ஒரு நிமிடம் தான் கேட்டது உண்மைதானா, சரியாகத்தான் கேட்டோமா என்று அதிர்ந்து நின்றாள் சித்ரா.
அவளின் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக, “பின்னே, நீ என் வீட்டுக்கு மருமகளாக வருவதால் எனக்கும் சந்தோசம்தான். நித்தியின் அப்பாவின் விருப்பமும் அதுதானே.” என்றார் இராசமணி சாதனாவிடம்.
அதைக் கேட்டவளுக்கோ பெரும் அதிர்ச்சி!
அன்று சுகந்தனும் ஜீவனும் சொன்னபோது கூட சிறிதும் நம்பினால் இல்லையே! அவர்கள் மீதுதானே கோபம் வந்தது. இதோ இன்றுவரை அந்தக் கடையின் வாசலை அவள் மிதிக்கவும் இல்லை. அவர்களோடு கதைக்கவும் இல்லை.
ஏன்?
அவளது இதயனைப் பற்றி அவர்கள் பிழையாகக் கதைத்துவிட்டார்கள் என்கிற ஆத்திரம்! அவன் நண்பர்களாக இருந்தும் அவளிடம் இப்படிச் சொன்னார்களே என்கிற கோபம்! என் இதயனை எனக்குத் தெரியாதா என்கிற கர்வம்.
அதைப் பற்றி அவள் அதற்குப் பிறகு சிந்தித்ததே இல்லையே!
ஏன், ரஞ்சனிடம் அதைக் கேட்கவேண்டும் என்று கூட எண்ணியதில்லை.
அவ்வளவு நம்பிக்கை. என் இதயன் எனக்குத் துரோகம் செய்யமாட்டான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை! அப்படி நம்பியது பிழையோ?
அதிர்ச்சி விலகாது, காதில் விழுந்ததை ஜீரணிக்க முடியாது ஸ்தம்பித்து நின்றவளின் பார்வையில் விழுந்தான் ரஞ்சன்.
அவனைப் பார்த்ததுமே வேதனையும் கண்ணீரும் விழிகளில் பொங்க, ‘இவர்கள் எல்லாம் இப்படிச் சொல்கிறார்களே.. இதற்கு நீ என்ன சொல்லப் போகிறாய்’ என்பதாக அவள் பார்க்க, அவனுமே நின்ற இடத்திலிருந்து அசைய முடியாமல் நின்றான்.
அங்கு அவளை எதிர் பாராமல் கண்டதில் அதிர்ந்தாலும், உடனேயே தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தவனின் புருவங்கள் சுழித்தன. அதுவே அவளின் உயிரின் ஆழம் வரை வலிக்க, துடித்துப்போய் அப்படியே நின்றாள் சித்ரா.
அதற்குள், “அங்கே நின்று என்ன செய்கிறீர்கள் ரஞ்சன் மச்சான். நேரமாகிறது வாருங்கள். கடையைத் திறக்க வேண்டாமா?” என்று அழைத்தாள் சாதனா.
சட்டென சித்ராவிடம் இருந்து பார்வையைத் திருப்பியவன், “இதோ..” என்றபடி சென்று சந்தனத்தை சுவாமிப் படங்களுக்கு முன்னால் வைக்க, விளக்கை ஏற்றுவதற்காக லைட்டரைக் கையில் எடுத்தாள் சாதனா.
“நீயும் அவளருகில் நின்றுகொள் ரஞ்சன். இருவருமாக விளக்கை ஏற்றுங்கள்..” என்றார், சாதனாவின் தாய் மல்லிகா.
அப்படி அந்தப் பெண்ணருகில் போய் நின்றுவிடமாட்டான் என்கிற நம்பிக்கையும், நின்றுவிடுவானோ என்கிற பயமுமாக சித்ராவின் விழிகள் கலக்கத்தோடு ரஞ்சனையே நோக்கின.
