அயர்ந்த உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் சித்ரா. இப்படித் தூங்கி எத்தனை நாட்களாயிற்று என்று எண்ணியபடி விழிகளைத் திறந்தவளின் பார்வையில் பட்டான் ரஞ்சன்.
அங்கிருந்த மேசையின் பின்னால் அமர்ந்திருந்தவன் கைகளை மேசையிலே ஊன்றி, அதிலே தன் தலையைத் தாங்கியிருந்தான்.
தான் செய்துவிட்ட மடத்தனத்தை நினைத்து ஒற்றைக் கையால் நெற்றியில் அறைந்து கொண்டான்.
அவன் இருந்த விதமும், அந்தச் செயலும் சித்ராவின் மனதைத் தாக்க, இவன் ஏன் எதையோ பறிகொடுத்தவன் போலிருக்கிறான் என்று எண்ணியபடி வேகமாக எழுந்தவள், அப்போதுதான் தன் அந்தரங்க நிலையை உணர்ந்தாள்.
சட்டென்று மீண்டும் படுத்துக்கொண்டவள் தன் மேல் போர்த்தப்பட்டிருந்த போர்வையைப் பார்த்தாள்.
அது அவனது சாரம்(கைலி) என்று பார்த்ததுமே தெரிந்தது.
சாரத்தினை இறுகப் பற்றிக் கொண்டவளுக்கு நடந்தவை அனைத்தும் கண் முன்னால் வந்துபோக அவளுமே சற்று நேரம் உறைந்துதான் போனாள்.
எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டோம் என்று தவித்தவளுக்கு உடலும் மனமும் கூசிப்போனது.
ஏன் இப்படிக் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொண்டோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டவளுக்கு, அதன் காரணம் புரிய மறுத்தது.
அதுநாள் வரையிலான பிரிவும், நெடு நாட்களுக்குப் பிறகு அவனைக் கண்டதும், இரண்டாவது கடை திறக்கப் போகிறான் என்கிற சந்தோசமும் அவளைத் தடுமாற வைத்துவிட்டதா?
அல்லது சுகந்தன் சொன்ன, ‘ரஞ்சன் உன்னைத் திருமணம் செய்யமாட்டான்’ என்கிற வசனம் அவளை நிலைகுலைய வைத்ததா?
எதுவானாலும், தன் கைப்பொருள் களவு போய்விடுமோ என்று உள்மனதில் பதறிக்கொண்டிருந்தவளின் மனதுக்கு நடந்த நிகழ்வு ஒருவித சாந்தியைக் கொடுத்தது என்பதுதான் உண்மை!
அதோடு, கற்பு உயிரை விட மேலானதாக அவளுக்கு இருந்தாலும், ரஞ்சனுக்கு முன்னால் அதுகூட ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது! அவன் விரும்பிக் கேட்ட ஒன்றை அவளால் கொடுக்காமல் இருக்க முடியாதே!
செய்தது தவறு என்கிற உறுத்தல் இருந்தாலும், அவனுடனான திருமணம் அதை நிவர்த்தி செய்துவிடுமே என்று எண்ணியவளின் விழிகள், அவள் மனதை மட்டுமல்லாது உடலையும் சொந்தமாக்கிக் கொண்டவனைக் காதலுடன் தழுவியது.
அவள்தான் எதிலும் அவசரப் படுகிறவள் என்றால், அவனுக்கும் இன்று என்னவாகிற்று? எப்போதும் நிதானமாக இருக்கும் அவன் எதற்காக நிதானத்தை இழந்தான்? அவனையும் அவளது பிரிவு தாக்கியிருக்குமோ? அதுதான் காரணமோ? என்று எண்ணியவளுக்கு ஒருவித மகிழ்ச்சி உள்ளே ஊற்றெடுத்தது.
பின்னே, அவனும் அவளைத் தேடியிருக்கிறான். அந்தத் தேடலின் பிரதிபலிப்புத்தான் சற்று முன்னர் நடந்து முடிந்த சங்கமத்துக்கு காரணம் என்றால், அது அவனது காதலை, அவள் மீதான தேடலை அல்லவா காட்டுகிறது.
ஆனாலும், நடந்தது தவறு என்று அவளைப்போலவே அவனும் வருந்துகிறான் என்று எண்ணுகையில் அதுகூட அவளுக்கு நிறைவைத்தான் கொடுத்தது.
எதிலுமே கண்ணியம் காக்கும் அவனது மனநிலை தற்போது என்னவாக இருக்கும் என்று மிக நன்றாகவே விளங்கியது.
அவள் விழித்துவிட்டதை உணராது, தன் தலைமுடியை இரு கரங்களாலும் கோதிக்கொண்டவனின் முகத்தில் இருந்த வறட்சியையும், தப்புச் செய்துவிட்டோமே என்கிற குன்றலையும் பார்த்தவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
செய்தது தவறாக இருந்தாலும் அவன் தவிப்பதா?
