இல்லையே என்று எண்ணியதுமே அவள் குரல் மீண்டும் திடம் பெற்றது. “நாகரீகம் பார்த்தால் என் வாழ்க்கை நாசமாகிவிடும்.” என்று தலையை நிமிர்த்தியே உரைத்தவள், ஒரு தொகைப் பணத்தை அவன் கையில் திணித்துவிட்டு, “வருகிறேன்..” என்றபடி கடையை விட்டு வேகமாக வெளியேறினாள்.
வெஞ்சினம் கொண்ட அவன் விழிகள் அவளை உறுத்ததையோ, சினத்தால் அவன் வெகுண்டதையோ உணராமல் சென்றவளின் நெஞ்சம் ஆறா வடுவைச் சுமந்திருந்தது.
இனி என்ன செய்யப் போகிறாள்? அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை என்ன? அவளோடு சேர்ந்து அதுவும் பழியைச் சுமக்கப் போகிறதா? இதற்கு அது ஜனிக்காமலேயே இருந்திருக்கலாம்.
எல்லோர் முன்னாலும் வீராப்பாக நடந்து கொண்டாலும், எப்படி என் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன் என்று எண்ணியவளுக்குக் கண்ணீர் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
ஸ்கூட்டியை ஓட்டக் கூட முடியாத அளவுக்கு உடலும் மனமும் வலுவிழந்து கிடக்க, ஒருவழியாக வீட்டுக்கு வந்துசேர்ந்தாள் சித்ரா.
அங்கே அடக்கமுடியாத ஆத்திரம், அழுகை, கோபத்துடன் மகளின் வரவுக்காகக் காத்திருந்தார் அவள் தாயார்.
என்றுமில்லாது அன்று சோபாவில் அமர்ந்தபடி வாசலையே பார்த்திருந்த தாயாரும், ஆத்திரத்தில் கனன்று கொண்டிருந்த அவரின் முகமுமே விஷயம் அவருக்குத் தெரிவிக்கப் பட்டுவிட்டதை சித்ராவுக்கு உணர்த்தியது.
சொல்லொணா துயரம் தாங்கிய விழிகளால் தாயாரைக் குற்ற உணர்ச்சியோடு அவள் பார்க்க, ஆவேசத்துடன் எழுந்து வந்த லக்ஷ்மி, “லதா சொன்னது உண்மையா?” என்று கேட்டார்.
அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை தாழ்ந்தபோதும், ஆம் என்பதாக ஆடியது அவள் தலை.
அவ்வளவுதான்! பத்ரகாளியாக மாறிப்போனார் லக்ஷ்மி.
அவளின் தலைமுடியைக் கொத்தாகப் பற்றி கன்னம் கன்னமாக அறைந்தார். “சொன்னேனேடி, பெண் பிள்ளையாய் அடங்கி ஒடுங்கி வீட்டில் இரு என்று படித்துப் படித்துச் சொன்னேனே. கேட்டாயா? எது சொன்னாலும் திருப்பிக் கதைப்பது. வாய் காட்டுவது. இன்று அது உன்னை எந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பார்த்தாயா?” என்றார் ஆத்திரமும் அழுகையுமாக.
பதில் ஏதும் சொல்லாது நின்ற மகளைக் கண்டு இன்னும் ஆத்திரம்தான் வந்தது அவருக்கு.
“வாயை திறந்து சொல்லடி. யார் காரணம் இதற்கு? அவனைத்தான் கட்டப் போகிறேன் என்றாயாமே. பெற்ற எங்களுக்குத் தெரியாமல், நீயாகப் பிடித்தவன் யார்? இதற்குத்தான் எப்போது கேட்டாலும் திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாயா? எவ்வளவு அழுத்தமடி உனக்கு. வாய் காட்டினாலும் என் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது, அவள் குழந்தை என்று நினைத்தேனே.. இப்படி வயிற்றில் பிள்ளையை வாங்கிவந்து என் தலையில் கல்லைப் போட்டுவிட்டாயேடி படுபாவி! சொல்லுடி, யார் அவன்?” என்று அழுதபடி அடித்தவரின் கை அவளது முதுகு, கை, கன்னம் என்று அனைத்து இடங்களிலும் தன் தடத்தைப் பதித்தது.
அவ்வளவு அடித்தும் வாய் திறவாது அமைதியாக நின்றவளைப் பார்க்க அவருக்கு அடிவயிறு கலங்கியது. அடித்த அவருக்கே கை வலிக்க அவளானாள் சிலையாக நிற்கிறாளே!
“இவ்வளவு அடித்தும் வாயைத் திறக்கிறாய் இல்லையே.. சொல்லேன்டி! யார் அவன்? என்னை இப்படி அடிக்க வைத்துவிட்டாயே பாவி மகளே!” என்று கதறினார் அவர்.
