதைக்கிறாள் என்றால்.. என்னவோ பிரச்சினை என்பது உறுதியாகியது.
“யாழி! ஏன் ஒருமாதிரி இருகிறாய்?”
“இல்லையே.. அப்படி ஒன்றுமில்லையே.”
“பொய் சொல்லாதே! உன் பார்வையே பிழையாக இருந்தது. அதோடு இவ்வளவு நேரமாக என்னோடு கதைக்கிறாய், இன்னும் ஒருதடவை கூட நீ என் பெயரைச் சொல்லவில்லை. என்னடி? என்ன பிரச்சினை? சொன்னால் தானே எனக்குத் தெரியும்?” படபடத்தான் அவன்.
“அதுதான் ஒன்றுமில்லை என்கிறேனே..” ஓரளவுக்குத் தன்னை சமாளித்துக்கொண்டு சொன்னாள்.
“இல்லை. ஏதோ இருக்கிறது. நீ முதலில் மேலே ‘ஸ்டோர் ரூம்’க்கு வா. உன்னோடு நேரில் கதைக்கவேண்டும்.”
“அது.. அப்பா இருக்கிறார்.. நான் வீட்டுக்குப் போகவேண்டும்..” என்று, எதையெதையோ தடுமாறிச் சொன்னாள் சித்ரா.
ரஞ்சனுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. யாரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு நினைத்ததைச் செய்து முடிக்கும் இயல்புள்ளவள் அவள். அப்படியானவள் ‘அப்பா இருக்கிறார்’ என்று சொன்னதை நம்ப முடியவில்லை.
ஏனோ அவனை அவள் தவிர்க்கிறாள் என்பது விளங்கவே, அவளை இழுத்துவைத்து அறைந்தால் என்ன என்று கூடத் தோன்றியது. ஆத்திரத்தில் கைபேசியை பட்டென்று அணைத்துவிட்டான்.
அந்தப் பக்கம் இருந்த சித்ராவுக்கு விழிகள் நீரால் நனையப் பார்த்தது. இமைகளைப் படபடவென்று கொட்டி விழி நீரைத் தடுத்தவளுக்கு, நெஞ்சில் எழுந்த வலியை அடக்கும் வழி தெரியாமல், நெஞ்சை இரண்டு கையாளும் அழுத்திக் கொண்டாள்.
குளியலறைக்குச் சென்றுவிட்டு அறைக்குள் வந்த சந்தானம், மகளை அப்படிப் பார்த்ததும் பதறிவிட்டார். “சித்தும்மா.. என்னடா? என்ன செய்கிறது?” என்று பதறியபடி அவர் அருகில் வரவும், முதலில் என்ன சொல்வது என்று தெரியாது தடுமாறி, “அது.. அது வி..விக்கல் அப்பா..” என்றாள் ஒருவழியாக.
“அதற்கு ஏனம்மா கண்கள் கலங்கி இருக்கிறது, முகமும் சோர்ந்து தெரிகிறது..” மகளின் பதிலில் திருப்தியுறாமல் கேட்டார் அவர்.
“அது விக்கலும் இருமலும் சேர்ந்து வந்துவிட்டதப்பா.. அதுதான். நீங்கள் பதறாதீர்கள்.” என்றாள், தன்னை ஒருவழியாகச் சமாளித்து.
அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தார் மகளிடம். “விக்கலுக்குத் தானா இந்தப்பாடு.. நீ இருந்த விதத்தைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று பதறிவிட்டேன்..” என்றவரின் கை, தண்ணீரைப் பருகிய மகளின் தலையை வருடிக் கொடுத்தது.
அந்தப் பரிவிலும் கண்ணைக் கரித்தது சித்ராவுக்கு. இன்னுமின்னும் தண்ணீரை அருந்தி தன்னைச் சமாளித்துக் கொண்டாள். “வீட்டுக்குப் போவோமா அப்பா. எனக்கு போரடிக்கிறது..”
