என் சோலை பூவே – 15(2)

எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அழகான மோதிரம் தான். ஆனாலும், காதல் கொண்ட மனங்களுக்குப் பொருத்தமாக வேறொரு மோதிரம் இருக்க, அவன் ஏன் அதை எடுத்தான்?.

ஆனாலும், முதன்முதலாக அவளுக்குப் பரிசளிக்கப் போகிறான். அந்தப் பரிசு அவனுக்குப் பிடித்ததாகவே இருக்கட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு அவள் காத்திருக்க, அவனோ பணியாளரிடம் இப்போது, “காப்பு(வளையல்) காட்டுங்கள்.” என்றான்.

‘எனக்கு எதற்கு காப்பு..’ என்று தோன்றியபோதும், அது அவளுக்கு என்று அவனாக வாயைத் திறந்து சொல்லவில்லையே .. அவன் தங்கைக்காக இருந்தால்?

எனவே அவனாகச் சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.

காப்புகளைத் தெரிவு செய்தவன், தங்கச் சங்கிலியையும் தெரிவு செய்து நெக்லஸ் பக்கம் செல்லவும், அவையெல்லாம் அவன் தங்கைக்குத்தான் என்பது அவளுக்குத் தெளிவாகியது.

எனவே உற்சாகமாக அவளும் தேர்வில் ஈடுபட்டாள்.

அப்படியே கைச்சங்கிலி(ப்ரேஸ்லெட்) என்று மொத்தமாக அவன் எடுத்த நகைகளின் பெறுமதி மூன்று லட்சங்களை நெருங்கியது.

அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபிறகும் கூட இவ்வளவு நகையும் யாருக்கு என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

அப்படியே அங்கிருந்த ஹோட்டலுக்கு அவன் செல்லவும், அவனைப் பின்தொடர்ந்தவள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடித்தான் போனாள்.

அம்மாவின் கண்ணில் படமுதல் வெளியேறும் வேகத்தில் காலை உணவைத் தியாகம் செய்திருந்தவளுக்கும் ஏதாவது உண்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றிக் கொண்டுதான் இருந்தது.

அதை அவளாகச் சொல்ல முதலே அவனாக உணர்ந்துகொண்டது அவளை நெகிழ்த்தியது என்றால், அவனோடு சேர்ந்து உண்ணப் போகிறாள் என்பது வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவு ஆனந்தத்தைக் கொடுத்தது.

அங்கே ஹோட்டலில் உட்பக்கமாக இருந்த மேசையில் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.

“உங்களுக்கு உங்கள் தங்கையை நிறையப் பிடிக்குமா இதயன்?” என்று கேட்டாள் சித்ரா.

இதையேன் இப்போது கேட்கிறாள் என்பதாகப் பார்வையைச் செலுத்திவிட்டு, “யாருக்குத்தான் தன் தங்கையைப் பிடிக்காது?” என்றான் அவன்.

“அதுதான் இவ்வளவு நகையும் வாங்கினீர்களா?”

வியந்த பார்வையை அவள் புறம் திருப்பியவனின் உதடுகளில் புன்னகை மெல்ல மலர்ந்தது. “உன்னிடம் யார் சொன்னது இதெல்லாம் நித்திக்கு வாங்கினேன் என்று..?”

“பின்னே யாருக்கு? ஆன்ட்டி போடுவது மாதிரியான நகைகள் இல்லையே இது.. இளம் பிள்ளைகள் போடுவது மாதிரித்தானே எடுத்தோம்..” என்றவளின் குரலில் குழப்பம் நிரம்பிக் கிடந்தது.

அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்திருந்தபோதும், சில நொடிகளை மௌனத்திலேயே கழித்தான்.

பிறகு, “இவையெல்லாம் பிறந்தநாள் பரிசாக உனக்கு நான் வாங்கியவை..” என்றவன், தன் கையில் இருந்த பையை மேசையில் இருந்த அவள் கரங்களுக்குள் வைத்தான்.

