“போகும் போதும் என் சீவனை வாங்கிவிட்டுத்தான் போகிறாள்.” என்ற ஜீவனும் தன் வேலைகளைப் பார்த்தான்.
ஆனால் ரஞ்சன் வரவும் இல்லை. சித்ராவின் அழைப்பை ஏற்கவும் இல்லை.
வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவளின் விழிகள் அந்தச் சின்னக் கடைக்குள் ரஞ்சனைத் தேடி அலைபாய்ந்தன.
“இன்னும் இதயன் வரவில்லையாண்ணா?” என்றாள் கவலையோடு.
இந்தப் பெண் இவ்வளவு தவிப்போடு அவனைத் தேடுகிறாள். இவன் எங்கே போய்த் தொலைந்தான் என்று மனதில் ரஞ்சனைத் திட்டியபடி, “இன்னும் இல்லை சித்ரா.” என்றான் ஜீவன்.
அவளுக்கோ பெரும் தவிப்பாக இருந்தது.
எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கிறாள். அதோடு இனி அவனைப் பார்க்க இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும். வருகிறானா என்று வீதியையும், அழைப்பை எடுக்கிறானா என்று கைபேசியையும் பார்த்துப் பார்த்தே அவள் விழிகள் சோர்ந்தன.
நேரம் செல்லச் செல்ல அவனைக் காணாத ஏமாற்றம் இன்னுமின்னும் அவளைச் சூழ நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.
அவன் முகத்தை ஒருதடவை பார்த்துவிட்டு, போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனால் நிம்மதியாக இருக்கும் என்று காத்திருந்தவளுக்கு ரஞ்சன் அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கவே இல்லை.
இதில் அவள் தாயார் வேறு பலமுறை அழைத்துவிட்டார். இதோ வருகிறேன் என்று சொல்லிச் சொல்லியே நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தவளுக்கு அந்தக் கடையைவிட்டு வெளியேறவே மனம் வர மறுத்தது.
இதில் திருமணத்துக்கு கட்டவேண்டிய சேலைகள், வவுனியாவில் நிற்கும் நாட்களுக்கான உடைகளை எடுத்துவைக்க என்று அவளுக்கும் நிறைய வேலைகள் இருந்தன.
ஆனாலும் அவனைக் காணாமல் போகமுடியாமல் அங்கேயே காத்திருந்தாள்.
மெல்ல மெல்லக் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தவளுக்கு விழிகள் கலங்கி அழுகை வந்துவிடும் போலிருந்தது.
“இதயன் வந்தால் கட்டாயம் எனக்கு எடுக்கச் சொல்லுங்கண்ணா. அல்லது நான் எடுக்கும் போதாவது கதைக்கச் சொல்லுங்கள். மிக முக்கியமான விஷயம் ஒன்று அவருடன் கதைக்க வேண்டும். நாளைக்கே நான் வவுனியாவுக்குப் போகிறேன். சொல்லிவிட்டுப் போகலாம் என்றால் அவரைக் காணவில்லை.” என்றவளின் குரல் எவ்வளவு தடுக்க முயன்றும் கடைசியில் தழுதழுத்தது.
செல்லும் அவளையே பார்த்திருந்த ஜீவனும் உள்ளம் கனத்துப்போக நின்றான்.
வரும்போது எவ்வளவு உற்சாகமாக வந்தபெண் போகும்போது இப்படி வாடி வதங்கிக் போகிறாளே என்று நினைக்க ரஞ்சன் மீது இன்னுமின்னும் கோபம்தான் வந்தது. ஆனால், அவனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லையே!
வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சித்ராவின் விழிகளோ எங்காவது ரஞ்சன் தென்படுகிறானா என்று போகிற வழியெங்கும் அவனைத் தேடியலைந்தன.
மனமும் முகமும் சோர வீடு சென்றவளின் அதன் பிறகான நேரத்தை லக்ஷ்மி பறித்துக் கொண்டார்.
அதை எடுத்தாயா இதை எடுத்தாயா, வீட்டுக்கு இந்த நகைகளைப் போட்டுக்கொள், யாரும் வந்தால் இப்படி நடந்துகொள், அப்படி நடந்துகொள், அதைச் செய், இதைச் செய் என்று ஒரு வாங்கு வாங்கிவிட்டார்.
அவள் திருமணத்திற்கு சம்மதித்ததே அவரிடம் ஒரு துள்ளலைக் கொடுத்திருந்தது. அதோடு, திருமண வீட்டுக்குச் செல்லும் மகளை நல்ல குடும்பத்தவர்கள் யாராவது பார்த்துப் பெண் கேட்டாலும் கேட்பார்கள் இல்லையா..