தான் செய்த பிழைக்குத் தண்டனையாக, உள்ளே உயிரைக் குடிக்கும் அளவுக்கு நெஞ்சை அரித்த வேதனைக்கு ஆறுதலாக தாயின் அடிகள் இருந்ததில், வலித்தபோதும் அடியை வாங்கிக்கொண்டு வாய் மூடி நின்றாள் சித்ரா.
அதில் இன்னுமின்னுமே ஆத்திரம் கொண்டவர், தன் கை வலிக்க வலிக்க அவளை அடித்துத் தள்ளிவிட்டார்.
அதுநாள் வரை ரஞ்சனின் அருகாமையில், அவனின் பார்வையில் மட்டுமே சிவந்த அவள் கன்னங்கள் இன்று அடிவாங்கி, தாயாரின் விரல் தடங்களைத் தன்னில் பதித்துச் சிவந்து கன்றிப் போனது.
வேக நடையோடு வீட்டின் உள்ளே வந்துகொண்டிருந்த சந்தானம், வெறிகொண்டு அடிக்கும் மனைவியையும், கண்களில் கண்ணீர் வழிய அதைத் தாங்கியபடி நின்ற மகளையும் கண்டு ஒருநொடி அதிர்ந்துதான் போனார்.
“லக்ஷ்மி!!” என்று கத்தியபடி ஓடிவந்து மகளைத் தன் பக்கம் இழுத்தவர், மனைவியைத் பிடித்துத் தள்ளிவிட்டார்.
சோபாவில் தொப்பென்று விழுந்தவர் அதிர்ச்சியோடு கணவரை நிமிர்ந்து பார்க்க, “நான் வரமுதல் உனக்கு என்ன அவசரம். இப்படி மிருகம் மாதிரிப் பிள்ளையைப் போட்டு அடித்திருக்கிறாயே..” என்றார் ஆத்திரத்தோடு.
“இப்போதும் என்னைத்தான் திட்டுங்கள். இவள் செய்த வேலைக்கு அடிக்காமல் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள். நான் என்ன சொன்னாலும் கேட்காமல் அவளோடு சேர்ந்து நீங்களும் ஆடுவீர்களே, பார்த்தீர்களா இப்போது வயிற்றில் வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறாள். ஒரு கல்யாணத்தைச் செய்து வையுங்கள் என்று தலைப்பாடாய் அடித்துக்கொண்டேனே கேட்டீர்களா? கொஞ்சமாவது என் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டிருக்க, இது நடந்திருக்குமா? படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்லி இப்படி வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வந்து நிற்கிறாளே இனி என்ன செய்யப் போகிறோம்..” என்று கேட்டவர், அதற்கு மேலும் முடியாமல் தன் தலையிலேயே அடித்தக்கொண்டு கதறினார்.
அப்பட்டமாக முகத்தில் வேதனை துலங்க ஒருகணம் அசையாது நின்றார் சந்தானம். அவருக்கும் மகள் செய்தது பெரும் அதிர்ச்சியே! மனைவி தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோது, நம்பவே முடியவில்லை.
அவருக்கும் மகள் மேல் கோபம் இருக்கிறதுதான். ஆத்திரம் இருக்கிறதுதான். ஆனால், அதற்கு மேலாய் பாசம் இருக்கிறதே.
அதோடு, ஆத்திரப்பட்டும் கோபப்பட்டும் காணப்போவது என்ன? ஏற்கனவே மனதால் நொந்திருக்கும் மகளை உடலாலும் நோகடிப்பதில் என்ன லாபம்?
தாய் தந்தையரின் முகம் காணமுடியாமல் குன்றிப்போய் நின்ற மகளை ஒரு வேகப் பார்வையால் அளந்துவிட்டு, “முதலில் நீ இப்படி அழுது புலம்புவதை நிறுத்து!” என்றார் மனைவியிடம் கடுமையான குரலில்.
“எப்போது பார்த்தாலும் என்னையே அடக்..”
“லக்ஷ்மி!” என்கிற அதட்டல் அவரின் வாயை மூட வைத்தது.
அதுநாள் வரை கண்டிப்பே காட்டியிராத கணவரின் கடுமையில் அதிர்ந்து, விரிந்த விழிகளில் கண்ணீர் வழிய அவரையே பார்க்க, சந்தானத்துக்கு ஐயோ என்றிருந்தது.
“கொஞ்சம் அமைதியாக இரு லக்ஷ்மி. அழுது ஆர்ப்பாட்டம் செய்து என்ன காணப் போகிறாய்?” என்றார் தணிந்த குரலில்.
“ஆனால் அவள்..” என்று ஆரம்பிக்க முதலே லக்ஷ்மியின் விழிகளில் கண்ணீர் இன்னும் பெருக்கெடுத்தது.