அதைக் கேட்டவளின் முகம் முதலில் அதிர்ச்சியைக் காட்டியது. பின்னர் புருவங்கள் யோசனையாகச் சுருங்கின. விடையைக் கண்டுகொண்டவளின் முகம் வேதனையையும் கோபத்தையும் பிரதிபலித்தது.

இறுதியாக உறுதி பூண்ட முகத்துடன், ஒருகையால் அந்தப் பையை அவன் புறமே தள்ளிவைத்தாள். “இதெல்லாம் எனக்கு எதற்கு இதயன்? என்னிடம் இதைப்போல நிறைய இருக்கிறது.” என்றாள், உணர்ச்சிகளைத் துடைத்த குரலில்.

அதுவரை அவள் முகத்தில் மாறிமாறி வந்த பாவங்களைக் கவனித்துக்கொண்டே இருந்த ரஞ்சனும், “உன்னிடம் இல்லை என்று நான் சொன்னேனா? இது நான் தரும் பரிசு. வைத்துக்கொள்.” என்றபடி, அவளிடம் அந்தப் பையைத் திரும்ப நீட்டினான்.

அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள் சித்ரா. “இல்லை இதயன். இவை எதுவுமே எனக்கு வேண்டாம். இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. நான் எதிர்பார்த்தது நீங்களாக விரும்பிச் சொல்லும் ஒரேயொரு பிறந்தநாள் வாழ்த்தை மட்டுமே. நான் ஆசைப்பட்டது போல நீங்களும் சொல்லிவிட்டீர்கள். போதாததுக்கு உங்களோடு தனியாக வண்டியிலும் வந்திருக்கிறேன். இதோ, இப்போது உங்களோடு ஒன்றாகச் சாப்பிடப் போகிறேன். இதுவே எனக்குப் போதும். அதனால் இதையெல்லாம் உங்கள் தங்கைக்கே கொடுத்துவிடுங்கள்.” என்றாள் தெளிவாக.

“என் தங்கைக்கு வாங்கிக் கொடுக்க எனக்குத் தெரியும். இது உனக்கு நான் வாங்கியது.” என்றான் அழுத்தமான குரலில்.

“ஏன்டி, நான் தந்தால் வாங்கமாட்டாயா? அவ்வளவு தூரம் என்னை ஒதுக்கி வைக்கிறவள் பிறகு எதற்கு என்னுடன் இவ்வளவு தூரம் தனியாக வந்தாய்?”

அதைக்கேட்டு நிதானம் சற்றும் தவறவில்லை சித்ரா. அவன் விழிகளையே ஊடுருவியபடி, “இது என் பிறந்தநாள் பரிசா இதயன்? சாதரணமாக வரும் ஒரு பிறந்தநாளுக்கு யாராவது இவ்வளவு செலவளிப்பார்களா?” என்று கேட்டாள்.

அந்தக் கேள்விக்கு, அவளின் நேர்ப்பார்வைக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. உடனேயே பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“இப்போது இதை வாங்குவதில் என்ன பிரச்சினை உனக்கு? உன் பணத்திமிருக்கு முன்னால் இது கேவலமாகத் தெரிகிறதோ? அப்படி என்றால் எதற்கு என் பின்னால் சுற்றுகிறாய்?” அதை எப்படியாவது அவளிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதில் என்ன சொல்கிறோம் என்றில்லாமலே சொன்னான் ரஞ்சன்.

“கதைப்பதை யோசித்துக் கதையுங்கள் இதயன். நாக்குக்கு நரம்பில்லை என்பதற்காக எதையும் கதைக்காதீர்கள். நான் சொன்னேனா இது எனக்குக் கேவலம் என்று? இதென்ன பேச்சு சுற்றுகிறேன் அது இதென்று?” என்று கோபமாக ஆரம்பித்தவளின் குரல் கடைசியில் அடைத்தது.

பின்னே, நெஞ்சில் நிறைந்த நேசத்தோடு அவனையே எப்போதும் தேடுபவளை, ‘சுற்றுகிறாய்’ என்கிற பெயரில் அவன் அவமதிக்கப் பார்ப்பது வலித்தது அவளுக்கு.

