திடீரென்று ஸ்டோர் ரூமின் கதவுகள் அடைக்கப்படும் சத்தம் கேட்டு அவன் திரும்பவும், இரு மலர்க் கரங்கள் அவனை வேகமாக அணைக்கவும் சரியாக இருந்தது.
மனதில் புழுங்கிக் கொண்டிருந்தவனின் அத்தனை புழுக்கங்களும் வடிந்தே போயிற்று!
அந்த அணைப்பில் தன்னையே மறந்தவனின் கையில் இருந்த பெட்டி தன்னாலே நழுவிவிட, அவன் கரங்களும் அவளை வளைத்தன.
அவனது பரந்த மார்பில் முகத்தைப் புதைத்திருந்தவளின் கைகளின் இறுக்கம் அதிகரித்துக்கொண்டே செல்ல, சற்று நேரம் அதிலே அடங்கி நின்றவன், அவள் காதருகில் குனிந்து, “யாழி..” என்று மெல்ல அழைத்தான்.
“ம்..?”
“என்ன?”
அவள் தலை மட்டும் ஒன்றுமில்லை என்பதாக ஆடியது.
சற்றுப் பொறுத்து, “இப்படியே எவ்வளவு நேரம் நிற்கப் போகிறாய்?” என்று கேட்டான்.
அவனைக் கட்டியிருந்த கரங்களை விலக்காது, தலையை மட்டும் நிமிர்த்தி, “எவ்வளவு நேரம் என்றாலும்..” என்றாள் சித்ரா.
“கால் வலிக்காதா?” புன்னகையோடு கேட்டான் ரஞ்சன்.
“அப்படி வலித்தால் என்னை நீங்கள் தூக்க மாட்டீர்களா?”
ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி, “தூக்கி?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான் அவன்.
“தூக்கி என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்..” என்றாள் அவளும், அவனுக்குக் குறையாத குறும்புடன்.
“என்..ன வேண்டுமானாலும் செய்யலாமா?” உல்லாசக் குரலில் கேட்டபடி, அவளை நோக்கிக் குனிந்தான் அவன்.
“ஆசைதான்..” என்றபடி நகைத்தவள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
அவளை அணைத்தபடி நின்றவனோ, இன்னும் அவளைத் தன்னோடு இறுக்கியபடி, “திடீரென்று வந்து கட்டியெல்லாம் பிடிக்கிறாய். அதுவும் முன்னேற்பாடாக கதவை எல்லாம் மூடிவிட்டு. இன்று என்னவாகிற்று உனக்கு?” என்று கேட்டான்.
லேசாக முகம் வாட, “அது.. உங்களைப் பார்த்து இரண்டு வாரம் ஆகிவிட்டதா.. அதுதான்.” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.
அப்போதுதான் அவனுக்கும் எல்லாம் நினைவுக்கு வந்தன. அப்படியே அவனது கோபமும் கூடவே வந்தது.
சட்டென்று அவளை விலக்கி நிறுத்தியவனின் கூரிய விழிகள் அவளைக் குற்றம் சாட்டின.
“ஏன் அப்படிச் செய்தாய்?”
எதைக் கேட்கிறான் என்று புரிந்ததில் ‘எப்படிச் செய்தேன்’ என்று அவள் கேட்கவில்லை.
சில வினாடிகள் ஒன்றுமே சொல்லாமல் நின்றவள், “அது ஏதோ குழப்பம்..” என்றாள் மெல்ல.
“என்ன குழப்பம்?” கூர்மையுடன் வந்தது கேள்வி.
“அதுதான் ஏதோ குழப்பம் என்றேனே இதயன். அதை விடுங்களேன். அதுதான் நீங்கள் சொன்னபடி ஸ்டோர் ரூமுக்கு வந்துவிட்டேனே..” என்று சமாளிக்கப் பார்த்தாள் அவள்.
“அன்று சொன்னதற்கு இன்று அதுவும் இரண்டு வாரங்கள் கழித்து, மிக வேகமாய் வந்திருக்கிறாய். அதுவரை நீ என்னுடன் கதைக்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. என்ன, உன் பணக்காரத் திமிரைக் காட்டுகிறாயா?”