ஒரு திருமணத்தில் இன்னொரு திருமணமும் கைகூடும் சாத்தியங்கள் உண்டே!
அடுத்தநாள் அதிகாலையிலேயே அந்தக் குடும்பம் வவுனியாவை நோக்கிச் சென்றது. அப்போதும், போக முதல் அவனுக்கு அழைத்துப் பார்த்துப் பார்த்து ஏமாந்தவள், ‘நான் வவுனியா போகிறேன் இதயன்.. எனக்குக் கட்டாயம் அழையுங்கள்.’ என்கிற மெசேஜை அவனுக்குத் தட்டிவிட்டுத்தான் சென்றாள்.
இதோ, அவள் வவுனியா வந்து ஒருமாதமும் கடந்து, அவள் தங்கையின் திருமணமும் முடிந்து, மேலும் இரண்டு வாரங்களும் கடந்திருந்தது.
அபியின் திருமணம் முடிந்ததும், ‘அப்பாடி! இனி ஊருக்குப் போய்விடலாம். என் இதயனைப் பார்த்துவிடலாம். அவனோடு கதைத்துவிடலாம்..’ என்று ஆர்வமாகக் காத்திருந்தவளைச் சித்தியின் பாசம் கட்டிப் போட்டது.
மகளைப் பிரிந்த வேதனையில், “கொஞ்ச நாள் எங்களுடன் இருந்துவிட்டுப் போ சித்து..” என்று அவர் கண்கலங்கச் சொன்னபோது அவளாலும் மறுக்க முடியவில்லை. அவளின் அம்மா அப்பாவாலும் முடியவில்லை.
போகவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள். அவள் நிலை அறியாத பெற்றவர்களும், “கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு வா..” என்றுவிட்டுக் கிளம்பி விட்டனர்.
அங்கு சென்ற அம்மாவோ எப்போது கதைத்தாலும் அந்த இடத்தில் இருந்து ஜாதகம் வந்தது. இந்த இடத்தில் இருந்து கேட்டார்கள் என்று ஒரே அவளது திருமணக் கதைதான்.
“எதையும் நான் வந்தபிறகு முடிவு செய்யுங்கள்.” என்று சொல்லியிருந்தாள்.
இந்த ஒன்றரை மாதங்களில் ரஞ்சன் அவளுக்கு அழைக்கவும் இல்லை, அவளாக அழைத்தபோது அவன் எடுக்கவும் இல்லை. முக்கியமான விஷயம் என்று சொல்லியும் கதைக்கவில்லையே!
இவ்வளவு நாட்களாக அவளுக்குள் இருக்கும் இந்த ஏக்கம், அவனைக் காணவேண்டும் என்கிற தவிப்பு, அவன் குரலைக் கேட்கவேண்டும் என்கிற ஆசை, இது எதுவுமே அவனுக்கு இல்லையா?
கண்ணைக் கரித்தது. அவளது பிறந்த நாளின்போது, அவனது கடையின் திறப்பு விழாவின்போது அவனும் அவளுமாக நின்று எடுத்துக்கொண்ட செல்பி போட்டோக்களில் அவளுடன் நின்றவனையே கலங்கிய விழிகளால் பார்த்தாள்.
“எப்படிடா என்னோடு கதைக்காமல் உன்னால் இருக்க முடிகிறது..?” என்று முணுமுணுத்ததன அவள் உதடுகள்.
எப்போதடா திருகோணமலை சென்று அவனைப் பார்ப்போம் என்றிருந்தது.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கே இருப்பது? இனியும் அவனைப் பாராமல் அவனோடு பேசாமல் இருக்க முடியாது என்று எண்ணியவள் சித்தி பார்வதியைத் தேடி வீட்டுக்குள் போனாள்.
“வா சித்து. இன்னொரு முறை டீ தரவா? குடிக்கிறாயா..” என்று கேட்டார் பார்வதி.
“தாங்க சித்தி.” என்றவள், சிறிய இடைவெளிக்குப் பிறகு, “சித்தி, நான் வீட்டுக்குப் போகவா?” என்று மெல்லக் கேட்டாள்.
தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தவர் மகளைத் திரும்பிப் பார்த்தார்.
கண்களில் கலக்கத்தோடு அவள் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் வேலையை விட்டுவிட்டு அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.
“இதைக் கேட்பதற்கு எதற்கு இவ்வளவு கலக்கம் சித்து. அம்மா அப்பாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதா? சரி, உன் பொருட்களை நீ எடுத்துவை. நான் சித்தப்பாவை கொண்டுவந்து விடச் சொல்கிறேன்..” என்றார் அவர்.
அதைக் கேட்டவளின் முகம் சிறிதாகக் கன்றியது. அவள் அம்மா அப்பாவைத் தேடவில்லையே!
