அத்தியாயம்-15
ரஞ்சனோடு வெளியே செல்லப் போகிறோம் என்கிற குதூகலத்தோடு, தாய் பரிசாகக் கொடுத்த சேலையை வேகவேகமாகக் கட்டிக் கொண்டு, ஈரமாக இருந்த கூந்தலைக் காயவைத்துத் தளரப் பின்னிக் கொண்டவள், பெற்றவர்களிடம் சென்றாள்.
மகளைக் கண்டதும் முகம் மலர, “அழகாய் இருகிறாய் சித்து..” என்றபடி, அணைத்துக் கொண்டார் லக்ஷ்மி.
மாடியிலிருந்து இறங்கிவந்த மகளின் அழகு கண்களை நிறைத்ததோடு மட்டுமல்லாமல், அவளுக்குச் செய்யவேண்டிய திருமணத்தையும் நினைவு படுத்த, “என்னம்மா.. கல்யாணத்துக்குப் பார்க்கவா? அதுதான் உன் படிப்பும் முடிந்துவிட்டதே. வயதும் இருபத்தியிரண்டு ஆகிவிட்டது.” என்று, என்றுமில்லாமல் அன்று தானாகக் கேட்டார் சந்தானம்.
“ப்ச்! காலையிலேயே எனக்குக் கோபத்தை வரவழைக்காதீர்கள் அப்பா.. என்னை அனுப்பிவிட்டுக் கடைகளை எப்படிப் பார்ப்பீர்களாம்?”
“அதைப் பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. உன் திருமணத்தைப் பற்றி மட்டும் யோசி. கடைகளை வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர் ஓய்வாக இருப்பார்.” என்று அவசரமாகச் சொன்னார் லக்ஷ்மி.
அவர் பெற்ற மகளோ அவரையே குற்றவாளி ஆக்கினாள். “உங்களுக்குச் சமையலுக்கு ஆள் வேண்டும் என்றால் யாரையாவது வேலைக்கு அமர்த்துங்கள். அதைவிட்டுவிட்டு, கல்யாணம் என்கிற பெயரில் என்னை இங்கிருந்து துரத்தி, அப்பாவைக் கடைகளை வாடகைக்குக் கொடுக்கவைத்து, அவரையே வீட்டு வேலைக்காரனாகவும் மாற்றப் பார்க்கிறீர்களே. பயங்கரமான ஆள் நீங்கள். நாடகங்களில் வரும் வில்லிகள் எல்லாம் உங்களிடம் டியுஷனுக்கு வரவேண்டும்.” என்றவளை முறைத்தார் லக்ஷ்மி.
“இவளைப் பாருங்கள். என்ன பேச்சுப் பேசுகிறாள்..” என்று கணவரிடம் அவர் முறையிட, அந்தக் கணவரோ மகளின் பேச்சில் உண்டான சிரிப்பை அடக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்.
அதில் முகம் கடுக்க, “அப்பாவும் மகளும் என்னவாவது செய்து தொலையுங்கள். என்றைக்கு நான் சொன்னதைக் கேட்டிருக்கிறீர்கள் இன்று கேட்க.” என்றவர், கோபத்தோடு அங்கிருந்து வேகமாகச் சமையலறைக்குள் புகுந்துகொண்டார்.
அவர் அந்தப் பக்கம் போனதும் தந்தையின் காதருகில் குனிந்து, “அப்பா, என் நண்பர்களுக்குப் பார்ட்டி கொடுக்கவேண்டும். அதனால் நான் வெளியே போகிறேன். எப்படியாவது அம்மாவிடம் அனுமதி வாங்கித் தாருங்கள்.” என்று ரகசியம் பேசினாள்.
“எங்கே பார்ட்டி கொடுக்கிறாய்.?” என்று அவர் கேட்க, “இதற்கு அம்மாவே பரவாயில்லை..” என்று முறைத்தாள் மகள்.
பிறந்தநாள் அதுவுமாக மகளின் சந்தோசமான மனநிலையைக் கெடுக்க விரும்பாத சந்தானம், “சரிம்மா. நீ போய்வா. நான் அம்மாவிடம் சொல்லிக் கொள்கிறேன்..” என்றார்.
சந்தோசமாக அவள் கிளம்பவும், “முடிந்தவரை விரைவாக வா..” என்றவரிடம் குறும்புடன் நகைத்து, “எப்படியும் இருட்ட முதல் வந்துவிடுவேன் அப்பா..” என்றவள், தன்னுடைய ஸ்கூட்டியில் சிட்டாகப் பறந்தாள்.