‘பணக்காரத் திமிர்’ என்று அவன் சொன்னது சுள்ளென்று கோபத்தை வரவழைத்தபோதும், அவன் எதற்காகக் கோபப் படுகிறான் என்பதைப் புரிந்துகொண்டவள் அமைதியாகவே பதில் சொன்னாள்.
“அன்று ஏனோ எனக்கு மனது சரியில்லை இதயன். ஒருவிதக் குழப்பமும். பிறகு கல்லூரியில் பரீட்சைகள் இருந்தது. அதுதான்.. மற்றும்படி ஒரு திமிரும் இல்லை.” என்றவள், அவன் மீண்டும் வாயைத் திறக்கவும், “திரும்பவும் என்ன குழப்பம், ஏன் மனது சரியில்லை என்று கேட்காதீர்கள். அது எனக்கே தெரியாது.” என்றவளைக் கூர்ந்தான் அவன்.
அவள் சொல்வதை அவனால் நம்பமுடியவில்லை. என்னவோ நடந்திருக்கிறது. அவனிடம் அவள் அதை மறைப்பதும் விளங்கியது. என்றாலும், அதைத் தூண்டித் துருவ அவனும் விரும்பவில்லை. அதுவே அவனுக்கு எதிராக மாறிவிட்டால்?
அதோடு, எது மலிந்தாலும் சந்தைக்கு வரும்தானே? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான். சிந்தனை உள்ளே ஓடியபோதும் அவன் விழிகள் அவள் முகத்தில் இருந்து அகலவில்லை.
முகத்தில் குறும்பு மின்ன, புருவங்கள் இரண்டையும் உயர்த்தி என்னவென்பதாக அவள் கேட்கவும், அதைப் பார்த்திருந்தவனின் இதழ்களிலும் மெல்லமெல்லப் புன்னகை மலர்ந்தது.
“அப்பாடி! இந்தச் சிடுமூஞ்சியின் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்கு நான் படும் பாடு இருக்கே..” என்றாள் நகைத்தபடி.
அழகாய் விரிந்த அவள் அதரங்களின் அழகில் மயங்கி, அவளது கீழுதட்டைத் தன் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் பற்றி இழுத்தவன் அதிலேயே பார்வையைப் பதித்து, “என்னடி? எப்போ பார்த்தாலும் சிடுமூஞ்சி என்கிறாய். அடிதான் வாங்கப் போகிறாய்..” என்றான், பொய் மிரட்டலாக.
அவன் பார்வையும் செயலும் அவளைச் செங்கொழுந்தாக மாற்ற, தன் கீழுதட்டைப் பற்றியிருந்த அவன் கையைத் தட்டிவிட்டபடி, “இத..யன்..!” என்று வெட்கத்தில் சிணுங்கினாள் சித்ரா.
பார்வை மாற அவளை நெருங்கினான் ரஞ்சன்.
ஆசைகொண்ட மனது அவனது அருகாமைக்காக ஏங்கித் துடித்தபோதும், அவன் நெஞ்சில் இரண்டு கைகளையும் வைத்துத் தள்ளினாள் சித்ரா. “அங்கேயே நின்று கதையுங்கள்.” என்றவளின் பேச்சிலும் செயலிலும் சட்டெனச் சிரித்துவிட்டான் ரஞ்சன்.
“இவ்வளவு பயப்படுகிறவள் எதுக்குடி தனியாக இருக்கும் என்னைத் தேடி வந்தாய்.”
“ம்.. இந்தச் சிடுமூஞ்சியைச் சிரிக்க வைக்கத்தான்.”
அதைக் கேட்டவனின் முகம் புன்னகையைத் தொலைத்தது.
நொடியில் அவனுடைய இயல்பையே மாற்றுகிறாளே! அவளின் அருகாமையில் அவனது உறுதி குலைந்து போகிறதே. என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?