சித்ராவைத் திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அவளருகில் சென்று நின்று விடாதீர்கள் என்று யாசித்தன அவளது விழிகள். ஒரு நொடி அவளையே நோக்கியவன் முகத்ததைத் திருப்பிக்கொண்டு சாதனாவின் அருகில் சென்று நின்று கொண்டான்.
சித்ராவின் நெஞ்சு அதிர்ந்தது. நடந்ததை நம்ப முடியாமல் ரஞ்சனின் முதுகை வெறித்தன அவள் விழிகள்!
ஆக, ஜீவனும் சுகந்தனும் சொன்னது உண்மைதான். அந்தப் பெண்ணும் அவன் தாயாரும் பேசிக்கொண்டதும் உண்மைதான்.
அப்படியானால் இங்கே அவள் யார்? அவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? நடந்துமுடிந்துவிட்ட உறவுக்குப் பெயர் என்ன? அவள் வயிற்றில் உதித்திருக்கும் சிசுவின் நிலை என்ன?
நினைக்க நினைக்கத் தன் பயங்கரமான நிலை அவளுக்கு மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது.
ஆக, அவன்மேல் அவள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை சிதைத்துவிட்டான்.
எவ்வளவுக்கு எவ்வளவு வலித்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆத்திரமும் வந்தது.
இப்போது அவள் என்ன செய்யவேண்டும்?
தன் வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்கப் போகும் மிக முக்கியமான சூழ்நிலையில் தான் நிற்பதை அந்த நொடியில் உணர்ந்தாள்.
உடனேயே அவள் உடல் நிமிர்ந்தது. தப்பு செய்யாதவர்களிடம் இருக்குமே அசைக்க முடியாத உறுதி. அந்த உறுதி முகத்தில் துலங்க, “ஒரு நிமிடம்!” என்றபடி அவர்களை நெருங்கினாள்.
விளக்கை ஏற்றப் போன சாதனா என்ன என்பதாகப் பார்க்க, அங்கிருந்த மற்றவர்களின் பார்வையும் அவளைத் தொடர்ந்தது. சாதனாவின் கையில் இருந்த லைட்டரைப் பிடுங்கியவள், “தள்ளுங்கள்!” என்றுவிட்டு ரஞ்சனின் அருகில் நின்று விளக்கை ஏற்றினாள்.
அவளின் அந்த நிமிர்வில், யாரைக் கண்டும் அஞ்சாத துணிவில் ரஞ்சனே சற்று அசந்துதான் போனான்.
யாருமே இதைச் சற்றும் எதிர்பாராததில், நடப்பதை ஊகித்து, உணர்ந்து, தடுப்பதற்கு முதலில் விளக்கை ஏற்றிவிட்டிருந்தாள் சித்ரா.
“ஏய், என்ன செய்கிறாய்?”
“இது யார் ரஞ்சன்?”
“என்ன செய்கிறாள் இந்தப் பெண்.”
“என்னடா பார்த்துக் கொண்டிருக்கிறாய்..” என்று பலகுரல்கள், பதட்டத்துடனும், ஆத்திரத்துடனும், சினத்துடனும் ஒலிக்க, அதில் சிறிதும் பாதிக்கப் படாமல் இரு கரம் கூப்பி சுவாமியைக் கும்பிட்ட சித்ரா, அன்று போலவே இன்றும் திருநீறு சந்தனத்தை ரஞ்சனின் நெற்றியில் பூசிவிட்டாள்.
அதைப் பூசுகையில் சந்தித்துக் கொண்ட இரு ஜோடி விழிகளும் வெட்டிக் கொண்டன.
அவன் விழிகள் ஆத்திரத்துடன் அவளை உறுத்தது என்றால், ‘என் உரிமையை நீ தரும் இடத்திலும் நான் பெரும் இடத்திலும் இருப்பேன் என்று நினைத்தாயோ?’ என்று கேட்டது அவள் விழிகள்!
எனக்கானதை நான் யாருக்காகவும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிற பிடிவாதம் தெரிந்தது அவள் முகத்தில்!
சித்ராவின் செயலில் வெகுண்ட இராசமணி, “சித்ரா! நீ யார் என் மகனின் கடையில் விளக்கேற்ற?” என்று கேட்டார் ஆத்திரத்துடன்.
