அடுத்தநாள் கலையே எழுந்தவள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றாள்.
வெளியே செல்லத் தயாராக, அதுவும் சேலையில் வந்த மகளை ஆச்சர்யமாகப் பார்த்தார் சந்தானம். “என்னமா எங்கே போகப் போகிறாய்? அதுவும் சேலையில், உன் தோழிகள் யாருக்காவது பிறந்தநாளா?”
தந்தை சாதாரணமாகக் கேட்ட கேள்வி கூட அவளைக் குத்தியது. அதுநாள் வரை இருபத்தியிரண்டு வயது முடிந்திருந்த போதும், மனதளவில் விளையாட்டுத் பிள்ளையாகவே இருந்தவளுக்கு, இப்போது தான் பெரியவள் ஆகிவிட்ட உணர்வு தோன்றியிருந்தது.
நடந்துவிட்ட ஒரு நிகழ்வு வாழ்க்கையையே மாற்றிப் போடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. நடந்து முடிந்ததை இனி யாராலும் மாற்ற முடியாது என்பதையும் வேதனையோடு உணர்ந்துகொண்டாள்.
அதனால்தான், இனித் தந்தையின் கடைகளைத் தானே பார்த்துக்கொள்ள முடிவு செய்திருந்தவளுக்கு, அங்கே செல்கையில் சேலையை அணியத் தோன்றவும் அணிந்துகொண்டாள்.
“ஒருவருக்கும் ஒன்றுமில்லை. நான் நம் கடைக்குப் போகப்போகிறேன்.” என்றாள் தகப்பனிடம், மனதின் வேதனைகளை மறைத்து.
செயல், பேச்சு, பார்வை எதிலுமே வெளிப்படைத் தன்மையோடு இருந்தவளிடம் பூடகமாகப் பேசும் தன்மை புகுந்துவிட்டதை வலியோடு உணர்ந்தாள்.
மகள் சொன்னதக் கேட்ட சந்தானத்தின் புருவங்கள் சுருங்க, அவளை கேள்வியாக ஏறிட்டார். நானும் கடைக்கு வரப்போகிறேன் என்றால், அவரோடு அவள் வரப்போகிறாள் என்று அர்த்தம். இதென்ன போகப் போகிறேன் என்கிறாள் என்று எண்ணியவர் அதையே மகளிடமும் வினவினார்.
“அப்படி என்றால் இனி நீங்கள் வீட்டில் இருந்து அம்மாவின் சமையலுக்கு உதவி செய்யுங்கள் என்று அர்த்தம். நான் கடைகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று அர்த்தம்.” என்று, தன்னைத் தந்தை கண்டுகொள்ளாமல் இருக்கக் கேலி பேசத் தொடங்கினாள் சித்ரா.
சந்தானத்தின் கண்ணோரங்கள் சிரிப்பில் சுருங்கிய போதும், “உன்னால் முடியுமா சித்து? அதோடு, திருமணமாகப் போகும் பிள்ளை. எதற்குக் கஷ்டப் படுகிறாய். அதற்கு நீ வீட்டில் இருக்கும் இந்தக் கொஞ்ச நாட்களும் உன் விருப்பப் படியே இரு. அப்பா கடைகளைப் பார்த்துக்கொள்வேன்..” என்றார் பாசத்தோடு.
“திருமணத்திற்குப் பிறகும் நான்தான் கடைகளைப் பார்த்துக் கொள்வேன். அதனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.” என்றாள் பிடிவாதக் குரலில்.
“அதெப்படி சித்து. மாப்பிள்ளை சம்மதிக்க வேண்டுமே. அதோடு திருகோணமலையில் தான் உனக்கு மாப்பிள்ளை அமையும் என்று சொல்ல முடியாதே.” என்றவரை முறைத்தாள் மகள்.
“எனக்குத் திருகோணமலையில் தான் மாப்பிள்ளை. அதோடு, என் அப்பாவுக்கு நான் உதவி செய்வதை அவன் என்ன தடுப்பது?” என்று எகிறியவளை, அதுவரை அப்பாவும் மகளும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மி அதட்டினார்.
“வருங்காலக் கணவனுக்கு முதலில் மரியாதை கொடுத்துப் பேசிப் பழகு. இப்படியே கதைத்தாயானால் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறோம் என்று எங்களைத்தான் குறை சொல்வார்கள்.” என்ற தாயாரை முறைத்தவளின் உதடுகள் ‘அவனுக்கு இந்த மரியாதையே போதும்’ என்று ரஞ்சனை எண்ணி முணுமுணுத்தன.