அவளுடன் இனிக் கதைக்கவே கூடாது, அவளின் முகமே பார்க்கக் கூடாது என்றெல்லாம் எடுத்த முடிவுகள் என்னவாகிற்று? அவள் மேல் இருந்த கோபம் என்னவகிற்று? இப்படியே போனால், அவனைப் பலகீனப் படுத்தி மொத்தமாகச் சாய்த்து விடுவாளோ?
அவள் சிந்தும் ஒற்றைப் புன்னகை போதுமே அவனை ஒன்றுமில்லாமல் ஆக்க!
இல்லை! கூடாது!
“இதயன்? என்ன? ஏன் ஒன்றுமே கதைக்காமல் நிற்கிறீர்கள்?” என்று அவன் தோள்களைப் பற்றிக் கேட்டாள் சித்ரா.
வேகமாக அவள் கரங்களைத் தன்னிடம் இருந்து அகற்றியவன், “ஒன்றுமில்லை. நீ போ.. யாராவது வந்துவிடப் போகிறார்கள்..” என்றான்.
அவள் மேலே வந்தும் நிறைய நேரம் என்பதால், “ம்.. சரி..” என்று தலையை ஆட்டியவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றாள்.
அவள் சென்றபிறகும் பல நிமிடங்கள் அப்படியே நின்றான் ரஞ்சன்.
அடுத்தடுத்த நாட்கள் அவனுக்கும் அவளுக்கும் வழமைக்குத் திரும்பின. அப்படியே காலச் சக்கரம் தன் பாட்டுக்கு ஓடவே, ரஞ்சனின் கடை திறந்து நான்கு மாதங்கள் ஆயிற்று!
சந்தானத்தின் பணம் இனித் தேவையில்லை என்கிற நிலைக்கு வந்ததும், வேலையை விட முடிவு செய்தான் ரஞ்சன்.
அவரிடம் கடனாக வாங்கிய ஒரு லட்சத்தில் இதுவரை மாதா மாதம் செலுத்திய தொகை போக மீதியை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றான்.
“அங்கிள், உங்களிடம் வாங்கியதில் மீதிப்பணம்..” என்றபடி, அதை நீட்டினான்.
அவனையும் அவன் கையில் இருந்த பணத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை ரஞ்சன். நீ ஆறுதலாகவே தா.” என்றார் அவர்.
அவரின் அந்தப் பெருந்தன்மையான பேச்சில் அவனுக்கு லேசாக முகம் கன்றியது. “நன்றி அங்கிள். ஆனால், இதை வாங்கிக் கொள்ளுங்கள். அவசரத்துக்குத் தந்து உதவியதற்கு மிகவும் நன்றி அங்கிள். நீங்கள் செய்தது மிகப்பெரிய உதவி.” என்றான்.
“நான் ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லை ரஞ்சன். என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி.” பணத்தை வாங்கிக்கொண்டு சொன்னார்.
“உங்களுக்கு சிறு உதவியாகப் பட்டாலும் எனக்கு அது மிகப் பெரிய உதவிதான் அங்கிள்.” என்றான், மனதில் இருந்து.
“சரிதான் விடு! நீயும் வாங்கியதை நாணயமாகத் திருப்பித் தந்துவிட்டாயே.” என்றவர், “நீ போகும்போது அப்படியே முருகனிடம் எனக்கு ஒரு டீ வாங்கி வரச் சொல்லிவிடு ரஞ்சன்.” என்றார்.
“சரி அங்கிள், சொல்லிவிடுகிறேன்.” என்றவன், “அங்கிள்.. இன்னொரு விஷயம்…” என்றான்.
“என்னப்பா?”
“அது.. நான் அடுத்த மாதத்தில் இருந்து வேலையை விடுகிறேன் அங்கிள்.”
அதை எதிர்பாராதவரின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி. “விட்டுவிட்டு? என்ன செய்யப் போகிறாய்..”
“வேறொரு கடைக்குப் போகப்..” என்றவனின் பேச்சை இடைமறித்தார் சந்தானம்.
“ஏன், இங்கே உனக்கு என்ன குறை ரஞ்சன்? சம்பளமும் மற்றக் கடைகளை விட உங்கள் எல்லோருக்கும் அதிகமாகத் தானே தருகிறேன்.” என்றவரின் குரலில் மெல்லிய கோபமும் இருந்தது.
