அவள் இல்லாமல், அவள் விளக்கேற்றாமல், அவள் முதல் வியாபாரம் செய்யாமல் அவன் கடையைத் திறக்கப் போகிறானா? சுர்ரென்று கோபம் எந்தளவுக்கு ஏறியதோ, அதைவிட அதிகமாக உள்ளே வலித்தது.
உயிரோடு உயிராக, உள்ளத்தோடு உள்ளமாக, உடலோடு உடலாக கலந்துவிட்ட அவள் அவனுக்கு முக்கியம் இல்லையா?
நெஞ்சில் பெரும் வலியொன்று தாக்கியபோதும், உடனேயே நகுலனுக்கு அழைத்தாள் சித்ரா.
“வருகிறீர்களா அக்கா? அதைச் சொல்லத்தான் அழைத்தீர்களா?” என்று ஆர்வமாக அவன் கேட்க, இந்த ஆர்வம் ரஞ்சனுக்கு இல்லாமல் போயிற்றே என்றெண்ணி வருந்தினாள்.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது, “கடை திறந்துவிட்டீர்களா நகுலன்?” என்று கேட்பதற்குள் அவள் விழிகள் கண்ணீரில் நிறைந்தன.
“இல்லைக்கா. இன்று மதியம் பன்னிரண்டு மணிதான் நல்ல நேரமாம். அதனால் இன்னும் திறக்கவில்லை. வரப்போறீங்களா அக்கா?” என்றவனிடம், “இல்லைடா. சும்மா கேட்டேன்.” என்றுவிட்டு கைபேசியை அணைத்தவள், கண்ணனையும் பட்டும் படாமல் விசாரித்தாள்.
அவரும் இன்று ரஞ்சன் கடை திறப்பதை உறுதிப் படுத்தினார்.
அதற்கு மேலும் ஒருநிமிடம் தன்னும் தாமதிக்காமல் கடையை விட்டு வெளியேறிய சித்ரா, நேராகச் சென்றது லதாவிடம்.
“வாவா சித்ரா. எப்படி இருக்கிறாய்? ” என்று அவர் கேட்க, பதில் சொல்ல முடியாமல், அவர் முகத்தைப் பாராமல் நின்றவளைக் கூர்ந்தார் லதா.
‘இது இவள் இயல்பு இல்லையே…’ என்று சிந்தனை ஓட, “என்ன சித்ரா, ஏன் என்னைப் பார்க்கவேண்டும் என்றாய். அப்படியே பார்ப்பது என்றாலும் வீட்டுக்கு வரவேண்டியது தானே..” என்று விசாரித்தார்.
“செக்கப் செய்ய வந்தேன்கா.”
“என்ன செக்கப்? ஆன்ட்டி எப்படி உன்னைத் தனியாக அனுப்பினார்கள்.” என்று கேட்டவரின் கேள்வியில், அவர் அப்படி அனுப்ப மாட்டாரே என்கிற செய்தி பொதிந்திருந்தது.
“அது.. நானாகத்தான் வந்தேன்.” என்றவளை, யோசனையாகப் பார்த்தார்.
“சரி சொல்லு, என்ன செக்கப்?”
கைகால்கள் உதறியது அவளுக்கு. உதடுகள் உலர்ந்து போனது. ஆனாலும் வந்த விஷயத்தை முடித்தாக வேண்டுமே. “எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கிறது. அதுதான்..” என்றாள், குனிந்த தலை நிமிராது.
“நாள் தள்ளிப் போயிருக்கிறதா..?” என்று சாதாரணமாகத் தொடங்கியவர், “ஏய், என்னடி சொல்கிறாய்?” என்று அதிர்ந்தபடி, அமர்ந்திருந்த கதிரையில் இருந்து பதறி எழுந்தார்.
அவமானத்தில் முகம் கன்றிவிட்டபோதும், அமைதியாக இருந்தவளை முறைத்தபடி, “அம்மா அப்பாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
அவள் தலை இடமும் வலமுமாக ஆடியது.
“யார் காரணம்?” என்ற அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் நின்றவள், “முதலில் செக் பண்ணிவிட்டுச் சொல்லுங்கள் லதாக்கா.” என்றாள் மெலிந்த குரலில்.
சற்று நேரம் அவளையே பார்த்த லதா, “வா..” என்றபடி உள்ளறைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தார்.
எல்லாம் முடிந்து வெளியே வந்தவர், “எல்லோரிடமும் இதைச் சொல்கையில் அவர்களுக்குக் கைகொடுத்து, புன்னகையோடு வாழ்த்தித்தான் சொல்வேன். ஆனால் உனக்கு?” என்றவர் சற்று இடைவெளி விட்டுவிட்டு, “நீ அம்மாவாகப் போகிறாய். ஆறு வாரக் கரு..” என்றார் இறுகிய குரலில்.
அவள் எதிர்பார்த்து வந்ததுதான். ஆனாலும், அதை லதா உறுதிப் படுத்தியபோது எவ்வளவு தடுக்க முயன்றும் அவள் விழிகளில் இருந்து கண்ணீர் கசிவதைத் தடுக்க முடியவில்லை.