மகளின் உதடுகள் அசைவதைக் கவனித்துவிட்டு, “வாய்க்குள் என்னைத்தான் திட்டுகிறாள் உங்கள் மகள்..” என்றார் அவர் கணவரிடம்.
“நான் எதற்கு உங்களை வாய்க்குள் திட்ட? எனக்கென்ன பயமா? வாயைத் திறந்தே திட்டுவேன்.” என்று தாயிடம் சொன்னவள், தகப்பனிடம் திரும்பினாள்.
“இப்போது எதற்குத் திருமணத்தைப் பற்றிக் கதைக்க அப்பா? நான்தான் கடைகளைப் பார்த்துக் கொள்ளப் போகிறேன். இனி நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். திருமணம் முடிந்த பிறகு மிகுதியை யோசிக்கலாம்.” என்றாள் முடிவான குரலில்.
தாயைக் கேலியாகப் பார்த்தபடி, “நான் கடைக்குப் போகிறேன். நீங்கள் போய் அம்மாவுக்குத் தேங்காயைத் துருவிக் கொடுங்கள் அப்பா. பிறகாவது அம்மா சிரிக்கிறாரா பார்க்கலாம்.” என்றவள், பெற்றவர்களிடம் போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
இனி என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள் என்பதை உணர்ந்த லக்ஷ்மி, மகளின் பின்னால் சென்றபடி,“காலைச் சாப்பாட்டையாவது சாப்பிட்டுவிட்டுப் போ சித்து..” என்றார் சத்தமாக.
அதற்கிடையில் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்திருந்தவள், “அதை அப்பாவுக்கே போடுங்கள். இனி உங்களுக்கு வாய்த்த அடிமை அவர்தான். நான் கடையிலேயே பார்த்துக் கொள்கிறேன்.” என்றுவிட்டுப் பறந்தாள்.
சாப்பிடாமல் போகிறாளே என்கிற கோபத்தோடு உள்ளே வந்த மனைவியைக் கண்களில் கேலி மின்னச் சந்தானம் பார்க்க, “இங்கே என்ன பார்வை? போங்கள்! போய் உங்கள் மகள் சொன்னது போல தேங்காயைத் துருவுங்கள்.” என்றவராலும், கணவரின் கேலிப்பார்வையில் உண்டான சிரிப்பை மறைக்க முடியவில்லை.
அதன்பிறகான நாட்கள் சித்ராவுக்கு ஒருவிதப் பிடிவாதத்துடனேயே கழிந்தன. அவனைப் பார்க்கவேண்டும், அவனோடு கதைக்க வேண்டும், அவன் குரலைக் கேட்கவேண்டும் என்று பேராவல் எழுந்தபோதும் அவற்றை அவள் செய்யவில்லை.
மீண்டும் ஒருமுறை அவனிடமிருந்து சுடு சொற்களைப் பெற்றுக்கொள்ளும் திராணி அவளுக்கு இல்லை. உள்ளே அரித்துக் கொண்டிருக்கும் வேதனையே போதும். அவன் சொன்னது போல சித்திரை வருடப் பிறப்பு வரைக்கும் அவனுக்குத் தொல்லை கொடுக்காது தள்ளியே இருக்க நினைத்தாள்.
அந்தப் பிடிவாதம் மனதில் இருந்தபோதும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நேசத்தைப் பற்றியும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் போடும் வேஷத்தைப் பற்றியும் பலதும் எண்ணித் தவித்தது அவள் மனது.
இப்போதெல்லாம் அடிமனதில் ஒருவிதப் பயம் அவளை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருந்தது. அன்று அவனைச் சொந்தமாக்கி விட்டதுபோல் இருந்தாலும், இன்று அந்த நிகழ்வே நடுக்கத்தை கொடுக்கத் தொடங்கியிருந்தது. இனித்தான் அவள் அவனைப் பற்றிக்கொள்ள வேண்டியதன் கட்டாயமும் புரிந்தது.
முதலில் இயல்பாகத் தோன்றியிருந்த காதலும் நேசமும் இன்று ஒரு கட்டாயத்தின் கீழ் சென்றுவிட்டிருந்தது.
இந்த மனப் போராட்டத்துக்கு மத்தியிலும், கடைக்கு ஆட்கள் இல்லாமல் அவன் அவதிப்படுவதை நினைவில் வைத்திருந்தவள், தனக்குத் தெரிந்த ஒருவனை ரஞ்சனின் கடைக்கு வேலைக்கு அனுப்பினாள்.