ஒரு நாளும் இல்லாமல் அன்று அவள் அப்படிக் கேட்டது வியப்பாக இருந்தபோதிலும், மகளின் வாடிய முகம் கருத்தில் பட, “சரி, வா போகலாம்..” என்றவர், அவளையும் அழைத்துக் கொண்டு காருக்கு நடந்தார்.
கடையினூடாக நடந்து வெளியே செல்லும் வரையிலும் சித்ராவின் தலை நிமிர்ந்தே இருந்தபோதும், அவள் விழிகள் அக்கம் பக்கம் என்று எந்தப் பக்கமும் பாராது நேர் பார்வையாகவே இருந்தது.
தன்னை யாரோ.. யாரோ என்ன யாரோ, ரஞ்சனின் விழிகள் துளைப்பதை அவள் உணராமல் இல்லை. ஆனாலும் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அப்படியே காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் ஆத்திரத்துக்கு அளவே இல்லாமல் ஏறிக்கொண்டே சென்றது.
இனி அவளோடு கதைக்கவே கூடாது! அவளாக வந்தாலும் முகம் பார்க்கக் கூடாது! என்னை எப்படி அலட்சியப் படுத்தினாளோ அப்படி அவளையும் தூக்கி எறியவேண்டும்!
இப்படி பல உறுதிகளை உடனேயே எடுத்தது அவன் மனம்.
மனதில் இருந்த ஆத்திரத்தின் வடிகாலாக வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்ய ஆரம்பித்தான். நேரம் செல்லச் செல்ல, கோபம் அவன் கட்டுக்குள் வரவர, மீண்டும் ஏன் என்னுடன் கதைக்காமல் போனாள்.. அப்படிப் போகமாட்டாளே.. என்கிற கேள்விகள் உதயமாகத் தொடங்கின.
அவளின் அந்தப் புறக்கணிப்பு அவனைத் தாக்கினாலும், ஒருபக்கம் ஒருவிதப் பதட்டமும் இல்லாமல் இல்லை. அடுத்தடுத்த நாட்கள் அந்தப் பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டு, நடப்பதை நடக்கும்போது கண்டு கொள்ளலாம் என்கிற தெளிவுக்கு மீண்டும் வந்திருந்தான் அவன்.
அதோடு, என்ன நடந்தாலும் அவன் கடைக்கு இனி எந்தப் பாதிப்பும் வராது என்பது வேறு தெம்பைக் கொடுத்தது.
அப்படியே அந்த வார இறுதியும் வந்துசேர்ந்தது. ஆனால், சித்ராதான் வரவில்லை. அவன் விழிகள் அடிக்கொரு தரம் கடையின் வாசலைப் பார்த்து ஏமாந்தது. உங்களோடு கதைக்காமல் என்னால் இருக்கமுடியாது என்று சொன்னவளுக்கு என்னவாகிற்று?
அவனே ஒதுக்கி வைக்க நினைத்தபோது, விடாது அவனை நெருங்கியவளின் இன்றைய விலகலுக்கான காரணம் என்ன? திரும்பவும் கோபம் வந்தது. அந்தத் திமிர் பிடித்தவளுக்கு இவ்வளவு பிடிவாதாமா என்று ஆத்திரப் பட்டான்.
அவளுக்கு அழைத்துப் பார்க்கலாமா என்றுகூட நினைத்தான். அவனுக்குள் இருந்த பிடிவாதக் குணம் அதற்குத் தடையாக நின்றது.
இப்படியே அந்த வாரமும் ஓடிப்போக, அந்தச் சனிக்கிழமையும் மதியம் வரை அவள் வருவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அந்த ஏமாற்றம், சினத்தையும் ஆத்திரத்தையும் கொடுக்க, மேலே ஸ்டோர் ரூமுக்குச் சென்று புதிதாக வந்திறங்கிய ஷூக்களை ஒவ்வொரு பெட்டிகளுக்குள்ளும் அடைக்கத் தொடங்கினான்.