“நீ இதை வாங்கிக் கொள்ளாவிட்டால் நான் அப்படித்தான் நினைப்பேன்.” என்றான் அவனும் எள்ளளவும் இளகாத குரலில்.

“நீங்கள் என்னென்னவோ நினைகிறீர்கள் என்பதற்காக நான் இதை வாங்க முடியாது இதயன். நம் திருமணத்திற்குப் பிறகு காலம் காலமாக நீங்கள் வாங்கித் தரப்போவதைத்தான் நான் போடப் போகிறேன். அதனால் இது எனக்கு வேண்டாம்.”

அதற்கும் அவன் என்னவோ சொல்ல வரவும், “இதற்கு மேல் இதைப்பற்றிக் கதைத்தீர்கள் என்றால் எழுந்து சென்றுவிடுவேன்.” என்றாள் சித்ரா அழுத்தமான குரலில்.

அதைக்கேட்டுப் பல்லைக் கடித்தான் ரஞ்சன். “என்னடி மிரட்டுகிறாயா? உனக்கு எப்போதும் நீ நினைப்பதுதான் நடக்கவேண்டும் இல்லையா. நீ நினைத்தபடிதான் நான் ஆடவேண்டும். எல்லாம் திமிர்!” என்றவன், அவர்கள் ஆடர் கொடுத்த உணவுகளைப் பணியாளர் கொண்டுவரவும் அமைதியானான்.

அதன்பிறகு அவளிடம் ஒன்றுமே கதைக்கவில்லை ரஞ்சன். அமைதியாக உணவை உண்ணத் தொடங்கினான்.

அவன் பேச்சு உள்ளே வலித்தபோதும் அவளும் அமைதியாகவே பெயருக்கு உண்டாள். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த நகைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள் சித்ரா.

உண்டு முடித்ததும் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்தவர்கள் அப்போது அமைதியாகவே வண்டியில் ஏறிக் கிளம்பினார்கள்.

ஓரிடத்தில் அவன் தோளைத் தட்டி, “நிறுத்துங்கள் நிறுத்துங்கள்! வண்டியை நிறுத்துங்கள் இதயன்..” என்றாள் சித்ரா.

என்னவோ ஏதோ என்று அவன் ஓரமாக நிறுத்த, “வாருங்கள்..” என்றபடி, அங்கிருந்த பான்சிக் கடைக்குள் நுழைந்தாள்.

இங்கு எதற்கு என்று கேள்வி எழுந்தாலும் அவளைப் பின்தொடரத் தவறவில்லை அவன்.

அங்கே சென்றவள், தனக்குப் பிடித்த விதத்தில் பல பொட்டுக் கார்டுகளையும், உதட்டுச் சாயத்தில் சிலவகை, நகச் சாயத்தில் சிலவகை என்று தனக்குப் பிடித்தவைகளை தெரிவு செய்துவிட்டு, “பணத்தைக் கொடுங்கள்..” என்றாள் அவனிடம்.

கடைக்காரரின் முன்னால் ஒன்றும் சொல்ல முடியாமல், ஆயிரத்தை நெருங்கிய தொகையைக் கொடுத்துவிட்டு அவளோடு வெளியே வந்தவனிடம்,
“இப்போதாவது சிரியுங்களேன் இதயன். அதுதான் உங்களுக்குப் பிடித்த மாதிரி, உங்கள் பணத்தில் இதையெல்லாம் வாங்கியிருகிறேனே..” என்றாள் அவள் புன்னகையோடு.

அவள் சிந்திய புன்னகையில் தொலையப் பார்த்த கோபத்தை இழுத்துப் பிடித்தபடி, “இதை மட்டும் என் பணத்தில் வாங்கலாம். ஆனால் நகையை மட்டும் ஏன் மறுக்கிறாய்?” என்றான் அவன்.