“இங்கே ஒரு குறையும் இல்லை அங்கிள். நீங்களும் எங்களை நல்லபடியாகத்தான் நடத்துகிறீர்கள்.” என்று அவசரமாகச் சொன்னவனை யோசனையோடு பார்த்தார் சந்தானம்.
“பிறகு என்ன? ஏன் வேறு கடைக்குப் போகிறேன் என்கிறாய்?” என்று நிதானித்த குரலில் கேட்டார்.
“அது அங்கிள்.. அவர்கள் என் நண்பர்கள். அதுதான்..”
“யார்..?” என்று கேட்டவரின் யோசனையாகச் சுருங்கிய புருவங்கள் சில நொடிகளிலேயே தம் இடத்துக்குத் திரும்பின.
“எது.. நாதனின் கடையை எடுத்திருக்கிறார்களே.. அவர்களா?” என்று உடனேயே விசயத்தைப் பிடித்தார் சந்தானம். பல வருடங்களாக அந்த டவுனிலேயே வியாபாரம் நடத்துபவர் இல்லையா.
“ஆமாம் அங்கிள்.”
“அப்போ.. என்னிடம் வாங்கிய பணமும் அவர்களுக்கு.. அந்தக் கடைக்குத்தானா?” என்று கேட்டவரின் புத்தி கூர்மையில் சற்றே அதிர்ந்துதான் போனான் ரஞ்சன்.
“ஆ..மாம் அங்கிள்.” என்றவனிடம், ஒன்றுமே சொல்லாது சற்று நேரம் பார்த்தார் சந்தானம்.
பிறகு தன் கதிரையில் இருந்து எழுந்து வந்தவர் அவன் தோள்களைப் பற்றி, “நண்பர்களாக ஆரம்பித்து இருக்கிறீர்கள் போல. நானும் கேள்விப் பட்டேன், உன் நண்பர்கள் மிகத் திறமையாக வியாபாரம் செய்வதாக. நீங்கள் இன்னுமின்னும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள் ரஞ்சன்.” என்று வாழ்த்தினார்.
அவரது பெருந்தன்மையான பேச்சில் பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றான் ரஞ்சன்.
“கடின உழைப்பாளியான உன்னை வெளியே விட எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லைதான். ஆனால்.. நீயும் முன்னேறத்தானே வேண்டும். அதனால் நீ அடுத்த மாதத்தில் இருந்து உங்கள் கடைக்கே போ..” என்றார்.
“நன்றி அங்கிள்..” என்றவனின் குரல் எழும்பவே இல்லை.
அவர் அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஒரு புன்னகையுடன் தலையை அசைக்கவும், அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியேறினான் ரஞ்சன்.
அடுத்த நாளே தந்தையின் மூலமாகக் கேள்விப்பட்ட சித்ரா, வேலையை விடப்போவதாக ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டு அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டாள்.
அவளைச் சமாளிப்பதற்குள் அவனுக்குத்தான் போதும் போதும் என்றாகிவிட்டது. இதற்கு இன்னும் பத்துச் சந்தானத்தைச் சமாளிக்கலாம் என்று தோன்றியது.
“அப்போ நான் இனி உங்களை எப்படிப் பார்ப்பது?”
“என்னைப் பார்த்து என்ன செய்யப் போகிறாய்? அதுதான் தினமும் கதைக்கிறாயே.”
“அதெல்லாம் முடியாது. வாரத்தில் ஒருநாள் நாம் சந்தித்தே ஆகவேண்டும். அதை எப்படி என்று மட்டும் சொல்லுங்கள்!” என்றாள் அந்த அடம் பிடித்தவள்!
“எங்குமே சந்திக்க முடியாது! இனி இப்படி என்னுடன் கதைப்பதையும் குறைத்துவிட்டுப் படிக்கும் வழியைப் பார்!” என்றான் ரஞ்சன் கடினப்பட்ட குரலில்.