அன்று அவளது ஸ்கூட்டியில் பிரேக் ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்று திருத்தக் கொடுத்தபோது, அந்தக் கடையில் வேலை செய்யும் நகுலன், முதலாளி எங்கே என்று உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, “அக்கா, உங்கள் அப்பாவின் கடையில் எனக்கு ஒரு வேலை வாங்கித் தருவீர்களா? இங்கே முதலாளி அடிக்கிறார் அக்கா. சம்பளமும் ஒழுங்காககத் தருவதில்லை.” என்றான் கண்கள் கலங்க. அவளை நீண்ட நாட்கள் தெரியும் என்பதால் கேட்டான்.
உடனேயே அவள் நினைவுக்கு வந்தவன் ரஞ்சனே! வீட்டுக்குப் போகக் கூட நேரமில்லாமல் உழைப்பவனுக்கு நகுலன் உதவியாக இருப்பான் என்று எண்ணினாள்.
நகுலனும் நம்பிக்கையானவன் என்பதால், அவர்களின் கடைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்திருந்த போதும், “அப்பாவிடம் இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்த இன்னொருவரிடம் அனுப்புகிறேன். போகிறாயா? அங்கேயும் உனக்கு வேலை கிடைக்கும். நல்ல சம்பளமும்.” என்று அவனிடம் கேட்டாள்.
முகம் மலரத் தலையாட்டியவன், அவளது ஸ்கூட்டி திருத்தியதுமே அதோடு சேர்ந்து அந்த வேலையையும் விட்டுவிட்டு அன்றே அவளோடு வந்துவிட்டான். வந்தவனை இப்போது எப்படி அந்தக் கடைக்கு அனுப்புவது என்கிற யோசனை எழுந்தது அவளுக்கு.
அன்று, ‘ரஞ்சன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டான்..’ என்று சுகந்தனும் ஜீவனும் சொன்னதில் உண்டான கோபத்தில் அந்தக் கடைக்குப் போவதையே விட்டுவிட்டாள் சித்ரா.
பின்னே, அவளுடைய இதயனைப் பற்றி அவளிடமே குறையாகச் சொன்னால் அதை ஏற்க முடியுமா அவளால்? அல்லது அவர்களோடு பழகத்தான் முடியுமா? ரஞ்சனோடும் சித்திரை வருடப் பிறப்பு வரைக்கும் கதைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறாள்..
என்ன செய்யலாம்?
உடனேயே கைபேசியை எடுத்து, ‘எனக்குத் தெரிந்த ஒரு பொடியனை அனுப்புகிறேன். பெயர் நகுலன். நம்பிக்கையானவன். உங்களுக்கு உதவியாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள்.’ என்று ஒரு மெசேஜை ரஞ்சனுக்கு அனுப்பினாள்.
பிறகு நகுலனிடம் தன் கைபேசி இலக்கத்தை கொடுத்து, வேலைக்குச் சேர்ந்துவிட்டு எனக்கு அழைத்துச் சொல்லு என்று சொல்லி அவனை ரஞ்சனிடம் அனுப்பி வைத்தாள்.
அவள் வீட்டுக்குச் சென்றதும் நகுலன் அழைத்தான். “அக்கா, அந்த அண்ணா என்னை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்க்கா. மிக்க நன்றிக்கா.” என்றவனிடம், “சரிடா. இனிச் சந்தோசமாக வேலை செய். ஏதாவது என்றால் எனக்கு அழைக்கத் தயங்காதே..” என்று சொல்லி வைத்தவளுக்கும், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனது கொஞ்சம் அமைதியாக இருந்தது.
அவள் அனுப்பிய ஒருவனை ரஞ்சன் வேலைக்கு அமர்த்திவிட்டானே!
அப்படியே நாட்கள் அதன்பாட்டுக்கு நகர, அன்று காலையில் எழுந்த சித்ராவுக்கு சற்றுக் களைப்பாக இருந்தது. இரவு நன்றாகத் தூங்கியும் இதென்ன காலையிலேயே முடியாமல் இருக்கிறது என்று எண்ணியபடி தன் வேலைகளை முடித்தவள், எப்போதும் போலக் கடைக்குச் சென்றாள்.
அங்கேயும் வேலைகளைப் பார்க்க முடியாமல், சோர்வு. நிராக முடியவில்லை, நடமாட முடியவில்லை. நேற்று அபியோடு கதைக்கையில் அவளும் இப்படித்தானே சொன்னாள்.. என்று எண்ணியவளின் நினைவுகள் கூட ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.
தாய்மை அடைந்திருப்பதாகச் சொன்ன அபிக்கும் அவளுக்கும் ஒரேமாதிரியான உடற்சோர்வுகள். ஏன்? கடவுளே!?