“எதையுமே உங்கள் பணத்தில் வாங்கமாட்டேன் என்று சொல்லவில்லையே நான். நகைகள் தான் வேண்டாம் என்றேன். உங்கள் பணம் வேண்டாம் என்றால் ஹோட்டலில் சாப்பிட்டுக் கூட இருக்கமாட்டேன் இதயன்..”

“ஏன் நகைகளை வாங்கிக் கொண்டால் என்ன? அதைவிட இவை ரொம்பவும் முக்கியமா?” என்று அவள் கையிலிருந்த பையைக் காட்டிக் கேட்டான்.

“இவ்வளவு வளர்ந்தும் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. பெண்கள் எது இல்லாமலும் இருந்து விடுவோம். இவை இல்லாமல் இருக்கவே மாட்டோம்.” என்றாள் நாடகபாணியில், தன் கையில் இருந்த பையைக் காட்டி.

அவள் சொன்னவிதத்தில் அவனுக்குச் சிரிப்பு வரப்பார்த்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டு நிற்பதைக் கண்டவள், “சிரிப்பு வந்தால் சிரிக்கவேண்டும் இப்படி அடக்கக் கூடாது..” என்றாள், விழிகளில் குறும்பு மின்ன.

அதற்கு மேலும் மறைக்க முடியாமல் மலர்ந்துவிட்ட புன்னகையோடு, “வாயாடி ஏறுடி..” என்றபடி வண்டியை இயக்கினான் ரஞ்சன்.

சித்ராவுக்கும் மனம் நிறைந்து கிடந்தது. அதற்கு மேல் அவளுக்கு வேறு எந்தத் தேவைகளுமே இருக்கவில்லை.

இருந்த சந்தோசத்தில் சொந்தத்தோடு, உரிமையோடு அவன் வயிற்றைத் தன் இரு கைகளாலும் கட்டிக் கொண்டவள் அவன் முதுகிலேயே வாகாகச் சாய்ந்துகொண்டாள்.

திடீரென்று கிடைத்த வளைக்கரங்களின் அணைப்பும், அவளின் அருகாமையும் அவனைத்தான் வண்டியை ஓட்ட முடியாமல் தடுமாறச் செய்தன.

மீண்டும் வண்டியை ஓரம் கட்டியவன், “என்னடி செய்கிறாய்?” என்று சீறினான்.

“நான் என்ன செய்தேன்..?” மெய்யாகவே புரியாத குரலில் கேட்டாள் சித்ரா.

அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவன், “தள்ளியிரு!” என்று அதட்டினான்.

“ஏன்?”

உன் மேனியும் அதன் அருகாமையும் என்னை என்னென்னவோ செய்கின்றன என்று சொல்லவா முடியும்?

“சொன்னால் கேள் யாழி!”

“முடியாது போங்கள்! எனக்கு உங்களை இப்படிக் கட்டிக்கொண்டு வரத்தான் பிடித்திருகிறது. எத்தனை நாள் கனவு!” என்றவள் அவன் முதுகோடு மீண்டும் ஒட்டிக் கொண்டாள்.

இயலாமையோடு வண்டியை மீண்டும் இயக்கியவனின் கைகளில் அது பறந்தது. சித்ரா இன்னும் அவனோடு ஒட்டிக் கொண்டாளே தவிர விலகவே இல்லை.

ஒருவழியாக அவளை ‘பஸ் ஸ்டாண்ட்’ல் இறக்கியவன், அவள் தன் ஸ்கூட்டியை எடுக்கவும், “இதையும் கொண்டு போ யாழி..” என்றபடி, நகைகள் அடங்கிய பையை நீட்டினான்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் என்ன இருந்தது? அதை விளங்கிக் கொள்ள முடியாத போதும், பையை நீட்டிக் கொண்டிருந்தவனின் கை தானாகக் கீழே இறங்கியது.

அவனிடம் ஒரு தலையசைப்பால் விடை பெற்றவள், வீடு நோக்கித் தன் வண்டியைச் செலுத்தினாள். எவ்வளவுக்கு எவ்வளவு அவள் மனம் நிறைந்து கிடந்ததோ அந்தளவுக்கு வலியிலும் துவண்டது..

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock