தங்கள் காதலராம் வண்டுகளின் வரவிற்காய் பனியில் குளித்துவிட்டு உற்சாகமாகக் காத்திருந்தன காலை நேரத்து மலர்கள். அவற்றைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் மலர் முகத்தைப் பார்த்துப் பொறாமை கொண்டன அத்தனை மலர்களும்.
அதையறியாத சித்ராவின் முகமோ அந்தக் காலை வேளையிலேயே வாடிக் கிடந்தது. கைகளோ கைபேசியில் ரஞ்சனின் இலக்கங்களை அழுத்தி அழுத்தியே ஓய்ந்து போயின.
ஏன் அழைப்பை எடுக்கிறான் இல்லை? அவள் என்ன பிழை செய்தாள்? அன்று நகையை வாங்காமல் வந்ததில் உண்டான கோபத்தில் கதைக்காமல் இருக்கிறானா? எதுவென்றாலும் அவளிடம் சொன்னால் தானே தெரியும். இப்படிக் கதைக்காமல் இருந்து வதைக்கிறானே.
உடனேயே அவனைக் காணவேண்டும் போல், என்னை ஏன் இந்தப் பாடு படுத்துகிறீர்கள் என்று கேட்கவேண்டும் போல் இருந்தது.
ஆனால், வவுனியாவில் இருக்கும் அவளால் திருகோணமலையில் இருக்கும் அவனிடம் எப்படிக் கேட்க முடியும்? கைபேசி வழியாகக் கேட்கலாம் என்றால், அவன் அதை எடுத்தால் தானே!
அவனுடன் கதைத்து ஒன்றரை மாதங்கள் ஆகியிருந்தது. அவனைப் பார்த்தும் கூட!
இவ்வளவு நாட்களாக அவளை ஏன் ஒதுக்குகிறான் என்கிற உறுத்தல் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது.
அன்று அவளின் பிறந்தநாளில் தான் அவர்கள் கடைசியாகப் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும்.
அதற்குப் பிறகு இந்த ஒன்றரை மாதங்களில் எத்தனையோ தடவைகள் அழைத்துவிட்டாள். அவன் எடுக்கவே இல்லை. கடைக்கு அழைத்தாலும், அழைத்தது அவள் என்று அறிந்ததும் தெளிவான பதில்கள் இன்றியே சுகந்தனும் ஜீவனும் சமாளித்தனர்.
அவளது பிறந்தநாளுக்கு அடுத்தநாள், வவுனியாவில் இருக்கும் லக்ஷ்மியின் தங்கை பார்வதி அழைத்து, அவர்களின் மகள் அபர்ணாவுக்குத் திருமணம் செய்யப் போவதாகச் சொன்னவர், தமக்கை குடும்பத்தை அப்போதே வவுனியாவுக்கு வரும்படி அழைத்தார்.
“அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே பாரு. இப்போதே எல்லோரும் வருவது என்றால்.. உன் அத்தான் என்ன சொல்கிறாரோ தெரியாது. ” என்றார் லக்ஷ்மி.
“நான் சொன்னேன் என்று அத்தானிடம் சொல். நீ வந்தால் எனக்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் சித்துவைத் தன்னும் அனுப்பு. இங்கே அபர்ணா அவளை வரச் சொல்கிறாள்.”
“பொறு.. நான் எதற்கும் உன் அத்தானிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்…” என்றுவிட்டு வைத்தார் லக்ஷ்மி.
அவர் வைக்கவும், கடைக்குப் போய்விட்டு மகளோடு சந்தானம் வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது.
அவர்கள் இருவரையும் கண்டதுமே முறைத்தார் லக்ஷ்மி.
“என்னப்பா.. இன்று வரவேற்பே பலமாக இருகிறது.” என்று தகப்பனிடம் முணுமுணுத்தாள் மகள்.
“என்ன லக்ஷ்மி? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய் ” என்று கேட்டார் மனைவியிடம்.
“இப்படியாவது இந்த வீட்டில் இருக்கிறேனே என்று சந்தோசப் படுங்கள். இவளை விடச் சின்னப்பிள்ளைகள் எல்லோருக்கும் கல்யாணம் நடக்கிறது. எல்லோர் வீட்டு விசேஷத்துக்கும் நாம் போகிறோம். ஆனால் நம் வீட்டில் மட்டும் ஒன்றும் நடவாது. பெற்றது ஒரேயொரு பிள்ளையை. எல்லா வசதியும் இருந்தும் ஒரு கல்யாணத்தைச் செய்து, கண் குளிரப் பார்க்கவும் ஒரு கொடுப்பினை வேண்டும். அது எங்கே எனக்கிருக்கிறது..” என்று பொரிந்து தள்ளினார் அவர்.
“இப்போது உங்களுக்கு என்ன பிரச்சினை? எப்போ பார்.. கல்யாணம் கல்யாணம் கல்யாணம்! உங்களுக்கா கல்யாணம் செய்யப் போகிறீர்கள்? எனக்குத்தானே. அதைச் செய்ய எனக்குப் பிடிக்க வேண்டாமா? என் திருமணத்தை என் விருப்பபடி செய்ய விடுங்கள். நான் என்ன செய்யவே மாட்டேன் என்றா சொன்னேன். கொஞ்ச நாட்கள் போகட்டும் என்றுதானே சொல்கிறேன்.” என்று அவருக்கு மேலால் நின்றாள் அவர் மகள்.
அதைக் கேட்டுக் கலங்கிய மனைவியின் தோற்றம் சந்தானத்தைப் பாதித்தது போலும், “கொஞ்சம் அமைதியாக இரு சித்து!” என்றார் கண்டிப்பான குரலில்.
அந்தக் குரலுக்கு எப்போதுமே அடங்கிப் போகும் சித்ரா அப்போதும் அடங்கிவிட, “என்ன லக்ஷ்மி, யாருக்குத் திருமணம்?” என்று விசாரித்தார்.
“அபர்ணாவுக்கு. அவள் இவளை விட இரண்டு வயது சின்னவள். அவளுக்கே அடுத்த மாதம் திருமணமாம். இவளுக்கு நாங்கள் இன்னும் மாப்பிள்ளையே பார்க்கவில்லை. எப்போது மாப்பிள்ளை பார்த்து எப்போது திருமணம் செய்து..” என்றவருக்கு அதற்கு மேல் ஒன்றுமே சொல்லமுடியாமல் குரல் அடைத்தது.
ஒரேயொரு மகளின் திருமணத்தைக் காண அவர் ஏங்குவது மிக நன்றாகவே தெரிந்தது. அதற்கு மேலும் மனைவியை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டார் சந்தானம்.
லக்ஷ்மிக்கு எப்போதுமே எடுத்ததுமே கோபம் தான் வரும். அப்படியானவர் கலங்குகிறார் என்றால் மனதால் மிகவும் வேதனைப் படுகிறார் என்பதை இருபத்தியைந்து வருட வாழ்க்கையின் அன்னியோன்யம் அவருக்கு உணர்த்தியது.
“சித்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னாலே போதும். நான் நீ என்று மாப்பிள்ளை வீட்டார் தேடி வருவார்கள். அதனால் அதை நினைத்து நீ கவலைப் படாதே. முதலில் உன் தங்கை மகள் கல்யாணம் முடியட்டும். பிறகு சித்துவின் கல்யாணம் தான்.” என்று மனைவியிடம் சொன்னவர், மகளிடம் திரும்பி, “சித்து, அபிக்குப் பிறகு உனக்குத்தான்.” என்றவர் அவளிடம் அனுமதி கேட்கவே இல்லை.
“சரிப்பா..” என்றவளுக்கும் தாய்க்கும் எப்போதுமே வீட்டில் சண்டைதான் என்றாலும், எப்போதுமே திட்டும் தாயார் இன்று குரலடைக்கப் பேசியது அவளையுமே பாதித்தது.
அதோடு, தந்தையின் உறுதியான பேச்சும் சேர்ந்துகொண்டது.