இது நடக்காமல் இருந்திருக்கலாமோ? இந்தக் குழந்தை உருவாகாமல் இருந்திருக்கலாமோ? அவள் செய்த தவறை ஊருக்கே அம்பலப் படுத்தும் நிலை வந்துவிடுமோ?
“இந்த அநியாயத்தைச் செய்தவன் யார்?” ஆத்திரத்தோடு கேட்ட லதாவின் பேச்சு அவள் சிந்தனையைத் தடை செய்தது.
கலங்கிய விழிகளை அவருக்குக் காட்டாதிருக்க முயன்றபடி, “அவரை மரியாதை இல்லாமல் கதைக்காதீர்கள் லதாக்கா. அவரைத்தான் திருமணம் செய்யப் போகிறேன். யார் என்று பிறகு சொல்கிறேன்.” என்றாள்.
பன்னிரண்டு மணிக்கு இன்னும் அரை மணித்தியாலமே இருப்பதை உணர்ந்து, “சரிக்கா. நான் வருகிறேன்.” என்றவள், அவரையும் மேலே பேசவிடாது, அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் நேரே சென்றது ரஞ்சனின் புதுக் கடைக்கு.
அங்கே, ஆண்களும் பெண்களுமாய் பலர் நின்றனர். எல்லோர் முகத்திலும் பணக்காரக் களையும், ஒருவித நிமிர்வும் மிக நன்றாகவே தெரிந்தது. அவர்களுக்குள் அவளுக்குத் தெரிந்தவர்கள் என்றால், ரஞ்சனின் தாயார், நித்யா மற்றும் நகுலன் மட்டுமே.
கடைக்குள் வந்துகொண்டிருந்த சித்ராவை யாரிது என்பதாக எல்லோரும் பார்த்தாலும், நகுலன் மட்டுமே ஓடிவந்து வரவேற்றான்.
“அக்கா வாங்கக்கா. வரமாட்டேன் என்று சொன்னீர்களே. வாங்க வாங்க..”
அவனின் உற்சாகமான வரவேற்புக்குப் பதிலாக ஒப்புக்குப் புன்னகைத்தவள், அங்கிருந்தவர்களை விழியுயர்த்திப் பார்த்தாள்.
அவள் யார் என்பதை அறிந்திருந்த இராசமணி சின்னப் புன்னகையோடு தலையசைத்துப் பேருக்கு வரவேற்றார். பதிலுக்குப் புன்னகைத்தவளின் விழிகள் அவர் அருகில் நின்ற நித்யாவைப் பார்க்க, அவளோ அலட்சியமும் திமிருமாக சித்ராவைப் பார்த்தாள்.
முன்னர் ரஞ்சன் ‘ரிபோக்’கில் வேலை செய்யும்போது, அங்கே செல்கையில் சித்ராவைப் பார்க்க நேர்ந்தால், அவளின் உடை முதல் அணிந்திருக்கும் நகைவரை அனைத்தையும் பார்க்கையில் ஒருவிதப் பொறாமை நித்தியின் மனதில் மின்னும்.
இன்று அவளுக்கு இணையாக, சொல்லப் போனால் கடைக்கு என்று சாதரணச் சேலையில் வழமையான எளிய நகைகளுடன் இருந்த சித்ராவை விடப் பொலிவுடன் நின்ற நித்திக்குத் தன்னை நினைத்தே கர்வமாக இருந்தது.
என்னைப் பார் என்பதாக ஒரு பார்வையைச் சித்ராவின் புறம் வீசிவிட்டுப் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
மனதில் பாரத்தோடும் வலியோடும் வந்த சித்ராவுக்கு அவர்களின் அலட்சியம் கருத்தில் படவே இல்லை. அவள் விழிகள் அங்கிருந்தவர்களில் ஒருவனைத் தேடி அலைந்தன.
அவளின் தேடல் அறியாத நகுலன், “அக்கா, என்னுடைய அம்மாவோடு கதைக்கிறீர்களா?” என்று ஆர்வமாகக் கேட்டான்.
“அதற்கென்ன நகுல். கட்டாயம் கதைக்கிறேன்.” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முடிந்தவரை கவர்ச்சியாக சேலையை அணிந்து, நடை, உடை, பாவனை அனைத்திலும் அலட்சியம் மின்ன ரஞ்சனின் தாயாரை நெருங்கினாள் சாதனா.
“எங்கேத்தை ரஞ்சன் மச்சானைக் காணவில்லை. நானும் அவருமாகச் சேர்ந்து திறக்கப் போகும் முதல் கடை இது. அதை நல்ல நேரம் முடிய முதலே திறக்க வேண்டாமா? இனிப் பாருங்கள், ரஞ்சன் மச்சான் பல கடைகள் திறக்கப் போகிறார். எல்லாம் அவருக்கு நான் மனைவியாகப் போகும் ராசி.”என்றாள் பெருமையாக.
அதை அச்சரம் பிசகாது அப்படியே உள்வாங்கிக் கொண்ட சித்ராவின் விழிகள் பெரும் அதிர்ச்சியில் விரிந்தது என்றால், சந்தனத்தைக் கரைத்து எடுத்துக்கொண்டு வந்த ரஞ்சனின் வேகநடை அவளைக் கண்டதும் நின்றது.