அவளது இதயன் வருந்துவதா?
அதற்கு மேலும் அவன் படும்பாட்டைத் தாங்க முடியாமல், “இதயன்..” என்று மெல்ல அழைத்தாள்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள், குற்ற உணர்ச்சியில் குன்றி அவளைக் காணமுடியாமல் மீண்டும் தாழ்ந்தன.
இப்போது எதற்கு இவன் சோக கீதம் வாசிக்கிறான்?
என்றாக இருந்தாலும் அவனுக்கானவள் தானே அவள். பிறகென்ன?
இவனை இப்படியே விட்டால் சரியாக வராது என்று எண்ணியவள், மீண்டும் அவனை அழைத்து, “கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக் கொள்ளுங்கள்..” என்றாள் மெல்லிய குரலில்.
ஒரு நொடி கேள்வியாக உயர்ந்தது அவன் பார்வை. உடனேயே புரிந்து கொண்டாற்போல் முகம் கன்ற, மிக வேகமாக அவளுக்கு முதுகாட்டி நின்றுகொண்டான்.
சித்ராவும் வேகமாகத் தன்னைச் சீராக்கிக் கொண்டு எழுந்தாள். அதுவரை எதிலே தூங்கினோம் என்று திரும்பிப் பார்த்தவளுக்கு, அது தேவைக்குப் படுக்கையாக மாற்றக் கூடிய அமைப்பிலிருந்த சோபா என்று புரிந்தது.
அதை நினைத்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. அந்த இடமும், அந்த சோபாவும், அந்தக் கடையும் கூட அவளுக்கு மிக மிகப் பிடித்துப் போனது.
அதுமட்டுமல்ல, அதுவரை மனதில் இருந்த அத்தனை சஞ்சலங்களும் அகன்று போனது. அவனிடம் இன்னும் நெருக்கம், மனதில் ஒருவித நிறைவு, இனி அவனை அவளிடமிருந்து யாராலுமே பிரிக்க முடியாது என்கிற தெம்பு அனைத்துமே அவளுக்கு நிறைவை மட்டுமே பரிசளித்தன.
இனி என்ன, அப்பாவிடம் அவர்களைப் பற்றிச் சொன்னால் ஜாம் ஜாம் என்று திருமணம் நடக்கும். அவளும் அவனது திருமதி ஆகிவிடுவாள் என்று எண்ணிப் பூரித்தாள்.
அந்தப் பூரிப்போடு முதுகு காட்டி நின்றவனை இடையோடு இதமாக அணைத்துக் கொண்டவள் நிம்மதியோடு அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்.
சட்டென்று அவள் கரங்களைப் பிரித்துவிட்டு அவளிடமிருந்து விலகிய ரஞ்சன், அவள் முகம் பாராது, “சா..ரி யாழி.” என்றான், இறுகிய குரலில்.
அப்போதும் அவனை நெருங்கி, அவன் தாடையைப் பற்றித் தன் முகம் பார்க்கும்படி திருப்பியவள், “நடந்தது பிழை என்று நான் சொன்னேனா? அல்லது அழுது ஆர்ப்பாட்டம் தான் செய்தேனா?” என்று இதமான குரலில் கேட்டாள்.
திகைத்துப்போய் அவளைப் பார்த்தன் ரஞ்சன். நடந்தது பெருந் தவறில்லையா?
இதனால் அவளுக்கு ஒன்றுமில்லையா? ஒன்றுமே இல்லையா?
எதிலேயோ தோற்ற உணர்வு!
அவளை வெறித்தன அவன் விழிகள்.
அதைக் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறான் என்று விளங்கிக் கொண்டு, “கொஞ்சம் சிரிக்கிறீர்களா? இந்த முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.” என்றாள் அவள்.
ஒன்றும் சொல்லாமல் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “இந்தக் கடையை எப்போது எடுத்தீர்கள் இதயன்?” என்று, அவனுக்குப் பிடித்த திசையில் பேச்சை மாற்றத் தொடங்கினாள்.
“பத்து நாட்களுக்கு முதல்…”
“ஓ..” என்று கேட்டுக் கொண்டவள், “பிறகேன் அதற்கு முதல் நான் அழைத்த போதெல்லாம் கதைக்கவில்லை?” என்று கோபத்தோடு கேட்டாள்.
கடையப் பார்ப்பது போல் பார்வையைத் திருப்பிக் கொண்டவன், “வேலை..” என்றான் சுருக்கமாக.
“சும்மா நடிக்காதீர்கள். என் அப்பா ஐந்து கடைகள் வைத்திருக்கிறார். அவரே ஓய்வாகத்தான் இருக்கிறார். இரண்டாவது கடை திறக்கும்போதே என்னை மறந்து விட்டீர்களே, இதே மூன்றாவது நான்காவது கடை வரும்போது என்னை யார் என்று கேட்பீர்கள் போலவே..” என்றாள், கோபமும் கிண்டலுமாக.
“இப்போ என்ன, உன் அப்பாவிடம் ஐந்து கடை இருக்கிறது. நான் இப்போதுதான் இரண்டாவது கடை திறக்கிறேன் என்று குத்திக் காட்டுகிறாயா? நான் ஒன்றும் உன்னைப் போல் பணத்தில் உருண்டு புரளவில்லை.” என்றான் அவன்.
சித்ரா அதிர்ந்துதான் போனாள். இவன் என்ன புரியாமல் இப்படிச் சொல்கிறானா அல்லது வேண்டுமென்றே பேசுகிறானா என்று புரியாமல் அவனைப் பார்த்தாள். “ஏன் இதயன் இப்படிக் கதைக்கிறீர்கள்? நான் என்றாவது உங்களிடம் என் பணத்திமிரைக் காட்டி இருக்கிறேனா?”
“அன்று, நீ என்னை அடித்த தினத்தை மறந்துவிட்டாய் போல?” எள்ளலோடு கேட்டான் ரஞ்சன்.
அதை எதிர்பாராதவள், அறை வாங்கிய குழந்தையாக முழித்தாள். “அதை இன்னுமா நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்?” என்று ஏமாற்றம் மிகுந்த குரலில் கேட்டாள் சித்ரா.
‘மறக்கமுடியுமா?’ என்பதாக அவன் பார்க்க, “நான் செய்தது பிழை என்று எப்போதே சொல்லிவிட்டேனே.. வேண்டுமானால் திரும்பவும் மன்னிப்புக் கேட்கிறேன்..” என்றவளின் பேச்சை இடைமறித்தான் ரஞ்சன்.
“தேவையில்லை. நீ பணத்திமிரைக் காட்டியதில்லை என்று சொன்னதற்குத்தான் நானும் சொன்னேன்.” என்றவன், “சரி நீ கிளம்பு. பூட்டிய கடைக்குள் நாம் நிற்பது நல்லதில்லை.” என்றான்.
அவளும் உடனேயே வீட்டுக்குப் போகவேண்டிய அவசியத்தை உணர்ந்தாள். சித்தி வீட்டார் வீட்டில் இருக்கையிலேயே, வவுனியாவில் இருந்து வந்ததும் வராததுமாக இங்கே ஓடிவந்தவள் நிறைய நேரத்தை வெளியிலேயே கழித்து விட்டிருந்தாள்.
இப்போது வீட்டுக்குப் போனாலே தாயார் திட்டப் போவது உறுதி. அப்படியிருக்க, அவள் பேச வந்த விஷயத்தை அப்படி அவசரமாகச் சொல்லிவிடவும் முடியாது.
எனவே, அதுதான் திருகோணமலைக்கு வந்து சேர்ந்துவிட்டோமே, இனி அவனை எப்போதும்போலப் பார்க்கலாம் தானே என்று எண்ணியவள், “நம் திருமணம் பற்றிக் கதைக்கவேண்டும் இதயன். ஆனால் எனக்கும் இப்போது நேரமில்லை. நான் நாளைக்கு வரவா?” என்று அவனிடம் கேட்டாள்.
புரிந்துகொள்ள முடியாத ஒரு பார்வையை அவள் புறமாக வீசியவன், “நானும் உன்னோடு முக்கியமான விஷயம் கதைக்கத்தான வேண்டும். ஆனால், இப்போதைக்கு எனக்கு நேரமில்லை. சித்திரை வருடப் பிறப்புக்கு இந்தக் கடை திறக்க வேண்டும். அது முடிய எல்லாவற்றையும் பேசித் தீர்க்கலாம்.” என்றான் ரஞ்சன்.
“அதுவரை அப்பாவைச் சமாளிக்க முடியாது இதயன்.” என்றவளிடம், “உன்னால் முடியாது என்று ஒன்று உண்டா என்ன? நீ எதற்கும் துணிந்தவள் ஆயிற்றே!” என்றான் அவன் ஒருமாதிரிக் குரலில்.
அதன் ஆழத்தை உணராது, கள்ளமில்லாமல் சிரித்தாள் சித்ரா. “உண்மைதான். சரி சித்திரை வருடப்பிறப்பு வரை அப்பாவை நான் சமாளிக்கிறேன்.” என்றவள், “இனியாவது நான் எடுத்தால் கதையுங்கள்.” என்று கைபேசியைக் காட்டிச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.