இருட்ட முதலா என்று திகைத்து நின்றார் அந்த அப்பாவி அப்பா!
அங்கே ‘பஸ் ஸ்டாண்ட்’ல் முதலே வந்து அவளுக்காகக் காத்திருந்தான் ரஞ்சன்.
எங்கே இன்னும் இவளைக் காணோமே என்று எண்ணியபடி வீதியில் பார்வையைப் பதித்தவன், அசந்துதான் போனான்.
வெள்ளிக் கொடிகள் உடல் முழுவதும் பரவியது போன்ற நாவல்பழ நிறச் சேலையில், மலர்ந்த முகத்தில் அவனைக் கண்டதில் உதயமான புன்னகையோடு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தவளின் அழகு அவனை ஆட்டிப் படைத்தது.
ரசனை படர்ந்த விழிகளால் அவளை விழுங்கியவனின் பார்வையில் கன்னங்களில் செம்மை பூத்தபோதும் அவள் விழிகளும் அவனை விழுங்கத் தவறவில்லை.
மோட்டார் வண்டியில் சாய்ந்தபடி நின்றவனின் தோற்றம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. எப்போதுமே குறையாத கம்பீரம் அவனிடம் இருக்கும். ஆனால் இப்போது தோரணையே மாறியிருந்தது. இந்த ஒருவருடத்தில் வந்துவுட்ட வசதிமாற்றம் ஒருவித நிமிர்வோடு பணக்காரக் களையும் கொடுத்ததில் இன்னும் அழகனாகத் தெரிந்தான் ரஞ்சன்.
அவன் அருகில் ஸ்கூட்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, “நிறையை நேரமாகிவிட்டதா இதயன்? அம்மாவைச் சமாளித்துவிட்டு வருவதற்குள் கொஞ்சம் தாமதமாகிவிட்டது..” என்றாள் புன்னகையோடு.
“நானும் இப்போதுதான் வந்தேன். ஏன், ஆன்ட்டி என்ன சொன்னார்கள்?”
“நான் வெளியே வருவது தெரிந்தால் என்னென்னவோ சொல்லியிருப்பார் தான். ஆனால் நான்தான் அவருக்குத் தெரியாமல் அப்பாவிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேனே..” என்று கலகலத்தாள் அவள்.
“சரி, வா போகலாம்..” என்றபடி, அவன் தன் வண்டியில் ஏறி அமர்ந்தான்.
கடையிலிருந்து வருமானம் மிக நன்றாக வரத் தொடங்கிவிட்டதில், புதிதாக ஒரு வண்டி வாங்கியிருந்தான் ரஞ்சன்.
அந்த வண்டியில் காலைத் தூக்கிப்போட்டு அவன் ஏறி அமர்ந்த விதமே அவளைக் கவர்ந்தது. அதைத் தன் விழிகளால் விழுங்கியபடி அவளும் தன் ஸ்கூட்டியை இயக்க, “உன் வண்டியை இங்கேயே பூட்டிவிட்டு என்னுடன் வா யாழி..” என்றவனின் பேச்சில் மீண்டும் அதிர்ந்தாள் சித்ரா.
என்ன இவன் இன்று அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி, ஆனந்தத்துக்கு மேல் ஆனந்தம் என்று அடுக்கடுக்காகத் தருகிறானே?
அசந்து நின்றவளிடம், “என்ன?” என்று கேட்டான் ரஞ்சன்.
ஒன்றுமில்லை என்பதாக இடமும் வலமுமாகத் தலையை வேகமாக அசைத்தாள் சித்ரா. பின்னே, அவள் எதையாவது சொல்லி, அவன் நீ உன் வண்டியிலேயே வா என்றுவிட்டால்..?
ஓடிப்போய் ஏறிக்கொண்டாள்.
“எங்கே போகிறோம் இதயன்..”
“ஏன், எங்கே என்று சொன்னால் தான் வருவாயா?”
“இல்லையே! நீங்கள் சொல்லமுதலே நான் உங்களுடன் வந்துவிட்டேனே..”
“அப்படியே இன்னும் கொஞ்சத் தூரம் வா.. பிறகு தெரியும் எங்கே போகிறோம் என்று..”
“அதுசரி.. இந்த வண்டியில் நான் வரலாமா இதயன்?” பின்னாலிருந்து கெட்டவள் விழிகள், வண்டியின் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்து நகைத்தன.