“என்னால் முடியவில்லையே. இனி என்ன செய்யப் போகிறோம்? அவள் கல்யாணம் நடக்குமா? எவ்வளவு ஆசைப்பட்டேன். என் பிள்ளைக்கு அப்படிச் செய்யவேண்டும் இப்படிச் செய்யவேண்டும் என்று கனவு கண்டேனே. எல்லாம் போச்சே..” என்று கதறிய தாயாரைப் பார்க்க சித்ராவின் விழிகள் கண்ணீரைச் சொரிந்தன என்றால், உள்ளம் இரத்தக் கண்ணீரை வடித்தது.
“எல்லாம் நல்லதாகவே நடக்கும். நீயாக எதற்கு எதையெதையோ நினைக்கிறாய். கொஞ்சம் அமைதியாக இரு.” என்றவர், இனியுமா என்கிற கேள்வியைத் தாங்கி அவநம்பிக்கையோடு பார்த்த மனைவியைப் பொருட்படுத்தாது மகளிடம் திரும்பினார்.
அவள் தலை தன்னாலே தரையைப் பார்த்தது.
“யார் அவன்?” என்று மகளிடம் கேட்டவரின் முகமும் குரலும், கோபத்தை அடக்கியதில் கல்லாக இறுகிக் கிடந்தது.
அதுவரை அவரை அப்படிக் கண்டிராதவளுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. “இ.. ரஞ்சன்.” என்றாள், மெல்லிய குரலில்.
புரிந்தும் புரியாத தொனியில், “எந்த ரஞ்சன்?” என்று கேட்டார் சந்தானம்.
அதுவரை ‘சித்து’ என்கிற அழைப்பு இன்றி, எப்போதும் குரலில் கொஞ்சும் பாசமும் இன்றி வெற்றுக் குரலில் பேசியவரின் ஒதுக்கத்தில் குபுக் என்று வழிந்த கண்ணீரோடு, “நம் கடையில் வேலை செய்தவர்..” என்றாள்.
“என்ன சொல்கிறாய்? நம்மிடம் வேலை செய்தானே ரஞ்சன். அவனா?” என்றவருக்கு, மகள் சொன்னதை நம்ப முடியவில்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் வழி இல்லையே.
சற்று நேரம் ஒன்றுமே சொல்லாமல் நின்றவர், “சரி, இனி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். மூன்றாம் நபராக நின்று அவர் கேட்டதில் அடிபட்டு நின்றாள் சித்ரா.
“சொல்லு! என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டார்.
என்ன சொல்வாள்? மலைபோல் நம்பியவன் என் கழுத்தை அறுத்துவிட்டான் என்றா? அவன் வேறு ஒரு பெண்ணோடு ஜோடிசேர நினைக்கிறான் என்றா? எதைச் சொல்வாள்?
“தெ..தெரியாது” என்றாள் உள்ளே போன குரலில்.
“என்னடி தெரியாது? பிள்ளையை மட்டும் வாங்கத் தெரிந்த உனக்கு இது தெரியாதா?” என்று, பொறுமையின்றிக் கொதித்தார் லக்ஷ்மி.
வெடிக்கப் பார்த்த விம்மலை அடக்கிக் கொண்டு சித்ரா நிற்க, மனைவியின் புறம் கண்டிப்பான பார்வை பார்த்தார் சந்தானம்.
மீண்டும் மகளிடம் திரும்பி, “தெரியாது என்றால் என்ன அர்த்தம் சித்ரா? இனியும் நீ இப்படியே இருக்க முடியாது. உடனேயே திருமணம் முடிந்தாக வேண்டும். அவனிடம் பேசினாயா?” என்று பொறுமையாகவே கேட்டார்.
“இதைப்பற்றி அவருக்கு இன்னும் தெரியாது.”
என்னதான் பொறுமை காட்டிப் பேசினாலும், மகள் இப்படி செய்துவிட்டாளே.. பாசம் காட்டிக் கெடுத்துவிட்டோமோ.. மனைவியின் பேச்சைக் கேட்டிருக்கலாமோ என்று உள்ளே தவித்துக் கொண்டுதான் இருந்தது அவர் உள்ளமும்.
அதோடு, மகளின் செயலால் கோபம் இருந்தாலும், வேதனை இருந்தாலும் அவளை அப்படியே விட்டுவிட முடியாதே! ஒரேயொரு செல்ல மகளை மடியில் அன்றி நெஞ்சில் தாங்கி வளர்த்தவர் ஆயிற்றே. நடந்துவிட்ட தவறை நிவர்த்தி செய்யவே முயன்றார்.
“சரி.. ரஞ்சனோடு நானே திருமணத்தைப் பற்றிக் கதைக்கிறேன்.” என்றவர், அவனுக்கு அழைத்தார்.
.