குன்றலை அவரிடம் காட்டிக் கொள்ளாமல், “நன்றி சித்தி. ஆனால் உங்களுக்குக் கவலையாக இராதா, நானும் போய்விட்டால் நீங்கள் தனியவே.” என்று கேட்டாள்.
“அதற்கு என்னம்மா செய்ய முடியும். பெண் பிள்ளையைப் பெற்றால் என்றாவது ஒருநாள் கட்டிக் கொடுக்கத்தானே வேண்டும். சரி, நீ தயாராகு. நான் உன் சித்தப்பாவை வரச் சொல்கிறேன்..” என்றவர், கணவருக்கும், தமக்கை லக்ஷ்மிக்கும் அழைத்து விசயத்தைச் சொன்னார்.
அவர்கள் சித்துவின் வீட்டுக்கு வரும்போது மதியத்தைக் கடந்திருந்தது நேரம். அதுவரை தவித்துக் கொண்டிருந்த அவள் மனது அப்போதுதான் சற்று மட்டுப் பட்டது.
எப்படியாவது உடனேயே சென்று ரஞ்சனைப் பார்த்துவிடத் துடித்தவளுக்கு, எதைச் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்புவது என்று யோசனையாக இருந்தது.
அப்போதுதான், அபிக்கு என்று வாங்கிய ஒரு சுடிதார், கிட்டத்தட்ட அதைப்போலவே ஒன்று அவள் வைத்திருந்ததில் அதைத் திருப்பிக் கொடுக்க எண்ணி எடுத்து வைத்திருந்தாள்.
அதைக் காரணம் காட்டி அவள் வெளியே செல்லப் புறப்பட்ட போது, “இப்போதுதானே வந்தாய். உடனேயே வெளியே போகவேண்டுமா? நாளைக்குப் போகலாம்.” என்றார் லக்ஷ்மி.
“ஏன், இப்போது வந்தால் உடனேயே வெளியே போகக் கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கிறதா என்ன? நான் இதைக் கொடுத்துவிட்டு அப்படியே நம் கடைக்கும் போய்விட்டு வருகிறேன்..” என்றவள், எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வெளியேறினாள்.
“பார் பாரு. இவள் எப்போதுமே இப்படித்தான். நான் சொல்வதைக் கேட்கவே கூடாது என்று பிடிவாதம். அவள் அப்பாவும் அவளோடு கூட்டு.” என்று இந்தமுறை தன் தங்கையிடமே முறையிட்டார் லக்ஷ்மி.
பார்வதி தன் அத்தானைப் பார்த்துச் சிரிக்க, “உன் அக்காவை முதலில் அமைதியாக இருக்கச் சொல் பார்வதி. எதற்கெடுத்தாலும் பதறுவது. அவள் என்ன சின்னப்பிள்ளையா? இருபத்தியிரண்டு வயது முடிந்துவிட்டது. ஒவ்வொன்றையும் அவளாக யோசித்து முடிவு செய்ய நாம் விடவேண்டும். அதைவிட்டுவிட்டு.. எப்போது பார் அவளோடு மல்லுக் கட்டுவது. ஒன்றரை மாதமாக இங்கே எங்கேயும் செல்லாமல் இருந்திருக்கிறாள். வந்ததும் நம்மூரை, நம் கடையைப் பார்க்க ஆவலாக இருக்குமா இல்லையா? அதை நாம் புரிந்து நடக்க வேண்டாமா?” என்று பெரிதாக மனைவிக்கான விளக்கத்தை மச்சினியிடம் சொன்னார்.
“அதுதானே அக்கா. நீயும் கொஞ்சம் அமைதியாக இரு.” என்று பார்வதியும் தமக்கையிடமுமே சமாதானம் சொன்னார். அப்படியே மெல்ல மெல்ல மாறிய அவர்களது பேச்சு சித்ராவின் திருமணத்தில் வந்து நின்றது.
இங்கே ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த சித்ராவின் மனநிலையை அவளாலேயே கணிக்க முடியவில்லை.
அவனை ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பார்க்கப் போவதில் பரவசமும், இவ்வளவு நாட்களாக அவன் அவளோடு கதைக்கவில்லையே என்பதில் ஆத்திரமுமாக இருவித மனநிலையோடு இருந்தாள்.
அவள் வாழ்க்கையையே மாற்றப் போகும் நாளாக அன்றைய நாள் இருக்கப் போவதை அறியாது.. அன்றைய நாளுக்குப் பிறகான நாட்கள் அவளுக்குக் கண்ணீரையும் கவலையையும் பரிசளிக்கப் போவதையையும் உணராது, அவனைக் காணப்போகும் குதூகலத்தோடு சென்று கொண்டிருந்தாள் சித்ரா.