அப்படியும் இருக்குமோ?
இதயம் படபடக்கத் தொடங்க, கைகால்கள் நடுங்கத் தொடங்கின. முகமெல்லாம் வியர்க்க, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டியப் பார்த்தவளுக்கு, அதிலிருந்த திகதி அவள் தாய்மை அடைந்திருக்கும் செய்தியை உறுதிப் படுத்தியது.
நாள் தள்ளிப் போயிருக்கிறதே!
அதற்கு மேல் எதையும் சிந்திக்க முடியாது, உடனேயே அவர்களது குடும்ப வைத்தியர் லதாவுக்கு அழைத்தாள். “லதாக்கா நான் உங்களைப் பார்க்கவேண்டும்.”
“என்னடி, எடுத்ததும் எடுக்காததுமாக என்னைப் பார்க்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? நான் எப்படி இருக்கிறேன். உன் அத்தான் எப்படி இருக்கிறார். அஸ்வின் குட்டி எங்கே என்றெல்லாம் கேட்கமாட்டாயா?” என்று அவர் அதட்ட, “லதாக்கா ப்ளீஸ். நான் உங்களை அவசரமாகப் பார்க்கவேண்டும்.” என்றாள் மீண்டும்.
“சித்ரா?”
அவள் அமைதியாக இருக்கவும், “சரி மாலை வா..” என்றார், அவளின் பிடிவாதக் குணம் அறிந்திருந்தவர்.
“இல்லை. நான் இப்போதே வருகிறேன்..”என்று அவள் சொல்ல, “பிறகு எதற்கடி என்னிடம் அனுமதி கேட்கிறாய். சரி வா. முடிந்தால் உடனேயே பார்க்கிறேன். இல்லையானால் கொஞ்ச நேரம் நீ காத்திருக்க வேண்டிவரும்.” என்றுவிட்டு வைத்தார் லதா.
இவள் தன் கைபேசியை அணைக்கவும், அது மீண்டும் அலறவும் சரியாக இருந்தது. அழைப்பது நகுலன் என்று தெரிந்ததும் அவனோடு கதைக்கும் மனநிலை அப்போது இல்லாததில் கைபேசியைத் தூக்கி மேசையில் வைத்துவிட்டுப் பேசாமல் இருந்தாள்.
இனியும் காத்திருக்க முடியாது. இதயனிடம் சொல்லி உடனேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஓடிய அவள் சிந்தனையை மீண்டும் அலறிய கைபேசி தடை செய்தது.
எடுக்க மனமே இல்லாதபோதும், சிலநேரம் இதயனுக்கு ஏதுமோ என்று எண்ணியதுமே அவள் கை தானாக கைபேசியக் காதுக்குக் கொடுத்தது.
“சொல்லு நகுல்..”
“நீங்கள் இன்று எத்தனை மணிக்கு இங்கே வருவீர்கள் அக்கா?” என்று கேட்டான் அவன்.
“நான் எதற்கடா அங்கே?” சுரத்தில்லாமல் கேட்டாள் சித்ரா.
“என்னக்கா இப்படிச் சொல்கிறீர்கள். ரஞ்சன் அண்ணா மற்றக் கடையை இன்று திறக்கப் போகிறார். அதற்கு நீங்கள் வரமாட்டீர்களா? எங்களுக்கு புது உடை எல்லாம் எடுத்துத் தந்தார். என்னுடைய அம்மா அப்பா கூட வருவார்கள். அவர்களிடம் உங்களைக் காட்டலாம் என்றால் வரமாட்டேன் என்கிறீர்களே. வாங்கக்கா. அம்மா உங்களைப் பார்த்து நன்றி சொல்லவேண்டும் என்று சொன்னார்.” என்றவனின் தொடர்ந்த பேச்சுக்கள் எதுவுமே அவள் காதில் விழவில்லை.
‘ரஞ்சன் அண்ணா மற்றக் கடையை இன்று திறக்கிறார்’ என்பதிலேயே நின்றுபோயிற்று அத்தனையும்!
இன்று கடை திறப்புவிழாவா? சித்திரை வருடப் பிறப்புக்கு என்று சொன்னானே? கடையைத் திறப்பது எப்போதானாலும் அவளிடம் அவன் சொல்லவில்லையே!
ஏன்?
எப்போதும் போல் நேரமில்லை எனப் போகிறானா? அல்லது அவளுக்குச் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறானா? அப்படிச் சொல்லும் அளவுக்கு அவள் முக்கியம் இல்லாமல் போய்விட்டாளா?