“அதென்ன இனி? எங்கள் கடையை விட்டுத்தானே போகிறீர்கள், என்னை விட்டு இல்லையே. அதோடு உங்களோடு இப்படி ஐந்து நிமிடம் கதைப்பதால் படிப்பு ஒன்றும் கெட்டுவிடாது. அப்படியே படித்து நானும் ஒன்றையும் கிழிக்கப் போவதில்லை. உங்களுக்கு மனைவியாகத் தானே வரப்போகிறேன். பிறகென்ன?” என்று அதட்டலாகவே கேட்டவள், “ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் உங்கள் கடைக்கு வருவேன்!” என்று அறிவித்துவிட்டு, அவன் பதிலை எதிர்பாராமல் கைபேசியை அணைத்தாள்.
எல்லாவற்றிலும் அவள் நினைத்ததுதானா? எதிலும் பிடிவாதம் என்று நினைத்தவனின் முகம் கடினப் பட்டது.
அன்று சித்ராவின் பிறந்தநாள்.
ஆமாம்.. ரஞ்சனின் கடை திறந்தும் கிட்டத்தட்ட ஒருவருடம் ஆயிற்று!
அவ்வளவு நாட்களும், எவ்வளவு முயன்றும் ரஞ்சனால் சித்ராவின் வருகையை நிறுத்த முடிந்ததே இல்லை. ஆனால், முடிந்தவரை அவளுடன் தனிமை நேராமல் கவனித்துக் கொண்டான். அது அவனுக்குச் சிரமாமாகவும் இருக்கவில்லை.
அதேபோல, அவளும் அவனுடன் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள முனையவும் இல்லை. அவனைப் பார்ப்பதும் அவனுடன் இரண்டு வார்த்தை கதைப்பதுமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
அன்று காலையிலேயே அவளுக்கு அழைத்தான் ரஞ்சன்.
தலைக்குக் குளித்துவிட்டு குளியலறையை விட்டு வெளியே வந்தவள், அழைப்பது தன் நண்பர்களில் யாரோ ஒருவராக்கும் என்று எண்ணியபடி கைபேசியை எடுத்துப்பார்க்க, ஆனந்தமாக அதிர்ந்தாள்.
அங்கே மின்னிக் கொண்டிருந்தது ரஞ்சனின் இலக்கங்கள். அவனிடம் பிறந்தநாள் என்று அவள் சொல்லவே இல்லை.
அப்படியிருந்தும் அவன் நினைவு வைத்து அழைக்கிறான் என்பதில் உள்ளே மனம் துள்ளியபோதும், அதற்குத்தான் அழைக்கிறானா என்கிற சந்தேகமும் கூடவே எழ, எதையும் காட்டாதிருக்க முயன்றபடி, “ஹலோ..” என்றாள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழி!!” என்றான் ரஞ்சன், தனக்கே உரிய கம்பீரமான குரலில் உற்சாகமாக.
“இதயன்…!” என்று சந்தோசத்தில் கூவியவளுக்கு, அடுத்துப் பேச்சே வரமறுத்தது.
போனவருடம் இதே நாளன்று சேலையில் சென்றவளை ரசித்தவனின் விழிகளின் பாவங்களை மீண்டும் காண எண்ணி, அன்றும் புதுச் சேலையில் அவன் முன்னால் சென்று நின்று ஆனந்த அதிர்ச்சி கொடுக்க எண்ணியிருந்தாள்.
இருந்தாலும், அவளது பிறந்தநாள் அவனுக்கு நினைவில் இருக்குமா? வாழ்த்துவானா? என்கிற கேள்விகளும் எதிர்பார்ப்பும் அவளிடம் இல்லாமல் இல்லை.
அப்படியிருக்க அவனாக அழைத்ததே அவளுக்கு மகிழ்ச்சி. இதில் அவளது பிறந்தநாளை நினைவில் வைத்து, வாழ்த்தியிருக்கிறான் என்பது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.
அவள் நிலையை அறியாத ரஞ்சன், “யாழி? லைனில் இருக்கிறாய் தானே..” என்று கேட்டான்.