அவர் தன் சொந்தபந்தங்களின் முன்னால் அவமானப் படுத்தப் பட்டுவிட்டதாக உணர்ந்தார். அதோடு, சாதனாவும் அவள் குடும்பமும் வேறு நிற்கிறதே. அவர்கள் ரஞ்சனுக்கும் சாதனாவுக்குமான கல்யாணத்தை நிறுத்திவிட்டால், தன் கணவரின் ஆசை நிறைவேறாமல் போய்விடுமே என்கிற பதைப்பு.
ஆனால், அவரின் கோபத்துக்கு சிறிதும் அஞ்சாமல், “நான் யார் என்று உங்கள் மகனிடமே கேளுங்கள். சொல்வார்..” என்று நிமிர்ந்தே பதில் சொன்னாள் சித்ரா.
அதைக் கேட்ட இராசமணியே அசந்துபோனார். இவ்வளவு பேருக்கும் முன்னால் ஒரு பெண் துணிந்து ‘உன் மகனைக் கேள்’ என்று சொல்கிறாள் என்றால், அந்தத் தைரியத்தை யார் கொடுத்தது. என் மகனா? ஏன்? எப்படி?
சந்தேக விதை மனதில் விழ மகனைப் பார்த்தார். எல்லோருக்கும் முன்னால் அவரால் அதை வாய்விட்டுக் கேட்கமுடியாதே.
முகம் இறுக, சொந்தங்கள் எல்லோரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்றும் சொல்ல முடியாமல் அவளை உறுத்தபடி நின்ற ரஞ்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கடையப் பார்க்கும் விதமாக அவர்களை விட்டு விலகிச் சென்றாள் சித்ரா.
அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு, “இங்கு என்னதான் நடக்கிறது அண்ணி?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் மல்லிகா.
“அது.. ஒன்றுமில்லை மல்லிகா. அந்தப் பெண் இவன் முதலில் வேலை செய்தானே, அந்தக் கடை முதலாளியின் மகள்.” என்று அவரைச் சமாளிக்கப் பார்த்தார் இராசமணி.
“அதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாமா? இப்போது அவன் அங்கு வேலை செய்யவில்லையே. பிறகு என்ன? இவ்வளவு உரிமையாக விளக்கை ஏற்றுகிறாள், திருநீறைப் பூசிவிடுகிறாள். ரஞ்சன் ஒன்றும் சொல்லாமல் நிற்கிறான். என்னதான் நடக்கிறது இங்கே? அதுசரி. எங்கள் அண்ணா இல்லைதானே. யார் என்ன ஆட்டம் ஆடினாலும் கேட்பதற்கு ஒருவரும் இல்லை என்கிற திமிர்.” என்று ரஞ்சனைச் சாடினார் மல்லிகா.
அதைக் கேட்ட இராசமணிக்கு ஊமையாக நிற்கும் மகனின் மேல் படு பயங்கரமாகக் கோபம் வந்தது.
“வாயைத் திறந்து பதிலைச் சொல்லேன் ரஞ்சன். எதற்கு இப்படி ஒன்றுமே சொல்லாமல் நிற்கிறாய்.” என்றவரை, ஆத்திரத்துடன் இடை மறித்தது சாதனாவின் குரல்.
“அதெப்படி அத்தை வாயைத் திறப்பார்? ஊருக்கு என்னையும் உள்ளுக்கு அவளையும் வைத்திருக்க நினைக்கிறார் போல. அந்தப் பெண்ணோடு ரஞ்சன் மச்சானை முதலே நானும் கண்டிருக்கிறேன். ஸ்கூட்டியில் ஒன்றாகப் போனார்கள்.” என்று, அன்று கண்டதை சொன்னாள் சாதனா.
அவளின் பேச்சில் சினம் தலைக்கேற, “வாயை மூடு!” என்று உறுமினான் ரஞ்சன்.