அது மட்டுமன்றி, ரஞ்சனுடனான திருமணத்திற்கு அவள் எப்போதோ தயார்தான். அவன் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக காத்திருந்தவளுக்கு, அவனும் இன்று நல்ல நிலையில் இருப்பதால், எல்லாமே கூடி வந்திருப்பதாகவே பட்டது. அதனால் சம்மதம் தெரிவித்தாள்.
இல்லாவிட்டாலும் என்னதான் உறுதியாக இருந்தாலும், அவள் மறுத்தால் சந்தானம் அவளுக்கு எதிராக ஒரு சின்னத் துரும்பைக் கூட அசைக்க மாட்டார் என்பது அவள் அறிந்ததே!
சோர்ந்து அமர்ந்திருந்த அவள் தாயாரோ மகளின் சம்மதத்தைக் கேட்டதுமே துள்ளி எழுந்தார். “உண்மையாகத்தான் சொல்கிறாயா சித்து. இனி மறுக்க மாட்டாய் தானே.” என்றவர், சந்தோஷ மிகுதியில் மகளைக் கட்டிக் கொண்டார்.
கணவரிடம் திரும்பி, “இப்போதே மாப்பிள்ளையைப் பாருங்கள். சித்துக்கு ஏற்ற மாதிரி அழகாய், உயரமாய், நன்றாகப் படித்தவராய் பாருங்கள்..” என்று, தன் வழமையான படபடப்புக்குத் திரும்பினார் அவர்.
இந்தம்மா என்ன இவ்வளவு அவசரப்படுகிறாரே என்று சித்ரா பதறிப்போய் நிற்க, “பொறு பொறு லக்ஷ்மி. முதலில் அபியின் திருமணம் முடியட்டும். இதெல்லாம் அவசரப்படும் விசயமா என்ன. நீ ஆசைப்பட்ட படியே நல்ல மாப்பிள்ளையாகப் பார்க்கலாம்..” என்றார் சந்தானம் சிரித்துக் கொண்டு.
“ப்ச், என்ன நீங்கள். அவளே சம்மதித்துவிட்டாள். நீங்கள் எதற்குப் பொறுக்கச் சொல்கிறீர்கள். இப்போதே நாலு பேரிடம் சொல்லி வைத்தால் தானே அபியின் கல்யாணம் முடிய சித்துவோடதைக் கவனிக்கலாம்..”
“சரிம்மா. நீ சொன்னபடியே செய்கிறேன். இப்போது உன் பெறாமகளின் விஷயம் சொல்லு. நாம் எப்போது போவது?” என்று மனைவியைத் திசை திருப்பினார் அவர்.
“பாரு இப்போதே வரச் சொல்கிறாள். போவதுதான் நன்றாக இருக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எல்லோரும் போனால் கடைகளை யார் பார்ப்பது?”
சற்று யோசித்த சந்தானம், “நீயும் சித்துவும் இப்போதே போங்கள். நான் வேண்டுமானால் பிறகு வருகிறேன்..” என்றார்.
“அது சரிவராது.” கணவரின் உடல்நிலையையும், தான் இல்லாவிடில் உணவை அவர் கவனிக்க மாட்டார் என்பதையும் நன்கு அறிந்திருந்தவர் மறுத்தார்.
“உங்களை இங்கே தனியாக விட்டுவிட்டுப் போய் அங்கே என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. ஒன்று செய்வோம். சித்துவை இப்போதே அனுப்புவோம். நீங்களும் நானும் பிறகு போவோம். எப்படியும் இரண்டு வாரத்துக்கு முதலாவது போகவேண்டும். இல்லை என்றால் அவள் கோபிப்பாள்.” என்றவரின் பேச்சைச் சந்தானமும் ஏற்றுக் கொண்டார்.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ராதான் தவித்துப் போனாள்.
நாளையே வவுனியா போனால் திருமணம் முடிந்து அவள் திரும்பி வர எப்படியும் ஒரு மாதம் தாண்டிவிடும். அவ்வளவு நாட்களும் ரஞ்சனைப் பாராமல் அவளால் இருக்கமுடியாதே.
ஆனால், மறுக்கவும் வழி இல்லையே! சற்றுமுன் தானே அபி அழைத்து ‘நீ வந்தே ஆகவேண்டும்!’ என்றுவிட்டு வைத்தாள்.
அக்கா அக்கா என்று அவளையே சுற்றும் அபியின் முகமும், அவள் மேல் அன்பைப் பொழியும் சித்தியின் முகமும் கண் முன்னால் வந்து நின்றது. அவர்களிடம் அவளால் மறுக்கவே முடியாது.
ஆக, அவள் போவது உறுதி.
அதை நினைத்ததுமே நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ரஞ்சனை உடனேயே பார்த்து, சற்று நேரமாவது அவன் தோளில் சாயவேண்டும் போலிருந்தது. அதோடு, அவனிடம் நடந்த திருமணப் பேச்சைப் பற்றியும் வரப்போகும் பிரிவைப் பற்றியும் சொல்லவேண்டும்.
அதற்கு அவன் என்ன சொல்வானோ தெரியவில்லை..
அப்பா வேறு மாப்பிள்ளை பார்க்க முதல் அவனை வீட்டில் வந்து கதைக்கச் சொல்ல வேண்டுமே. அவளின் சம்மதம் இன்றி அப்பா யாரிடமும் வாக்குக் கொடுக்க மாட்டார் தான். என்றாலும் அவர் ஒன்றை முடிவு செய்ய முதல் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடுவது நல்லதல்லவா.
எனவே, அபிக்குச் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
ரஞ்சனின் கடைக்குள் நுழைந்ததுமே, “சீவன் அண்ணா, எங்கே உங்கள் நண்பர்..” என்று அங்கே நின்ற ஜீவனிடம் கேட்டாள்.
“என் சீவனை வாங்கவென்றே வந்தாயா நீ? ‘ஜீவன்’ எவ்வளவு அழகானா பெயர். அதன் ஜீவனைக் கொலை செய்கிறாயே.” என்றான் அவன்.
“எனக்கு ‘ஜி’ வராது சீவன் அண்ணா..” என்றவள், “உங்களோடு வெட்டிப் பேச்சுப் பேச எனக்கு இப்போது நேரம் இல்லை. எங்கே உங்கள் அருமை நண்பர்?” என்று அதட்டினாள்.
“ம்க்கும்! இதற்கு ஒரு குறைச்சலும் இல்லை. அவன் வெளியே போய்விட்டான்.”
“வெளியே என்றால் எங்கே?” என்று அவனிடம் விசாரணை நடந்தபோதும், அவள் கை கைபேசியில் ரஞ்சனின் இலக்கங்களைத் தட்டிக் கொண்டிருந்தது.
“தெரியாது சித்ரா. காலையிலேயே போய்விட்டான். வியாபாரம் நடந்து கொண்டிருந்ததில் நான் கேட்கவில்லை.” என்றவன், “டேய் சுகந்தா, ரஞ்சன் எங்கே போனான் என்று உனக்கேதும் தெரியுமா?” என்று, அங்கே ஒரு வாடிக்கையாளரைக் கவனித்துக் கொண்டிருந்த சுகந்தனிடம் கேட்டான்.
“சரியாகத் தெரியாதுடா. வங்கிக்கும் போகவேண்டும் என்றான்.” என்றான் அவன்.
இங்கே கைபேசியிலும் அழைப்பை அவன் எடுக்கவில்லை.
சற்றுநேரம் அவனுக்காகக் காத்திருந்தவள், “நான் கடைகளுக்குப் போய்விட்டு வருகிறேன். அவர் வந்தால் எனக்கு எடுக்கச் சொல்லுங்கள் சீவன் அண்ணா. ஒரு முக்கியமான விஷயம் அவரிடம் சொல்லவேண்டும்.” என்றுவிட்டு, அபிக்குத் தேவையானவைகளை வாங்கச் சென்றாள்.