முகேஷ் அவளைக் காதலிப்பதாகச் சொன்ன அன்று அவன் வண்டியில் அவள் ஏறியதையும், உன்னையெல்லாம் என் வண்டியில் ஏற்றமாட்டேன் என்று அவன் சொன்னதையும் சொல்கிறாள் என்று புரிபடவே, “உனக்குத் திமிர்டி…” என்றவனுக்கும் சிரிப்புத்தான் வந்தது.
“உங்களுக்கு மட்டும் அது இல்லையா என்ன? திமிரை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் நீங்கள் தான். நான் அப்பப்போ எடுக்கிறேன்..” என்று, என்னென்னவோ சலசலத்தபடி வந்தாள் சித்ரா.
அப்போது ரஞ்சனின் கைபேசி அலறியது. வண்டியை ஓரமாக நிறுத்தியவன், அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
அழைத்தது அவனது பெரியத்தை மல்லிகா என்பதை அறிந்து, “சொல்லுங்கள் அத்தை..” என்றான்.
“எங்கே நிற்கிறாய் ரஞ்சன்? இங்கே சாதனா அவளுக்கும் சுபேசனுக்கும் செருப்புகள் எடுக்க உன் கடைக்கு வரவா என்று கேட்கிறாள்..”
அதைக் கேட்டவனின் முகம் இறுகியது.
சாதனாவுக்கு, அவளது வருங்காலக் கணவனுக்குச் செருப்புகள் எடுக்க அவன் கடைதான் கிடைத்ததாமா?
அல்லது அவனை வெறுப்பேற்ற நினைகிறாளா? என்று சிந்தனை ஓடியபோதும் வராதே என்று சொல்ல முடியாதே.. அதுவும் அத்தை கேட்கும்போது.
“நான் இப்போது வெளியே நிற்கிறேன் அத்தை. அவர்களைக் கடைக்குப் போய் விருப்பமானதை எடுக்கச் சொல்லுங்கள்.” என்றான்.
“கொஞ்சம் பொறு..” என்று அவனிடம் சொன்னவர், அங்கே சாதனாவிடம் அவன் சொன்னதைச் சொல்வது கேட்டது.
அதுமட்டுமல்ல, “ரஞ்சன் மச்சான் இல்லாமல் நாங்கள் போய் என்னம்மா செய்வது? நாளைக்கு வருகிறோம் என்று சொல்லுங்கள்.” என்று சாதனா சொல்வதும் கேட்டதும்.
அதைக் கேட்டவன் பல்லைக் கடித்தான். ரஞ்சன் மச்சானாம் மச்சான்! மச்சான் மச்சான் என்று கொஞ்சியதும், பின் அது ரஞ்சனாய் மாறியதும் நினைவலைகளில் மிதந்துவந்து வெறுப்பூட்டியது.
மனம் குமுறியபோதும், “சரியத்தை. நாளைக்கே வரச் சொல்லுங்கள்.” என்றுவிட்டுக் கைபேசியை அணைத்தான்.
பணம் வந்தால், வசதி மட்டுமல்ல பிரிந்துபோன சொந்த பந்தமும் அல்லவா வந்து ஒட்டிக்கொள்ளும்.
அப்படி, இந்த ஒரு வருடத்துக்குள் அவனது சொந்தங்களும், ‘நீயும் எங்கள் அண்ணாவைப் போல் கெட்டிக்காரன் என்று எங்களுக்குத் தெரியும் ரஞ்சன். நன்றாக வருவாய் என்று நினைத்தோம், அப்படியே வந்துவிட்டாய்..’ என்பதை வேறுவேறு விதமாகச் சொல்லிக்கொண்டே வந்து ஒட்டிக் கொண்டார்கள்.
மனதில் வெறுப்பு நிரம்பிக் கிடந்தாலும், அவனது லட்சியமே அவர்கள் பார்க்க வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதானே. அதனால், அவனும் அவர்களை ஏற்றுக் கொண்டான். அதோடு, அவர்கள் வந்து சேர்ந்ததும் நித்யாவினதும் தாயினதும் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமையும் கூட அவன் வாயை அடைத்தது.
இது எல்லாவற்றையும் விட அவனது தந்தை வெங்கடேசனின் ஆசையே அவன் அவர்களைச் சேர்த்துக் கொண்டதற்குப் பெரும் காரணமாக அமைந்தது.
அவனது சின்னத்தை சுசீலாவின் மகன் நவீனுக்கு நித்யாவைக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. சிறுவயது முதலே சகோதரர்களுடன் ஒன்றாகவே வாழ்ந்தவர், அந்த உறவு விலகிவிடக் கூடாது என்பதற்காகவே சாதனாவை ரஞ்சனுக்கும் நித்யாவை நவீனுக்கும் என்று முடிவு செய்திருந்தார்.
அவரின் மறைவும், சொத்துக்களின் இழப்பும் அனைத்தையும் மாற்றிவிட்டபோதும், இன்று பழைய நிலைமைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ரஞ்சனுக்கு, தந்தையின் ஆசையை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட விருப்பமில்லை.
அவனால்தான் அவர் ஆசைப்பட்டது போன்று வைத்தியர் ஆகவும் முடியவில்லை. சாதனாவை மணக்கவும் முடியவில்லை. தங்கையின் மூலமாவது அவரின் ஆசையை நிறைவேற்ற எண்ணியிருந்தான்.
ஆனாலும், அவர்கள் ரஞ்சனின் வீட்டுக்கு வந்து போனபோதும், அவன் தாயும் தங்கையும் அவர்களின் வீடுகளுக்குப் போய்வந்த போதும் அவன் ஒருநாளும் அவர்கள் யாரின் வீடுகளுக்கும் சென்றது இல்லை.
எல்லோரும் ஒன்றாகக் கூடியிருக்கும் வேளையில் சாதனாவை சுபேசனுடன் கண்டிருக்கிறான். ஆனால், பேச முயற்சித்ததும் இல்லை, அவளாகப் பேச வந்தாலும் விலகிவிடுவான்.
அப்படியிருக்க, எதற்குக் கடைக்கு வருகிறேன் என்கிறாள் என்று ஓடியது அவன் சிந்தனை.
அமைதியாக வந்தவனிடம், “யார் இதயன்? உங்கள் அத்தையா? என்னவாம்..” என்று கேட்டாள் சித்ரா.
“ம்.. நாளைக்குக் கடைக்கு வருகிறார்களாம்..” என்றான் சுருக்கமாக.
அவர்களின் திருமணத் திட்டங்கள் எதுவும் தெரியாத போதும், ஜீவனின் உபயத்தால் அவன் சொந்தங்கள் முதலில் அவனை ஒதுக்கியதும் இப்போது விழுந்து பழகுவதையும் அறிந்திருந்த சித்ராவும் அதற்கு மேல் எதையும் துருவவில்லை.
ரஞ்சனின் வண்டி நகைக்கடைகள் பரவலாக இருக்கும் வீதிக்குள் செல்வதைக் கண்டவள், “இங்கே ஏன் இதயன்?” என்று கேட்டாள்.
அவள் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல், வண்டியை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு அவளோடு அங்கிருந்த நகைக் கூடத்துக்குள் நுழைந்தான் அவன். அவளிடம் ஒன்றையும் கேட்காது தானே நகைகளை ஆராய்ந்தான்.
“என்னமாதிரியான நகை பார்க்கிறீர்கள்?” என்று கேட்ட பணியாளரிடம், “மோதிரம்.. பெண்களுக்கானது காட்டுங்கள்.” என்றான்.
அதைக் கேட்டவளுக்கு மனதில் பெரும் சந்தோசமே எழுந்தது. அவளது பிறந்தநாளுக்குப் பரிசளிக்க அல்லவா பார்க்கிறான்.
போனவருடம் வாழ்த்துச் சொல்லவே மறுத்தவன், இன்று நகை வாங்கித் தருகிறான் என்பது அவனது காதலை அல்லவா காட்டுகிறது.
மலர்ந்த விழிகளால் அவள் அவனைப் பார்க்க, அவனோ தீவிரமாக மோதிரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவனோடு சேர்ந்து அவளும் அவற்றை விழிகளால் அலச, அங்கிருந்த ஒரு மோதிரம் அவளைப் பெரிதும் கவர்ந்தது.
இரண்டு கரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்த இரு இதயங்களைத் தாங்கி நிற்பது போன்று அமைந்திருந்த அந்த மோதிரத்தை அவன் எடுப்பான் என்று ஆவலோடு அவள் காத்திருக்க, பூக்கொடி போன்று அமைக்கப்பட்டிருந்த வேறு ஒரு மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தான் ரஞ்சன்.
அவள் நினைத்ததை அவன் எடுக்காததில் மனம் ஏமாற்றத்தில் சுருண்ட போதும், அவன் எடுத்திருந்த மோதிரமும் கண்ணைப் பறித்தது.