“இருக்கிறேன் இருக்கிறேன்..” என்று அவசரமாகச் சொன்னவள், “எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா? நீங்கள் இப்படி அழைத்து வாழ்த்துவீர்கள் என்று நினைக்கவே இல்லை. போனவருடம் நீங்கள் அடம்பிடித்ததை நான் இன்னும் மறக்கவில்லை..” என்று சொல்கையிலே அவளுக்குச் சிரிப்பும் வந்துவிட, கலகலத்துச் சிரித்தாள்.
அதைக்கேட்டவனுக்கும் அன்றைய நாளின் நினைவுகள் வந்தபோது, அன்றுபோல் கோபம் அன்றிச் சிரிப்புத்தான் வந்தது.
“அன்றுபோல் இன்றும் நீ அடம்பிடித்து வாழ்த்துக் கேட்க முதலே நானே வாழ்த்திவிட்டேன் பார்த்தாயா?” என்று கேட்டான் நகை இலங்கிய குரலில்.
“நீங்கள் வாழ்த்தா விட்டால் மட்டும் நான் விட்டுவிடுவேனா?”
“அதுதானே, நீ யார்? உன் வீரச் செயல்கள் எத்தனை.” என்றான் கிண்டலாக.
அதைக்கேட்டுச் சலங்கையென அவள் கலகலத்துச் சிரிக்க, அதை ரசித்தபடி, “இன்று உனக்கு வேறு ஏதும் அலுவல் இருக்கிறதா?” என்று கேட்டான் அவன்.
“இல்லையே.. எனக்கு ஒரு அலுவலும் இல்லையே..” என்று அவசரமாகச் சொன்னவள், “ஏன் இதயன் கேட்கிறீர்கள்?” என்று ஆவலோடு கேட்டாள்.
“அது.. வா வெளியே எங்கேயாவது போவோம்..”
அதைக் கேட்டு மீண்டும் ஸ்தம்பித்து நின்றவளுக்கு, கதைப்பது ரஞ்சன் தானா என்கிற சந்தேகமே எழுந்தது.
பின்னே, கடையில் வைத்தே ஒழுங்காகக் கதைக்காதவன் வெளியே அழைக்கிறான் என்பது.. அவள் கனவிலும் நினைக்காத ஒன்று.
அவன் குணத்தை அறிந்திருந்த சித்ராவும் அதற்கு ஆசைப்பட்டது இல்லை.
“இதயன்.. வெளியே மழை ஏதும் பெய்கிறதா?”
“இல்லையே.. இந்தக் காலையிலேயே வெய்யில் கொளுத்துகிறது.” என்றான் அவன் அவளது கேலி புரியாமல்.
“இல்லை.. நீங்கள் வெளியே போகக் கூப்பிடுகிறீர்கள். அதுதான் மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறதே என்று கேட்டேன்..” என்றவள், அவனோடு வெளியே செல்லும் சந்தோசமும் சேர்ந்துகொள்ள நன்றாகவே நகைத்தாள்.
“பிறந்தநாளுக்கு உனக்குப் பிடித்ததாக ஏதாவது செய்வோம் என்று பார்த்தால் என்னையே கேலி செய்கிறாயே?”
“பின்னே? நான் கடைக்கு வந்தால் கதைக்கவே மாட்டீர்கள். ஏதோ பெரிதாக வெட்டி முறிப்பது போலக் காட்டிக் கொள்வீர்கள். இப்போதானால் வெளியே போகக் கூப்பிடுகிறீர்கள். அதுதான்..” என்றவளின் பேச்சில் அந்தப் புறம் அமைதியானது.
“சரி.. அப்படியானால் நீ வரவேண்டாம்..”
மறுபடியும் முருங்கை மரமா?
“இல்லையில்லை.. நான் வருகிறேன். எங்கே, உங்கள் கடைக்கே வரவா?” என்று அவசரமாகக் கேட்டாள்.
அவனுடன் வெளியே செல்லக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட அவளுக்கு விருப்பம் இல்லை.
“கடைக்கு வேண்டாம். நீ பஸ் ஸ்டான்ட் க்கு வா..” என்றவன், எத்தனை மணிக்கு என்ன ஏது என்று சொல்லிவிட்டு வைத்தான்.