“என்னை எதற்கு அதட்டுகிறீர்கள்? நான் சொன்னது பொய் என்று சொல்லுங்கள் பார்ப்போம்..” என்றாள் சாதனா சவாலாக, அவன் உறுமலுக்கு அடங்காது.
நடப்பவற்றை நகுலனும் அவன் குடும்பத்தாரும் வேடிக்கை பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “எல்லோருக்கும் முன்னால் நம் வீட்டு விசயத்தைக் கடை பரப்பாமல் வாயை மூடிக்கொண்டு இரு!” என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் ரஞ்சன்.
அதற்கு மேலும் அங்கேயே நின்று வார்த்தைகளை வளர்க்காமல், ‘எல்லாம் இவளால் வந்தது!’ என்று ஆத்திரத்தோடு சித்ராவை நோக்கி அவன் கோபத்தோடு செல்ல, “பாருங்கள் அத்தை உங்கள் மகனை. அவளை ஒன்றும் சொல்லவில்லை. என்னைத் திட்டுகிறார்..” என்று இராசமணியிடம் முறையிட்டாள் சாதனா.
“நான் வீட்டுக்குப் போகிறேன்..” என்று அழுதபடி வெளியே ஓடினாள்.
“உங்கள் மகனின் கடைத் திறப்புவிழாவுக்கு வந்ததற்கு நல்ல பரிசு தந்துவிட்டீர்கள்.” என்றார் தேவன்- சாதனாவின் தந்தை.
“இனியும் எதற்கு இங்கே நிற்கிறாய்? அவமானப் பட்டது போதாதா?” என்றுவிட்டு அவர் வெளியேற, இராசமணியை முறைத்துவிட்டுக் கணவரைப் பின் தொடர்ந்தார் மல்லிகா.
அவர்களோடு அங்கிருந்த சொந்தம் முழுவதும் ஒவ்வொரு குத்தல் மொழிகளுடன் ஒட்டு மொத்தமாகக் கடையை விட்டு வெளியேறினர்.
போகிற போக்கில் நவீனும் நித்யாவை முறைத்துவிட்டுப் போக, அவளுக்கு அழுகை வந்தது. “பாருங்கம்மா, இந்த அண்ணாவால் நவீன் என்னை முறைத்துவிட்டுப் போகிறார்.” என்றாள் அழுகையோடு.
ஆத்திரத்தோடு இராசமணி ரஞ்சனை நோக்கித் திரும்ப, சித்ரா ஒரு சோடிச் செருப்புக்களை அவன் கையில் கொடுப்பதும், அதை வாங்காமல் அவன் என்னவோ கோபத்தோடு அவளிடம் சொல்வதும் தெரிந்தது.
அங்கே ரஞ்சனோ, “இங்கே எதற்கு வந்தாய்? உன்னை வா என்று நான் அழைத்தேனா?” என்று வெறுப்போடு சித்ராவிடம் கேட்டான்.
அதைக் கேட்டவளின் விழிகளில் கண்ணீரோடு வேதனையும் நிரம்பியது. ஆனாலும் அவள் பார்வை தளரவில்லை. “நீங்கள் என்னை அழைக்கத் தேவையே இல்லை இதயன். அந்தளவுக்கு நானும் நீங்களும் வேறு வேறல்ல.” என்று நிதானமாகச் சொன்னவள், “இந்தச் செருப்புக்கு பில்லைப் போடுங்கள்.” என்றாள் கையிலிருந்ததைக் காட்டி.
“மதியாதார் வாசல் மிதிக்கக் கூடாது என்கிற நாகரீகம் கூடவா தெரியாது உனக்கு? கதவு திறந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் எதையோபோல் நுழைவாய் போல!” என்றான் அவன்!
விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் இதயத்தை அவன் வார்த்தைகள் மிகச் சரியாகச் சென்று தாக்கின.
விரக்திப் புன்னகையோடு, “நாகரீகமா?” என்று கேட்டவளுக்கு, அவன் நடந்துகொண்ட முறை அனைத்தும் நாகரீகத்தில் சேர்த்தியா என்கிற கேள்வி எழுந்தது.